மஜ்னூன்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

மீரான் மைதீன்


அன்புள்ள என்றோ, என் இதயமே என்றோ அல்லது என் உயிர் என்றோ எப்படி தொடங்குவது என்பதில் எனக்குள் நிறைய தடுமாற்றம் ஏற்படுகிறது. எல்லாவற்றையும் உன்னிடம் கொட்டித் தீர்த்துவிடும் உத்வேகத்துடனே எழுதுகிறேன். இது உனக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இதுபற்றி கவலை கொள்ளும் மனநிலையில் நான் எழுதவில்லை.
ஒரு வேளை நான் சிறைச்சாலையில் இறந்துபோனால் என் சடலம் என்னவாகும் என்பதைக் குறித்து என்னால் இப்போது எதுவும் திட்டமிட்டு எழுதமுடியவில்லை. நான் கப்பலில் இறந்துபோனால் என் சடலம் கடலில் மூழ்கடிக்கப்படலாம். பசியோடு இருக்கிற ஒரு மீனோ அல்லது பல மீன்களோ என்னைத் தின்று தீர்க்கலாம். இதைத்தாண்டி நான் மனநிலை பாதிக்கபடாமல் உயிரோடு வந்தால் உனது கரத்தைப் பிடித்தோ, உனது காலில் விழுந்தோ அல்லது உன் மார்பு வெளியில் முகம் புதைத்தோ ஒரு குழந்தையைப் போல விக்கி விக்கி அழுவேன்.
இங்கு நிறைய அழுதுவிட்டேன். ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல நான்கு வருடங்களுக்கு மேலாக அழுது கொண்டிருக்கிறேன் ஆனாலும் ஒருவேளை உன்னைப் பார்த்தால் கதறி அழுவதற்கான கண்ணீர் எனக்குள் இன்னும் மிச்சமிருப்பதாகவே நம்புகிறேன்.
நீ எப்படி இருக்கிறாய் என்றோ மகள் எப்படி இருக்கிறாள் என்றோ கேட்க விருப்பமில்லாதவனாக இருக்கிறேன். அல்லது தாங்கும் சக்தி அற்ற தன்மையோடு இருப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம் பத்து ரூபாய்க்கு இருபதுரூபாய்க்கு நீ பாய் கம்பெனியில் கூலி வேலை பார்ப்பதாகவும், சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதாகவும் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவன் திரும்ப வந்து என்னிடம் சொன்ன போது உண்மையில் நான் செத்துப்போக விரும்பினேன். நான் சாவைத் தவிர்த்துக் கொண்டதற்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று நான் ‘இக்காமா’ என்ற அடையாள அட்டை இல்லாதவன். மேலும் எனது பாஸ்போட்டோடு எனது கபீல் தொலைந்து போனான். அல்லது எனது பாஸ்போர்ட்டை போலீஸில் ஒப்படைத்துவிட்டு புதிய விசாவுக்கு மனு செய்திருக்கலாம். எனவே நான் செத்துப் போக முடியாது. அப்படியே நான் செத்துப்போனால் என்னைப் பாவம் பார்த்து அறையில் தங்க வைத்துள்ளவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஒருவேளை அவர்கள் என்னைக் கொலை செய்துவிட்டார்கள் என போலிஸ் சந்தேகப்படலாம். நான் எந்த நாட்டைச் சார்ந்தவன். எப்படி இந்த நாட்டுக்குள் நுழைந்து இந்த அறைக்குள் வந்தேன் என ஆராய்ச்சியில் இறங்கினால் அவர்கள் வாழ்க்கை நிர்மூலமாகிவிடும். ஒருவேளை நான் இயற்கையாக இறந்தாலும் அவர்களுக்கு இதே சிக்கல் ஏற்படும் என்பது வேறுவிஷயம் இன்னொரு காரணம் உன் மார்பு வெளியில் முகம் புதைந்து ஒரு குழந்தையைப்போல அழும் ஆசை.
அறையில் எங்களோடு இருந்த ஒரு உ.பி.காரன் இறந்து போனான். அந்த இரவில் எல்லோர்க்கும் நான் சாப்பாடு பரிமாறினேன் நான் இங்கு சமையல்காரன். அதுபற்றி விவரம் இன்னொரு பகுதியில் எழுதுகிறேன். இரவு சாப்பாட்டை நாங்கள் முடிக்கும்போது இரண்டு மணி இருக்கும். அறையில் என்னையும் சேர்த்து ஆறுபேர். அவர்களுக்கு கட்டிலும், படுக்கையம் உண்டு. நான் கார்பெட்டில் படுத்துக் கொள்வேன். அவர்கள் எனக்கொரு போர்வை மட்டும் தந்திருக்கிறார்கள். விளக்கை அணைத்த ஒரு மணிநேரத்துக்குள் உ.பி.காரனின் படுக்கை ஆக்ரோஷமாக அசைந்தது. பிறகு ”பானி… பானி…’ என சத்தம் வந்தது பங்களாதேசிக்காரன் வேகமாக எழுந்து விளக்கைப் போட்டான். எல்லோரும் எழுந்து உ.பி.காரனின் படுக்கையைச் சுற்றி நின்றோம். அவன் கால்களை உதைத் உதைத்து துடித்தான். படுக்கையில் மூத்திரம் போனது. ”ஆயிஷா… ஆயிஷா” என தொடர்ச்சியற்று ஈன சுரத்தில் அவனிடமிருந்து கடைசி சப்தம் எழுந்து அடங்கியது. ஆயிஷா அவனின் மனைவியின் பெயராக இருக்க வேண்டும். டெல்லி பரோ பார்த்துவிட்டு இறந்துவிட்டான் என்றான். டெல்லி பரோ முஸ்லிம் பெயரில் இங்கு வந்துள்ள ஒரு இந்து.
பங்களாதேசி அலறி அழுதான். உருது மொழியில் புலம்பினான். அறையில் அவன் ரொம்பவும் தைரியமானவன். முஜிபுரகுமான் அரசியல் கட்சியைச் சார்ந்தவன். பலமுறை அரசியல் கைதியாக அவன் நாட்டில் சிறைச் சென்றவன். லாக்கப்பில் அடிவாங்கிய தழும்புகள் அவன் சரீரத்தில் உண்டு. ஒருமுறை ஒரு அரபியை சிக்னலில் தைரியமாக விரட்டி அடித்தவன். தன்னை ஒரு மாவீரனாக சொல்லிக் கொண்டிருந்த அவன் ஒரு குழந்தையைப் போல அழுதான். மம்மலியும், பரோவும், குஞ்சப்பாவும் உறைந்து நின்றார்கள். எமனி கலாஸ் என்றான். எனக்கு வியர்த்துக் கொட்டியது. இறந்து கிடந்த உ.பி.காரனின் படுக்கைக்கு கீழே அவன் கல்கத்தாவில் வாங்கியதாக சொன்ன அர்மோனிய பெட்டி சரிந்து கிடந்தது.
அந்த உ.பி.காரனோடு எனக்கு மறக்கமுடியாத ஒரு நினைவு உண்டு. என் தலையில் ஒருபாடு தலைமுடி வளர்ந்து சடைபிடித்துக் கிடந்தது. நான் வெளியே போய் தைரியமாக முடிவெட்டிக் கொள்ளும் நிலையில்லாதவன் அப்படியே போனாலும் பத்து ரியால் கொடுக்க வேண்டும். அவன் ஒருமுறை அறையில் யாருமில்லாத நேரத்தில் என் தலையை உற்றுப் பார்த்துக் கொண்டே நண்பா…. வா…. என உருதுமொழியில் அழைத்தான். கக்கூஸில் அழைத்துப்போய் என் தலைமுடியை அழகாக வெட்டித் தந்தான். என் வாழ்வில் ஒருபோதும் இதை மறக்கமுடியாது.
உ.பி.காரனுக்கு கபீல் உண்டு. இக்கமா உண்டு. நான் ஏதுமற்றவன். இனி போலிஸில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரையும் விசாரிப்பார்கள். ஏன் எல்லோரும் சேர்ந்து உ.பி.காரனை கொலை செய்திருக்கக்கூடாது என சந்தேகம் வரும். அவர்கள் எல்லோரும் கூடி வேகமாக ஆலோசித்தார்கள். மலப்புறம் மம்மலி முதலில் என்னை அந்த இரவில் அறையைவிட்டு வெளியேறச் சொன்னான். அந்த இரவு உடுத்த துணியோடு வெளியேறும் முன்னால் உ.பி.காரனின் சடலத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். ஒப்பாரி வைத்து அழும் அவகாசம் எனக்கு கிடைக்கவில்லை.
வீதியில் வந்து நின்று எனது விதியை நினைத்து ஆகாயத்தைப் பார்த்து கதறி கதறி அழுதேன். என் கன்னங்களில் வழிந்த கண்ணீரையெல்லாம் எனது நாவால் நக்கி நக்கி குடித்தேன்.
ஒரு போலீஸ் வாகனம் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. ஒரு பிரம்மாண்டமான குப்பைத் தொட்டியில் குதித்து மறைந்து கொண்டேன். குப்பைத்தொட்டி லாரியின் பாடியைவிட பெரியது. அழுகிய நாறிய இறைச்சித் துண்டுகளில் என் முகம் புதைந்து கிடந்தது. கொஞ்சம் புழுக்கள் என் முகத்தில் ஊர்ந்தது. கைகளால் தட்டிவிட்டேன். அவை முகத்திலேயே மடிந்து பிசுபிசுத்தது. துடைத்து விடலாம் என துணிபோல் கிடந்த ஒன்றை ஆவேசமாக எடுத்து வேகவேகமாக முகத்தைத் துடித்தேன். அந்த ஸானிட்டரி நாப்கினிலிருந்து வந்த துர்நாற்றம் என்னைக் கொன்றுவிடும் போல இருந்தது. நாற்றம் தாங்க முடியாமல் வாந்தி எடுத்தேன். நான் மரித்துக் கொண்டிருப்பதாக உணர்ந்த போது உன் முகம் நினைவில் வந்தது. அப்போது மட்டுமல்ல எனக்கு மரணம் நிகழும் என்று நான் நினைக்கும் போதெல்லாம் உன் முகம் தான் நினைவில் வருகிறது. எவ்வளவோ முயற்சித்தும் மகள் முகம் நினைவில் வரவில்லை. நான் வரும்போது மூன்று மாத சிசுவாக உன் வயிற்றிலிருந்தவள். நான் இதுவரை பார்த்திராத முகம். உன்னைப் போலவா. என்னைப் போலவா அல்லது நாம் இருவரின் கலவையா… நான் வரும்போது கதவுக்குப் பின்னால் கண்ணீரோடு நின்ற உன்முகம் என் நினைவில் வரும்பொழுதெல்லாம் என் இருதயம் அறுந்து விழுந்து கொள்ளும். குப்பைத் தொட்டியிலும் அப்படித்தான்.
இரண்டு மூன்று பூனைகள் குப்பைத் தொட்டியில் சாடிய அதே வேகத்தில் மிரண்டு வெளியேறின. இங்கே தெரு நாய்கள் கிடையாது. நாய் நமக்கு ஹராம். ஆனாலும் பணக்கார்கள் வீட்டில் இங்கேயும் நாய்இருக்கிறது. அவர்கள் மடி மீது மார்பு மீது தவழ்கிற செல்லப்பிராணியாக. இங்கே ஒருநாய்களுக்கு பதிலாக தெருப்பூனைகள். இங்கே பூனைகளுக்கு எலி பிடிக்கத தெரியாது. நமது நாட்டில் நாய்களைப் போல பூனைகளை கல்லால் அடிக்கிறார்கள். கார்களில் அடிபட்டுச் சாகிறது. ஹோட்டலுக்கு முன்னால் வாய் பார்த்து நிற்கிறது. குப்பைத் தொட்டிக்குள் ஒரு பூனையின் பிணமும் கிடந்தது. இன்னும் குப்பைத் தொட்டிக்குள் கிடந்ததையெல்லாம் நான் வரிசைப்படுத்தினால் நீ தாங்கிக் கொள்ள மாட்டாய். எனக்குத் தலைவாரி, பவுடர் போட்டு மடிப்பு மாறாத உடையில் அத்தர் தடவி அழகு பார்த்த உன்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.
மூன்று மணி நேரத்துக்கு மேலாக அந்த குப்பைத் தொட்டியில் நானும், மனித மலமும், புழுக்களும், செத்த பூனையும், அழுகிய இறைச்சியும், இத்துடன் நான் எடுத்த வாந்தியும் வேண்டாம் விட்டு விடுகிறேன். நான் இரண்டு ஆண்டுகளாக குடியிருந்த அந்த நகரத்தைவிட்டு அல்லது நரகத்தை விட்டு எப்படி தப்பினேன்… தப்பினேன் என்பது சரி அல்ல. .. இன்னொரு நகரத்துக்கு அல்லது நரகத்துக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பதை சொல்லி விடுகிறேன். ஆனாலும் எனக்கு வரிசைப்படுத்த தெரியவில்லை.
குப்பைத் தொட்டியிலிருந்து முன்னூறு அடி தூரத்தில் ஒரு லாரி நின்றது. நம் நாட்டு லாரிக்கு இரண்டு மடங்கு பெரியது. விடிந்ததும் குப்பைத் தொட்டியிலிருந்து வெளிச்சாடி ஒரு மனநோயாளியைப்போல அல்லது ஒரு திருடனைப்போல மறைந்து மறைந்து லாரிக்குள் ஏறினேன். லாரியில் நிறையபொருட்கள் இருந்தது. ஒரு பெரிய சைஸ் பீரோவுக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டேன். அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து பணியாட்கள் பாகிஸ்தானியர்கள் என்றும் லாரி ஜித்தா போவதாகவும் தெரிந்து கொண்டேன்.
நீண்ட தூரம் பீரோவுக்குள் இருந்து யாத்திரை செய்தது உலகத்தில் நானாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூச்சுத் திணறலில் கண்கள் வெளிச்சாடி விடும் போல இருந்தது. இருட்டும், காற்றுகளற்ற அந்த சூழலும் என் நாக்குகளை பிடுங்கி இழுத்துக் கொண்டிருந்தது. எனக்குத் தெரியாமலேயே சொட்டு சொட்டாக மூத்திரம் சிந்திக் கொண்டிருந்தது. இன்னும்… வேண்டாம்… அந்த விவரிக்க முடியாத கொடுமையை எழுத்தில் கொண்டு வர இயலவில்லை. அல்லது நான் விரும்பவில்லை. கிட்டத்தட்ட 400 மையில் பயணம். உன் கண்ணீர் முகம் தான் என் நினைவுகளை ஆக்ரமித்திருந்தது. இதுதான் நான் ஜித்தா வந்த கதை.
நமக்கு திருமணம் முடிந்த நாலாவது மாதம் உன்னைவிட்டு பிரிந்து இங்கு வந்தேன். அதற்கு முந்திய இரவில் நீ என்னை அழுதுகொண்டே அள்ளி அணைத்துக் கொண்டதையும், வழக்கமாக உன் வியர்வையில் நானும் என் வியர்வையில் நீயும் நனைவதற்கு மாறாக கண்ணீரால் பரஸ்பரம் தேகத்தை நனைத்துக் கொண்டதையுமான நினைவுகளோடு புறப்பட்டேன். அப்போது நீ மூன்று மாத கர்ப்பிணி. இங்கே வந்து சேர்ந்தபோதும் உன் சரீரவாசனை என் நாசிதுவாரத்தை விட்டு நீங்காமல் என்னை வதைத்துக் கொண்டிருந்தது. ஒரு அறையில் அடைபட்டுக் கிடந்தேன். நினைவுகளில் நீ என்னை கட்டியணைத்தாய், முத்தமிட்டாய், உன் மூச்சுக்காற்றின் உஷ்ணத்தோடு இதழ் சுவைத்து என்னையே நீ எடுத்துக் கொண்ட நினைவுகளின் பிடியில் துடிதுடித்துக் துவண்டு கிடந்தேன்.
எனது கபீல் பாஸ்போட்டை வாங்கிக் கொண்டு போனான். மாலை வருவதாகவும் நாளை வேலை ரெடியாகிவிடும் என்று போனவன் அதன்பிறகு திரும்ப வரவே இல்லை. நாட்கள் போகப்போக நம்பிக்கை இழந்து நான் திக்கற்றவனானேன். இந்தியன் என்ற அடையாளத்தை இழந்து திருவிழா கூட்டத்தில் குடும்பத்தை தொலைத்த ஊமை குழந்தைபோல கதறி அழத் தொடங்கினேன். எனது முதல் கதறல் அப்போதுதான் துவங்கியது.
நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு அறையில் சமையல்காரனாக வேலை. இருநூறு ரியால் சம்பளம். வெளியே போக முடியாது. போலீஸ் பிடித்துக் கொள்ளும். ஆறுமாத காலமாக அந்த அறையில். பிறகுதான் உ.பி.காரன் இருந்த அறைக்கு வந்தேன். எட்டாயிரம் ரூபாய் உனக்கு கொடுத்து விட்டேன். நீ எழுதிய எந்த கடிதமும் எனக்கு கிடைக்கவில்லை. எனவே நான் எழுதுகிற கடிதம் உனக்கு கிடைக்கிறதா இல்லையா என்பதும் எனக்குத் தெரியவில்லை. நீ அழுது கடிதம் எழுதியிருக்கலாம். எனக்கு ஆறுதலாக எழுதியிருக்கலாம். உன் கடிதங்களில் ஒன்றையாதவது நான் வாசித்திருந்தால் என் சுவாசம் சுகமாயிருக்கும். நீ குழந்தை பெற்ற விசயம்கூட நான்கு மாதங்களுக்கு பிறகு என் அறைக்காரன் தொலைபேசியில் வீட்டில் கேட்டுச் சொன்ன போதுதான் அறிந்து கொள்ள முடிந்தது.
குழந்தையை குறித்து நான் எவ்வளவு கற்பனை பண்ணியிருந்தேன் தெரியுமா? அவைகள் என் வாழ்வில் இனி ஒருபோதும் கிடைக்காது. இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளும் சக்தி என்னிடமிருப்பதாகத் தெரியவில்லை. இனி என் ஆண் உறுப்பை வைத்துக் கொண்டு மூத்திரம் பெய்வது மட்டும் தான் சாத்தியம். இதை எழுதும்போது உன்னை நினைத்து அழுது கொளவ்தைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. நம் குழந்தை எனது மார்பில் மலம் கழிக்க வேண்டும் என விரும்பியிருந்தேன். என் முகத்தில் மூத்திரம் பெய்ய வேண்டும் என ஆசை வைத்திருந்தேன். இப்போது நான்கு வயதைத் தாண்டியிருப்பாள். ஒருவேளை நான் உயிரோடு வந்தாலும் இனி அது சாத்தியப்படாது.
ஒரு மாலைப் பொழுது நான் ஜித்தா வந்தேன் அல்லது கொண்டு வரப்பட்டேன். அந்த பீரோவிலிருந்து யாருமறியாமல் வெளியேறுவது எனக்கு ரொம்பவும் சிரமமாக இருந்தது. ஏற்கனவே முந்திய இரவு குப்பைத் தொட்டியில் அழுகிய இறச்சியோடும், அந்த நாப்கினோடும் நான் உருண்டு புரண்டதால் என் சரீரத்திலிருந்து செத்த நாற்றம் பீரோவுக்குள் வியர்த்து வியர்த்து நனைந்து எந்த நாற்றத்தோடும் ஒப்பிடமுடியாத ஒருவித புதுநாற்றமாக இருந்தது. பீரோவிலிருந்து பளிச்சென வெளியேறி வெறிபிடித்த ஒரு மிருகத்தைப்போல ரோட்டில் சாடினேன். பிரம்மாண்டமான மக்கள் கூட்டம். பெரிய பெரிய கட்டிடங்கள். கண்ணாடி மளிகைகள். ஏதோ சொர்க்கத்தில் வந்து விட்டதைப்போல விளக்குகள் மின்னி மினிங்கின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் பார்க்கும் வெளியுலகம். அந்த இடத்தில் பெயர் பலத். யாரும் என்னைப் பார்க்கவில்லை. நான் கால் போன திக்கில் நடந்து போனேன். என்னை கடந்து போனவர்கள் மூக்கைப் பொத்தினார்கள். என்னிலிருந்து கிளம்பிய விசித்திர நாற்றத்தில் சிலர் வினோதமாகப் பார்த்தனர். பெருங்கூட்டம் எனக்கு விலகி வழிவிட்டது. யாரும் என்னை எதுவும் கேட்கவில்லை. அந்தக் கூட்டங்களில் பலநாட்டினர் இருந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டினர் நிறைய நின்றார்கள். ஒன்றிரண்டு சிறுவர்கள் மஜ்னூன்…. மஜ்னூன் என்று கத்தினார்கள். மஜ்னூன் என்றால் அரபி மொழியில் பைத்தியம் என்று அர்த்தம்.
அந்தக் கூட்டத்தில் நான் பிச்சை எடுக்கத் தொடங்கினேன். முதலில் ஒரு எகிப்து நாட்டுக்காரன் ஒரு ரியால் தந்தான். சிறுவர்கள் இப்போதுதான் மஜ்னூன் என்று கத்திக் கொண்டே காலி ¦ப்சிடின்னை என் மீது எறிந்தார்கள். நான் பிச்சை எடுப்பதில் தீவிரமாக இருந்தேன். பிறகு பலரும் ஒவ்வொரு ரியால் தந்தார்கள். ஒன்றிரண்டு பேர்வானத்தைப் பார்த்து கைதூக்கினார்கள். அதற்கு இறைவன் தருவான் என்று அர்த்தம். ஒரு தமிழன் அந்தக் கூட்டத்தில் உற்றுப்பார்த்து
தமிழா
தலையாட்டினேன்.
ஒரு ரியால் தந்தான். தந்துவிட்டு சொன்னான். நான்
தமிழர்களை கேவலப்படுத்துவதாக.
ஒரு அரபி கையில் வைத்து தின்று கொண்டிருந்த சேன்ட்விச்சை தந்தான். ஒரு தெருநாயைப் போல தின்றேன். பசியில் வயிறு எரிந்தது. ஒரு பிலிப்பைன்ஸ் பெண் குடித்துக் கொண்டிருந்த பெப்சியைக் கேட்டேன். அவள் அதைத் தராவிட்டால் நானே தட்டிப் பறித்திருப்பேன். நல்லவேளை பயந்து தந்துவிட்டாள். ஒரு மூச்சில் குடித்து விட்டு நடந்தேன். அந்த கூட்டத்தில் யார் எதை தின்று கொண்டிருந்தாலும், குடித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் முன்னால் பசி அடங்கும்வரை என் கரம் நீண்டு கொண்டே இருந்தது.
மக்ரிபுக்கு பாங்கு சொன்னார்கள் கொஞ்சம் கூட்டம் பள்ளிக்கு போனது. நான் பள்ளி கக்கூஸில் போய் உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக குளித்தேன். ஆடைகளை நனைத்துப் பிழிந்து இஷாவுக்குப் பிறகு அந்த பள்ளியை விட்டு வெளியேறினேன். அங்கிருந்து கந்தரா என்ற பகுதிக்கு வந்தேன். அது ஒரு கோல்ட் மார்க்கட். நூறு கடைகளுக்கு மேலாக இருக்கும். அத்தனையும் தங்க ஆபரண கடைகள். நான் முகம் பார்க்காத மகளின் காது குத்தும் ஆசையும் வந்தது. ஒரு மலையாளி கடையில் சாப்பிட்டேன். அந்த இரவில் எனக்கொரு எத்தியோக்கியாகாரன் உதவினான்.
அவன் ஒரு பாழடைந்த அரபி வீட்டில் காவலாளி. வீட்டில் யாரும் கிடையாது. எப்போதோ பிரான்ஸிலிருந்து கொண்டு வந்த ரெடிமேடு வீடுகள் மத்தியில் ஒரு நீச்சல் குளம். நான்கைந்து ரெடிமேடு வீடுகள் பாழடைந்து கிடந்தது. ஒன்றை சுத்தம் பண்ணி அவன் தங்கியிருந்தான். சுற்றிலும் மிக பிரம்மாண்டமான மதில்சுவர். அவன் அங்கேயே கிடப்பானாம். பேச்சுத் துணைக்கு கூட யாருமில்லையாம். நீச்சல்குளம் நாசமாகிக் கிடந்தது. அது முன்பு வசந்த மாளிகையாக இருந்த இடம்.
அவன் முதலில் என்னை நம்பவில்லை. பிறகு என்ன காரணமோ என்னை அவனுக்குப்பிடித்துப் போய்விட்டது. என்னை ஒன்றிரண்டு நாட்கள் அங்கே தங்கிக் கொள்ள அனுமதித்தான். இந்தியாவைப் பற்றி அவனுக்குநிறைய சொன்னேன். அவன் எனக்கு பதிலாக எத்தியோப்பியாவைப் பற்றி நிறைய சொன்னான். இந்தியாவில் அவனுக்கு தெரிந்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் மகாத்மா காந்தி. இன்னொருவர் அமிதாப் பச்சன். இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாராட்டினான். அவர்கள் நாட்டு ஜனநாயகத்தைக் குறித்து கவலை தெரிவித்தான். எத்தியோப்பியா இரண்டாகப் பிரிந்து எரித்ரியா உருவான வரலாற்றையும் அடிக்க இரண்டு நாடுகளுக்கு மோதிக் கொள்வதையும் சொன்னான். ஆப்ரிக்க கண்டத்திலுள்ள பல நாடுகளைப் பற்றிய அரசியல் விவகாரங்களையெல்லாம் பேசினான். சோமாலியா உள்நாட்டு யுத்தம் பற்றி ரொம்பவும் தெளிவாகச் சொன்னான். அவன் நல்ல விசய ஞானமுள்ளவனாக இருந்தான்.
அவனோடு இருந்த நாட்களும் எனக்கு நன்றாக சாப்பாடு போட்டான். குளிக்க தண்ணீர் தந்தான். ஆனால் அவன் ஒரு மக்கு தண்ணீரில் உடம்பைத் துடைத்துக் கொள்வான். இரவு பாகிஸ்தான் கடையிலிருந்து சுட்ட கோழியும், லெபனான் ரொட்டியும் வாங்கித் தந்தான். வெளுத்த ஆகாயத்துக்கு கீழே ஒரு மரப்பெட்டியில் உட்கார்ந்தும், டின்களும் குப்பைகளும் நிரம்பிக் கிடந்த அந்த பாழடைந்த நீச்சல்குளத்தின் உள்ளே இருட்டின் முகம் தரித்தும் நாங்கள் ஒருபாடு பேசிக் கொண்டோம். நான் அவனை விட்டு நாலாவது நாள் பிரியும் போது எனது இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டான். வாய்ப்புக் கிடைத்தால் சந்திக்கலாம் என்றான். அதன்பிறகு இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அவனை சந்திக்கவில்லை.
ஐந்தாறு மலையாளிகள் இருந்த அறையில் ஐந்தாவது நாள் சமையல்காரனாகச் சேர்ந்தேன். காலையில் கட்டன் சாயாப்போட்டுக் கொடுக்க வேண்டும். மதியமும் இரவும் சமையல் செய்ய வேண்டும். கக்கூஸ் கழுவ வேண்டும். ஒருவர் இருபத்தி ஐந்து ரியால் வீதம் ஆறுபேரும் சேர்ந்து மாதம் நூற்றி ஐம்பது ரியால் தருவார்கள்.
உனக்கு ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். நீ பதில் எழுதவேண்டாம் எனவும் எழுதியிருந்தேன். மீண்டும் ஒரு விசித்திரமான அறைக்குள் வாழ்க்கை. அறையில் ஜன்னல் கிடையாது. ஒரு வாசல் கதவு மட்டும்தான். இங்கே வாசல் கதவை யாரும் திறந்து வைப்பதில்லை. இந்த அறைக்கு வந்தபிறகு நான் ஆகாயம் பார்த்ததில்லை. இரவு பகலின் வித்தியாசத்தை அவ்வளவு துல்லியமாக உணர்ந்ததில்லை. நான் அறையைவிட்டு வெளியே போகக்கூடாது. போனால் அப்படியே போய்விடவேண்டும் என அவர்கள் கடுமையாக சொன்னார்கள். ஆகாயம் பார்க்கும் ஆசைவந்தால் யாருமில்லாத நேரத்தில் வாசல் கதவை லேசாக திறந்து கொண்டு அந்த இடுக்கு வழியாக தெரியும் வெண்மையை பார்ப்பேன். இரவில் இடக்குவழியாக ஒரு நட்சத்திரம் கூட தெரியாது. நிலவைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. அவர்கள் இல்லாத நேரத்தில் நான் ஏசியும் போடக்கூடாது. என் சரீரம் எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்கும். வியர்வை ஊத்த ஊத்த நீ எனக்கு மணவறையில் வேலைப்பாடுகளோடு கூடிய அந்த பனை ஓலை விசிறியால் வீசிவிட்டதும், உன் சேலைத்தும்பால் துடைத்துவிட்துமான அந்த நினைவு வந்துவிடும்.
தலைமுடி ஒருபாடு வளர்ந்துவிட்டது. தாடியும் அப்படித்தான். கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் பலதில் வைத்து சிறுவர்கள் மஜ்னூன்… மஜ்னூன் …. என்று சத்தம் போட்டது திரும்பத் திரும்ப கேட்கிறது. ஒரு நாள் கக்கூஸில் புகுந்து கத்திரியால் நானே எனது தலைமுடியை வெட்டினேன். எனக்கு முடிவெட்டி தந்த அந்த உ.பி.காரனை நினைத்து அழுது கொண்டேன். அவன் சடலம் என்னவானது. அந்த அறையிலிருந்த பங்களாதேசியும், டெல்லி பரோவும், மம்மலியும், குஞ்சாப்பாவும், எமனியும் என்னவானார்கள் என்பதும் எனக்கு தெரியாது. ஒன்றை செய்கிற போது அது தொடர்பான இன்னொன்று நினைவில் வருகிறது. கக்கூஸில் என்னோடு உ.பி.காரனும் நிற்பதுபோல் தோன்றியது. மறுநிமிடம் பயந்து வெளியே வந்தேன். அறைவாசிகள் என் தலையைப் பார்த்து சிரித்தார்கள். என்னையும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கேலி செய்தார்கள். இப்படித்தான் இந்த அறையில் பதினாறு மாதங்களை உருட்டியுள்ளேன்.
ஒரு இரவு சாமத்தில் வாசல் கதவு பயங்கரமாக தட்டுப்படும் ஓசை கேட்டது. மம்மாக்கா லென்ஸ் வழியே பார்த்துவிட்டு பதறினான். வெளியே ஐந்தாறு போலீஸ். கக்கூஸில் கிடந்த மரப்பட்டிக்குள் வேகமாக பதுங்கினேன். அந்த பெட்டி இத்துப்போன கபர்குழியைவிட மோசமானது. கரப்பான் பூச்சியும், எலியும் கிடந்தது. வாசலை மிதித்து உதைத்துவிடும் ஆக்ரோஷமான தாக்குதல் வெளியே, யார் செய்த புண்ணியமோ அன்று நான் தப்பித்துக் கொண்டது. அன்று நான் அவர்கள் பிடியில் சிக்கியிருந்தால் இதை நான் இப்போது எழுதிக் கொண்டிருக்க முடியாது. இங்கே உள்ள போலீஸ் மார்பிலும், முகத்திலும்தான் அடிக்கிறார்கள். எல்லா போலிஸிடமும் கைத்துப்பாக்கி உண்டு. ஆனாலும் அவர்கள் யாரையும் சுட்டதில்லை.
இங்கே மக்காவில் உம்ரா செய்ய வருபவர்கள் பலரும் திரும்பிப் போவதில்லை. அல்லது இங்கே தங்கிவிடும் நோக்கத்தில் உம்ரா செய்ய வருகிறார்கள். இந்தியாவின் மலப்புரம் வாசிகளும், லக்னோகரார்களும் அதிகம். பங்களாதேசிகளும், பாகிஸ்தானிகளும் மற்றும் ஆப்ரிக்க கண்டத்திலுள்ள அனேக நாடுகளைச் சார்ந்தவர்களும் அதிகமாக வருகிறார்கள். இந்தோனேசியர்களும் எமனிகளும் நிறைய உண்டு. நம் தமிழர்கள் விரல் விட்டு எண்ணிவிடும் அளவில்தான். மற்றபடி என்னைப் போன்று கபீலை தொலைத்தவர்களும் நிறைய உண்டு.
அரசாங்கம் ஆணை போட்டது. உம்ராவில் வந்தவர்களும், மற்றும் கபீலிடமிருந்து வெளியேறி நிற்பவர்களும் குறிப்பிட்ட தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றார்கள். டி.வி.யில் பத்திரிக்கையில் விளம்பரம் வந்தது. இப்படிப்பட்டவர்களுக்க அடைக்கலம் கொடுப்பது குற்றமாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வந்து உடனே போலீஸ் வேட்டை தீவிரமானது. மறைந்து வீடுகளில் வேலைபார்த்தவர்கள், அறைகளிலிருந்தவர்கள் என அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே நிர்பந்திக்கப்பட்டனர். விடிவதற்கு முன்னால் நான் அறையை விட்டு வெளியேற வேண்டும். இதை எழுதி முடித்துவிட்டு நான் சிறைச்சாலைக்கு போக இருக்கிறேன்.
இங்குள்ள சிறைச்சாலை மிகவும் கொடுமையானது. ஏ.சி. கிடையாது. தண்ணீர் தேவைக்கு கிடைக்காது. உணவு என்று எப்போதாவது ரொட்டித் துண்டுகளை வீசுவார்கள். சுட்ட கோழியும் கூடவே. வலிமையானவர்கள் மட்டுமே அடித்துப் பிடித்து எடுத்து தின்று கொள்ள முடியும். தக்ரோனிகள் வலிமையானவர்கள்.
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கருப்பர்கள் தக்ரோனியர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். தக்ரோனி பெண்கள் ரொம்பவும் பாவம். குழந்தைகளை முதுகிலோ வயத்திலோ துணியால் சுற்றி கட்டி வைத்துக் கொண்டே சுட்டெரிக்கும் வெயிலில் குப்பைத் தொட்டிகளில் காலி டின்கள் மற்றும் காய்ந்த ரொட்டிகளை பொறுக்குவது ரொம்பவும் கொடுமையானது. ஒவ்வொரு கடைகடையாக சென்று அவர்கள் ஸ்தீக் என சொல்லும்போது அவர்கள் முகங்களில் சோகம் செவத்துக் கிடக்கும். ஸ்தீக் என்றால் அரபு மொழியில் நண்பன் என்று அர்த்தம். அவர்களின் பத்து வயது பதினைந்து வயது தகப்பனற்ற ஆண்மக்கள் இங்கே வண்டி கழுவுகிறார்கள். போலீஸ் அவர்களை விரட்டுவதும் அவர்கள் சிதறி ஓடுவதும் ஆத்திரத்தில் சோப்புநுரை இருக்கும் அவர்களின் டப்பாக்களை மிதித்து உடைத்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு போவதையும் அறைவாசிகள் சொல்லுவார்கள்.
இங்கே சிறைச் சாலைக்குள் மரணம் சர்வ சாதாரணமானது. எப்படியும் தினசரி ஒன்றிரண்டு பேராவது செத்துப்போவார்கள். என்னைப் போன்ற பலவீனமானவர்கள் உயிர் பிழைப்பது கடினம் தான். இங்குள்ள சிறையில் வெளிநாட்டுக்காரர்களே அதிகம். ஒரு மாதமோ இரண்டு மாதமோ சிறையில் கிடந்தால் நம்முடைய எம்பஸியிலிருந்து அதிகாரிகள் வருவார்கள். விசாரிப்பார்கள். இவன் இந்தியன் தானா என்ற சந்தேகம் வந்தால் சிக்கல்தான். தமிழர்கள் மலையாளிகளை பளிச்சென அடையாளம் கண்டு கொள்ளலாம். பாவம் உ.பி.காரர்கள். நடை, உடை, பாவனை, மொழி எல்லாம் பாகிஸ்தான்காரனைப் போல இருப்பதால் அவர்கள் துளைக்கப்படுவார்கள். இதைப்போலவே பாகிஸ்தானியரும் அவர்கள் எம்பஸியில் அதிகாரிகளால் துளைக்கப்படுவார்களாம். தமிழர்கள் மீது குறிப்பாக குமரி மாவட்ட தமிழர்கள் மீது இலங்கைக்காரனோ என்ற சந்தேகம் கொண்டு விசாரிப்பார்கள். விசாரணையில் திருப்திஅடைந்தால் போட்டோ எடுப்பார்கள். அதற்குரிய கட்டணத்தை அரபி போலீஸ் வாங்கி விடுவான். பணம் இல்லையென்றால் அடிப்பார்கள். பிறகு அவசர பாஸ்போடு கிடைத்து விட்டால் கப்பலிலோ விமானத்திலோ பாம்பேக்கு அனுப்பி வைப்பார்கள். இது போன்றவர்கள் பயணம் செய்யும் கப்பல் பயணத்தில் சரியான உணவு தண்ணீர் இல்லாமல் கொஞ்சம் பேர் மரணம் அடைவார்கள். இந்திய எம்பஸியிலிருந்து வருகிற அதிகாரிகள் நம்மவர்களை நாயைவிட கேவலமாக நடத்துவார்கள். அதில் நானும் ஒரு நாயாக நிற்பேன்.
கும்பல் கும்பலாக போலீஸ் பிடித்துக் கொண்டு போனது. நடுச்சாமத்தில் அறைக்கதவுகளை தட்டியும், உடைத்தும் இக்கமா இல்லாதவர்களை தெருநாய்களை இழுத்துக் கொண்டு போவதைப்போல இழுத்து லாரிகளில் அடைத்தார்கள். பயந்து மிரண்ட ஜனம் சரபிய பாலத்துக்கு கீழே ஆயிரக்கணக்கில் சரணடகிறோம் என குவிந்தார்கள். நிறைய பெண்கள் இருந்தார்கள். இந்திய பெண்கள். பாகிஸ்தானிய பெண்கள், இந்தோனேசியா பெண்கள் மற்றும் தக்ரோனி பெண்கள் எக்கச்சக்கமாக இருந்தனர். நிறைய தக்ரோனி சிறுவர்கள், சிறுமியர் கைக்குழந்தைகள் இருந்தன. அவர்கள் எப்படி வந்தார்கள் என்பது சற்று விசித்திரமானது.
தாய்நாட்டில் உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் வறுமையை தாக்குப்பிடிக்காமல் வாழ வழிதேடி இந்த நாட்டுக்குள் உம்ரா என்ற பெயரில்நுழைந்திருக்கிறார்கள். இதில் பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமியர் வேடத்தில் வந்த பல கிறிஸ்தவர்களும் உண்டு. இப்படி இந்த நாட்டுக்குள் நுழைந்த தக்ரோனிப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டும் அரபிகளின் வீட்டு வேலைக்கு என்று போய் அங்கே உள்ள அத்தனை ஆண்களின் காமப்பசிக்கு மேய்ச்சல் நிலமாக மாறி யார் குழந்தையை சுமக்கிறோம் என தெரியாமலேயே பெத்துப்போட்ட தகப்பனற்ற குழந்தைகள். இன்று சிறுவர் சிறுமிகளாக காலி பெப்சிடின் பொறுக்கியும், நான் பலதில் பிச்சை எடுத்ததைப்போல பிச்சை எடுத்தும் சிறுசிறு வேலை செய்தும் வாழ்கிறார்கள். இந்த சிறுவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கிலிருந்தது. அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு இவர்களை ஒடுக்கும் எண்ணத்தில் தக்ரோனி சிறுவர் சிறுமிகளை வேட்டையாடி ஒரு கப்பலில் நிறைத்து ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கிடந்த அந்த நாடு இது எங்கள் நாட்டுக் குழந்தைகள் அல்ல எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டது. அரசாங்கம் மீண்டும் அவர்களை திரும்பக் கொண்டு வந்து இங்கேயே விட்டு விட்டது. எது தாய்நாடு என தெரியாமல் தெரு நாய்களைப்போல சுத்திக் கொண்டிருக்கும் அவர்கள் அனேகமாக பிற்காலத்தில் உரிமைக்காக போராடலாம் என நினைக்கிறேன். சோமாலியர்கள் பொங்கி எழுந்து அமெரிக்கா எம்பஸியில் கல் எறிந்ததை அதன் ஆரம்பமாக குறிப்பிடுகிறேன். அவர்கள் இப்போது புரைமான் சிறைச்சாலையில் கிடக்கிறார்கள்.
சிறைச்சாலையில் இடமில்லை. ஒரு அறையில் ஆறு எகிப்தியர்கள் இறந்து போனார்கள். எகிப்து நாடு அதற்கு கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், எகிப்தியர்களை பெற்றுக்கொளள் அது தனியாக ஒரு கப்பல் அனுப்பி இருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள். தக்ரோனிகள் சாவைப் பற்றி யாரும் கவலை தெரிவிக்கவில்லை. இந்தியர்களின் சாவும் அப்படியே.
சரபியா பாலத்துக்கு கீழே திடீரென லாறிகளை கொண்டு வந்து நிறுத்துவார்கள். அரபி போலீஸ் சத்தம் போடுவான். முண்டியடித்துக் கொண்டு லாறியில் மக்கள் குதிப்பார்கள். ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்வதும் அடித்துக் கொள்வதுமாக லாறி நிரம்பியதும், வயதானவர்களும், பெண்களும், வாய்விட்டு கதறுவார்கள். லாறி நிரம்பியதும் போலீஸ் மற்றவர்களை அடித்து பாலத்துக்கு விரட்டும். மீண்டும் லாறி வரும் நாளை நானும் இப்படித்தான் லாரியில் அடித்து பிடித்து ஏறவேண்டும். அல்லது போலீஸ் அடிக்கும் முன்னால் பாலத்துக்கு கீழே ஓட வேண்டும்.
அறையிலுள்ள மலையாளிகள் என்னைத் தும்பில்லாதவன் என்றே அழைத்தனர். தும்பில்லாதவன் என்றால் எவ்வித அடையாளங்களுமற்றவன் என்று அர்த்தம். அவர்கள் ஊரில் பெரிய பெரிய வீடுகள் கட்டி இருந்தார்கள். வயலும், தோப்புகமாக வாங்கி பணமும் எக்கச்சக்கமாக குவித்திருந்தார்கள். லாவகமாகத் திருடத் தெரிந்தவர்கள். ஒருவன் ஒரு கடையில் வேலை பார்க்கிறான். குப்பைகளை அள்ளி குப்பைத் தொட்டியில் தட்டும்போதே விலையுயர்ந்த ஒரு பொருளையும் கெண்டு கொட்டிவிடுவான். அவனுக்கு வேண்டப்பட்ட நபர் அதை தொழுகை நேரத்தில் எடுத்துப் போய்விடுவி¡ன். இதற்கு குப்பைத் தொட்டி கொள்ளை என்று பெயர். குப்பைத் தொட்டியைப் பற்றி பல செய்திகள் என்னிடமிருக்கிறது. ஒரு இந்தோனேசிய பெண்ணின் நிர்வாண சடலம் ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்தது. அவளின் இரண்டு முலைகளும் கடித்துக் குதறப்பட்ட கொடூரத்தோடு. குப்பைத் தொட்டி பற்றி நான் எழுத விரும்பவில்லை. எனக்கு பழைய நினைவு வந்து விடுகிறது.
சரபியா பலத்துக்கு கீழே கிடந்தவர்களில் ஒரு தக்ரோனிப் பெண் குழந்தைப் பெற்று அங்கேயே இறந்து போனாள். பிறந்த குழந்தையும் அழுது கொடே மரணமடைந்திருக்கிறது. அவள் பிரசவ வேதனையில் துடித்தபோது யாரும் எதுவும் செய்யவில்லை. போலீஸ் வந்து அவளையும் அவளின் தகப்பனற்ற குழந்தையையும் சடலமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்களாம். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனம் அந்தப் பகுதியில் மலம், ஜலம் கழித்து நாற்றம் சகிக்கவில்லையாம். எந்த நாற்றமும் என்னை எதுவும் செய்து விடமுடியாது என்ற நம்பிக்கை எனக்குண்டு. என் சடலம் அழுகுவதை நான் உணர முடியாதவனாக இருந்ததால், அந்த குப்பைத் தொட்டியில் நான் அழுபவித்ததை விட பெரிய துர்நாற்றம் எதுவும் எனக்கு இனி ஏற்படாது. துர்நாறற்ங்களை நான் சகித்துக் கொள்வேன். ஆனால் சிறைச்சாலையும், கப்பல் பயணமும் என்னை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
எழுதிக் கொண்டிருக்கிற நான் மணியைப் பார்க்கிறேன். அதிகாலை நான்கு. அங்கே விடிந்திருக்கலாம்… நேற்றிரவு பானையில் கிடந்த கஞ்சி வெள்ளத்தில் உப்பு போட்டு குடித்து விட்டு பாய் கம்பெனிக்கு புறப்பட்டுக் கொண்டிருப்பாய். அழுகிற மகளுக்கு ஐம்பது பைசாவுக்கு ஒரு தோசை. எனக்கு மீண்டும் அழுகை வருகிறது.
நாற்பதாயிரம் ரூபாய் எனது சேமிப்பில் உள்ளது. அதை உண்டியல் மூலமாக உனக்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். பணம் பெற்றுக் கொண்டதும் மகளுக்கு காது குத்தி விடு. இன்னும் ஒரு மணி நேரத்தில் உடுத்த துணியோடு பாலத்துக்குப் போய்விடலாம் என்று இருக்கிறேன். போகும் வழியிலேயே உனக்கு இந்த கடிதத்தை சரபியா தபால் நிலையத்தில் சேர்த்து விடுவேன்.
பாலத்துக்குக் கீழே காத்துக்கிடப்பேன். தீ வெக்கையைப் போல சுட்டுக் கொதிக்கும் சாலையோரம் சாகாமல் தப்பினால் முதல் தத்து கழிந்ததாக நினைத்துக் கொள்வேன். ஆனாலும் சூரியனை உற்றுப் பார்ப்பேன். கண்கள் கூசினாலும் ஆசை தீர பார்ப்பேன். லாரி வந்து நிற்கும்போது வலிமையானவர்கள் என்னை இடித்துத் தள்ளி விடக்கூடும். அதில் நான் காயம்படாமல் தப்பினால் புண்ணியம்தான். இரவு வரும் இருண்ட வானத்தில் சிதறி கிடக்கும் நட்சத்திரங்களை முடிந்த மட்டும் எண்ணுவேன் ஒரு மஜ்னூனைப் போல. சிறைச்சாலையில் எத்தனை நாளோ தெரியவில்லை. அந்த வெக்கையில் உணவும் தண்ணீருமற்று எப்படி உயிர்பிழைக்கப் போகிறேனோ புரியவில்லை. கப்பல் பயணமும் ஆயிரம்பேர் பயணம் செய்யுமிடத்தில் அதைவிட கூடுதலாக ஆடுமாடுகளைப்போல அடைத்விடீகறார்களாம்… கப்பல் பயணத்தில் யாராவது ஒரு பெண் புணரும் சக்தியற்ற என்னை விபச்சாரத்துக்கு அழைக்காமலிருக்க வேண்டும். நான் தப்புவேனா… தெரியவில்லை. என் எழுத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறது. கரம் நடுங்குகிறது. அதைத்தாண்டி உனக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது. நேரமில்லை. விடியும் முன்னால் நான் அடைபட்டுக் கிடக்கும் இந்த அறையை விட்டு வெளியேற வேண்டும். ஆகவே நான் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
குறிப்பு: நான் உயிரோடு வந்தால் உன் மார்பு வெளியில் முகம் புதைத்து அழுவேன். கதறிக் கதறி, அலறி அலறி அழுவேன். மஜ்னூனாக வந்தாலோ அல்லது வராவிட்டாலோ… எதுவும் தீர்க்கமாக சொல்வதற்கு இல்லை.

Series Navigation

மீரான் மைதீன்

மீரான் மைதீன்