மனிதகுல எதிரிகள்

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

மஹ்மூத் அல் ஹஸன்


இந்தியாவை மீண்டும் ஒரு முறை அதிர்வுக்குள்ளாக்கியுள்ளது, கடந்த 11 ஆம் தேதி நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு. அப்பாவிகளை அநியாயமாகக் கொன்றுவிட்டனர் இரக்கமற்ற கொலையாளிகள்.
வருங்காலத்தைப் பற்றிய வண்ணக் கனவுகளுடன் வலம் வந்த, இளம் வயதினர், குடும்பச் சுமைதாங்கிகளாய் வேலை/ தொழில் செய்த நடுத்தர வயதினர், முதிர்ந்து தளர்ந்து நோயுற்ற பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ள பிள்ளைகள், பூப்பெய்தி நிற்கும் பெண்மக்களைத் திருமணம் செய்விக்க வேண்டிய தந்தையர், சின்னஞ்சிறு மக்களைப் பள்ளிக்கனுப்பி, அவர்களின் வளர்ச்சியில் தம் எதிர்காலத்தைக் கனவு கண்ட பெற்றோர், ஒருவேளை கூட வயிறார உண்ண வழியற்ற பரம ஏழை, பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டுக் குடும்பத் தேவைக்காய்ப் பணிபுரியச் சென்ற பெண்கள் எனப் பலரையும் காரணமின்றிப் பலி கொண்ட பயங்கரவாதம் இது.
“இதைச் செய்தவர்கள்” எனப் புலனாய்வு மற்றும் உளவுத் துறையினர், ‘முஸ்லிம் பெயரில்’ இயங்கிவரும் சில இயக்கங்களின் பெயர்களைக் கூறியுள்ளனர்.
முஸ்லிம் என்பவன் வெறும் அரபி மொழிப் பெயர் தாங்கியவன் அல்லன். அவன் தன்னைப் படைத்த இறைவனின் கட்டளைகளுக்குச் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு நடப்பவன் ஆவான்.
முஸ்லிம் என்ற அரபி மொழிச் சொல்லின் பொருள் சரணடைந்தவன்/ கட்டுப் பட்டவன் என்பதே. இறைவனின் கட்டளை அவன் அருளிய மறையில் உள்ளது. அதற்குக் கட்டுப்படாதவன் இறைவனை மறுத்தவன் – அவன் அரபி மொழிப் பெயர் தாங்கியாக இருந்தாலும்கூட.
இந்த மறைநூல் இறையச்சமுடையவர்களுக்கு நேர் வழி காட்டும்- எனக் குர் ஆன் (2:2) கூறுகிறது.
குர் ஆன் கூறும் கட்டளைகளை ஏற்காதவன் இறையச்சமுடை யவன் அல்லன். பின் அவன் எப்படித் தன்னை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ள முடியும்?
ஓரிறை நம்பிக்கையாளர்களே!- நன்மையிலும், இறையச்சமுடைய செயல்களிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (குர்ஆன், 5:2) என்று இறைவன் கட்டளை இட்டுள்ளான். இதற்கு மாறாகப் பாவத்திலும் பகைமையிலும் உதவிக் கொண்டு குண்டு வைப்பவன் முஸ்லிம் அல்லன்; அவன் மனிதகுல எதிரியே..
கொலைக்குப் பழியாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடுப்பதற்காக(எனத் தக்க காரனமின்றி) எவன் ஓர் உயிரைக் கொல்கிறானோ அவன் மனித குலம் முழுவதையும் கொன்றவன் போன்றவனாவான். எவன் ஓர் உயிரை வாழ வைக்கிறானோ அவன் மனித குலம் முழுவதையும் வாழ்வித்தவன் போன்றவனாவான் எனக் குர் ஆன்(5:32) வழி காட்டுகிறது.
முஸ்லிம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளத் தகுதி படைத்தோர் இறை மறையின் வழிகாட்டல் படி வாழ்வோர் மட்டுமே. மற்றவர் வெறும் பெயர் தாங்கிகளே. அவர்களால் சமுதாயத்துக்கு எப்பலனுமில்ல: மாறாகப் பழியே வரும்.
குறிப்பு:- குர் ஆனில், நாட்டை ஆள்வோர்க்காய்க் கட்டளையிடப்பட்டுள்ள போர் பற்றிய வசனங்களை எடுத்துக்காட்டி மேற்கண்ட பயங்கரவாததைக் குர் ஆன் ஆதரிக்கிறது எனக் கடிதம் எழுத நினைப்போர் இக்கட்டுரையை மறந்திடுக!

mahmoodalhasan@gmail.com

Series Navigation