மனப்பான்மைகள்

This entry is part [part not set] of 13 in the series 20010408_Issue

அஸ்வகோஷ்


திருமணத்துக்குப் போயிருந்தேன்.

நண்பனது திருமணம், நெருங்கிய நண்பன்தான். ஆனால் பார்த்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. மறக்காமல் பத்திரிகை அனுப்பியிருந்தான். கடைசி வரைக்கும் புறப்படுவதாகவே உத்தேசம் இல்லை. பொருளாதார நெருக்கடிதான். என்னோடு படித்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு உத்தியோகத்துக்குப் போய்விட்டார்கள். நான் மட்டும் விதி விலக்கு. எனக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை. பெரிய இடத்து சிபாரிசோ, லஞ்சம் கொடுக்குமளவுக்கு ஒரு பெருந்தொகையோ என்னிடமில்லாதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எங்கெங்கோ பொறுக்கிப்போட்டு வண்டிச் சார்ஜை தயார் செய்துகொண்டு புறப்பட்டு வந்தேன்.

‘பஸ் ‘ஸை விட்டு இறங்கும்போதே ஒலிபெருக்கியின் சினிமாப் பாடல்களின் இசை, கலியாண வீட்டை திசை அறிவித்து வரவேற்பளித்துக் கொண்டிருந்தது. வீட்டை நெருங்கினேன். மூன்று ஆண்டுகளில் நண்பன் எவ்வளவோ முன்னேற்றமடைந்திருந்தான். வீடு புது வீடு. மெத்தை வீடு. போன வருஷம்தான் கட்டியிருக்க வேண்டும். முன்புறம் விசாலமான பந்தல் போட்டு இரு பக்கமும் வாழைமரம் கட்டியிருந்தார்கள். ஒரு புறம் இசைத்தட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள். சின்னஞ் சிறுசுகள் சுற்றிலும் குழுமி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

வெள்ளை வெள்ளையாக உடுத்திய பெரிய மனிதர்கள் சிலர் குறுக்கும் நெடுக்கும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். எனக்கு அறிமுகப்பட்ட முகம் ஏதாவது இருக்காதா என்று என் கண்கள் தேடின; யாரையும் காண முடியவில்லை. பேந்த பேந்த விழித்தபடி சுற்றும் முற்றும் பார்த்தேன். வாசல் பக்கம் நாயனக் கச்சேரியும், தவிலும் கலியாண வீட்டை அதிரடித்துக் கொண்டிருந்தன.

நண்பனையாவது பார்க்கலாம். ஆனால் இந்த சந்தடியில் அவன் எங்கிருக்கிறானோ…..

அங்கிருந்தவர்களில் ஒருவரை அணுகி ‘மாப்பிள்ளை ‘ எங்கிருக்கிறார் தெரியுமா ? ‘ என்றேன்.

‘தெரியாது ‘ என்றார்.

இப்படி இரண்டு மூன்று பேரை விசாரித்தும் யாரும் எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.

கடைசியில் ஒருவர் மட்டும் ‘நீங்க யாரு ? ‘ என்று கேட்டார். அந்தக் கேள்வியே ஒரு மாதிரியிருந்தது. என் எளிமைக் கோலம் அப்படி அவரைக் கேட்க வைத்ததோ என்னவோ… ‘மாப்பிள்ளையா இருக்காரே…அவரோட பிரண்டு ‘ என்றேன் நான்.

‘ஓஹோ… ‘ ‘ என்று அலட்சியமாகத் தலையசைத்தபடி, ‘நீங்க என்ன உத்தியோகம் பார்க்கறீங்க ? ‘ என்று கேட்டார்.

‘சும்மாதான் இருக்கிறேன். இன்னும் எதுவும் வேலை கிடைக்கலே ‘

இதைச் சொன்னதும் ‘ம்… ‘ என்று போய்விட்டார் அவர். ‘இது என்ன டைப் ‘போ என்று மனத்துள் நினைத்துக்கொண்டவனாக, தயங்கியபடியே ‘மாப்பிள்ளை… ‘ என்று இழுத்தேன்.

‘பழைய வீட்டுல இருப்பார் அங்கே போய்ப் பாரு போ ‘ என்று ஒருமையில் சொல்லிவிட்டுப் போனார் அவர்.

எனக்கு ‘சுறுக் ‘கென்றது.

‘என்ன உலகமடா இது. ஒருத்தன் வேலையிலிருக்கிறான் என்றால் ஒரு மதிப்பு; வேலையில்லாவிட்டால் ஒரு மதிப்பு ‘ வேலைக்குப் போவதாலும் வருவதாலுமே ஒருவனுக்கு தகுதி கூடிவிடுமா ? வேலைக்குப் போகாதவனிடம் அந்தத் தகுதியெல்லாம் இருக்காதா…ம். இப்படியெல்லாம் யார் நினைக்கிறார்கள். வேலைக்குப் போகிறவன் மாதம் முதல் தேதியானால் ஏதோ மொத்தமாக கொஞ்சம் கையில் வாங்குகிறான். போகாதவனுக்கு முப்பத்தோராம் தேதியானாலும் முதல் தேதியானாலும் எல்லாம் ஒன்னுதான். இருவருக்கும் வருமான வித்தியாசம்தான். தகுதியில் ஒன்றும் கோளாறில்லையே… ‘ ஆனால் உலகம் பணத்துக்குத்தானே மசிகிறது. பணத்தை வைத்துத்தானே தகுதி ‘ நான் வேலையிலிருக்கிறேன் என்று சொன்னால் அந்தப் பெரியவர் இப்படி ஒருமையில் பதில் சொல்லிவிட்டுப் போயிருப்பாரா…. ? எல்லாம் பணம்தான். எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி ஒரு வயதுவந்த வாலிபன் ஏதாவதொரு வழியில் வருமானம் பெறக்கூடிய உருவமாக… சம்பாதிக்கும் யந்திரமாக இருக்கவேண்டும்…ம்…நான் சதா சும்மாயிருப்பதால்…இவர் ஏதோ செலவுக்குக் கொடுப்பது போல் முகத்தைச் சுளிக்கிறாரே… ‘ என்று எனக்குள் ஏதேதோ புலம்பியவாறே அந்த வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.

நம் அருமை இவர்களுக்கெல்லாம் என்ன தெரியும் ? நண்பனுக்கல்லவா தெரியும். இல்லாவிட்டால் மூன்று ஆண்டுகளாகிப் போயும் பத்திரிகை அனுப்புவானா–மறக்காமல்.

பழையவீடு கூட எனக்குத் தெரியாது. விசாரித்துக்கொண்டு அடைந்தேன். சாதாரண கூரை வீடு. எளிமையாக என்னைப் போலவே யிருந்தது. அதைப்பார்த்ததும் எனக்குள் ஒரு திருப்தி. என்னைச் சார்ந்தவர்கள் மத்தியில் அடைக்கலம் இருப்பதுபோல் ஒரு பிரமை.

வீட்டுக்குள் பெண்டுகள் நிறையப் பேர் இருந்தார்கள். கலியாணத்துக்கு வந்த உறவினர்களாக இருக்கலாம். கூச்சத்துடன் வாசலிலேயே நின்று, ‘பலராமன் இல்லையா ? ‘ என்று கேட்டேன்.

‘பலராமனா… ‘ என்று புருவத்தை உயர்த்திய ஒருத்தி ‘பலராமா… ‘ யாரோ வந்திருக்காங்க பாரு ‘ என்று அலட்சியமாய்ச் சொல்லிவிட்டு அவள் தன் காரியத்தில் ஈடுபட்டுவிட்டாள்.

‘யார் வந்திருக்கிறது…. ? ‘ என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தான் நண்பன்.

அடடா…ஒட்டடைக்குச்சி மாதிரி ஒல்லியாக இருப்பானே அந்த பலராமனா இவன் ‘ எப்படி பருத்துவிட்டான் ‘ கொழு கொழுவென்று…சும்மா வெண்ணை பூசினாற்போல் மழ மழவென்று வாட்டசாட்டமான மேனி; டெரிலின் சட்டை, வலது கையில் பளிச்சிடும் கைக்கடிகாரம்; விரல்களில் மூன்று நான்கு பளபளக்கும் மோதிரங்கள்; தும்பைப் பூவைப் போன்ற துல்லியமான மல் வேட்டி. எனக்கே ஒரு கணம் அடையாளம் தெரியவில்லை. மகிழ்ச்சிப் பெருக்கால் உள்ளமெல்லாம் பூரிக்க, ‘பலராமா… ‘ ‘ என்றேன்.

‘வாப்பா ‘ என்று உணர்ச்சியே யில்லாது, சர்வ சாதாரணமாக வரவேற்றான் நண்பன். திண்ணையைக் காட்டி உட்கார் என்றான். ‘எப்படி….எல்லாம் செளக்யமா… ‘ ‘ என்று கேட்டான்.

‘செளக்யம்தான் ‘ என்றேன் நான்.

‘எங்கே வேலை செய்யறே ? ‘

‘எங்கேயும் கிடைக்கலே…சும்மாத்தான் இருக்கேன் ‘

‘ஏன் எங்கியாவது ட்ரை பண்றத்தானே ? ‘

‘ட்ரை பண்ணாமலேயாயிருக்கேன் எங்கியும் கிடைக்கிலேப்பா… ‘

‘மூணு வருஷமாவா… ? ‘ என்றான் அவன்.

என்ன இவன். நம்பாமல் கேட்கிறானே. எனக்கு வெறுப்பாகப் போய்விட்டது. மூன்று வருஷமாக பார்க்காமலிருந்து எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் சந்திப்பு. எப்படியெப்படி யெல்லாமோ….என்னனென்னவோ பேசி மகிழ வேண்டும் என்று உற்சாகமாய் இருந்தானே. அந்தப் பலராமன்தான் எப்படி மாறிப்போய் விட்டான் ‘ ‘ ‘மெஸ் ‘ பீஸ் கட்டுவதற்குக் குறைந்தால் தன் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவானே… திரும்ப வருமா வராதா என்று கூடப் பாராமல். அந்தப் பலராமனா இவன் ‘ எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

யாரோ நாலைந்து உறவினர்கள் அந்த நேரத்தில் அங்கே வந்தார்கள். பலராமன் முகமெல்லாம் மலர எழுந்து அவர்களை வரவேற்றான். உள்ளேயிருந்து கோரைப்பாறைக் கொண்டு வந்து விரித்து உட்காருங்க என்றான். காப்பி கொண்டு வந்து கொடுத்து சாப்பிடுங்க என்றான். எல்லோருக்கும் கொடுத்து முடித்த பிறகு எனக்கும் ஒரு டம்பளரில் கொண்டு வந்து கொடுத்தான்.

‘வேண்டாம் ‘ என்று சொல்லி என் பலவீனத்தைக் காட்டிக்கொள்ளத் தயாராயில்லை. கசப்போடு வாங்கி விழுங்கிவிட்டேன். அதற்கப்புறமும் அவன் வந்திருந்தவர்களோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தான். கொஞ்சநேரம் இருந்து பார்த்து விட்டு வரட்டுமா என்றேன்.

‘எங்க போறே ? ‘ என்றான்.

‘அந்த வீட்டுக்கா போயிருக்கேன் ‘ என்றேன்.

‘இந்தா இவங்களையும் கூட்டிக்னு போயி அங்க விட்டுடு ‘ என்றான் அவன்.

‘இவரு யாரு ? ‘ என்றார்கள் அவர்கள்.

‘பிரண்டுதான். போ… ‘ என்றான் அவன்.

நாங்கள் புது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். நான் மெளனமாக எதை எதையோ நினைத்தபடி நடந்து கொண்டிருந்தேன். அவர்களுக்குள் ஏதோ சம்பாஷித்துக் கொண்டு அவர்கள் நடந்தார்கள்.

‘பொண்ணு வீடு நல்லா பெரிய இடம் போலிருக்கிறது. பையன் குடுத்து வச்சவன் தான் ‘

‘அம்பது பவுனுக்கு மேல நகை போடறாங்களாமே. ஒரே பொண்ணு…. ‘ அப்ப சொத்து பூரா மாப்பிள்ளைக்குத்தான். ‘

‘பையனுக்கு அப்பன் இருக்கறானே சாமர்த்தியசாலி. நல்லா வகையா புடிச்சிட்டான். ‘

‘இன்னொரு விஷயங்கூட கேள்விப்பட்டேன். ‘

‘என்னாது ‘

‘பையனுக்கு ஏற்கனவே ஒரு பொண்ணுகூட தொடர்பாம். கட்டிக்கறேன், கட்டிக்கறேன்னு கடைசியிலே உட்டுட்டானாம். ‘

‘வாஸ்தவம்தான். எல்லாம் அப்பன் வேலை. ‘

‘நாலு காசு வந்தா எல்லா குறுக்கு புத்தியும் தானா வரும். அப்பல்லாம் நாங்க ஒண்ணா மாட்டுத் தரவு பண்ணப்போ…எப்படியிருந்தான் தெரியுமா. ரெண்டு ரூவா தரவு வருதுன்னா பத்து மைல் நடப்பான். ‘

அதற்கு மேல் அந்த சம்பாஷணைகள் எதுவும் காதில் விழவில்லை. அவர்களைப் பார்க்கக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. புது வீடும் நெருங்கி விட்டது.

அலுப்பும், சோர்வும், மனத்தை தளர வைக்க, யாராவது நண்பர்கள் வந்திருக்கிறார்களா என்று பார்த்தேன். நாங்கள் ஒன்றாகப் படித்த எங்கள் குழுவிலிருந்து யாரையும் காணவில்லை. வேறு யார் யாரோ வந்திருந்தார்கள். அவர்களெல்லாம் புதிய நண்பர்களாயிருக்கலாம். எனக்குப் பரிச்சயமில்லாதவர்கள்.

ஏன் வேலு யாரும் வரவில்லை ?…ஒருவேளை எல்லாம் காலையில் புறப்பட்டு வருவதாக இருப்பார்களோ ?….நாம் மட்டும் அவசரப்பட்டு இன்றேன் வந்துவிட்டோம். யோசனையில்லாமல் அறிமுகமில்லாத முகங்களுக்கு மத்தியில் இரவு எப்படித்தான் கழியப் போகிறதோ…… ‘ எங்கு படுப்பதோ ‘ பாய் கூட யாரும் தர மாட்டார்கள். யாருக்கு என்ன அக்கரை.

நல்ல காலமாக தூரத்தில் சீனு வருவது தெரிந்தது. அவன் ஹாஸ்டலில் இருக்குமிடமே தெரியாமல் படித்தவன். ஆனால் என்னிடம் மட்டும் லேசான பழக்கம். அனுதாபம் காரணமாகவோ என்னவோ….ஆனால் காரியம் என்று இறங்கி விட்டால் யாருக்கும் எதுவும் விட்டுக் கொடுக்க மாட்டான். கறார்ப் பேர்வழி. என்னமோ வெட்டு வெட்டென்று இஞ்சித் தின்ன குரங்கைப் போல் உட்கார்ந்திருப்பதை விட ஒரு தெரிந்த முகத்துடன் இருப்பது கொஞ்சம் தேவலாம் இல்லையா ?

என்னைப் பார்த்ததும் அவன் ஆச்சரியத்துடன் ‘நீ எப்பப்பா வந்தே ? நீ இருப்பேன்னு நினைக்கவேயில்லியே….எப்டி. செளக்கியம் தானா ? ‘

‘செளக்கியம்தான் . இப்பத்தான் வர்ரியா. நான் ஒரு ஆஃபனவர் முன்னாடி வந்தேன் ‘

‘அப்பா ‘ பார்த்து எவ்வளவு நாளாச்சு. அப்படியேதான் இருக்கே…..எப்டி, எங்க வொர்க் பண்றே ? ‘

‘சும்மாத்தாம்பா……. ‘

‘அடப் பாவமே மூணு வருஷமாவா……நடுவில கொஞ்சம்நாள் கூட எங்கியும் டெம்பர்வர்ரியா…..எதுவும் கிடைக்கலியா ? ‘

‘ம்…….இல்ல…… ‘

‘சே…. ‘என்னா கவர்மண்டுப்பா இது. படிச்சு முடிச்சமா வேலைக்குப் போனமான்னு இல்லாமே. எதுக்காகதான் பின்னே நமக்கு ரெண்டு வருஷம் ட்ரெயினிங் கொடுத்தான் ‘ இப்படி அவன் பேசிக்கொண்டேயிருந்தான். எனக்காக ரொம்ப வருத்தப்பட்டான். வீட்டில் அம்மா அப்பா குடும்ப ஷேமங்களை விசாரித்தான். ‘பார்ப்போம் எங்க பக்கம் ஏதாவது கிடைக்கறா மாதிரி தெரிஞ்சா லட்டர் போடுகிறேன் ‘ என்றான். பிறகு ‘வா காபி சாப்பிட்டு வரலாம் ‘ என்றான்.

‘வேண்டாம்பா இப்பதான் சாப்பிட்டேன். ‘

‘எங்கே ? ‘

‘பலராமன் வீட்டுல ‘

‘அவனைப் பார்த்தியா ? ‘ எப்படி இருக்கான்.

நான் அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை. சாதாரணமாகச் சொல்லி முடித்தேன்.

‘வாயேன் அந்த வீட்டுக்குப் போய் வருவோம் ‘

‘இப்பதான் போய் வந்தேன். நீ போய்ட்டுவா ‘ ‘

‘அட சும்மா வாப்பா ‘ எனக்கு வீடு தெரியாது ‘

அவன் வற்புறுத்தி அழைக்கவே சென்றேன். வழியில் அவனோடு பழைய கதைகளை பேசிக் கொண்டு, உல்லாச மயமான அந்த நாட்களை நினைவுபடுத்தியது மனத்துக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டார்கள். நானும் சீனுவும் பந்தியில்தான் சாப்பிட்டோம். வெகுதூரப் பிரயாணக் களைப்பால் சீனு படுத்ததும் தூங்கிப்போய் விட்டான். பக்கத்தில் படுத்திருந்த எனக்கு உற்சாகம் வரவில்லை. கண்களை விழித்துக்கொண்டு படுத்திருந்தேன்.

சற்று தூரத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் ஒரு குழு சீட்டாடிக் கொண்டிருந்தது. அதையாவது கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்க்கலாம் என்று எழுந்து போனேன்.

ஆட்டம் ‘ரம்மி ‘. எனக்கு சீட்டாடத் தெரியும். ஒரு கை காலியாகக் கூட கிடந்தது. உட்காரலாமா என்று ஆர்வம். கையிலோ இருக்கும் சில்லரை திரும்ப ஊருக்குப் போக மட்டுமே. நம்முடைய போறாதகாலம் இரண்டு ஆட்டத்திலேயே உள்ளதும் போய்விட்டால்…. ‘ மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆட்டத்தையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் மனம் பதறியது…. ‘

ஒருவர் ஆகிப்போன ஆட்டத்தைக் காட்டாமல் வைத்து குழம்பிக் கொண்டிருந்தார். நான் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. ‘என்ன சார் இது ‘ஷோ ‘ பண்ணாமல்….இப்படி காட்டுங்க ‘ என்று பிடுங்கி ‘செட் ‘ பண்ணி கீழே விரித்தேன். ‘ஆமாங்க…புரியலே ஒரே குழப்பமாயிடுச்சி ‘ என்றார் அவர்.

எதிரில் விளையாடிய மூன்று கையும் ‘ஃபுல் ‘

‘யாருய்யா நீ கொஞ்சங்கூட இது இல்லாம ‘

‘அப்பதான் தெரியுமா பெரிய ஆட்டக்காருன்னு ‘

‘நீயா துட்டு போட்டு ஆடறே. சும்மாயிருக்காமே….ரெண்டு ரூபா தெண்டம் வச்சியே. இந்த ரவுண்டு கவுத்துடலாம்னு இருந்தேன். ‘

ஆளுக்கொன்றாக எரிந்து விழுந்தார்கள். என் முகம் சுண்டிப் போய்விட்டது. பேசாமல் திரும்பினேன்.

‘ஏங்க நீங்களும் உட்கார்ந்து ஆடுங்களேன் ‘ ‘ என்றார் அங்கிருந்த ஒருவர்.

‘இல்லேங்க தூக்கம் வருது ‘ என்று ஒரு பொய்யைக் கூறி, என் இடத்தில் வந்து படுத்தேன். அன்றைய நிகழ்ச்சிகள் பூராவும் மனத்தை அறித்தெடுத்து…ஏண்டா இங்கே வந்தோம் என்று நினைத்துக் கொண்டேன். கூடவே விடிய நடக்க இருக்கும் திருமணத்தைப் பற்றியெல்லாம் நினைக்கும்போது, அகஸ்மாத்தாக ‘வரிசை வைக்கும் ‘ சம்பவம் ஞாபகம் வந்தது. அது நெஞ்சை பாரமாக அழுத்தியது. இரவெல்லாம் உறக்கமில்லை.

பொழுது விடியுமுன்னே மத்தள ஒலி காதைக் குடாய்ந்தது. வரிசை…..வரிசை…என்று நினைவுப் பிடுங்கலுடனேயே எழுந்தேன். சீனுவைத் தட்டி எழுப்பினேன். இருவரும் ஒன்றாகவே வெளியேபோய்த் திரும்பினோம். குளிக்க தலைவார எந்த செளகர்யமும் இல்லை. எங்களை யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. வெறுமனே பல் துலக்கி, முகம் கழுவிக் கொண்டோம். சீனு கைவசம் கொண்டு வந்திருந்த சலவை உடைகளை எடுத்து அணிந்து கொண்டான். என்னுடையது, உடம்பிலிருக்கும் ஒரே செட். இரவு படுக்கையில் கொஞ்சம் கசங்கிப் போயிருந்தது. என்னையே ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டபோது, எண்ணெய்க் காணாத தலை பம்பி நிற்பதும், இரவெல்லாம் உறங்காத சிவந்த கண்களும் அந்தக் கூட்டத்திலிருந்தே என்னை வேறுபடுத்திக் காட்டுவதுபோலிருக்க, தாழ்மையுணர்ச்சி, மனத்தில் சம்பரமிட்டு அமர்ந்து கொண்டது.

முகூர்த்த வேலை நெருங்கியது.

புதிது புதிதாக யார் யாரோ வந்தபடியிருந்தார்கள். எல்லோர் கையிலும் ஏதேதோ பரிசுப் பொருள்கள். பந்தலைச் சுற்றிக் குழுமியிருந்தவர்களும் ஏதாவதொன்றை வரிசைக்கு தயாராக வைத்திருந்தார்கள். எதுவுமில்லாமலிருப்பவர்கள் பணமாக வைக்கலாம். என்னைப் போல காய்ந்துபோனவன் எவனும் இருக்கமாட்டான். நான் மட்டும்தான் வெறுங்கை ‘

சீனு எப்படியோ….. ? நைசாக விசாரித்தேன். ஒரு பைலட் பேனா என்றான்.

அவன் எனக்குத் துணை இல்லை. அவனும் என்னைவிட்டு வெகுதூரம் போய்விட்டான். அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டான்.

என்னுடைய வெறுமையை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. மனத்துக்குள்ளாகவே போட்டு அழுத்தி அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். நேரம் நெருங்க, நெருங்க இதயமே பாரத்தால் அழுந்தி அமிழ்ந்துவிடும் போலிருந்தது. ‘கெட்டி மேளம்…. ‘கெட்டி மேளம் ‘ ‘

மங்கள வாத்தியங்கள் பயங்கரமாக அலறி ஓய்ந்தன.

ஒரே நிசப்தம்….. ‘ ஒரு விநாடிதான். அந்த அமைதியே பயங்கரமாக எனக்காக காத்திருப்பதாய்த் தோன்றியது.

‘மாப்பிள்ளைக்கு வரிசை…. ‘ அம்மான் பட்டம் கட்டறவங்கல்லாம் கட்டலாம் ‘

அம்மான் பட்டங்கள் கட்டி முடிகின்றன: பந்தலைச் சுற்றி நெரிசல். பரிசு வைப்பவர்கள் முந்திக் கொண்டிருக்கிறாகள். ‘மாப்பிள்ளைக்கு வரிசை ‘

அய்யரின் குரல் நடக்க இருக்கும் நிர்வாண நாடகத்துக்கு கட்டியம் கூறுவதுபோலிருந்தது. அதைத் தொடர்ந்து அவருடைய வார்த்தைகள் சம்மட்டி அடியைப் போல காதுகளில் விழுந்தன.

விடங்கம்பாடி பாண்டுரங்கக் கவுண்டர்; மாப்பிள்ளைக்கு ‘ வரிசை; அரை பவுன் மோதிரம் ஒண்ணு; தாதாபுரம் சின்னசாமிப் படையாச்சி; மாப்பிள்ளைக்கு வரிசை; ரூவா இருவது……. ‘ அன்பான அன்பளிப்புகளை ஒலிபெருக்கி அலறிக்கொட்டியது.

ஒவ்வொருவராக வைக்கிறார்கள். நான் சும்மாயிருக்கிறேன். எல்லோரும் என்னையே கவனிக்கிறார்கள்–அப்படி ஒரு எண்ணம்.

‘அதோ ஒருத்தன் தலை காஞ்சி போய் நிக்கறான் பாரு அவன் தான். ‘

‘திரு திருன்னு முழிக்கறாம் பாரு. காலையில் குளிக்கக்கூட இல்லை. ‘

‘வேலையுங் கிடையாது. ஒண்ணுங் கிடையாது. வரிசைகூட எதுவுங் கிடையாது. அவனேதான். ‘

‘சட்டை கூடக் கசங்கி….யார் இவனை உள்ளவிட்டாங்க ? ‘

தனித்துவிடப்பட்ட தாழ்வுற்ற மனம், விபரீதக் கற்பனைகளில் மூழ்கிப் பயந்து நடுங்கியது.

எனக்குப் பொறுக்க முடியவில்லை. அங்கிருக்க பயம், அவமானம். ஒலிபெருக்கி பறை அறிவித்துக் கொண்டேயிருக்கிறது.

சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் என்னைக் கவனித்ததாய்த் தெரியவில்லை. சீனு–அவன் கூட பார்க்கவில்லை. பேனாவுடன் பந்தலருகே நின்றிருந்தான்.

மெல்ல கூட்டத்தை விலக்கிக் கொண்டு நழுவினேன். வாசலைத் தாண்டி, கூடம் யாரும் கவனிப்பதற்குள் கிளம்பிவிட வேண்டும் என்று நடையில் ஒரு வேகம்…..

‘ஓடறாம் பாரு…புடி…புடி ‘ அவன் ஒண்ணுமே வக்கலே…. ‘ என்று யாரோ துரத்துகிறார்கள்.

ஒன்றுமில்லை.

வெறும் பிரமைதான்….. ‘

Series Navigation

- அஸ்வகோஷ்

- அஸ்வகோஷ்