மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
திண்ணையில் வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007 அன்று வெளிவந்துள்ள ‘1/4′ என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்’ என்ற என் கட்டுரையைப் பாராட்டி திரு மலர் மன்னன் அவர்கள் எழுதிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அதில், நான் தங்களுக்குத் தெரிவிக்க – மலர்மன்னன் அவர்கள் விரும்பிய காரை.சிபி
அவர்களின் கருத்தான “the demolition of the original Dharmaraja Temple and the construction of St. Mary’s Church on the site. You could have also added the Mohmedans’ stubborn faith that prevented similar demolition of the mosque. Karai Sipi, though a Catholic Christina, did NOT hesitate to record this historical fact culled out from the Diary of Anada Ranga Pillai. This shows the unbiased temperament of Karai Sipi.” என்பதையும் இங்கு தருகிறேன். உண்மை என்னவென்றால்,
வேண்டுமென்றேதான் காரை சிபியின் அந்தக் கருத்தை என் கட்டுரையில் தவிர்த்தேன். காரணங்கள்:

1. நண்பர் பிரபஞ்சன் அவர்கள் இது குறித்துப் பேரா. அ.மார்க்ஸ் எழுதிய புத்தகத்தில் விரிவானதொரு விழிப்புரை/முன்னுரையை (34 பக்க டெமி 1/8 அளவுப் புத்தகத்தில் 12 பக்கம் பிரபஞ்சனின் முன்னுரை) எழுதியுள்ளார்.

புத்தகத்தின் தலைப்பு: ‘மசூதிக்குப் பிறகு மாதா கோயிலா?’ என்பதாகும். 1994 மே மாதம் புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோயில் தெரு, இலக்கம் 39, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வெளியீடு அது. மலர் மன்னன் தன் கடிதத்தில் சொல்லும் கோயில் தர்மராஜா கோயில் அல்ல. “புதுச்சேரி மிஷன் வீதியில், சம்பாக் கோயில் என்று பொதுமக்களாலும், சென்மராக்கினி மாதாக் கோயில் என்று கிறித்துவர்களாலும் அழைக்கப்படுகிற”[மேற்படி புத்தகம், பக்கம் 3] கோவில். ஆனந்தரங்கப்பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பு 5-ஆம் பாகம் பக்கம் 286இல், “முன்னே துரையவர்கள் அழைப்பித்து அந்தக் கோயில், எங்கள் கோயில் கிட்ட, இருக்கிறபடியினாலேயும், உங்களுக்கும் எங்களுக்கும் என்னேரமும் போராட்டமாய் இருக்கிறது. அதை அப்பால் கட்டிக் கொள்ளுங்கள். செல்லுமான சிலவு கொடுத்து, நல்ல ஸ்தலமும் காண்பிக்கிறோம் என்று சொன்னதும் அல்லாமல்…..” இது குவர்னர் துய்ப்ப்ளெக்ஸ் சொன்னதாக ஆனந்தரங்கரின் பதிவு. இதிலிருந்து தெரிவது என்ன? அந்தக் கோயில், என்றது வேதபுரீஸ்வரன் கோயில். எங்கள் கோயில் என்றது, சம்பாக் கோயில்.”[மேற்படி, ப.5]. விரிவு அஞ்சி இதோடு மேற்கோளை நிறுத்திக் கொள்கிறேன். சம்பாக் கோயில் என்கிற சென்மராக்கினி மாதாக் கோயில் நிறுவப்பட்ட வரலாறு, புரோட்டஸ்ட்ண்ட்டுகளும்[மார்ட்டின் லூதரால்(1483-1546) தொடங்கி வைக்கப்பட்ட மதப் பிரிவு]கத்தோலிக்கர்களும் செய்து கொண்ட நான்த் ஒப்பந்தம்(Edit de Nantes), 14ஆம் லூயி அவ்வொப்பந்தத்தை இரத்து செய்து ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தவிர வேறு மதப்பிரிவுகளுக்கும் மதங்களுக்கும் அவற்றைச் சார்ந்த ஆலயங்களுக்கும் பிரான்சில் இடமில்லை என்று அறிவித்தது, அதன் தாக்கம் புதுச்சேரியில் விளைந்தது முதலானவற்றைப் பிரபஞ்சன் ஆதார பூர்வமாக எழுதியதை எண்ணற்ற புதுச்சேரிக்காரர்கள் ஏற்றுக் கொண்டதற்குப் பின்னுள்ள பதினான்காம் ஆண்டில், மலர் மன்னன் கடிதத்தில் வரும் ”you could have added the demolition of the original Dharmaraja Temple and the construction of St. Mary’s Church on the site. You could have also added the Mohmedans’ stubborn faith that prevented similar demolition of the mosque. Karai Sipi, though a Catholic Christina, did NOT hesitate to record this historical fact culled out from the Diary of Anada Ranga Pillai.” என்பதை எவ்வாறு ஒத்துக் கொள்ள முடியும்? ஒருபக்கம் ஆனந்தரங்கரே துப்ளேக்ஸுடனும் மதாம் ழானுடனும் ஒத்துப் போகிறார். இன்னொரு பக்கம் அவரே அன்னபூரணய்யர் மான்யத்தை விண்டு விண்டு வைக்கிறார்(ஆ.பி.தி.சே.கு. பாகம் 5:ப.286) அப்படி இருக்கும்பொழுது காரை சிபி எழுதியது “historical fact culled out from the Diary of Anada Ranga Pillai” என்பதை எப்படி புதுச்சேரி வரலாற்றை அறிந்த நானோ, ‘வானம் வசப்படும்’ நாவலைப் படித்த வாசகர்களோ, ‘மசூதிக்குப் பிறகு மாதாகோயிலா?'(1994) புத்தகத்தில் முன்னுரையாக வரும் பிரபஞ்சனின் உழைப்பு வாசகங்களையும் பேரா. அ.மார்க் ஸின் நேர்மையான கட்டுரையையும் படித்தறிந்த ஒருவரோ ஏற்றுக் கொள்ள முடியும்?
 
2. ‘புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக…’ என்று திண்ணையில் வேறு சமயம் வெளியான என் கட்டுரையில், பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ நாவல் தொடர்பான பகுதியிலும் இதைக் குறிப்பிட்டதுடன் பிரபஞ்சனின் விரிவான சித்தரிப்பு உள்ள பக்கங்களின் எண்களையும் குறிப்பிட்டிருந்தேன். அப்பகுதி:- “இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு – சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமதுபாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பாகோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறுசெய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே(மாகி)க்காரனுமான அப்துல்ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும்நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, “மசூதியை இடிக்க வேண்டாம்!” என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.(வானம் வசப்படும், பக்.659-668) தவிர,அப்துல் ரகுமான் சாதித்ததை, “துலுக்கர்தமை, தமிழருக்கு வேறாகப் பிரித்துப் பேசியும் எழுதியும் இருக்கிற”(மேற்படி, ப.681-அடிக்குறிப்பு) ஆனந்தரங்கப்பிள்ளை சாதிக்க முடியாமல் மதாம் ழானுக்கும் குவர்னர் துய்ப்ளெக்ஸுக்கும் ஒத்துப்போன வயணமெல்லாம் அடுத்து வரும் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(ப.669+).”
இந்த இரண்டு விவரங்களுக்கும் காரை.சிபி அவர்கள் “though a Catholic Christina, did NOT hesitate to record this historical fact culled out
from the Diary of Anada Ranga Pillai” என்பதற்கும் கூர்ப்பானதோர் உள்முரண் இருப்பதால்தான் அதன் விவரம் தவிர்த்தேன். ஏனெனில் பெர்னார்ட் ஷா மொழிந்ததுபோல் காரை சிபி “தோள்களில் உட்கார்ந்து கொண்டு எட்டப்பார்க்கும்” வசதி பிரபஞ்சனுக்கு இருந்தது. பிரபஞ்சன் இன்னும் தெளிவாக -யார் சம்பா (ஈசுவரன்) கோயிலை[Dharmaraja Temple அல்ல] இடித்து, புனித சென்மராக்கினி மாதா கோயில்[St. Mary’s Church அல்ல] கட்டப்படக் காரணமாயிருந்தார்கள் என்பதையும், ‘the Mohmedans’ stubborn faith that prevented similar demolition of the mosque’ என்பதை “அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே(மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, “மசூதியை இடிக்க வேண்டாம்!” என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்தது” என்றவாறும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கையில், காரை சிபியின் சீரிய ஆய்வில் தொய்வு விழுந்துபோன அந்தப் பகுதியை என் கட்டுரையில் வெளியிட்டு, மறைந்த நண்பரின் ஆய்வு மேன்மையைக் குறைக்க வேண்டாம் என்றுதான் அவ்வாறு தவிர்த்தேன். பிரபஞ்சனின் ‘கண்ணீரால் காத்தோம்!’ என்ற நாவல்[‘மானுடம் வெல்லும்,’ வானம் வசப்படும்’ என்பவற்றுக்கு அடுத்தது] புதுச்சேரி வரலாற்று முதன்மைச் செய்திகள் சிலவற்றைக் காரை சிபியின் ஆய்வுக்கும் மேலாக எடுத்துச் சென்றுள்ளது. நண்பர் பாவண்ணன் அவர்களின் ‘பாய்மரக் கப்பல்’ என்ற நாவலும் அவ்வாறே. காரை சிபி அலசாத – கடலுடன் புதுச்சேரி கொண்டிருந்த இணக்கத்தையும் பிணக்கையும் மிகவும் நுட்பமாக அலசியது ‘பாய்மரக் கப்பல்.’ நம் திண்ணை.காம்-இல் நெடுங்காலம் தொடராக வந்து பின்னர் அச்சில் பதிந்த நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கட’லோ இன்னும் மேலெழும்பி, மொரீஷியஸ்ஸையும் ரெயூனியனையும்கூட புதுச்சேரி வரலாற்றுத் தளத்தில் வளைத்துப் போட்டது. அடுத்து வருபவர்கள் இன்னும் செய்வார்கள். இதுதான் காலமும் வரலாறும் கொண்டுள்ள தொடர்பில் விளையும் நன்மை. வரலாற்றைத் திரிப்பவர்கள் யார் என்பதை வரலாறே தீர்மானித்து, வெளிக்காட்டவும் செய்து விடும். புதுச்சேரி வரலாறு மிகவும் அபூர்வமானது. 250 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுக் கணக்கைப் பார்க்கும் தகுதி, 2500 ஆண்டுக் கணக்கைப் பார்க்க முன்வருபவர்களுக்குத்தான் உண்டு என்று பிரபஞ்சன் சொன்னதில் ஆழ்ந்த பொருள் உண்டு.

எப்படியோ, மலர்மன்னன் அவர்கள் இந்த விடுபட்ட செய்திகளை வெளிப்படுத்தத்தன் கடிதம் மூலம் எனக்கு உதவினார். அவருக்கு மிக்க நன்றி. இந்த வரலாற்றுச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து உதவிவரும் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கும் திண்ணை ஆசிரியர் குழு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
தேவமைந்தன்
(அ.பசுபதி)


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்