பெற்றோல் ஸ்டேஸன்

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

இளைய அப்துல்லாஹ்


லண்டன் சிற்றியில் இருந்து 25ஆம் நம்பர் பஸ்ஸில் மனோ பார்க்கில் உள்ள வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுகிறது. மனதில் சந்தோஷம். இரட்டைத் தட்டு பஸ் புதியது. அழகாக இருந்தது. மேலே ஏறி ஆகமுன்னால் இருக்கும் ஸீட்டில் இருந்து கொண்டேன். இந்த பஸ் ரூாிஸ்ட் பஸ்ஸிலும் பார்க்க நேர்த்தியாக இருந்தது. ரூாிஸ்ட் பஸ் மேலே திறந்திருக்கும் முக்கிய ரூாிஸ்ட் இடங்களைக் கொண்டு போய்க் காட்டுவார்கள். 25 ஸ்ரேலிங் பவுன்ஸ் கொடுத்தால் சிற்றியில் முக்கிய இடங்களின் முன்னால் நிற்பாட்டுவார்கள். இறங்கி அந்த இடத்தை பார்ததுவிட்டு அடுத்து வரும் அதே கொம்பனி பஸ்ஸில் ஏறி அடுத்த இடத்துக்கு போகலாம்.

இப்படி மூன்று நான்கு ரூாிஸ்ட் கொம்பனி பஸ்கள் ஓடுகின்றன. நல்ல வசதிதான். அந்த டிக்கட் 24 மணித்தியாலம் செல்லுபடியாகும். ஒரே பயணத்தில் MARBLE ARCH வளைவு RUSSEL SQURE, PICCADLY CERCUS, LISTER SQUURE, SOUTH KENSINTON மியூசியம், மெழுகுப்பொம்மை கூடம், பக்கிங்ஹம் மாளிகை, விக்டோாியா, ஹைபார்க் என்று பல இடங்கள் இந்த 25 ஸ்ரேலிங் பவுண் டிக்கட்டில் பார்க்கலாம்.

25ம் இலக்க பஸ் STATFORD இலிருந்த MARBLE ARCH வரை போகும் நீண்ட துாரம் ஒரு பவுண்தான் டிக்கட் கட்டணம். இது முக்கியமான ரூாிஸ்ட் இடங்களுக்கு போகாவிட்டாலும் MARBLE ARCH இல் இருந்து OXFORD STREET வழியாகச் செல்லும் போது அழகான சிற்றியை தாிசிக்கலாம் ஒரு ஸ்ரேலிங் பவுண்தானே. லண்டனில் பஸ்களை மிகவும் அழகாக கழுவி சுத்தமாக வைத்திருப்பார்கள். அனேகமாக புதிய பஸ்கள் ஓடும். கனதுாரம் போகவேண்டிய தேவை குறைவு நீண்ட நெருக்கடி இல்லை. ஆனால் சில நேரம் சனி-ஞுாயிறு தினங்களில் சுரங்கரயில் ஸ்டேசன்களின் திருத்த வேலைகளுக்காக Rail Replacement பஸ்களைப் போடுவார்கள் எங்கையிருந்து தான் கொண்டுவருவார்களோ தொியாது ஒரே சக்குமணமாக இருக்கும். ஆனால் இது நல்ல பஸ்

பஸ் OXFORD STREET இல் ஒரு ஹோல்டில் நிற்கிறது. ஆட்கள் ஏறுகிறார்கள். ஒருவர் இறங்கினார் ஒருவர் வந்து எனக்கருகில் இருக்கின்றார். இவ்வளவு இடம் இருக்கிறது. ஆனால் எனக்கருகில் வந்து உட்கார்ந்திருக்கிறாரேஸ..

தனிய சிற்றியை ரசித்துப் பார்க்க வேண்டும் என்று தான் இந்த பஸ் பயணத்தை செய்தேன். ஏன் என்னருகில் வந்திருக்கிறார். வந்தமர்ந்த உடனேயே

“நீங்கள் தமிழோ ?” அவர் கேட்டார்

“ஓம்” அவருக்கு மகிழ்ச்சி

“எங்கை போறியள்” எனக்குப் பிடிக்கவில்லை.

“சிலோனிலை எங்கை”

“உடுப்பிட்டி”

“நான் நெல்லியடி”

“உடுப்பிட்டி எண்டால் கோயில் சந்தையடியோ

இல்லாட்டி பீடாக்கடைக்கு இங்காலை

இமையாணன் பக்கமோ ?”

அவர் என்னத்துக்கு வாறார் என்று துல்லியமாக எனக்கு விளங்கியது. அவர் நான் யார் என்ன சாதி என்பதைத் தொிந்து கொள்ளவாறார். “தங்கராசப்பத்தரைத் தொியுமோ ?” கேட்டார். எனது பிடி கொடுக்காத பதிலில் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். உடுப்பிட்டி கோவில் சந்தைக்கு வலது பக்கமாக நகைப்பத்தர் இருக்கிறார்கள் இடது புறமாக தச்சுவேலை செய்பவர்கள்-அங்காலை கொல்லர்கள் இமையாணன் பக்கம் சீவல் தொழிலாளர்கள் அவருக்கு என்னை யார் என்று அறிந்து கொள்ள வேண்டும். என்ன சாதி என்று தொிய வேண்டும்.

லண்டனிலும் பல பத்திாிகை விளம்பரங்களில் உயர்குல சைவவேளாள என்று தான் விளம்பரங்கள் வருகின்றன. அங்கு போயும் சாதி தேடும் மனிதர்களில் அவரும் ஒருவர்.

****

எனக்கு இது மூன்றாவது பெற்றோல் ஸ்டேஸன் லண்டனில் தமிழர்களுக்கு உதவுவது பெற்றோல்ஸ்டேசன்கள் தான். சில்லறைக்கடைகளைவிட பெற்றோல் ஸ்டேஸன்கள் தான் வேலை செய்தவற்கு இலேசு. அகதிகளாய் வரும் தமிழர்களுக்கு லண்டனிலும் அதன் சுற்றுப்புறங்களில் இருக்கும் தமிழர்களால் நடத்தப்படும் பெற்றோல் ஸ்டேஸன்களில் வேலை எடுப்பது சுலபம்.

தேவன் அண்ணை நல்லவர். அவர்தான் என்னை வேலையில் சேர்த்தார். அவரும் லண்டனுக்கு அகதியாய் வந்து தான் இப்போ 2 பெற்றோல் ஸ்டேஸன்களுக்கு மனேஜராக இருக்கிறார். “நல்ல உசாரா வேலை செய்யவேணும்” இது தான் தேவன் அண்ணை என்னை வேலைக்கெடுத்த நேரம் சொன்னது சிாிச்சு சிாிச்சு பேசும் நல்ல மனிசன்.

பல நெளிவு சுளிவுகளை எனக்குச் சொல்லித் தந்த இரண்டாவது பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்த கெம்பாவை என்னால் மறக்க முடியாது அவர் ஆபிாிக்கர். அவருக்கு நிறைய GIRL FRIEND இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒரு GIRL FRIEND உடன் PUB க்கு போய் குடிப்பார். சந்தோஷிப்பார். கதை கதையாய் சொல்வார். எப்படி பெண்களைப் பிடிப்பது என்றும் சொல்வார். எல்லோருக்கும் அந்தக் கலை வாய்ப்பதில்லை கெம்பா வலு கெட்டிக்காரர் உந்த விசயத்தில்.

கெம்பா சொல்வார் “கவனம் கள்ள காட்டுகள் கொண்டு வருவினம்” கள்ள கிறடிட் காட்டுகளைப் பிடித்தால் 50 ஸ்ரேலிங் பவுண்ஸ் Bank இல் இருந்து எடுக்கலாம் கள்ளகாட் பிடித்து கொடுப்பவர்களுக்கு வங்கிகள் கொடுக்கும் சன்மானம் அது. கள்ள கிறடிட் காட்டுகளுக்கு உகந்த இடம் பெற்றோல் ஸ்டேஸன் தான். கிறடிட்காட்டை தமிழர்களே கொம்பியூட்டாில் போட்டு செய்து கொண்டு வருவினம். எனக்கு உந்த விசயமே தொியாது. நான் வேலைக்குச் சேர்ந்து 7 மாதம். இப்பொழுது தான் கைகள் நன்றாக Cash மெசினை கையாளத் தொிந்து கொண்டு வருகிறது. காலையில் சிகரட் பைக்கட்டுகள் எண்ண வேண்டும். ஒயில் கான்கள், போத்தல்கள் எண்ணவேண்டும். கணக்கு முடித்து அடுத்த கசியாிடம் ஸிப்ட்டை ஒப்படைக்க வேண்டும்.

அகதியாய்ப்போன ஆறுமாசத்துக்கு நம்பர்தர மாட்டார்கள். அகதிக்காசு தருவார்கள். வேலை செய்ய முடியாது. ஆறுமாதம் முடிந்த பின்பு நம்பர் வந்த பின்பு தான் வேலை செய்ய முடியும். ஆனால் நம்பர் இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் இடம்தான் பெற்றோல் ஸ்டேஸன். லண்டன் தவிர்ந்த ஏனைய நாடுகள் இன்சூரன்ஸ் நம்பர் விடயத்தில் மிகவும் கடினம். லண்டனில் பொலிஸ் செக் பண்ணுவதில்லை. குறைவு எனவே நம்பர் இல்லாமல் இல்லாவிடில் வேறை யாருடைய கள்ள நம்பாிலாவது வேலை செய்ய முடியும். எல்லாம் எம்மவர்கள் தானே. நானும் கள்ள நம்பாில் தான் வேலை செய்தேன்.

இரவு 12 மணி இருக்கும் நைட் ஸிப்ட்டில் இருக்கிறேன் புதிதாக வேலை செய்பவர்களுக்கு நைட் ஸிப்ட் தான் கொடுப்பார்கள்.

காாில் நான்கு பேர் வந்தார்கள். கைநிறைய ஸ்ரேலிங் பவுண்ஸுடன் ஒருவர் மற்றவாின் கைநிறைய கிறடிட் காட்டுகள்.

“அண்ணை நீங்கள் புதுசோ” ?

தமிழ் என்பது தான் முகத்தில் இருக்கிறதே…

“ஓம்”

“காட் போடுவமோ” ? ஏதோ சாமான் போடுவது போல் கேட்கிறார்கள்.

“எனக்குத் தொியாது உதெல்லாம்” கமரா 24 மணித்தியாலமும் இயங்கி படம் பிடித்துக்கொண்டு இருக்கிறது. எனக்குப்பயம். வந்தவாில் ஒருவர் கள்ளமாக மெசினில் எப்படி கிறடிட் காட்டைப் போட வேண்டும் எப்படி பெற்றோல் கணக்கை ஹோல்ட் பண்ணி வைக்கவேண்டும் என்று விலா வாாியாக சொல்லி விளங்கப்படுத்துகிறார். ஒரு விசாகாட்டை என்னிடம் தந்து விட்டார்

கிறடிட் காட் மோசடி கிாிமினல் குற்றம் பிடித்தால் கம்பி எண்ண வேண்டும் என்று கெம்பா சொன்னது நினைவில் வந்தது.

இண்டைக்கு புதுசுதானே நிறையச் செய்ய வேண்டாம் ஒரு அறுபது பவுண்ஸ்க்கு செய்யுங்கோ முப்பது பவுண்ஸ் உங்களுக்கு 30 பவுண்ஸ் எங்களுக்கு வாழைப்பழத்தை தீத்துமாப்போல் அழகாகச் சொன்னார் வந்தவாில் ஒருவர்.

முதல் கிழமை தான் கள்ளக்காட் போட்டுக் கொடுக்காத பெற்றோல் ஸ்டேஸன் கஷியர் ஒருவரை மண்டையிலை பிளந்து போட்டான்கள். பயமாகவும் இருந்தது.

இன்று வேலைக்கு வரும் போதே ஒரு தண்டம் 101 பஸ்ஸில் வரும் பொழுது மனோ பார்க்கில் இருந்து Army and Navy துணிக்கடை தாண்டிவந்தவுடன் ஒரு தாயும் மகளும் பஸ்ஸில் ஏறினார்கள். தாய் கண்ணாடி போட்டிருந்தாள். மகள் எனது சீட்டுக்கு முன் சீட்டில் சிாித்துவிட்டு உட்கார்ந்தாள். தாய் எனக்கு அருகில் உட்கார்ந்தார். ஈஸ்ட்ஹம் ஸ்டேஸன் பஸ் ஹோல்டில் நான் இறங்கும் பொழுது தாயின் மூக்குக் கண்ணாடி எனது கைகளால் தட்டுப்பட்டு கீழே விழுந்து விட்டது. நான் “சொறி” சொன்னேன். மகள் சன்னதம் ஆடினாள். கண்ணாடி வாங்கித்தா என்றாள். பொலிஸைக் கூப்பிடுவேன் என்றாள். இப்படி இழுபறிப்பட்டு எனது பேர்ஸில் இருந்து 40 ஸ்ரேலிங்பவுண்ஸ்களைப் பிடுங்கி விட்டாள். அது மட்டும்தான் பொக்கட்டில் இருந்த பணம்.

கிறடிட்காட்டை எப்படி லாவகமாக செய்கிறார்கள். ஒரு கள்ளமாக கிறடிட் காட் செய்பவர்களிடம் இருபது முப்பது காட் இருக்கும் ஒரு இரவில் இருபது பெற்றோல் ஸ்டேஸன்களாவது கவர் பண்ணுவார்கள். தமிழர்கள் வேலை செய்யும் ஸ்டேஸன்களாகப் பார்த்து அவர்களுக்கு அதைப்பற்றி விளங்கப்படுத்தி ஆசையூட்டி கள்ள வியாபாரம் செய்கிறார்கள். செய்ய வேண்டியது இவ்வளவு தான். ஐம்பது அறுபது பவுண்ஸ்களுக்கு யாராவது பெற்றோல் டாசல் காசுக்கு அடித்தால் காசை வாங்கி Till இல் போட்டு விட்டு மெசினில் ஹோல்ட் பண்ணி வைத்து விட்டு பின்னர் ஆட்கள் இல்லாத நேரம் அதனை Cash மெசினுக்கு எடுத்து கிறடிட் காட்டை இழுக்க வேண்டியது தான். காட்டில் இருந்து Cash மெசினுக்கு பணம் பதிவாகிவிடும் ஏற்கனவே வாங்கிப்போட்டகாசை எடுத்து விடவேண்டியது தான் கள்ளக்காட்டில் இருந்து கணக்குச் சாியாகிவிடும். காசு அரைவாசி அவருக்கு அரைவாசி கஷியருக்கு.

குளிர் தாங்க முடியவில்லை மைனஸ் பயங்கரக்குளிர். வெள்ளைக்காரர்களுக்கு கிறிஸ்மஸுக்கு பனிப்பெய்வது வலு புழுகம். அதனை “வைற் கிறிஸ்மஸ்” என்று அழைத்து குதுாகலிப்பார்கள். தாங்க முடியாத குளிருக்கு சிகரட்தான் தஞ்சம். சிறியவர் பொியவர் என்று சிகரட்டில் மூழ்கி இருப்பர். இரவில் பெற்றோல் ஸ்டேஸன் கதவு மூடித்தான் இருக்கும். சாமான் கொடுக்க எடுக்க ஒரு ஓட்டை இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் ஒருவர்வந்து சிகரட் கேட்;டார். 50 பென்ஸ் குறைவு ஒரு பெட்டிக்கு. தரமுடியாது என்று விட்டேன். அவர் கையில் இருந்த பியர் கானிலுள்ள பியர் முழுவதையும் அந்த ஓட்டையில் ஊற்றிவிட்டார். பிறகு ஒரு ஜொக்கினால் அள்ளி வெளியில் ஊற்றி துடைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.

கிராமப் பக்கங்களில் பெற்றோல் ஸ்டேஸன்களில் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம், பிளட் வீடுகளில் இருக்கும் காவாலி கடப்பிளிகள் வந்து ஒரே கரைச்சல் தரும். காசு இல்லாமல் சிகரட் சொக்லட் கேட்பார்கள் கொடுக்காவிட்டால் கண்ணாடியில் துப்பி விடுவார்கள். பிறகு அதனைத் துடைக்க வேண்டும்.

ஒரு பெண் வந்து கஷியர் ஓட்டைக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறாள். “என்ன ?”

“பென்ஸன் 10 தா” கொடுத்தேன்

“தீப்பெட்டி ஒன்று” கொடுத்தேன் சிாித்தாள்

“இதில் வைத்து பத்தாதே இது பெற்றோல் ஸ்டேஸன்”

“எனக்குத் தொியும்”

“குளிருது இன்று சாியான குளிர் கதவைத் திறக்கிறியா”

அவள் மார்புகளை நசித்துக் காட்டுகிறாள்

கொஞ்சம் போதையாக இருப்பாள் போலத் தொிகிறது.

“உள்ளே வரவா”

“கதவைத் திறப்பதற்கு எனக்கு அனுமதி இல்லை” லேசாக வெண்மையான அவளது மார்பகத்தை வெளிப்படுத்திக்காட்டுகிறாள். கண்ணடிக்கிறாள். வலது கை ஆட்காட்டிவிரலை தனது வாயில் வைத்து சூப்பிக் காட்டுகிறாள் குளிர் பேய்க்குளிர்.

இந்த நேரத்தில் இவள் யார் சில வேளை யாராவது செற் பண்ணிக்கதவைத் திறக்கச் செய்து கொள்ளையடிக்க வருகிறார்களோ.

நாவால் அவளது சிவந்த உதடுகளை ஈரப்படுத்துகிறாள் என்னைப்பார்த்தபடியே.

ஒரு பெற்றோல் ஸ்டேஸனில் இரண்டு பேர் வந்து அவசரமாக மலகூடம் போக வேண்டும் கதவைத்திற என்று கசியரைக் கேட்டிருக்கிறார்கள். ஒரு பெண் மற்றது ஆண். பாவப்பட்டு இரவு நேரம் என்று கஷியர் திறந்தவுடன் ஒருவர் கதவைப் பிடித்து கொண்டு நிற்க மற்றவர் பிஸ்ட்டலைக் காட்டி பயமுறுத்தி அன்றைய கலக்ஷன் பன்னிரண்டாயிரம் பவுஸ்ண்களை அள்ளிக்கொண்டு போய்விட்டனர். பயமாய் இருந்தது இரவு நேரம் அவளைப்பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.

குளிாிலும் உடம்பு சுட்டது. அவர்கள் தந்து விட்டுப்போன கிறடிட்காட் பொக்கட்டில் கிடக்கிறது. அனேகமான தமிழ் ஆக்கள் பெற்றோல் ஸ்டேஸனால் தான் உழைத்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் முழு சூக்குமமும் எனக்குத் தொியாது. பென்ஸ்கார் வீட்டுச் சாமான், எலக்ரோனிக் பொருட்கள் வசதியான வாழ்க்கை என்று பலருக்கு கிறடிட் காட்டுகள் வசதி வாய்ப்பை வழங்கியிருக்கின்றதாம். ஆனால் பாவி போன இடம் பள்ளமும் திட்டியும் தானே.

ஒரு முறை முதலாவது பெற்றோல் ஸ்டேஸனில் வேலை செய்யும் பொழுது ஒரு ஆபிாிக்கப் பெண் மணி ஹுட் உயர்ந்த லொறி ஒன்றை ஓட்டி வந்தாள். பம்பைத்துாக்கி பெற்றோலை “ஓன்” பண்ணு என்று அடம்பிடித்தாள். இரவில் காசு வாங்கி விட்டுத்தான் பெற்றோல் கொடுக்கும் வழமையைச் சொன்னேன்.

ஆபிாிக்கக்காாி என்னைக் கறுப்பன் என்று திட்டினாள். பின்னர் “பாக்கி” என்று திட்டினாள் பாக்கி என்பது ஐரோப்பியர் திட்டுவதற்கொன்டே பாவிக்கும் சொல் பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கையைச் சேர்ந்தவர்களை இப்படிச் சொல்லித்திட்டுவார்கள்

நான் உறுதியாகச் சொன்னேன் பம்பை ஓன் செய்யமாட்டேன் லிவரைத் துாக்கி பம்பில் ஓங்கி அடித்தாள். நான் எதிர்பார்க்கவில்லை அந்த உயர்ந்த லொறியால் கொண்டு வந்து கசியர் கூடை இடித்தாள் நான் எலாமை அழுத்தினேன். பொலிஸ் வந்தது.

கெம்பா ஒரு முறை இரவு நேரம் வேலை செய்யும் போது தனது காதலியையும் கூட்டி வந்திருக்கிறார். காதலியோடு இரவில் வேலை செய்து பார் வலு சோக்காக இருக்கும் என்று கெம்பா சொன்னார்.

அவள் வெளியில் நின்றபடி என்னிடம் கேட்டாள் உன்னோடு “செக்ஸ்” செய்ய எனக்கு விருப்பமாக இருக்கிறது. உனக்கு என்னோடு செக்ஸ் செய்ய விருப்பமா ?

இல்லை… இல்லவே இல்லை.. எனக்கு அந்த மூட் இப்பொழுது இல்லை. அதற்கான வசதியான இடமும் இது இல்லை.

அவள் ஒரு ஏமாற்றத்தோடும் வெறுப்போடும் தோளைக் குலுக்கிவிட்டு வலது பக்கமாக நடந்து போகிறாள். நேரம் இரவு 12.35

பெற்றோல் ஸ்டேஸனுக்கு அருகில் உள் பிளட்டில் இருந்து ஒரு கென்யா நாட்டவர். அவர் எப்பொழுதும் ஒரு பென்ஸ் இரண்டு பென்ஸ் ஐந்து பென்ஸ் பத்து பென்ஸ் சில்லறைகள் தான் கொண்டு வருவார். பிச்சை எடுப்பவர் போல….

பொலு பொலுவென்று Cash கவுண்டாில் ஓட்டைக்குள்ளால் சில்லறையைக் கொட்டுகிறார். சில நேரம் எாிச்சல் வரும். ஒவ்வொன்றையும் வேறாக்கி எண்ண வேண்டும். சந்தடி சாக்கில் இருபத்தைந்து பென்ஸ் ஐம்பது பென்ஸ் குறைத்துவிடுவார்கள். ஒவ்வொரு பென்ஸும் பெறுமதி ஒரு பென்ஸ் அதாவது ஒரு சதம் இலங்கையில் 2 ரூபா பெறுமதி.

முதல் முதல் பெற்றோல் ஸ்டேஸனுக்குப் வேலைக்குப்போகிற பெடியன்களுக்கு எதைக் கண்டாலும் அவா. பெற்றோல் ஸ்டேஸனிலை தின்பண்டங்கள் எல்லாம் இருக்கும். மாஸ், ஸ்னிக்கர் Twix போல பல வகை சொக்லேட்டுகள், எல்லா குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள் என்று ஒரு மினி சுப்பர் மார்க்கட்டே இருக்கும். அங்கு போய் பார்த்தவுடன் எல்லாவற்றையும் தின்னத்தான் ஆசையாக இருக்கும். இரவு ஸிப்ட் காரருக்கு நல்ல வேட்டை. நல்லா சாப்பிடலாம் நான் இரவு நேர ஸிப்டில் எல்லா சொக்லட்டு வகைகளையும் சாப்பிட்டு எல்லா பிஸ்கட் வகைகளையும் சாப்பிட்டு அலுத்துவிட்டது. இப்பொழுது கூட மாஸ் சொக்லெட்டைப் பார்ப்பதோடு சாி. அவா இல்லாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. பிறகு இரவு நேர ஸிப்டில் குளிர்பானத்தில் Red Bull மட்டும் விருப்பமாக குடிப்பேன். இப்பொழுதும் அந்தப்பழக்கம் இருக்கிறது.

பெற்றோல் ஸ்டேஸனில் Till வேலை வலு கவனமாகவும் உசாராகவும் இருக்க வேண்டும் வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் வருவார்கள்.

கிறிடிட் காட் தந்தவர்கள் வரப்போகிறார்களோ என்ற பயம் ஒரு பக்கம். வந்தால் வரட்டும்.

கறுப்பு நிறத்தவர்கள் வந்தாலே பயம்தான் ஓ…. ஆ…. என்று கத்துவார்கள். காலையில் வேலைக்குப் போகும் போது பெற்றோல் அடித்துக்கொண்டு போக வாிசையாக அலுவலர்கள் நிற்பார்கள். பொிய கியூ வாிசையாக இருக்கும் திடாரென்று ஒரு ஆபாிக்கனோ, கென்யனோ சில்லறையைக் கொண்டு வந்து கொட்டி விட்டு சிகரட், சொக்லட், கேட்டுக் கொண்டிருப்பான் தாங்கமுடியாமல் கோபம் வரும். எாிச்சலை வெளியில் காட்டிக் கொள்ள முடியாது அவனைச் சமாளிக்க வேண்டும்.

என்னிடம் கிறடிட் காட் தந்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் தமிழர்கள். ஒவ்வொருவரும் கள்வர்கள்.

காரை பத்தாம் நம்பர் பம்புக்கு அருகில் நிப்பாட்டி விட்டு லிவரை ஒருவன் துாக்கினான் பெற்றோல் அடிப்பதற்கு.

சிவிலில் வந்த பொலிஸ் காரொன்று அவர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டது.

—-

anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்