பெயர் தெரியாமல் ஒரு பறவை

This entry is part [part not set] of 7 in the series 20001126_Issue

வண்ணதாசன்


இந்த நடையிலிருந்து மலையைப் பார்ப்பது போல உட்கார்ந்திருந்தாலும் நான் மலையைப் பார்க்கவில்லை. சிலசமயம் எரிகிற தீயும் மலையில் இன்று எரியவில்லை. மழைக்குத் தயாராகவே பகலின் அடையாளங்கள் முழுவதுமிருந்தது. அதை உத்தேசித்தே தீயை ஒத்திப் போட்டிருக்கலாம். தீ எரிவதைப் பார்க்காமலே புரிந்து கொள்கிற அளவுக்கு இந்த ஒன்றரை மாதத்திற்குள் புலன்கள் படிந்து விட்டிருந்தன. வாடகைக்கு வீடு கிடைத்துக் குடும்படும் குழந்தைகளும் வந்தபின் அடுப்புத் தவிர வேறெதுவும் தெரியும் என்று தோன்றவில்லை.

இன்று குழப்பமெல்லாம் குப்புறக் கிடந்த அந்தப் பறவையைப் பற்றித்தான்.

சாப்பாட்டையும் ஒரேயடியாக வெளியே முடித்துக் கொண்டு அதிகம் வெளிச்சமற்ற, இந்த வீட்டுக்கான லேசான சரிவில் இறங்கி அருகில் வந்த போதே, வீட்டின் மரக்கதவை வக்கீல் வீட்டுக் கறுப்புநாய் முட்டிக்கொண்டே இருந்தது. மாமிச உறுமலுடன் கீழே முட்டி முட்டி அது ஏற்படுத்துகிற சிறு விம்பல், மேலே இடப்பட்டிருக்கிற கொக்கியின் ஆதாரத்தில் எதிர்ப்படைந்து மறுபடி பொருந்திக்கொள்ள, இந்தத் தொடர்ந்த முயற்சியில் மரமும் இரும்பும் கலந்த சப்தம் விட்டுவிட்டுக் கேட்டது.

இன்றைக்கு அந்தச் செய்கையைச் சிநேகமாக எடுத்துக் கொள்ள முடியாது போயிற்று. இன்றைக்கும் நாளைக்கும் முழுவதுமாக, மற்ற நான்கு அறைவாசிகளும் திங்கட்கிழமை வரும்வரை (ஒருவர் நாளை நிசிக்குமேல் வந்து வெளியில் கிடக்கிற கம்பிக் கட்டிலில் படுத்திருப்பது மறுநாட்காலை தெரியும்) தனியாகத்தான் அடைந்து கிடக்க வேண்டும் எனினும் இந்த நாயின் துணை, தனிமையை அதிகப்படுத்தும் என்றே தோன்றிற்று. மேலும் எனக்கு முன்பு முன்னுரிமை எடுத்துக்கொண்டு, இந்த இருட்டில் அது கதவைத் திறக்கப் பிரயாசைப் படுவதையும் அனுமதிக்க முடியவில்லை. ‘ச்சூவ் ‘ என்ற சப்தம் விசையான கல்போல என்னிடமிருந்து எறியப்பட்டு, அது சற்றே பின் வாங்கிய சமயத்தில் , நான் சாதுரியமாகக் கதவைத் திறந்து நுழைந்து மூடியும் விட்டிருந்தேன்.

நுழைந்த உடனேயே சப்போட்டாப் பழமரத்து வெளவால்கள் வாசனை அடித்தது. இதுவும் இந்த ஊர் காட்டின புது விஷயம். வீட்டின் இரண்டு பக்கமும் சப்போட்டாப் பழமரங்களுடன் இந்த வாசனையும் பிரிக்கமுடியாதபடி அடர்ந்து கிடந்தது இந்த ஊரில்தான்.

எனக்குத் தெரிந்தது வேப்பமரமும் முருங்கை மரமுமே தவிர வேறில்லை. வளவு சேர்ந்த வீட்டில் அம்மைக்கட்டுக்குப் பற்றுப்போட கொழுந்து பறிக்கும் போது வேப்பமரத்தில் மட்டும் ஏறியிருக்கிறேன். முருங்கை மரம் நான்கு வீட்டுக்காரர்களாலும் சதா கண்காணிக்கப்படுகிற ஒன்றாகையால் அதில் ஏறி விளையாட வாய்ப்பில்லை. ஓட்டாஞ்சல்லியில் ஒட்டிச் சிப்ளாக்கட்டை தட்டுவதற்காகப் பிசின் எடுக்கக்கூட அனுமதியில்லாத முருங்கைமரம் யாருக்கு வேண்டும் ? அடை அடையாகக் கம்பளிப் பூச்சி அப்பி, ஓலையைப் போட்டுக் கீழே எரிக்கச் சுருண்டு சுருண்டு தீயின் மீதே விழுந்து சடசடவென்று உயிரின் வெடிப்புடன் எல்லாம் பொசுங்கின ஞாபகம் மட்டுமே இருக்கிறது அதுபற்றி.

சப்போட்டா பார்க்க வசீகரமான ஒரு மரமில்லை என்றாலும் அது பிடித்துப் போயிற்று. கனி தருவதால் மட்டும் என்று தோன்றவில்லை. வந்த இரண்டொரு தினத்தில், தூக்கம் வராது படுத்துக் கிடந்த இருட்டில், மற்றவர் அனைவரும் உறங்க, சன்னமான ஒரு படபடப்பு மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருந்தது. அது பழம் தின்னி வெளவால்களுடையது என்று மறுநாள் தெரிந்தது. அந்த வெளவால்களை நான் இதுவரை பார்க்கா விட்டால் கூட அன்றைக்கு இரவில் கேட்ட அந்தச் சன்னமான இறகடிப்புக்கு மாறி மாறிக் கிளைகளில் இடம்தந்த ரகசியமே என்னை இந்த மரத்திடம் சேர்க்கப் போதுமான காரணமாக இருந்தது.

இன்னும் ஒரு அடி, இப்படி சப்போட்டா மரத்தை நினைத்துக் கொண்டே மேலும் வைத்திருந்தால், அந்தப் பறவையைச் சதக்கென்று மிதித்து இருப்பேன்.

உள்ளே நுழைந்ததும் கதவுக்குக் கொண்டி போடுவது, பாதி நடந்ததும் இன்னும் பாதி நடந்தாலே வரப்போகிற கதவின் பூட்டுக்கான குளிர்ந்த துருச்சாவியை இப்போதே எடுத்துக் கொள்வது என்று அனிச்சையாகவே நடந்து பழகியபடி இன்னும் சாவியை எடுத்தபோதுதான் அது தலைக்குப்புறச் சிறகு பறத்திக் கிடந்தது.

திறந்த பூட்டும் சாவியுமாகப் படியிலேயே வைத்துவிட்டு வெளிச்சத்தைப் பொருந்திய நேரத்துக்குள் என்னவெல்லாமோ தோன்றிற்று.

குழந்தைகளை மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்துபோகிற சமீபத்திய இனக்கலவரங்களின் ஞாபகம் வந்தது. வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசை வரிசையாக் வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்த ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்பூழ், இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடல்கண்டு. அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம் அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன சிரிப்புப் போலப் புகைப் படலத்தில் பதிவாகியிருப்பது எல்லாம் கலந்து இந்த ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது.

மரங்களைப் போலவே பறவைகளை அதிகம் அறிந்தவனுமில்லை. ஒரு நகரம் உனக்குப் போதும் என்று காட்டுகிறவைகளை மட்டுமே பார்த்திருக்கிறவன்தானே நானும். பார்த்திருப்பது எல்லாமே தெரிந்தவை ஆகிவிடாது அல்லவா.

மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் பலூன் விற்கிறவன் போல நரிக்குறவர்கள் மூங்கில் தட்டியில் ஒருதடவை நிறையத் தேவாங்குகளையும், ஒரு கம்பிக் கூண்டில் காடை கவுதாரி என்று கூவி விற்றுக் கொண்டிருந்தவை தவிர, காக்கையும், அப்புறம் கோழியும்தான் அறிந்த பறவைகள். சுடலைமாடன் கோவில் தெரு சின்னக் கோபால் ‘புறாக் காட்டுகிறேன் ‘ என்று அவனுடைய சொந்தக்காரர் வீடான சாவடிப் பிள்ளை வீட்டுச் சவுக்கைக்குக் கூப்பிட்டுக் கொண்டுபோய்க் கூட்டம் கூட்டமாகப் புறாப் பார்த்தது ஏன் ஞாபகமிருக்கிறது என்றால்,அன்றைக்குப் பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வராமல், ஊர் சுற்றிவிட்டு வருவதற்காக விளார் விளாராக அடிபட்டதுதான் காரணம். வாய்ப்பாடு ஒப்பிப்பதில் இருந்து புறாப் பார்க்கிற காரியம் நம்மை உருப்படாமல் போகச் செய்யும் என்பது அப்பாவின் தீர்மானம்.

இது என்ன பறவையென்று சத்தியமாகத் தெரியவில்லை. குனிந்து கையில் எடுக்கும்போது முதற்பார்வைக்கு மைனா மாதிரித்தான் இருந்தது. இந்த வீட்டை ஒட்டிய சாலைப் புளியமரத்தில் அடைகிற மைனாக்களில் ஒன்றோ என்றுதான் நினைத்தேன் இதுவரை மைனாக்களைக் கையில் எடுக்கவில்லை என்றாலும் ‘இது மைனா இல்லை ‘ எனும்படியாக மைனாக்களைப் பற்றிய என் அறிவிருந்தது. அந்தப் பறவையும் உறுதி செய்தது அதை.

உடம்பின் அடிப்பாகத்தில் எந்த வெதுவெதுப்புமில்லை. எடுக்கும்போதே கீச்சுகிற அளவுக்குக் கூராக இருந்த நகங்களின் தீவிரக் கூர்மை விரைப்பேறி விட்டிருந்தது, குச்சிபோன்று இருந்த கால்கள், இந்தப் பறவை தரையின் அமர்கையில் தரையை விட்டுப் பறவையை உயர்த்திக் காட்டும் சாத்தியத்துடன் நீண்டிருந்தன. கால்களில் மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு என்று வேற்று நிறம் எதுவுமில்லை. மொத்தப் பறவையுமே சாம்பல் கருப்பின் வெவ்வேறு அடர்த்தியில் வர்ணிக்கப்படும்படியிருந்தது. உயரங்களுடனும் காற்றுடனும் சம்பந்தப்படுத்தியிருந்த தன் ரகசியங்கள் அனைத்தையும் என் முன் விசிறிக் கொள்வது போல, சிறிதுசிறிதாகக் கோர்க்கப்பட்ட இறகுகள், நான் விரித்துப் பார்த்த விரலை எடுத்ததும் அசைந்தசைந்து நுணுக்கமாகச் சுருங்கி நின்றது மறுபடியும். சற்றே செருகின கண்கள். கருத்த சிறிய காட்டுப்பழம் போலத் திரண்டிருந்தது. பறவைகளுக்கும் சாகிற நேரத்தின் துயரம் இருக்கக் கூடும்தான். ஆனால் கருப்பின் திரட்சி அந்தக் கண்களில் அதற்கு முந்தின வினாடியின் சந்தோஷத்தை மிச்சம் வைத்திருந்ததுபோல உணரும் அளவுக்கு அதைக் கையில் ஏந்தியிருந்த நேரத்தில் எனக்குத் தோன்றிவிட்டது.

‘சந்தோஷமாக இருந்த ஒரு உயிர் ‘ என்று நான் அதன் உச்சியைத் தொட, அது கழுத்தைச் சுருக்கிக் கண்களை ஜவ்வாக மூடி ஏற்றுக் கொண்டால் ஆகாதா என்ன ? யோசித்தபடியே வெளியே கிடந்த கம்பிக் கட்டிலில் உட்கார்ந்தேன்.

இந்தப் பிரதேசத்து ஜனங்கள் என்னவோ, சந்தைக்குச் சந்தை இப்படிக் கம்பிக் கட்டில்களைப் புதையல் கிடைத்த மாதிரிச் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு போகிறார்கள். உட்காரக்கூட வசதிப்படாத இதில், ஒரு விரிப்பும் விரிக்காமல், பகலில்கூடத் தூங்குகிற அந்த நண்பர்–அதுதான் நாளைக்கு நடுராத்திரிக்கு வந்து பையைத் தலைக்கு வைத்துப் படுத்திருப்பாரே–இப்போது இருந்தால் என்ன பறவை என்று ஒருவேளை சொல்லக்கூடும்.

அவரிடம்தான் இந்தப் பக்கத்து மனிதரின் தன்மைகளும் குணங்களும் இருந்தன. நல்ல அலுவலகம், கை நிறையச் சம்பளம் எல்லாம் கூட அவரை அவருடைய பிரதேச எளிமையிலிருந்து அப்புறப்படுத்திவிட முடியவில்லை. தன்னுடைய ஜாதிக் கட்டுகளுக்கு அடங்கிய ஒரு கட்டப்பஞ்சாயத்தில் தனக்குக் கட்டிவைத்த பையனை விட்டுவிட்டு, தனக்குப் பிடித்த பையன் ஒருவனுடன் வாழ்வதற்குத் தீர்மானித்த ஒரு சின்னப் பெண்ணின் பதில்களை ஒருநாள் இரவு சொல்லிய, நிகழ்த்திய என்றே சொல்லவேண்டும், விதம் எனக்குப் பிடித்துப் போயிற்று.

அவர் இருந்தால் இந்தப் பறவையின் பெயரைச் சொல்வார். பெயருடன் மட்டும் நிறுத்தாமல் அந்தப் பறவை அதன் வசிப்பிடங்கள், இரை, இரையெடுக்கிற விதம், அதன் முட்டை நிறம், அடைக்காலம், அந்தப் பறவையைத் தாக்குகிற பறவையினம் எது என்று வெவ்வேறு விஷயங்களையும் சொல்லிப் போவார். தன்னுடன் எல்லோரையும் தான் நடக்கிற இடங்களுக்கு நடத்திச் செல்கிறதும், அப்படிக் கிறங்கி மறுபேச்சு இல்லாமல் தன்னுடன் நடந்து வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடப்பதுபோலக் கேட்டு கொண்டிருக்கிற எங்களின் முகங்களை ஒரு தடவை பார்த்துச் சிரித்துக் கொள்வதுமாக அவர் இருக்கவேண்டிய கட்டிலில் நான் இப்படி உட்கார்ந்திருக்கும்படி ஆயிற்று.

உட்கார்ந்திருக்கும்போதே ஈரமான வாடை திரண்டு அப்பியது எதிரே விளிம்பு காட்டுகிற மலைகளில் மேகநிழல் நகர்வதை இங்கு காணமுடிவது போல, பாத்தி பாத்தியாக மழை நகர்ந்து நகர்ந்து வருவதையும் எத்தனையோ தடவை காணமுடிந்துவிட்டது இந்த ஊரை இணைக்கிற ரயில்வே ஸ்டேஷன் பக்கம் பஸ் நிற்கும்போது ஒரு சொட்டு மழை இருக்காது. ஆனால் பஸ்ஸிலிருந்து இறங்கினால் டாக்கடைக்குள் ஓடும்படி பெய்யும். இன்றைக்கு மட்டுமிது புதிதில்லை.

கையிலிருந்த பறவையை அப்படியே போடவும் இல்லை. வீட்டின் நடையிலிருந்து, இடதுபக்க முதல் அறை பிதுங்கி வெளியே நிற்கிற மூலையில் வைத்துவிட்டு வராந்தாவில் நாற்காலியை இழுத்துப் போட்டேன்.

கழற்றிப் போட்ட காலணிகளும் அதைச் சார்ந்த அழுக்கான உறைகளும் செய்தித் தாட்களும் ஊருக்குப் போகிற அவசரத்தில் கழுவாமல் விட்டுப் போயிருக்கிற ரேசர் செட்டுமாக இருக்கிற இந்த முன் தாழ்வாரத்தில் நாற்காலியில் இருக்கிறோம் என்பதிலிருந்து நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவி வெளியில் எறிந்துவிடும் படியாக மழை கனத்துப் பெய்தது. அது பெய்கிற கனத்துக்கு ஏற்பச் சிறுசிறு மாறுதல்களுடன் மழையின் சப்தமும் மாறிக் கொண்டே இருந்தது.

மழையைப் பார்ப்பது போல ஏமாற்றி அழைத்து, மழையைத் தவிர்த்த வேறெங்கேயோ நம்மை அனுப்பி விட்டு மழைமாத்திரம் தனித்துப் பெய்கிற வழக்கமான காரியம்தான் நடந்தது. எந்தச் சூழலிலும் மழை தன்னுடைய தன்னிச்சையைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகவும், பார்வையாளனாக நாம் இருந்து செய்கிற இடையூறுகளைக்கூட மிகச் சுலபமாக அப்புறப்படுத்தி விடுவதாகவும் மட்டுமே தோன்றுகிறது மறுபடியும், தொலைந்து போனதிலிருந்து நம்மை மீட்டுக்கொண்டு வரும்போது மழை அநேகமாகச் சிரித்துக்கொண்டே நின்று விட்டிருப்பதுதான் தெரியும்.

எப்போது சிகரெட்டைப் பற்றவைத்தோம், ஒன்று இரண்டு என இந்தச் சிவப்பு அவாய்ச் சாம்பல் கிண்ணத்தை அடுத்தடுத்து நிரம்ப வைத்தபோது எதை யோசித்திருந்தோம் என்பதெல்லாம் கூட நினைவில்லை.

தடால் என்ற விரியலுடன் திறந்த மரக்கதவோடு ‘ஸார் ‘ என்று ஒரு சப்தமும், சப்தத்துடன் ஒரு சைக்கிளைத் தள்ளியபடி ஒரு உருவமும் உள்ளே வந்தது. பிரம்பு நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிச் சட்டென்று எழுந்திருப்பதற்கு முன்னால் மறுபடியும் ‘ஸார் இல்லையா ‘ என்று கேட்டது. பதிலுக்கு காத்திராமல், மழைத்தாள் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அட்டைப் பெட்டியை சைக்கிளின் பின்பக்கத்திலிருந்து அகற்றி உள்ளே கொண்டு வந்து ‘என்னைப் பெத்த அம்மா ‘ என்ற முனகலுடன் வைக்கும் போதுதான் அந்த மனிதரின் உருவமே சரியாகத் தெரிந்தது.

முழுக்க முழுக்க நனைந்துவிட்டிருந்த அவரின் முகம், தாடி, தோள்வரை தொங்கியமுடி, எல்லாவற்றிலும் சொட்டு சொட்டாக இறங்க ஆரம்பித்தது. பனியனுக்கும் அரைக்கால் சட்டைக்கும் கீழே தொடையும் ஆடுசதையும் அளவற்ற உறுதியுடன் ஆனால் சற்றுச் சூம்பியது போன்ற வடிவத்துடன் நீண்டிருந்தன.

சிரித்துக்கொண்டே, ‘ரெண்டு நூஸ் பேப்பர் எடுத்துக்கிடுதேன் ஐயா ‘ என்று பழகின இடம்போல எட்டி எடுத்துக் கொண்டார். அப்படி எட்டும்போது நான் சற்று ஒதுங்கி நின்று அவருக்கு இயங்க இடமளித்ததற்கு நன்றி சொல்லுவது போல ‘நீங்க இருங்க சாமி ‘ என்று சொல்லிக் கீழே உட்கார்ந்தார். செய்தித் தாட்களை இரண்டிரண்டாக விரித்தார். நீவி விட்டார், அட்டைப் பெட்டியின் காது போன்ற மூடியை இரண்டு பக்கமாக மடக்கிவிட்டு, உள்ளிருப்பதை எடுக்க ஆரம்பித்தார்.

புளித்த வாடையுடன் மெதுமெதுவென்று ரொட்டிக் கருகலுக்கே உரிய, மேற்பக்க நிறத்துடன் அவை இருந்தன.

‘அடிச்ச மழையில எல்லாம் நனைஞ்சு பொதுமிப்போச்சு ‘, ‘மழையின்னா மழையா ‘ ‘ ‘இது இப்ப காயலையோ ரெண்டு நாளில் வம்பாப் போகும் ‘ விளக்கம் போல அவ்வப்போது சொல்லிக்கொண்டு. முதல் வரிசையில் அதிகம் நனைந்து இருந்ததை ஒரு பக்கமாகவும், பெட்டியின் ஆழத்திற் கேற்பக் கூடுதல் குறைவாய் பாதிக்கப்படாது இருப்பதை மிகக் கவனத்துடன் இன்னொரு பக்கமாகவும் வைத்துக் கொண்டே வந்தார். இன்னும் உடம்பு எங்கெங்கே மடங்குகிறதோ அங்கெல்லாம் தண்ணீர் உதிர்ந்துகொண்டே இருந்தது. காற்சட்டையின் ஈரம் அமுக்கப்பட்டுப் பாதத்தைச் சுற்றிப் பெருகியிருந்தது. தலையிலுள்ள ஈரம் தாடி மயிர்க்கற்றைகளில் இறங்கி, அது இறங்கிய இடம் தவிர்த்து வேறெங்கேயோ ஒரு துளியாக முளைத்துத் திரண்டு வடிந்தது. மிகக் கூர்மையாக இருந்த மூக்கு நுனியிலும் தண்ணீர் வழியாமல் இல்லை.

ஒரு பிளாட்டிங் பேப்பரால் ஒற்றுவதுபோல அவர் ரொட்டிகளைப் பட்டும் படாமல் ஒற்றிக் கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத நிலையில் அவர் ரொட்டிகளுடன் மட்டும் கவனம் கொண்டு இருப்பதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

‘மழைக்கு முந்தி ஆஸ்பத்திரியிலே சேர்த்துப்பிடலாம்னுல்லா நினைச்சேன் ‘

அவர் பேசியது அனைத்தும் ஒரு வகையில் அந்த ரொட்டிகளுடன் மட்டும் என்றிருந்தது வேறு சொல்ல முடியாத துன்பம் கொடுத்தது. உள்ளே போய்க் கொடியில் கிடந்த துண்டை உருவி எடுத்து அவர் மேல் போட்டேன். கனமான அந்தத் துண்டு தோளில் விழவும் ‘அக் ‘ என்ற சத்தத்துடன் ஏறிட்டுப்பார்த்தார். ‘மொதல்லே, எழுந்திரிச்சுத் தலையை துவட்டும்யா ‘. ‘அக் ‘ மறுபடியும் லேசாகத் திடுக்கிடுவது போன்ற அந்த சப்தத்துடன், மேலே விழுந்த துண்டைப் பற்றிக் கொண்டே எழுந்தார். லேசாகக் கண் கலங்கினது மாதிரி இருந்தது. நடைப்பக்கம் போய் ‘அய்யா, துவட்டுகிறதுக்குப் பழைய துணி எதுவும் இல்லையா ‘ என்றார். ‘சும்மா துவட்டும் ‘ என்ற குரலுக்குக் கீழ்ப்படிவதுபோல மடமடவென்று துவட்டிக் கொண்டார்.

‘தீப்பெட்டி இருக்காய்யா ? ‘ என்று என்னிடம் வாங்கிப் பீடி பற்றவைத்துக் கொண்டே, குத்தவைத்துக் கீழே உட்காரப் போனவர்தான், வெளியே பார்த்துக் கொண்டே— ‘நாயி உள்ள வந்து எதையோ கவ்விக்கிட்டுப் போதே ‘ என்று சொன்னார்.

எனக்குப் புரிந்துவிட்டது.

‘ரொட்டியை இல்லை ‘ என்று மட்டுமே அவரிடம் சொல்ல முடிந்தது.

Series Navigation