முனைவர் செண்பகம் ராமசுவாமி
‘இந்த வருசம் வெயிலு எக்கச் சக்கண்டி ‘ அதான் மல்லிகெ தன்னால மலிஞ்சு கெடக்கு ‘ எவளைப் பாரு, பிச்சடா போட்டு சுத்தி ரெண்டு சராமவது வச்சிக்கிறா ‘
‘கொண்டை போட்டாலும் பரவால்லியே ‘ சின்னப்புள்ளைக பூத்தக்கிதுன்னு எருமைமாடு தண்டி இருக்கவளுமில்லே பூத்தச்சிக்கிட்டு அலையறா ‘
‘அதாண்டி சொல்ல வந்தேன் ‘ ராமெ(ன்) பொஞ்சாதிக்கு என்ன வயசியிருக்கும் ‘ நல்லா ரோசிச்சுச் சொல்லு பாப்பம் ‘ அவ சடங்குக்குத் தெரு சுத்தறப்ப நானு எங்காத்தா கூடத் தட்டு தூக்கிருக்கேன். ஏங்கல்யாணத்தப்ப நீ சமஞ்சிருந்தே ‘ எனக்கு நல்லா நெனைப்பு இருக்கு ‘ அப்ப நீயே அவ வயசைப் பாத்துக்க ‘ அவ உலுக்கில்லாம பூத்தச்சிக்கிட்டு நேத்து வாச வளியே போறா, இதென்னாடி அதிசயம்னு மனசிலே நெனச்சிக்கிட்டுப் பேசாம இருந்துட்டேன். இந்தக் கொடுமயெ யாருட்டச் சொல்றது. ‘
‘நீ பொல்லா அதிசயத்தைக் கண்டுபிட்டே போ ‘ பெரிய கடயிலேயிருந்து நேர வந்தா நீ நாலு தெருவோட வித்துப் புட்றே ‘ டவுணுப் பக்கம் போய்ப்பாரு ‘ எவ்வளவு பெரியவளுகள்ளாம் பூத்தச்சிக்கிட்டுத் திரியறாளுகன்னு ‘ பூத்தச்சிக்கிட்டு போட்டோ வேற புடிச்சிக்கிறாளுக ‘ ‘
‘அதா(ன்) அப்பவே சொல்லிட்டேனே ‘ பொல்லா உலுக்கத் தவளுகன்னு ‘ ‘
சகல ஜீவராசிகளையும் ஒரேயடியாக சுட்டுப் பொசுக்கி விட வேண்டும் என்ற ஆத்திரத்துடன் வெயில் அடிப்பது போல் தோன்றிய அந்தச் சுடுவேளையில் ஆற்றங்கரையோர வீதியில் எல்லம்மாவும் மாரியாயியும் ஆளுக்கொரு தட்டுக் கூடையில் நாட்டு வாழைப்பழங்களைச் சுமந்தபடி பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.
‘மாரியாயி ‘ ரெண்டு சத்தங்குடேன் ‘ ‘
‘இந்தத் தெரு சனங்க நாட்டுப் பளம் வாங்க மாட்டாதுக ‘
‘பெறகு எங்க விப்பே ? ‘
‘கொசவ தெருவிலேயும் கண்டிசனா அஞ்சாறு வீட்டிலேயாவது வாங்குங்க ‘ வெயிலுக்கு நாட்டுப்பளம் குளிச்சின்னு ரொம்பப் பேருக்குத் தெரியாது. நீயும் இன்னிக்கு இந்தப் பக்கம் வந்துட்டே ‘ ரெண்டு பேருமா வடக்கே நாலு தெரு சுத்துனோம்னா கூடை காலியாயிரும். ‘
அவர்கள் இருவரும் அரசமர நிழலுக்கு வந்தவுடன் கூடைகளை இறக்கி வைத்துவிட்டு ‘முந்தானி ‘யை உதறி முகத்தைத் துடைத்துவிட்டுத் தரையில் உட்கார்ந்தார்கள். உடம்பில் பரவலாக ஆங்காங்கே வியர்வைத்துளிகள். காலை நீட்டி, மண் தரையில் உட்காந்துகொண்டு இருவரும் அவரவர் கூடையிலிருந்து இரண்டு வாழைப்பழங்களை எடுத்துச் சாப்பிட்டார்கள். அவர்கள் முன்னால் இரண்டு சிறுமிகள் நேற்றுத் தைத்த பூச்சடைகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள். வாடி வதங்கிப் போனாலும் பூ வேலைப்பாடு மாறாமல் அச்சாக அப்படியே இருந்தது. இரண்டு பேருக்கும் மறுபடியும் அங்கம்மா நினைவு வந்துவிட்டது.
‘அங்கம்மாவுக்கு எத்தனை புள்ளைக ? மூணா நலா ? ‘
‘ரெண்டு பொட்டை ‘ ஒரு பய ‘ பயதானே கடசி ‘ நாலா மாசம் நம்ப ரெண்டு பேருந்தானே போய்ப் பாத்தோம் ‘ ‘
‘மூணு புள்ளைக்காரிக்கு இந்த ஆசை வந்துச்சாக்கும், என்னமோ மசக்கைக்காரி மாதிரி… ‘
‘புருசனும் இதுக்கெல்லாம் சரிங்கறானில்லே ‘ ஒம் புருசனும் எம் புருசனும் பூத்தக்கணும்னா என்ன சொல்லும் ? ‘
‘நல்லா சொன்னே ‘ சாணியெக் கரச்சு ஊத்தி வெளக்குமாத்திலே ரெண்டு சாத்திரேங்குங்க ‘ ‘
‘ஏம்மா, வாளப்பளம் என்னா விலை ? ‘
‘வாய்யா ‘ ஒண்ணு பத்து பைசா ‘ எத்தனை வேணும், ஒரு டசென் தரவா ? ‘
‘ஒரு டசென்லா வேண்டாம்மா ‘ ரெண்டு பளம் பதினஞ்சிக்குக் குடு. ‘
‘அந்தப் பேச்சுக் கெடயாது ‘ பளத்தைப் பாரு ‘ எம்புட்டுப் பெரிய பளம்னு. நாயமா ஒரு பளத்துக்கு ஒரு பைசான்னு லாபம் வச்சு ஒரே வெலைக்குக் குடுக்கறது ‘ இதெய முக்குக் கடையிலே போய் ஒரு பளம் பதினஞ்சின்னு வாங்குவே ‘ ‘
‘முக்குக் கடக்காரன் என்னோட மச்சான் ‘ அதனாலே அவனுக்குக் காசு கூடக் குடுப்பேன் ‘ ஓம் பளத்துக்கு வெலை கேட்டா முக்குக் கடக்காரன் மூலைக் கடக்காரன்னு எகனெக்கி மோனை பேசிக்கிட்டு ‘ குடும்மா ரெண்டு பளம் ‘ இந்தா இருபது காசு ‘ ‘
அவள் சொன்ன அதே விலைக்கு வாங்கும் தோல்வியை இந்த வார்த்தைகளினால் சரிக் கட்டப் பார்த்தான் அவன்.
வியாபாரம் முடிந்தது. பூத்தைத்திருந்த அதே பெண்கள் மறுபடியும் அந்தப் பக்கம் போனார்கள்.
‘ஆத்தாத்தா ‘.. ‘ எல்லம்மா அதிசயித்தாள். ‘நடுவுல பொம்மயெல்லாம் வச்சிருக்கு ‘ என்னமாத்தான் இப்படி அளகாத்தய்க்குதுகளோ ? ‘
‘பூத்தச்சுப் பாத்தா ஒரு அளகு தான் ‘ எனக்கும் பயலுக ‘ ஒனக்கும் பயலுக ‘ தச்சுப் பார்க்கக் கூடப் பொட்டைக இல்லே ‘ ‘
‘ஏன் ‘ நீ தான் தச்சிக்கிறது ‘ ‘
படக்கென்று வந்த எல்லம்மாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு மாரியாயிக்கு வாயெல்லாம் பல் ‘
‘நல்ல நாயத்தெக் கெடுத்த ‘.. இப்ப போயி.. ‘
‘இப்ப என்ன ஆச்சு ஒனக்கு வயசு ? அங்கம்மாவுக்கு நான் எளையவ ‘ நீ எனக்கு எளையவ ‘ அவளே தக்கிறப்ப நீ தச்சா என்ன, இல்லெ… நான் தான் தச்சா என்ன ? ‘
இதைச் சொல்லிவிட்டு அவள் மாரியாயியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அவள் எதிர்பார்த்ததுக்கும் மேலான உற்சாகத்துடன் மாரியாயி தொடங்கினாள்.
‘அதானே, நான் தச்சிக்கிறதுன்னா நீயும் தச்சிக்கணும், அப்பத்தான் நானும் தச்சிக்குவேன். சின்னப்புள்ளையிலே எங்காத்தாவும் எனக்குத் தய்க்கலே ‘ ஒங்கத்தாவும் ஒனக்குத் தய்க்கலே ‘ அது சரி, அங்கம்மாவுக்கு இருபத்தஞ்சாவது ஆகும்லே வயசு ‘ அவ பணக்காரி ‘ அவ தச்சா தெருவிலே ஒருத்தியும் நேரே சொல்லமாட்டா ‘ நீயும் நானும் தச்சோம்னா நக்கலு பண்ணுவாளுகல்லே ‘ ‘
‘ஒம்புருசனையும் எம்புருசனையும் கூட ஒரு நெலைல்லே சொல்ல முடியாது. மனசு போல ஒரு தரம் சரின்னும், இல்லேன்னா ஏதாவது குத்தலா பேசினா மனசுக்குக் சங்கடமாயிரும். அப்பொறம் சண்டெ சச்சரவாயிரும். ‘
தங்களுடைய நீண்ட கூந்தலில் பூத்தைக்கப்பட்டுத் தாங்கள் அழகாக விளங்கும் காட்சியை இருவரும் சிறிது நேரம் மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
பிறகு மாரியாயி மெல்லத் தொடங்கினாள்.
‘எல்லம்மா, எனக்கு ரொம்ப நல்லா ஒரு ரோசனை வருது. அடுத்த நாயித்துக்கெளமை மாரியம்மன் கொண்டாடுறோமில்லை, அங்கம்மா வீட்டிலே கும்மிக்குப் பேரு குடுக்கலாமின்னு காலையிலே ஆண்டிச்சி வந்து சொல்லிட்டுப் போனா. இன்னிக்குப் பொளுது சாய, அவ வீட்டுக்குப் போறப்ப, இந்தத் தடவை கும்மியடிக்கிற தெருப்பொம்பிளைகள்ளாம் ஒரே மாதிரி பூத்தச்சு அடிப்போம்னு சொல்லிட்டா நம்மளை மாதிரி ஒருத்தி ரெண்டு பேரு ஆசைப் பட்டவளுக்கும் நல்லதாப் போயிரும் ‘ இருபது பேராவது அடிப்போமில்லே.. ஒன்னையும் என்னையும் தனியாப் பாத்து ஒருத்தரும் நக்கலு பண்ணமாட்டாங்க ‘ ‘
எல்லம்மாவுக்கு நம்பவே முடியவில்லை. இனிமேல் அவர்கள் வாழ்க்கையில் நடக்கவே முடியாதென்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு மகிழ்ச்சியான சம்பவம் இவ்வளவு எளிதாகச் சாத்தியமாக முடியும் என்பதை ஒத்துக் கொள்ளவே அவளுக்கு நேரம் பிடித்தது.
‘மாரியாயி, ஒனக்குப் புத்தி ரொம்ப ‘ சுத்தித்தான் போடணும் ‘ இன்னிக்குப்போய்ச் சொல்லிப்பிடுவோம் ‘ என்றவளே இழுத்தாற் போல்…
‘ஏண்டி.. இந்த எளவு சாமான்லாம் நம்மகிட்டே இல்லியே… ‘ என்றாள்.
‘அதுக்கு நீ ஒண்ணும் கவலைப் படாதே ‘ கோவில் கடையிலே அஞ்சு ரூபாய்க்குள்ள எல்லாம் வாங்கிப்பிடலாம் ‘ ரெண்டு நாளைக்கு, கூட அம்பது பளம் வாங்கினோம்னா காசுக்கு என்ன கவலை ‘ எந்திரி ‘எந்திரி நேரமாச்சு ‘ ‘
‘அம்பது பளமென்ன ‘ நூறு கூட வாங்கலாம் ‘ ஒரு காரியத்துக்கில்லாம, ஒழைக்கிற காசு வேற எதுக்கு ? பொடணி வலிக்க நித்தந்தான் சொமக்கறோம். ‘
இருவரும் ‘சும்மாடு ‘களைத் தலையில் வைத்துக் கொண்டு கூடைகளைத் தலையில் ஏற்றினார்கள். அந்தத் தெருவில் ‘ வாங்க மாட்டாதுக ‘ என்ற மாரியாயியின் அறிவுரையையும் மறந்து எல்லம்மா உற்சாகமாக ‘வாளப்பளம் ‘ ‘ என்று கூவினாள்.
அவள் முடித்தவுடன் ‘ஏண்டி, அப்ப அங்கம்மா இன்னொரு தடவை பூத்தச்சிக்குவா ‘ என்றாள் மாரியாயி.
‘தச்சிட்டுப் போறா ‘ விடு ‘ ‘
சுடுகிற வெயிலோ, தெருவில் போகும் மனிதர்களோ, வாகனங்களோ, எதுவும் அவர்கள் கவனத்திற்கு வரவில்லை. மாரியம்மான் பொங்கலில் பூத்தைத்த தலைகளை ஆட்டிக் கொண்டு ஒரே சீராக அவர்கள் கும்மியடிக்கும் காட்சி வொன்றே கண்முன் நின்றது.
‘கும்மியடிக்கறப்ப, அங்கம்மாவோட அக்கா மகன், காலேசு படிக்குதே, அதுகிட்டே சொல்லிக் கண்டிசனா போட்டோ புடிக்கணும் ‘ என்று மாரியாயி நடுவில் நினைத்துக் கொண்டாள்.
அங்கம்மாவை உடனடியாகப் பார்த்து இந்த யோசனையைச் சொல்லிவிட வேண்டும் என்ற பரபரப்பு இருவரையும் ஆட்கொண்டதால் வழக்கத்திற்கும் அதிகமான முறைகள் அவர்கள் ‘வாளப்பளாம் ‘ வாளப்பளம் ‘ என்று கூவிக் கொண்டே போனார்கள்.
- வழியோரம் நதியூறும்…
- குளிர் காலம்
- ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்
- புவி யீர்ப்பு விசை.
- பின் தங்கிய சுவடுகள்
- டிராபிக் லைட்டுகள் பற்றிய முக்கியமான அறிவுகள்
- டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான
- குஞ்சன்வயலிலிருந்து தமிழீழத்தை நோக்கி…….சோபாசக்தியின் கொாில்லா — ஒரு விமர்சனம்
- மாட்ரிக்ஸ் (Matrix) என்ற திரைப்படத்தின் கேள்விகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 8 -ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘ – தர்மமும் சட்டமும்
- கேரட் சாதம்
- தேங்காய்பால் போண்டா
- ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
- அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
- நம்மைப் பற்றி நாம்.
- மதுரையும் மல்லிகைபூவும்
- சின்ன கவிதைகள்
- இளமானே…!
- ஒரு தாயின் அழுகை
- பெரியாழ்வார்
- நகர் வெண்பா – 5
- தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
- பேரூந்து இலக்கம் 86
- இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?
- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது
- அனுபவ மொழிகள்
- தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி
- முஷாரஃபின் வாக்கெடுப்பு
- ஓநாய்க்கூட்டம்
- அண்ணாச்சி