பேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஆக்கப்போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலே யிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்! ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] உருவாக்கிய, முதல் வெப்ப அணுக்கரு ஆயுதத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து காட்டியது! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன!

Fermi & Teller

எட்வெர்டு டெல்லரின் இடருற்ற வாழ்க்கை வரலாறு!

எட்வெர்டு டெல்லர் 1908 ஜனவரி 15 ஆம் தேதி ஐரோப்பாவின் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஹங்கேரியில் அரசியல், சமூகக் கொந்தளிப்புக்கள் உச்ச நிலையில் நாட்டை ஆட்டிக் கொண்டிருந்ததால், டெல்லர் தன் இளமை வாழ்க்கையில் மிகவும் அவதி யுற்றார்! அப்போது ஹங்கேரியை ஆட்சி செய்தவர், மிஞ்சிய வலது சாரிக் கொடுங்கோல் தளபதி [Fascist Dictator] நிக்கலஸ் ஹார்த்தி [Nicholas Horthy]! அவரும் ஹிட்லரைப் போல் ஓர் யூத வெறுப்பாளி! முதல் உலகப் போரும் [1919] இரண்டாம் உலகப் போரும் [1936] அடுத்தடுத்து ஹங்கேரி நாட்டைக் கலக்கி அடித்த காலங்கள் அவை! ரஷ்யச் செங்கரடி ஒருபுறமும், நாஸிக் ஜெர்மனியின் ஹிட்லர் மறுபுறமும் ஹங்கேரியை நசுக்கியதால், பல அரிய விஞ்ஞான மேதைகள் அமெரிக்காவுக்கு அகதிகளாய் ஓட வேண்டிய தாயிற்று! அவர்களில் குறிப்பிடத் தக்க அணுவியல் வல்லுநர்கள் மூவர்: லியோ ஸிலார்டு [Leo Szilard], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner], எட்வெர்டு டெல்லர் [Edward Teller]! அவர்கள் மூவருந்தான் ஹிட்லர் அணு ஆயுதத்தை ஆக்கி உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு குண்டைத் தயாரித்து, இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த முற்பட வேண்டும், என்று ஓர் விண்ணப்பத்தில் எழுதி, ஐன்ஸ்டைனைக் கையெழுத்திட வைத்து, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பியவர்கள்! பிறகு மன்ஹாட்டன் அணுகுண்டு திட்டத்திலேயும் பணி புரிந்தவர்கள்! மூவரிலும் கடுமையானவர், போராயுதக் கழுகு என வெறுக்கப்படும் எட்வெர்டு டெல்லர்தான் பின்னால் ராட்சத ஹைடிரஜன் குண்டைப் படைத்தவர்! பிற்காலத்தில் ஜெர்மனியின் ஹிட்லரையும், சோவியத் யூனியன் ஸ்டாலினையும் டெல்லர் மிகவும் வெறுத்ததற்கு அவரது வாலிபக் காலக் கொடும் போர்களே காரணம்!

முதலில் டெல்லர் தாய்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுப் பிறகு ஜெர்மனிக்குச் சென்று கார்ல்ஸ்ரூ பொறியியல் கூடத்தில் [Karlsruhe Institute of Technology] பயின்று, கெமிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றார்! அதன்பின் மியூனிச்சில் [Munich] சிறிது காலம் படித்து, லைப்ஸிக் பல்கலைக் கழகத்தில் [University of Leipzig] பேராசிரியர் வெர்னர் ஹைசென்பெர்கின் [Werner Heisenberg] கீழ் பெளதிகம் பயின்று, கதிர்த்துகள் நியதி [Quantum Theory], மூலக்கூறு விஞ்ஞானம் [Molecular Physics], வானியல் பெளதிகம் [Astrophysics] ஆகியவற்றை விருத்தி செய்தார். 1930 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் பெளதகத்தில் Ph.D. பட்டம் பெற்றார்! மியூனிச்சில் மாணவனாக இருந்த போது, ஓடும் மின்சார வண்டியின் அடியில் விழுந்து, அவரது வலது கால் வெட்டப் பட்டுப் பிறகு பொய்க்காலில் வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய தாயிற்று!

டெல்லர் அடுத்து டென்மார்க் சென்று அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ரிடம் [Neils Bohr], படித்து அணுவியல் பெளதிகத்தில் ஆழ்ந்த திறமை பெற்றார். பிறகு 1931-1933 இ ல் ஜெர்மனியின் காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] ஆசிரியராகப் பணி யாற்றினார். அங்கே புகழ் பெற்ற ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுடன் [George Gamow (1904-1968)] பழகும் வாய்ப்பு டெல்லருக்குக் கிடைத்தது. அப்போது ஜெர்மனியில் ஹிட்லர் அதிபதி யானதும், அங்கே விஞ்ஞானக் கல்வி புகட்டிப் பிழைக்கலாம் என்ற டெல்லரின் ஆசை நாசமானது!

First Hydrogen Bomb

புத்துலகம் அமெரிக்கா நோக்கி டெல்லர் புறப்பாடு

1935 இல் அவரும் அவரது மனைவி அகஸ்டா ஹார்க்கனி [Augusta Harkanyi]

இருவரும் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஸிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] சேர்ந்து டெல்லர் ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே பணிபுரிந்த விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமாவை [George Gamow] மறுபடியும் சந்தித்தார்! அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, டெல்லர் அணுக்கரு பெளதிகத்தில் ஆராய்ச்சிகள் செய்தார்! கன உலோகங்கள் கதிரியக்கத் தேய்வின் [Radiactive Decay of Heavier Elements] போது பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்துப் புதியக் கோட்பாடுகளை எழுதினர்கள். அவற்றில் ஒன்று காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow-Teller Theory of Beta Decay]. மேலும் விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப் [Thermo Nuclear Reactions] பற்றியும் இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.

1939 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த சமயத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் [Otto Hahn & Strassmann] ஆகிய இருவரும் யுரேனிய அணுவைப் பிளந்ததாக நீல்ஸ் போஹ்ர் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு டெல்லர் பிரமிப்பும், அதிர்ச்சியும் அடைந்தார்! அப்போது அமெரிக்க ஜனாதிபதி பிராங்கலின் ரூஸவெல்ட் அமெரிக்க விஞ்ஞானிகளை நோக்கி, நாஸிக் ஜெர்மனியை எதிர்த்து அமெரிக்காவைப் பாதுகாக்க உதவும்படி ஆணையிட்ட போது, எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆக்கத்திற்குத் திட்ட மிட்டுத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தார்!

1941 இல் டெல்லர் அமெரிக்கக் குடியினன் [U.S. Citizen] ஆகி, மன்ஹாட்டன் மறைமுக அணு ஆயுத ஆக்கத் திட்டத்தில் [Top Secret Manhattan Project] ராபர்ட் ஓப்பன்ஹைமர் தலைமையின் கீழ்ப் பணி புரியப் புகுந்தார்! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மியின் குழுவில் சேர்ந்து, முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைத் [Nuclear Chain Reaction] தூண்டும் அமைப்பாடு வேலைகளில் ஈடுபட்டார்! செப்டம்பர் 1941 இல் முதல் அணு குண்டு ஆக்கப்படும் முன்பே, என்ரிகோ ஃபெர்மிதான் டெல்லருக்கு ஹைடிரஜன் குண்டு பைத்திகார வேட்கையை எழுப்பி விட்டவர்! அணு குண்டு உண்டாக்கும் பேரளவுத்

தீப்பிழம்பைப் [Hot Plasma] பயன்படுத்தி ஹைடிரஜன் மூலகத்தின் [Hydrogen Element] ஏகமூலமான, டிட்டிரியம், டிரிடியம் [Deuterium & Tritium, Isotopes of Hydrogen] பளுவைக் கொளுத்தி, வெப்ப அணுக்கரு இயக்கத்தை ஏற்படுத்தி ஒரு குட்டிச் சூரியனைப் படைத்து விடலாம் என்று ஓர் ஆலோசனையைக் கூறினார்! 1942 ஆண்டு கோடை காலத்தில் எல்லா விஞ்ஞானிகளும் அணுப்பிளவு குண்டு [Fission Bomb] ஆக்கத்தைப் பற்றி விவாதிக்கும் போது, டெல்லர் அவர் அனைவரையும் வற்புறுத்தி அணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டைப் படைக்கத் தனக்குப் பின்னால் திருப்பினார்! மேலும் டெல்லருக்கு அணுகுண்டு ஆக்கத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், இட்ட பணி எதுவும் புரியாமல் மற்ற விஞ்ஞானிகளுடன் வேலை செய்ய மறுத்து எல்லாருக்கும் இடையூறாய் இருந்தார்! அநேக விஞ்ஞானிகளுக்கு டெல்லரின் பைத்தியகாரப் போக்கு சிறிது கூடப் பிடிக்க வில்லை!

Fission Bomb

முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிப்பில் எட்வெர்டு டெல்லர்

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், எட்வெர்டு டெல்லர் லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவை விட்டு விட்டு, சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்து பேராசிரியர் பதவி பெற்றார். 1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும், டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறிக்கோள் ஆயுதமான வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டு மென்று அரசாங்க அதிகாரிகளுடன் வாதித்தார்! ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி

இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு ஒப்புதல் தந்து அங்கீகாரமும் அளித்தார்!

லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு எதிர்மறையாக, லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory] புதியதாகக் கலிஃபோர்னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப் பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam]. அணுப்பிளவு குண்டில் எருவாகப் [Fission Bomb Fuel] பயன்படுபவை, கன உலோகம் யுரேனியம்235 அல்லது புளுடோனியம்239. நியூட்ரான் கணைகளைக் கொண்டு யுரேனிய அல்லது புளுடோனிய அணுக்கருவைப் பிளந்தால் அளப்பரிய வெப்ப சக்தி, கதிர்ச் சக்தி வெடிப்பில் வெளியாகின்றன! அணுப்பிணைவு குண்டின் எரு [Fusion Bomb Fuel] எளிய மூலகம் ஹைடிரஜனின் ஏகமூலங்கள் டியூடிரியம், டிரிடியம் அல்லது லிதிய மூலகம் போன்றவை [Isotopes of Hydrogen, Deuterium, Tritium or Lithium] பேரளவு அழுத்தம், உஷ்ணத்தில் இணைந்து அபார சக்தியை உண்டாக்குகின்றன! அணுப்பிளவு, அணுப்பிணைவு இ ரண்டு இ யக்கங்களிலும் முடிவில் நிகழும் பளு

இழப்பு அல்லது பளுக் குறைபாடு [Mass Defect] இணைப்பு சக்தியாக [Binding Energy] வெளியேறுகிறது! அவ்வாறு எழும் பளு இழப்பு எவ்வளவு சக்தியை உண்டாக்கும் என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பளு சக்திச் சமன்பாடு ‘ [Mass Energy Equation] மூலம் கணக்கிட்டு அறியலாம்!

ஹைடிரஜன் குண்டு மெய்யாக ஓர் ‘பிளவுப் பிணைவுக் குண்டு ‘ [A Fission Fusion Bomb]. அதனுள்ளே இரு ஆயுதங்கள் அமைப்பட்டுள்ளன. முதலாவது தூண்டும் அணுப்பிளவுக் குண்டு [Fission Bomb]. இரண்டாவது முடிவில் வெடிக்கும் ணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டு. அணுப்பிளவு இயக்கம் முதலில் வெடித்து, அளப்பரிய அழுத்தமும், வெப்பமும் உண்டாகி அணுப்பிணைவு எருவை எரித்துப் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில், சூரியன் போன்று வெப்ப அணுக்கரு

இயக்கத்தைத் தூண்டி, தொடரியக்கம் நிகழ்கிறது! அப்போது பன்மடங்கு வெப்ப சக்தி உண்டாகிப் பயங்கர வெடிப்பும், தீவிரக் கதிர்வீீச்சும் எழுகின்றன! அணுகுண்டு தரும் அதிர்ச்சியில் [Shockwave] இரண்டாவது அணுப்பிணைவு மூலகங்கள் அழுத்தப் பட்டு, வெடிப்பால் விளையும் பேரளவுத் திணிவும், உஷ்ணமும் [High density & Temperature] வெப்ப அணுக்கரு எருவைப் [Thermo Nuclear Fuel] பிணைவு செய்து, பிரம்மாண்டமான சக்தியை வெளியாக்கும்! இந்த முறையைப் படைத்தவர், டாக்டர் உலாம்! டெல்லர் அதைச் சற்று மாற்றி, அதிர்ச்சிக்குப் பதிலாக, அணுகுண்டு வீசும் பேரளவு கதிர்வீச்சைப் [Radiation] பயன் படுத்தி, வெப்ப அணுக்கரு எருவை அழுத்தவும், பெருங்கனல் எழுப்ப வேண்டும் என்று முடிவான அமைப்பைச் செய்தார்! முடிவான அந்த வெப்ப அணுக்கரு முறை ‘டெல்லர்-உலாம் அமைப்பு ‘ [Teller-Ulam Configuration] என அழைக்கப் படுகிறது.

1952 நவம்பர் முதல் தேதி டெல்லர்-உலாம் அமைப்பில் தயாரான 10 மெகா டன் TNT வெடிப்பாற்றல் உள்ள முதல் ஹைடிரஜன் குண்டு, பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் வெற்றி கரமாக வெடிக்கப் பட்டுச் சோதிக்கப் பட்டது! அந்த ராட்சத குண்டு ஹிரோஷிமாவில் போட்ட முதல் குண்டை விட 700 மடங்கு பேரழிவாற்றல் கொண்டது! ஹைடிரஜன் குண்டுகளின் அழிவுச் சக்திக்கு ஓர் எல்லையே இல்லை! பொதுவாக அவற்றின் அழிவாற்றல் அணுகுண்டை விட 100 முதல் 1000 மடங்கு அதிகமானது! ஹைடிரஜன் குண்டில் பயன்படும் அணுக்கரு எரிப்பண்டம் மலிவானது! எரிப்பண்டத்தின் அளவுக்குத் தக்கவாறு அழிவாற்றலைக் கூட்டிக் குறைக்கலாம்! முரட்டுப் பிடிவாதத்தில் இறுதியாக ராட்சத அழிவு ஆயுதத்தைத் தயாரித்து வெற்றி பெற்ற எட்வெர்டு டெல்லர், ஆயுதச் சோதிப்புக்குப் பின்பு பல உலக விஞ்ஞான மேதைகளின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளானார்!

உலக நாடுகளின் அணு ஆயுதப் பந்தயம்! ஆயுதக் கட்டுப்பாடு!

அணுகுண்டுகளின் வெடிப்பாற்றலை கிலோ டன் டியென்டியில் [Kiloton TNT] குறிப்பிடும் போது, குறைந்தது 1000 மடங்கு அதிக அழிவு சக்தியுடைய, ஹைடிரஜன் குண்டுகளை மெகா டன் டியென்டியில் [Megaton TNT] கணக்கிடுகிறார்கள்! 50 மெகா டன்னுக்கும் மேற்பட்ட அபார அழிவாற்றல் உடைய வெப்ப அணுக்கரு குண்டுகள் இதுவரை வெடிக்கப் பட்டுள்ளன! ஆனால் நாட்டிடையே ஏவப்படும் கட்டளை ஏவுகணைகளில் [Intercontinental Ballistic Missiles, ICBM] 100 கிலோ டன் முதல் 1500 கிலோ டன் வெடிப்பாற்றல் உடைய குட்டி ஹைடிரஜன் குண்டுகளே பயன் படுகின்றன! மின்கணனி மூலம் செலுத்தப்படும் கட்டளை ஏவுகணைகள் பூகோளத்தின் பாதி தூரத்தை 20 அல்லது 25 நிமிடங்களில் பயணம் செய்து, துள்ளியமாக சில ஆயிரம் அடிகளுக் கருகில் குறியிட்ட இடத்தைத் தாக்குகின்றன! 1980-1990 ஆண்டுகளில் மட்டும் 40,000 பேரளவு அழிவியற்றும் வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் [Weapons of Mass Destruction] தயாரிக்கப் பட்டு, மனித இனத்தை அழித்துவிடப் பயமுறுத்திக் கொண்டிருந்ததாக அறியப் படுகின்றது!

35 ஆண்டுகள் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாய் அணு ஆயுதங்களையும், அவற்றை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகளையும் அதிகரித்து அடுக்கிக் கொண்டே போயுள்ளன! 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிடம் 4300 மெகாடன் அழிவாற்றல் உள்ள 4000 போராயுதக் குண்டுகள் [Warheads] இருந்தன! அப்போது சோவியத் ரஷ்யாவிடம் 3100 மெகாடன் அழிவாற்றல் கொண்ட 1800 போராயுதக் குண்டுகள் தயாராயின! ‘திட்ட மிட்ட போராயுதக் கட்டுப்பாடு உரையாடல் ‘ [Strategic Arms Limitation Talks, SALT I (1972-1977) & SALT II (1981-1985)] இருமுறை இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ளன! ஆயினும் முடிவில் நடந்த தென்ன ? இரு நாடுகளும் 1980 ஆண்டுக்குப் பிறகு பேரளவில் போராயுதங்களைப் பெருக்கிக் கொண்டன! அமெரிக்கா மட்டும் 10,000 போராயுதக் குண்டுகளை உற்பத்தி செய்துள்ளது!

1990 ஆண்டுக்குப் பிறகு சோவியத் யூனியனின் ஆதிக்கம் குடை சாய்ந்து, அமெரிக்க ரஷ்ய நாடுகளுக்கு இடையே ஊமைப் போரின் உக்கிரம் குறைந்து போனதும், அந்த அழிவு ஆயுதங்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வருகிறது!

வாள்முனையை ஏர்முனையாய் உலக நாடுகள் மாற்றுமா ?

அணுகுண்டு உற்பத்தி, அணு ஆயுதச் சோதனைகளை உடனே நிறுத்தும்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு, லினஸ் பாலிங், ஜேம்ஸ் பிராங்க், பெர்டிரான்டு ரஸ்ஸல் போன்ற உலக மேதைகள் கூக்குரல் எழுப்பினர்! ஆனால் 1963 இல் ‘அணுகுண்டு சோதனைத் தடுப்பு உடன்படிக்கையை ‘ [Nuclear Test Ban Treaty] முதன் முதல் எதிர்த்து நின்று, அதை நீக்கும்படி வற்புறுத்திய முதல் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லர்! அணு ஆயுதங்களை பூமிக்கு மேலே சோதித்துத் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகளை உண்டாக்கக் கூடாது என்பதே உடன்படிக்கையின் விதி! ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த ‘அணுவியல் வெடிப்பின் அமைதிப் பயன்பாடுகள் ‘ [Peaceful Uses for the Atomic Explosions] என்னும் கொள்கையை டெல்லர் கடைப்பிடித்து, ‘ஏர்முனைத் திட்டத்தின் தீரன் ‘ [Champian of Project Plowshare] என்ற பெயரைப் பெற்றார்! ‘உலக நாடுகள் வாள்முனையை ஏர்முனையாக மாற்ற வேண்டும்! ‘ என்று பைபிள் வேதநூலில் ஏசுவின் சீடர், இ சையா [Isaiah] கூறி யிருக்கிறார். ஆனால் உலக அரங்கில் ஏர்முனைத் திட்டம் [Project Plowshare] பின்பற்றப் படாது படுதோல்வி யுற்றது! ஆக்க வினைகளுக்கும், அமைதியைப் பரப்புவதற்கும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் பயன் படுத்தப்பட வில்லை! உலக நாடுகள் இப்போது தமது வாள்களின் முனைகளைக் கூர்மையாகத் தீட்டுவதோடு, புதுப் புது ஆயுதங்களை உற்பத்தி செய்து பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன!

அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையில், முற்பட்ட அணு ஆயுதங்களின் விருத்திக்கும், அவற்றைச் சோதிப்பதற்கும் எப்போதும் சலிப்படையாமல் டெல்லர் பேராதரவு அளித்தார்! வியட்நாம் போரின் சமயத்தில் அவர் அளித்த பயங்கர ஆலோசனைகளைக் கேட்டு, கண்டனர் செய்தவர் பலர், டெல்லரைப் ‘போர்க் குற்றவாளி ‘ [War Criminal] என்று இகழ்ந்தனர்! 1980 ஆண்டுகளில் ஜனாதிபதி ரேகனுக்கு ‘வானவெளிப் போர்கள் ‘ [Star Wars] என்ற திட்டமிட்டப் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு [Strategic Defense Initiative] எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆலோசனைகள் பலவற்றை அளித்திருக்கிறார்!

Teller & Oppenheimer

எட்வெர்டு டெல்லரின் முரண்பாடான பேச்சுகள்!

அமெரிக்க அணு ஆயுத வினைகளில் வேலை செய்த விஞ்ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் கடுமை, முரண்பாடு மிகுந்து பலரது எதிர்ப்புக்களையும் மீறி, வெப்ப அணுக்கரு ஆயுதத்தை ஆக்கியே ரஷ்யாவை மிஞ்ச வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளில் வெற்றி பெற்றக் கர்மவாதி, எட்வெர்டு டெல்லர்! படைப்புத் திறமை மிக்க உன்னத விஞ்ஞானி என்று பாராட்டுபவர் சிலர்! பயங்கரப் போக்குடைய விஞ்ஞானி என்று அவரைப் பழித்தவர்களும் உளர்! 1954 இல் நடந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் மீது தொடரப் பட்ட பாதுகாப்பு ஐயப்பாடு விசாரணையில், எட்வெர்டு டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லி விஞ்ஞானிகளின் வெறுப்பைத் தேடிக் கொண்டார்! ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களின் அனுதாபியாக இருந்ததாலும், தான் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க முற்படும் போதெல்லாம், அவர் பல முறைத் தடுத்ததாலும், மனக் கசப்பில் டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு ஆதரவாகப் பேசவில்லை! அவரது வயது முதிர்ந்த காலத்தில், தான் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லியது தவறு என்று ஒப்புக் கொள்கிறார்! ‘அப்போதும் சரி, இப்பவும் ஓப்பன்ஹைமர் அமெரிக்காவின் மேல் கொண்டிருந்த தேசப் பற்றின் மீது எனக்கு ஐயப்பாடு இல்லை ‘ என்று டெல்லர் தன் நூல் ஒன்றில் குறிப்பிட் டுள்ளார்!

Edward Teller

நோபெல் பரிசைப் பற்றி ஒருவர் டெல்லரைக் கேட்ட போது அவர் கூறியது: “எனக்கு நோபெல் பரிசு கிடைத் திருந்தால், எதற்காக உனக்குக் கொடுத்துத் தொலைத்தார்கள், என்று கடிவார்கள் பொது நபர்கள்! அதே சமயம் எனக்கு நோபெல் பரிசு கிடைக்கா விட்டால், ஏனப்பா உனக்குக் கொடுக்காமல் போனார்கள், என்றும் குறையாடுவார்கள்! முதலில் கடிந்ததை விட, இரண்டாவது குறைபாடு எனக்குச் சரியாகத் தோன்றுகிறது!” “மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்து முதல் அணுகுண்டு ஆக்கியதைப் பற்றியும், அடுத்து ராட்சத வெப்ப அணுக்கரு ஆயுதத் தயாரிப்பு செய்ததைப் பற்றியும் நான் குற்ற உணர்வில் வருந்துகிறேனா, என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்! அதற்கு எனது பதில், இல்லை! இல்லை!

இல்லை! அணுகுண்டில் மாண்டு போனவருக்காக, காயம் அடைந்தோருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்! ஆனால் அணு ஆயுத திட்டங்களில் நான் பங்கெடுத்த தற்கு எனக்கு எந்த வருத்தமும் வில்லை! ‘இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அணு ஆயுதப் பணியில் நாங்கள் யாவரும் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? ‘ என்று நம்மைப் பார்த்துப் பதில் கேள்வி கேட்கிறார்! அவரது ஒரே ஓர் அந்தரங்க பயம், ஹிட்லர் அணு ஆயுத உற்பத்தியில் முந்திக் கொண்டிருந்தால், உலகின் கதி என்ன வாயிருக்கும் என்பதே!

எட்வெர்டு டெல்லர் பெற்ற மதிப்புகள், பரிசுகள்!

டெல்லர் எழுதிய நூல்கள்: விஞ்ஞான ரகசியங்களைப் பற்றிய உரையாடல்கள் [Conversations on the Dark Secrets of Physics (1991)], கத்தியை விடக் கவசமே மேல் [Better a Shield Than a Sword (1987)], எளிமையை நோக்கி முற்பாடு [Pursuit of Simplicity (1980)], விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும் சக்தி [Energy from Heaven & Earth (1979)]. எட்வெர்டு டெல்லர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பரிசு, அடுத்து 1962 இல் அமெரிக்காவின் மதிப்புள்ள என்ரிகோ ஃபெர்மி பதக்கத்தையும் பெற்றார். ஸ்ரேல் பொறியியல் கூடத்தின் ஹார்விப் பரிசு, மற்றும் தேசிய விஞ்ஞானப் பதக்கத்தையும் பெற்றார்.

டெல்லர் 1956 முதல் 1958 வரை அமெரிக்க அணுசக்திப் பேரவையின் [U.S. Atomic Energy Commission] ஆலோசகராக இருந்திருக்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் வெண்ணிற மாளிகை விஞ்ஞானக் குழுவினரின் [White House Science Council] அங்கத்தினராகவும், அமெரிக்க விமானப்படை விஞ்ஞான ஆலோசகராகவும் [Scientific Advisory Board of the U.S. Air Force]

இருந்திருக்கிறார்! மேலும் அவர் அமெரிக்க அணுவியல் கழகம் [American Nuclear Society], அமெரிக்க விஞ்ஞானக் கழகம் [American Academy of Science] ஆகியவற்றின் சிறப்புநராக ஆக்கப் பட்டார்.

எட்வெர்டு டெல்லரின் வயது 2002 இல் இப்போது 94! கண்கள் ஒளி மங்கி, காதுகள் கேட்கும் திறனற்றுத் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்! ஆனாலும் அவரது மூளை இன்னும் கூர்மை மழுங்காமல் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது! அவரது அருமை மனைவி 2000 ஆம் ஆண்டு காலமானார். அவர் அடிக்கடி கூறும் ரோமானியப் பொன்மொழி, ‘ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும் ‘ என்பது. ‘சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி நிலவும் ‘ என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

******************

Series Navigation