மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா…

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

முனைவர் மு.இளங்கோவன்


சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராசர் அரங்கில் மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா 06.09.2007 மாலை நான்குமணிமுதல் இரவு பத்துமணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்அறிஞர்கள்,கலைஞர்கள்,அரசியல் தலைவர்கள்,பார்வையாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

மாலை நான்கு மணிக்குக் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின.நாகசுரம்,மண்ணிசை,நாட்டுப்புறப்பாடல்கள், நகைச்சுவை நாடகம், நாட்டுப்புறக்கலைகள், குழந்தைகளின் நாட்டியம் முதலியன அவையினரின் பாராட்டுகளுக்கு இடையே மிகச்சிறப்பாக நடந்தது.நிகழ்ச்சி உடனுக்குடன் நேரடியாகவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

மக்கள் தொலைக்காட்சியின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்த கலைஞர்கள்,கவிஞர்கள்,படைப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். பேராசிரியர் சுப.வீ, மூத்த இதழாளர் கண்ணன், கவிஞர் அறிவுமதி.இயக்குநர் சீமான், சேம்சு வசந்தன், இளசை சுந்தரம்,வேலுசரவணன்,வழக்குரைஞர் பாலு,கவிஞர் பச்சியப்பன், சோமவள்ளியப்பன் முதலானவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் மா.நன்னன்,பிரபஞ்சன்,சுப்புஆறும்கம், தியாகு, ஆதித்யன், கவிஞர் செயபாசுகரன், கவுதமன்,கசேந்திரன் முதலானவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இவர்களை அவ்வைநடராசனார்,சிற்பி பாலசுப்பிரமணியன், காசி ஆனந்தன்,கென்றி டிபேன்,நம்மாழ்வார், திருப்பூர்கிருட்டிணன், வழக்கறிஞர் இராமலிங்கம் முதலானவர்கள் வாழ்த்திப்பேசினர்.

அழகின் சிரிப்பு என்னும் குறுந்தகட்டை நடுவண் அமைச்சர் மருத்துவர் அன்புமணிஇராமதாசு வெளியிட அதனைத் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல அரசியல்கட்சித்தலைவர்கள் பேசினர்.மருத்துவர் இராமதாசு அவர்கள் நிறைவுப்பேருரை ஆற்றினார்.

விழாவில் பேசிய அனைவரும் மக்கள் தொலைக்காட்சி இலாப நோக்கமின்றித் தமிழ்ப்பண்பாட்டை வளர்ப்பதைப் புகழ்ந்து பேசினர்.குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியாகவும்,தமிழர் கலைகளை, வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும் உள்ள இத்தொலைக்காட்சி வளர அனைவரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா


muelangovan@gmail.com

Series Navigation