பெ அய்யனாரின் ‘அலை புரளும் வாழ்க்கை ‘- நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பாவண்ணன்


வசீகரங்களின் பதிவு

ஐவகை நிலப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பின் விசித்திரங்களையும் ஒவ்வொரு பிரிவிலும் காணப்படுகிற கருப்பொருள்கள், உருப்பொருள்களின் வசீகரங்களையும் சித்தரிக்கும் சங்கப்பாடல்கள் படிக்கப்படிக்க நல்ல அனுபவத்தைத் தரக்கூடியவை. தலைவனை அல்லது தலைவியை முன்னிலைப்படுத்தும்போது ஒன்றிரண்டு வரிகளில் சின்னதாக ஒரு நிலச்சித்திரமும் மிகவும் வசீகரமான காட்சிச்சித்திரமும் எல்லாப் பாடல்களிலும் தவறாமல் இடம்பெறுவதைக் காணமுடியும். பிரிந்துபோன நெய்தல் தலைவனைப்பற்றிய குறிப்பை முன்வைக்கும்போது (நரி வெரூஉத் தலையார்-குறுந்தொகை) ‘வதி குருகு உறங்கும் இன்நிழற்புன்னை உழைஞரத் திவலை அரும்பும் தீஞ்சீர் மெல்லப் புலம்பன் பிரிந்தென ‘ என்று குறிப்பிடுகிறார். குறிஞ்சிநிலத் தலைவனைப்பற்றிய குறிப்பை எழுதும்போது (வெண்பூதன்- குறுந்தொகை) ‘சினைதொறும் தீம்பழம் துாங்கும் பலவின் ஓங்குமலை நாடன் ‘ என்று குறிப்பிடப்படுகிறது. இதே விதமான மருதநிலைத் தலைவனைப்பற்றிய பாடலில் (வடம வண்ணக்கன் தாமோதரன்- குறுந்தொகை) ‘உள்ளூர்க் குரீஇத் துள்ளளுநடைச் சேவல் சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇடர் தேம்பொதிக் கொண்ட தீம்கழைக் குரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் ‘ என்று குறிப்பிடப்படுகிறது.

வசீகரங்களைக் கொண்ட அம்சங்கள் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் அமைந்துள்ளதை படைப்பாற்றல் மிகுந்த கவிஞர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். வெறும் சித்தரிப்பாக மட்டுமன்றி. இந்த வசீகரக்குறிப்புகள் ஒரு தருணத்தின் மனநிலையை அல்லது வாழ்க்கையின் எதார்த்தநிலையைக் குறிப்பால் உணர்த்தும் உருவகங்களாகவும் படிமங்களாகவும் அமைந்துவிடுகின்றன. இதனால் பாடலின் சிறப்பும் வாசிப்பு அனுபவமும் கூடுதலாக்குகிறது.

இப்பாடல்கள் எழுதப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நாட்குறிப்புகளில் சூரியோதயம் பற்றிய எண்ணற்ற வரிகள் கவித்துவடன் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. குரு நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையிலும் ( அன்பும் ஆசிகளும்) சூரியோதயம், பனி இரண்டையும் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் இடம்பெற்றிருப்பதையும் காணமுடிகிறது. தம் வாழ்வுடன் இரண்டறக் கலந்த நிலம்சார்ந்த அதிசயங்களாலும் வசீகரங்களாலும் காலம்காலமாகப் படைப்பாளிகளும் தத்துவவாதிகளும் ஈர்க்கப்பட்டு வந்திருப்பதையே இக்குறிப்புகள் உணர்த்துகின்றன.

‘அலை புரளும் வாழ்க்கை ‘ நூலில் பதிவுபெற்றிருக்கும் குறிப்புகள் சென்னையின் வசீகரங்களை முன்வைக்கின்றன. மதுரைக்கு அருகில் உள்ள மேலுார் என்னும் சிற்றுாரில் பிறந்து இதழியலாளனாகும் கனவின் ஒரு பகுதியாக சென்னைக்குக் குடியேறித் தங்கநேர்ந்த அய்யனார் சென்னையைச் சுற்றிப் பார்த்ததில் தன்னை வசீகரித்த இடங்களைப்பற்றிய துல்லியமான சித்திரங்களை இக்குறிப்புகள் வழியாக தீட்டிக்காட்டியிருக்கிறார். படிப்பதற்கு மிகவும் சுவையான மொழியில் எல்லாக் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

தொகுப்பில் பதின்மூன்று கட்டுரைகள் உள்ளன. ஒரேஒரு கட்டுரை மட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப்பற்றியது. எஞ்சிய பன்னிரண்டு கட்டுரைகளும் சென்னையையே களமாகக் கொண்டவை. மெரீனா கடற்கரை, சோழமண்டலக் கடற்கரை, ஸ்பென்ஸர் பிளாஸா, கோயம்பேடு பேருந்து நிலையம், அருங்காட்சியகம், நுாலகம், மருத்துவமனை என சென்ானயின் பல்வேறு இடங்களிலும் சுற்றியலைந்து அவ்விடங்களில் தன்மை வசீகரித்த அம்சங்களைத் தொகுத்துத் தந்துள்ளார். கட்டுரைகளை வாசிக்கும்போது ஆச்சரியமும் ஆனந்தமும் ததும்பும் குரலுடன் வரிகளிடையே ஒருவர் உட்கார்ந்துகொண்டு நம்மோடு பேசும் எண்ணம் தொடர்ந்து எழுந்தபடி உள்ளது. வாக்கியங்கள் பேசுவதைப்போலவே எளிமையாக உள்ளன. தொகுப்பின் கட்டுரைகளில் முதல்வரிசையில் நிற்பவை மெரீனாபற்றிய கட்டுரையும் ஸ்பென்ஸர் பிளாஸாவைப்பற்றிய கட்டுரையும். ‘ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் ‘ அடுத்த வரிசையில் வரத்தக்கதாகும். எங்கோ ஆடப்படுகிற ஒரு ஆட்டத்தின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தகவமைக்கும் விதத்தை அழகான புனைவுமொழியுடன் எழுதியுள்ளார் அய்யனார். கடற்கரையைப்பற்றிய கட்டுரையில் ஊற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டுவரும் கடலோரப்பெண்களைப்பற்றிய தகவலும் ஸ்னெ¢ஸர் பிளாஸாபற்றிய கட்டுரையில் ஜெயகாந்தன் புத்தகங்களை கட்டுகட்டி வாங்கிச் செல்லும் பெயர் குறிப்பிட விருப்பமில்லாத வாசகரைப்பற்றிய தகவலும் புனைகதையாளனுக்குரிய நேர்த்தியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பல வரிகள் மீண்டும்மீண்டும் படிக்கத்துாண்டும் வண்ணம் நயமாக எழுதப்பட்டுள்ளன. ‘ஒரு சாமுராய்போல அண்ணா சாலையின் நெரிசலான போக்குவரத்தை ஊடுருவி ஸ்பென்ஸர் பிளாஸாவின் அருகில் வந்தேன் ‘ ( ஸ்பென்ஸர் பிளாஸா- சென்னையில் ஓர் அதிசயம்) என்ற வாக்கியமும் ‘அலை ஓசை இருளில் கடலின் இருப்பை உணர்த்துகிறது. மனிதர்கள் முகங்கள் மறைந்து பேச்சுகளாய் மாறுகிறார்கள் ‘ ( அலைபுரளும் வாழ்க்கை ) என்னும் வாக்கியமும் ‘மயிலை ரயில்வே ஸ்டேஷன் வருவதற்கு முன்பு தெரியும் குடிசைமாற்று வாரியத்தின் கட்டடங்கள் தோல் உதிர்ந்து குளிரில் நடுங்கின ‘ (நீரில் மிதக்கும் நகரம்) என்னும் வாக்கியமும் ‘அவர் சொன்ன வார்த்தையின் வரைபடம்கொண்டு கண்காணிப்பு அலுவலரின் அலுவலகம் போனேன் ‘ (சென்னை மருத்துவமனை) என்னும் வாக்கியமும் உடனடியாக மனத்தில் தோன்றுகின்றன.

தொடக்கத்தில் தந்த வசீகரத்தை நகரம் தற்சமயம் தரவில்லை என்று பதிவு செய்கிறார் அய்யனார். பழகப்பழக ஒரு வசீகரம் தன் வனப்பை இழந்துபோகலாம். அது வாடிக்கையான விஷயமே. ஆனால் வசீகரத்தைத் தேடும் கண்களும் மனமும் தன் சோர்வடையாத பயணத்தின்மூலம் புதிதுபுதிதாக எதையாவது கண்டடைவதன் மூலமே தன்னைப் புதுப்பித்தக் கொள்கின்றன. ழுதல் கட்ட வசீகரங்கள், இரண்டாம் கட்ட வசீகரங்கள் என அடுத்தடுத்த கட்டங்களைநோக்கி மனம் நகர்ந்துகொண்டே இருக்கக்கூடியது. மண்ணின் அழகையும் மானுடத்தின் அழகையும் அத்தகு பயணங்கள் வழியாகவே கண்டறிய முடியும். தன் முயற்சியில் சற்றும் தளராத உறுதிகொண்ட அய்யனாரின் கண்டறியும் பயணம் அத்திசையில் தொடர்ந்து நிகழ்வதன்வழியாக அத்தகு அனுபவங்கள் அவருக்கும் வாய்க்கக்கூடும். அப்போது அலைபுரளும் வாழ்க்கையைப்பற்றிய கட்டுரைகளை இன்னும் கூடுதலாக அவர் எழுதக்கூடும்.

(அலை புரளும் வாழ்க்கை (சென்னை- சில சித்திரங்கள்) பெ. அய்யனார் காலச்சுவடு பதிப்பகம், கே.பி.சாலை, நாகர்கோயில் விலை. ரூ60)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்