மனசாட்சியின் கதவு (எனக்குப் பிடித்த கதைகள் -32 -மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘மஸுமத்தி ‘)

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

பாவண்ணன்


நகருக்குள் நண்பரொருவர் வீடு கட்டத் தொடங்கியிருந்தார். கதவுகள், ஜன்னல்கள், கட்டில்கள், நாற்காலிகள், உணவுமேசை, அறைக்கால்கள் என மரச்சாமான்கள் அவருக்குத் தேவைப்பட்டன. புறநகர்ப் பகுதியொன்றில் யாரோ ஒருவருடைய வீட்டில் இச்சாமான்கள் மலிவான விலைக்குக் கிடைக்கின்றன என்கிற தகவலைக் கேள்விப்பட்ட நண்பர் பார்த்து வர உதவிக்கு என்னை அழைத்தார். நண்பரும் அவர் துணைவியாரும் நானும் மறுநாள் சென்றோம். முகவரி சொன்னவர் சரியான இட அடையாளம் சொல்லியிருந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அரைமணிநேரத்தில் கண்டு பிடித்து விட்டோம்.

வீடு சிதைந்த நிலையில் இருந்தது. ஒரு காலத்தில் அரண்மனை போல இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தது அதன் பழைய தோற்றம். சுவர்கள் இடிந்து விழுந்திருந்தன. வாசலில் ஏகப்பட்ட பழைய போட்டாக்கள் கழற்றப்பட்டு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாசலருகில் நின்று பலமுறை குரல் கொடுத்த பிறகு இளைஞனொருவன் வெளியே வந்தான். துடிப்பான முகம். என்ன என்று எங்களைப் பார்த்து வேகமாகக் கேட்டான். நாங்கள் விஷயத்தைச் சொன்னோம். உடனே மறுத்தான் அவன். நாங்கள் வழிதவறி வந்து விட்டோம் என்றும் அப்படி எந்தப் பொருளும் விற்பனைக்கில்லை என்றும் அவசரம்அவசரமாகச் சொன்னான். உடனே புறப்பட்டுப் போகும்படி சத்தம் போட்டான். எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்த முகவரியைச் சொல்லி ‘அது சரிதானா ? ‘ என்று கேட்டதற்கும் ‘சரியில்லை ‘ என்று மொழிந்தான். சந்திரப்பா என்ற பெயருடன் அங்கே யாருமில்லை என்றும் சாதித்தான். குழப்பமுடன் நின்று கொண்டிருந்த வேளையில் ‘நான்தான் சந்திரப்பா , என்ன வேணும் ஒங்களுக்கு ‘ என்றபடி தள்ளாத ஒரு கிழவர் உள்ளிருந்து வெளிப்பட்டார். உடனே அந்தக் கிழவரும் இளைஞனும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். பிறகு என்னவாவது செய்துகொள் என்று சாபமிடுபவன் போலச் சொல்லிவிட்டு எங்களைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் சென்று விட்டான்.

இளைஞனுடைய நடத்தைக்காக மன்னிப்பு கேட்டார் கிழவர். உள்ளே அழைத்துச் சென்று எல்லாப் பொருட்களையும் காட்டினார். அந்தக் காலத் தேக்குக் கதவுகள் மிக அழகான பூவேலைப் பாடுடன் இருந்தன. பல மூலிகை மரங்களை இணைத்துச் செய்யப்பட்டிருந்த கட்டிலின் விளம்புகளில் அழகான மயில் சிற்பங்கள் நின்றிருந்தன. மிகச் சிறிய பாக்குவெட்டியில் கூட அழகான கைவேலைப்பாடு தெரிந்தது. பெரியவர் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொண்டே வந்தார். ஒவ்வொன்றும் எப்படி அக்குடும்பத்தில் இடம்பெற்றது என்கிற சரித்திர உண்மைகளையும் சொன்னார்.

கிழவரின் மூதாதையர் அரச சபையில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்களாம். அந்தக் கிராமமே ஒருகாலத்தில் அக்குடும்பத்துக்கு வரி கட்டிக் கொண்டிருந்ததாம். பிறகு ஏதோ தலைமுறையில் சீர்குலைவு தொடங்கி எல்லாரையும் சிதைத்தபடி இருக்கிறது. வாழ்வும் செல்வமும் ஒரு காலம். இப்போது வறுமை. வயிற்றுப்பாடுதான் ஒவ்வொரு பொருளையும் விற்கத் துாண்டி இருக்க வேண்டும்.

எல்லாப் பொருட்களுமே எனக்குப் பிடித்திருந்தன. ஆனாலும் அவை விற்கப்படுவதோ வாங்கப்படுவதோ மனத்துக்குப் பிடிக்கவில்லை. காரணமின்றி சத்தம் போடுகிற இளைஞன் என்றாவது ஒருநாள் அப்பொருட்களை வைத்துக் காப்பாற்றுகிறவனாக மாறலாம் என்று தோன்றியது. நம் அவசரத்துக்கு எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டால், அவனுக்கென்று எதுவும் எஞ்சாமல் போகக் கூடும். ஏதேதோ காரணம் சொல்லி வாங்க விடாமல் செய்து விட்டேன். நண்பருக்குக் குழப்பம். அவர் மனைவிக்குக் கோபம். என்னை அழைத்துக் கொண்டு சென்றதே தப்பு என்று என்னை வைத்துக் கொண்டே சொன்னார். மெல்ல, அந்த வீடு ஒரு சரித்திரக் காப்பகம் போலத் தென்படுகிறது என்றும் எல்லாப் பொருட்களுக்கும் ஏதோ ஒரு பழைய வரலாறு இருக்கிறது என்றும் சொன்னேன். ‘இருந்தால் என்ன ? ‘ என்று கேட்டார் நண்பர். ‘உங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அது அந்த வீட்டின் சரித்திரத்தையே சொல்லும் நண்பரே. அந்த வீட்டின் மூதாதையர்களின் பெருமூச்சு காதில் கேட்கும் போது, அக்கட்டிலில் நிம்மதியாக உங்களால் உறங்க முடியுமா ? யாராவது பணம் கொடுத்து நிம்மதிக்குலைவை வாங்குவார்களா ? ‘ என்று கேட்டுவிட்டுத் திரும்பி விட்டேன். சில வாரங்கள் வரை பார்க்காமலேயே இருந்த நண்பர் தற்செயலாகக் கடைவீதியில் கண்டபோது எல்லாப் பொருட்களையும் கடையிலே வாங்கி விட்டதாகச் சொன்னார். மெதுவான குரலில் ‘என்ன செய்றது ? செலவுதான் மூணுமடங்காயிடுச்சி ‘ என்றார்.

நண்பருக்காக மரச்சாமான்கள் வாங்கச் சென்று வாங்காமல் வந்த சம்பவத்தை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் என் மனத்தில் மற்றொரு கதை நிழலாடுகிறது. அது கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் ஸ்ரீநிவாச என்கிற புனைபெயரில் எழுதிய ‘மஸூமத்தி ‘ என்கிற கதை. பல உள்அடுக்குகள் கொண்ட கதை. சிறுகதை வளரத் தொடங்கிய தொடக்கக் காலத்திலேயே இத்தனை சிறப்புகளுடன் ஒரு கதை வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

மாஹிஷ்மதி என்பது புராணப் புகழ்பெற்ற நகரம். நாளடைவில் பெயர் சிதைந்து மஸூமத்தி என்று உருமாறி விடுகிறது. நகரத்தையே பாரதத்தின் படிமமாக மாற்ற்ி விட்டுக் கதையைத் தொடங்குகிறார் மாஸ்தி.

கோர்ட்னே துரை என்னும் ஆங்கிலேயனுடைய நாட்குறிப்பைப் படிக்கத் தருவது போல தொடங்குகிறது கதை. நாட்குறிப்பின் தொடக்கத்தில் ஒரு சிறிய புராணக் குறிப்பு இடம் பெறுகிறது. இராவணனுடைய மரணத்துக்குப் பிறகு, அவனுடைய தம்பியான வீடணனுக்குப் பட்டம் கட்ட இலங்கையில் நுழையும் ராமனுடைய கண்களில் ஒரு நீலக்கல் படுகிறதாம். அந்தக் கல்லின் அழகைக்கண்டு மனம் பறிகொடுக்கிறானாம் ராமன். இங்கேயே ஆசைக்கு வசப்பட்டு விட்டால், இன்னும் இலங்கை நகருக்குள் வேறு எதைஎதையெல்லாம் கண்டு மனம் வசமிழந்து போகுமோ என நினைத்தானாம். தலையெடுக்கும் ஆசைகளைத் தடுக்க வேண்டி தம்பி லட்சுமணனை அனுப்பிப் பட்டம் கட்ட வைத்ததாகச் சொல்கிறது ஒரு வாய்மொழிக் கதை. ஆங்கிலேயர்களுக்கு இந்த நாடு இலங்கையைப் போல ஆகி விட்டது. ஆனால் அவர்கள் ராமனைப் போல இல்லை. நாட்டுக்குள் கண்ணில் கண்ட எல்லாச் செல்வங்களையும் தமக்கு தமக்கு என்று அள்ளி எடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கின்றனர். இப்படித் தம் எண்ணங்களைப் பதிவு செய்பவன் ஒரு துரை. ஆங்கிலேயன். ஆங்கிலேய சாம்ராஜ்யமே இந்தியாவை அடிமைப்படுத்தி அதன் செல்வத்தைக் கொள்ளை கொண்டது. கதையில் இடம்பெறும் துரை மட்டும் வாய்மொழிப் புராண ராமனைப் போல எதையும் தொடாமல் செல்கிறான்.

துரையின் தங்கை எமிலியும் அவள் கணவன் ஃபர்கூவரும் இங்கிலாந்திலிருந்து வந்திருக்கிறார்கள். இந்திய ஓவியம், சிற்பம் எதைப்பார்த்தாலும் அவர்களுக்கு ஆசை. உடனே அவற்றை வாங்கித் தம் நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஆவல் உள்ளவர்கள். எல்லாவற்றையும் சேர்த்து சொந்தமாக மியூஸியம் ஒன்றை நிறுவ நினைத்திருக்கிறார்கள். அஜந்தாக் குகையைப் பார்த்து விட்டுப் பாறைகளில் ஓவியம் எழுதிய புண்ணியவான்கள் திரைச்சீலைகளில் தீட்டியிருந்தால் தம் நாட்டுக்குக் கொண்டு சென்றிருக்கலாமே என்று சொல்லிப் புலம்புகிறார்கள். அப்போதுதான் மஸூமத்தி கிராமத்தைப் பற்றியும் அங்கே உள்ள ஒரு கிழவரின் வீட்டில் பழையகால ஓவியங்கள் இருப்பதைப் பற்றியும் பேச்சு வருகிறது. உடனே அவற்றைப் பார்க்கும் ஆவல் தம்பதியினரிடம் எழுகிறது.

மறுநாளே அந்த ஊரை அடைந்து வீட்டையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். கிழவர் தம் வீட்டில் இருந்த பழைய சித்திரங்களைக் கொண்டு வந்து காட்டுகிறார். அவற்றை வரைந்தது அக்கிழவரின் தாத்தா. எல்லாமே குழலுாதும் கோபாலனின் சித்திரங்கள். இறைவன் தமக்குத் தரிசனம் தரும் நிலையைக் கற்பனையில் உருவாக்கிப் பார்ப்பதே அவர் நோக்கமாக இருந்திருக்கிறது. ஒவ்வொன்றையும் வரைவதும் வரைந்த பின்னர் ஏதோ அதிருப்தியில் மற்றொன்றைத் தொடங்குவதுமாக அவ்வளவு படங்களையும் வரைந்திருக்கிறார். எமிலி தம்பதியினர் தாத்தா வரைந்த இறுதி ஓவியத்தைக் காணும் ஆவலை வெளிப்படுத்துகின்றனர். அது முற்றுப் பெறாத ஓவியம் என்றும் அதை யாரிடமும் காட்டுவதில்லை என்றும் சொல்கிறார் கிழவர். தம்பதியினரின் ஆவலைக் கண்ணால் கண்ட பிறகு மறுக்கவியலாமல் கொண்டு வந்து காட்டுகிறார். அதுவும் குழலுாதும் கோபாலனுடைய படம். படம் வரைந்து கொண்டிருக்கும் போதே ஊர்க்கோட்டையைத் தாக்க வெளிநாட்டுப் படை வந்துவிட்டதென்றும் தாத்தா கோட்டையைக் காப்பாற்றச் சென்று மாண்டுவிட்டார் என்றும் சொன்னார். சித்திரத்தை மறுபடியும் பார்க்கின்றனர் எல்லாரும். கோபாலன் உருவம் சரியாக இருக்கிறது. அடியில் பசுவின் அருகே தொடங்கிய கோடு அப்படியே நின்றுவிட்டது. அது என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் புரியவில்லை. சித்திரத்தையே பார்த்திருக்கும் எமிலி ஒரு பசுங்கன்று ஓடிவந்து தாயின் மடியில் பால் குடிக்க வேண்டுமென்று நினைத்த போது கோபாலன் குழலெடுத்து ஊதத் தொடங்கிவிட இசையைக் கேட்டதும் கன்றின் பசி தீர்ந்துவிட்டதால், தொடர்ந்து இசையில் லயித்தபடி நின்று விடுகிறது. வயிற்றுப்பசியைத் தணிக்கிறது தாயின்மடி. ஆன்மப் பசியைத் தீர்க்கிறது கோபாலனுடைய இசை. ஃபர்கூவர் அப்படத்தை விலைக்குக் கேட்கிறான். கிழவர் தர மறுத்து விடுகிறார். மறுநாள் யோசித்து முடிவு சொல்லும்படி சொல்லிவிட்டுத் திரும்புகின்றனர் அனைவரும். ஆனால் அவர்கள் வருவதில்லை. அவர்கள் மனத்தை மாற்றியது வழியில் கண்ட ஒரு காட்சி.

வழியில் ஒரு பாழடைந்த குளம். சுற்றிலும் அழகான இயற்கைக் காட்சி. ஆனால் தண்ணீர் இல்லை. சுற்றுச் சுவரின் கற்களையும் அடிக்கடி மக்கள் பிடுங்கி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். மக்களின் அறியாமைதான் இதற்குக் காரணம். தண்ணீருக்காக இல்லாவிட்டாலும் செடிசெத்தைகளை அகற்றிச் சரியாகப் பார்த்துக் கொண்டால் இன்றில்லாவிட்டாலும் நாலு வருடத்துக்குப் பிறகாவது குளத்துக்குத் தண்ணீர் வரும். பாழடையத் தொடங்கிய ஒன்றுதானே என்று எல்லாரும் ஆளாளுக்கு இடிக்கத் தொடங்கி விட்டால், தண்ணீர் வரும்போது குளமே இருக்காது என்று தோன்றுகிறது. பேசிக் கொண்டே போன எமிலிக்கு இக்குளத்தையும் பாரதத்தையும் ஒன்றாக இணைத்து எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. உடனே தான் செய்ய இருந்த தவறு உறைக்கிறது. படத்தை வாங்க வராமல் போனதற்கு இதுதான் காரணம்.

ஆள வந்தவனுடைய மனசாட்சியையும் அடிமைப்பட்டவனுடைய மனசாட்சியையும் ஒருசேரத் தொடுகிறது கதை.

*

ஆரம்பக் காலக் கன்னடச் சிறுகதைகளைச் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார். ‘மாஸ்தி கன்னடத்தின் ஆஸ்தி ‘ என்று சொல்லும் அளவுக்குப் புகழ் பெற்ற இவருடைய தாய்மொழி தமிழாகும். சிக்கவீர ராஜேந்திரன், சென்னபஸவ நாயக்கர் ஆகிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களை எழுதியவர். ஞானபீடப் பரிசைப் பெற்றவர். ஸ்ரீநிவாஸ என்னும் புனைபெயரில் சிறுகதைகளை எழுதினார். எல்.எஸ்.சேஷகரிிராவ் அவர்களால் தொகுக்கப்பட்டு எஸ்.கே.சீதாதேவி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1968ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்த ‘கன்னடச் சிறுகதைகள் ‘ என்னும் தொகுப்பில் ‘மஸுமத்தி ‘ என்னும் இக்கதை இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts