பெண்ணுரிமை

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

கௌரி கிருபானந்தன்



“ரேவதி மேடம்! உங்களை மேனேஜரம்மா உள்ளே வரச் சொன்னாங்க.”
அடெண்டர் வந்து சொன்னதும் ரேவதி கேபின் பக்கம் பார்த்தாள். மேனேஜர் சுநீதா கண்ணாடித் தடுப்பு வழியாக இந்தப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தாள். எதற்காக அழைத்திருப்பாள் என்று புரிந்ததும் ரேவதி வாடிப் போன முகத்துடன் கேபின் பக்கம் நடந்தாள்.
“ரேவதி! தினமும் இப்படி லேட்டாக வந்தால் எப்படி? இப்போ டைம் என்ன தெரியுமா? பதினொன்று. என்னிக்காவது ஒரு நாள் என்றால் சரி போகட்டும் என்று நினைக்கலாம். ஆனால் தொடர்ந்து மூன்று நாட்களாய் ஒரு மணி நேரம், முக்கால் மணி நேரம் என்று தாமதமாக வர்றீங்க. ஏதாவது சொன்னால் மேனேஜர் அதிகாரம் செய்கிறாள் என்நு சொல்வீங்க. நீங்க இப்படிச் செய்தால் ஆபீஸில் டிசிப்ளினை எப்படி மெயின்டெயின் செய்ய முடியும்? நீங்க சீனியராக இருந்து கொண்டு இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்துகொண்டால் எப்படி? உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கணுமோ நீங்களே சொல்லுங்கள்.” சுநீதாவின் குரல் கடினமாக ஒலித்தது.
ரேவதி அவமானத்துடன் தலை குனிந்துகொண்டாள். “சாரி மேடம்! என் மகளுக்கு மூன்று நாட்களாய் ஜுரம் விடவே இல்லை. காப்பகத்தில் விட்டுவிட்டு வரும் போது கழுத்தைக் கட்டிக்கொண்டு ஒரே அழுகை. அவளைச் சமாதானப் படுத்தி தூங்கச் செய்துவிட்டு வருவதற்குள் பஸ் போய் விட்டது. அப்படியும் ஆட்டோ பிடித்து வந்தேன்.” விளக்கம் தந்தாள்.
“உங்க பிரச்னை உங்ளுக்கு இருக்கும். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைக்கு வரும் போது நேரத்தோடு வர வேண்டாமா? வேண்டுமானால் லீவ் எடுத்துக் கொள்ளுங்கள்.”
“காஷ¤வல் லீவ் தீர்ந்து போய்விட்டது.” முணுமுணுப்பது போல் சொன்னாள் ரேவதி.
“எர்ன்ட் லீவ் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதானே தவிர நீங்க இப்படிச் செய்தால் மற்றவர்களை நான் எப்படி கட்டுப்பாட்டில் வைக்க முடியும்? என்னுடைய நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்க.”
ரேவதி இயலாமையுடன் தலை அசைத்துவிட்டு திரும்பினாள்.
“அந்த சிட்·பண்ட் செக்குகள் இந்த மாதம் இன்னும் சேமிப்புக் கணக்கில் வைக்கப் படவில்லையே என்று கஸ்டமர்கள் கேட்கிறார்கள். அந்த விஷயம் என்ன ஆச்சு?” பின்னாலிருந்து சுநீதாவின் குரல் கேட்டது.
“அவர்கள் அனுப்பிய செக்குகள் வந்து சேரவில்லை. புது செக்குகளை அனுப்பச் சொல்லி எழுதியிருக்கிறோம்.”
“மறுபடியும் ரிமைண்டர் அனுப்புங்க. ஏற்கனவே கஸ்டமர்கள் போனில் விசாரிக்கச் தொடங்கி விட்டார்கள். ” கம்பீரமாக மொழிந்துவிட்டு, கையில் இருந்த ·பைலை பார்க்கச் தொடங்கினாள் சுநீதா.
“மேனேஜர் சுநீதா என்ன சொல்கிறாள்?”
வாடிப் போன முகத்துடன் வந்து சீட்டில் அமர்ந்து கொண்ட ரேவதியைப் பார்த்து இரக்கத்துடன் கேட்டாள் பக்கத்து சீட்டில் இருக்கும் பத்மா.
“புதுசா என்ன இருக்கு? தாமதமாக வந்ததற்கு டோஸ் விட்டாள். அவ்வளவுதான்.” வறண்டப் புன்னகையை உதிர்த்தாள் ரேவதி. ” என்ன செய்யட்டும் பத்மா? கைக்குழந்தைக்கு ஜுரம் விடவே இல்லை. மூச்சு விடாமல் அழுது கொண்டே இருக்கிறாள். கொஞ்சம் விவரம் தெரிகிறது இல்லையா? காப்பகத்திற்கு போனதும் கழுத்தைக் கட்டிக் கொண்டு இறங்கவே இல்லை. லீவ் போடலாம் என்றால் லீவும் இல்லை.” கம்மிவிட்ட குரலில் சொன்னாள். அவள் விழிக் ஈரமாயின. ஜுரத்துடன் இருக்கும் பத்து மாதம் நிரம்பிய மகளை, மூச்சு விடாமல் அழுது கொண்டிருந்தவளை இப்படி நிர்தாட்சிண்யமாக விட்டு விட்டு வந்ததில் அவளுடைய தாய் உள்ளம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. மகளை அந்த நிலைமையில் விட்டு விட்டு வந்த வேதனை ஒரு பக்கம் என்றால் தன்னை விட ஐந்து வருடங்கள் ஜுனியர் ஆக இருப்பவள் மேனேஜர் இருக்கையில் அமர்ந்திருக்க, அவளுக்கு முன்னால் தான் குற்றவாளியாய் தலை குனிந்து கொண்டு விளக்கம் தர வேண்டிவந்தது மேலும் வேதனையைத் தந்தது.
“நம் பிரச்னைகள் அவளுக்கு எப்படி புரியும்? அம்மா, அப்பாவின் பாதுகாப்பில் வேளைக்கு சாப்பிட்டுக் கொண்டு, மடிப்பு கலையாத புடவையில் மிடுக்காக வந்து மேனேஜர் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு அதிகாரம் செய்கிறாள். கல்யாணம் ஆகி குழந்தை குடித்தனம் என்று இருந்தால் நம்முடைய கஷ்டங்கள் புரிந்திருக்கும்.” பத்மாவின் குரலில் கோபம் வெளிப்பட்டது.
“அனாவசியமாக அவளை குறை சொல்லுவானேன்? வேலைக்கு வரும்போது நேரத்திற்கு வரவேண்டும் என்று யாராக இருந்தாலும் சொல்லத்தான் சொல்லுவார்கள். நம் பிரச்னைகள் எப்போதும் இருப்பவைதானே. எல்லாம் என் தலையெழுத்து. என் கண் முன்னால் வேலையில் சேர்ந்த பெண் மேனேஜராகிவிட்டாள். அவள் முன்னால் தலை குனிந்து நிற்க வேண்டி வந்தது எவ்வளவு வேதனையாக இருக்கு தெரியுமா? கணவன் அடித்ததற்காக இல்லை, ஓர்படி சிரித்ததற்கு என்பது போல் இருக்கு என் நிலைமை. இப்படி வேலைக்கு வந்து நாம் அடைந்த சுகம்தான் என்ன? கைக்குழந்தையை, ஜுரத்துடன் இருப்பவளை தயவு தாட்சிண்யம் இல்லாமல் அம்போ என்று விட்டு விட்டு….” மேற்கொண்டு பேச முடியாமல் ரேவதிக்கு தொண்டை அடைத்துக் கொண்டு விட்டது. கீழ் உதட்டை பற்களால் அழுத்திக்கொண்டு துக்கத்தை கட்டுப்படுத்தினாள். லெட்ஜரை எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
“என்னவோ போல் இருக்கிறாயே? உடல்நலம் சரியாக இல்லையா?”
மாலையில் வந்தது முதல் மெளனமாக வாடிப் போன முகத்துடன் இருந்த ரேவதியைப் பார்த்துவிட்டு சிவராமன் கேட்டான்.
“உடம்புக்கென்ன கேடு வந்தது?” ஆபீசில் நடந்த நிகழ்ச்சியின் பாதிப்பு ரேவதியின் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
“என்ன? சிடுசிடு என்கிறாயே? என்னதான் நடந்தது?”
“எதுதான் நடக்கவில்லை? எனக்குக் கீழே இருப்பவர்கள் பிரமோஷன் வாங்கிக்கொண்டு எனக்கே மேலதிகாரியாக வந்துவிட்டார்கள். அவர்கள் முன்னால் தலைகுனிந்து விளக்கம் தரவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டேன். எல்லாம் உங்களால்தான்.” கோபமாகச் சொன்னாள்.
“நல்லாயிருக்கு. நடுவில் என் மீது பாய்வானேன்? உங்க ஆபீஸில் ஏதோ நடந்தால் அதற்கு நான்தான் கிடைத்தேனா?” சிவராமனும் எரிந்து விழுந்தான்.
“உங்களால்தான் இரண்டுமுறை பிரமோஷனை கைநழுவவிட்டேன். குழந்தைகளுடன் தனியாக உன்னால் இருக்கமுடியாது, இரண்டு இடத்தில் குடித்தனம் என்றால் செலவுகளை சமாளிப்பது கஷ்டம் என்று பயமுறுத்தி பதவி உயர்வை மறுக்கும் வரையில் நச்சரித்தது மறந்து விட்டீர்களா?” ரோஷத்துடன் கேட்டாள்.
“புதுசா வேறு ஊருக்குப் போனால் உனக்கு கஷ்டமாக இருக்குமே, தனியாக நீ அவஸ்தைப்பட வேண்டியிருக்குமே என்று அப்படிச் சொன்னேன். அதுவும் ஒரு குற்றமா?” சிவராமனும் குரலை உயர்த்தினான். “இப்பொழுதும் ஒன்றும் மிஞ்சிவிடவில்லை. அடுத்த தடவை பிரமோஷன் கிடைத்தால் தாராளமாக போய்க் கொள். போனால்தானே தெரியும், தனியாக இருப்பதில் இருக்கும் கஷ்டநஷ்டங்கள். எல்லாம் உங்களால்தானே என்று சும்மா சும்மா என்னை சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. மகாராணியாக போய்க் கொள்.” குத்தலாக சொன்னான்.
ரேவதி பார்வையாலேயே விழுங்கிவிடுவது போல் பார்த்தாள். “போகிறேன். கட்டாயம் போகிறேன். இந்த முறை பிரமோஷன் வாய்ப்பை செத்தாலும் நழுவவிடமாட்டடேன்.” அதே வேகத்தில் சொல்லிவிட்டு தட்டுகளை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.
ஆறு மாதங்கள் கழித்து டிரான்ஸ்·பர் ஆர்டர் கைக்கு வந்த போது தலை மீது இடிவிழுந்தாற்போல் கவலையுடன் அப்படியே உட்கார்ந்துவிட்டாள் ரேவதி. சேலத்திற்கு மேனேஜராக பிரமோஷனில் அனுப்புவதாக ஆர்டர் வந்திருந்தது. இந்த முறை பதவி உயர்வை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மாற்றலை தவிர்க்க முடியாது என்று ஹெட் ஆபீஸிலிருந்து நோட்டீஸ் வந்துவிட்டது. எங்கே சென்னை? எங்கே சேலம்? சுற்று வட்டாரத்தில் எங்கேயாவது போட்டிருந்தால் சனி, ஞாயிறு லீவில் தானோ, சிவராமனோ வந்து போகும் வாய்ப்பு இருந்திருக்கும். முன் கூட்டியே எதிர்பார்த்த விஷயம்தான் என்றாலும், இந்த முறை கட்டாயம் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும் ஆர்டர் கைக்கு வந்த போது ரேவதிக்கு கவலையாகத்தான் இருந்தது.
“என்ன செய்வது? போகாமல் தவிர்க்க முடியாது இல்லையா. பிரமோஷன் வேண்டும் என்றால் இரண்டு மூன்று வருடங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். எல்லோருக்கும் சென்னையில் போஸ்டிங் வேண்டும் என்றால் எப்படி முடியும்?” பத்மா ஆறுதல் சொன்னாள்.
“நீ சொல்வது சரிதான். இந்த முறை பிரமோஷன் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றுதான் முடிவுசெய்திருந்தேன். ஆனால் ஆர்டர் வந்த பிறகு எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பயமாக இருக்கு.” ரேவதி சொன்னாள்.
பையனின் படிப்பு, கைக்குழந்தை, இரண்டு குடித்தனம், போக்குவரத்து செலவு, மாதத்திற்கு ஒரு தடவைக்கு மேல் வர முடியாத அளவுக்கு ரொம்ப தொலைவு, மேலும் சிவராமன் என்ன சொல்வானோ? மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலையாய் கொந்தளிக்க ரேவதி அன்று முழுவதும் யசித்துக் கொண்டே இருந்தாள்.
“போகணும் போகணும் என்று ரொம்ப நாளாக குதித்துக்கொண்டிருந்தாயே. போ… போ. தனியாக இருக்கணும் என்ற ஆசையும் தீர்ந்துவிடும். தாராளமாக போய்க்கொள்.” ரேவதி கொடுத்த மாற்றல் உத்தரவை பார்த்துவிட்டு ஏளனமாகச் சொன்னான் சிவராமன்.
“குத்திக் காட்டி பேசுவதற்கு இது நேரம் இல்லை. பத்து நட்களில் நான் போய் வேலையில் சேரவேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யணும்.”
“என்ன ஏற்பாடுகளை செய்யணும்? நீயும், குழந்தைகளும் கிளம்பிப் போங்க. நான் எப்படியோ என் பாட்டை பார்த்துக் கொள்கிறேன்.” சுருக்கமாகச் சொன்னான்.
“நான் ராஜாவை அழைத்துப் போகப் போவதில்லை. அங்கே நல்ல ஸ்கூல் எதுவும் இருக்காது. ரெகமெண்டேஷன் இருந்தும் அவனை நல்ல ஸ்கூலில் சேர்க்க எவ்வளவு பாடுபட்டோம்? பத்தாயிரம் டொனேஷன் வேறு கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் மறுபடியும் சீட் வேண்டும் என்றால் கிடைக்காது. அதனால் அவனை இங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். கைக்குழந்தையை மட்டும் அழைத்துப் போகிறேன். எப்படியோ மேனேஜ் செய்துதான் ஆகணும். அந்த ஊரில் குழந்தைகளுக்காக காப்பகம் இருக்குமோ இருக்காதோ. வீட்டோடு இருக்கும் வேலைக்காரியாக பார்த்துக் கொள்ளணும். முன்னாடியே போய் ஜாயின் செய்துவிட்டு ஊர் எப்படி என்று பார்த்துவிட்டு வருகிறேன். நீங்க பத்து நாட்கள் லீவு போட்டால் தேவையான பாத்திரம் பண்டம் எல்லாம் எடுத்துக்கொண்டு போக சௌகரியமாக இருக்கும். யாருக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தடவை மாற்றலை தவிர்க்க முடியாது. இரண்டு மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும்.” காலையிலிருந்து யோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டதால் ரேவதியின் குரல் ஸ்திரமாக ஒலித்தது.
“என்ன? ராஜாவை நான் பார்த்துக் கொள்ளணுமா? என்னால் எப்படி முடியும்?” வியப்புடன் பார்த்தான். “ஏதோ நான் ஒருத்தன் மட்டும் என்றால் எந்த ஹோட்டலிலேயோ சாப்பிட்டுக் கொள்வேன். அவனையும் வைத்துக் கொண்டால் எப்படி சமாளிக்க முடியும்? என்னால் முடியாது. குழந்தைகளை நீ அழைத்துக் கொண்டு போய்விடு. என் ஏற்பாடுகளை நான் செய்து கொள்கிறேன்.”
“முடியாமல் போவதற்கு இதில் என்ன இருக்கு? அவன் ஒன்றும் சின்னக் குழந்தை இல்லையே? ஐந்து வயது நிரம்பிவிட்டது. இந்த பத்து நாட்களில் கொஞ்சம் குக்கர் வைக்க கற்றுக்கொள்ளுங்கள். வேலைக்காரிக்கு நூறு ரூபாய் அதிகமாக கொடுப்பதாக சொன்னால் காய்கறி நறுக்கித் தந்து சமையல் மேடையை சுத்தம் செய்து தருவாள். இரண்டு பேருக்கும் மதியத்திற்கு வேண்டிய சப்பாத்திகளையும் செய்து தரச் சொல்கிறேன். இல்லையா பிரட்டை எடுத்துக்கொண்டு போங்க. குக்கரில் சாதம் பருப்பு வைத்துவிட்டு, எதாவது கறியோ, கூட்டோ செய்துவிடுங்கள். பருப்புப் பொடி, புளிக்காய்ச்சல் செய்து ·பிரிஜ்ஜில் வைத்துவிடுகிறேன். நீங்க வந்த போதோ, நான் இங்கே வரும் போதோ செய்து வைத்தால் சௌகரியமாக இருக்கும். சனி, ஞாயிறுகளில் எங்க அண்ணா வீட்டுக்கோ, உங்க அக்கா வீட்டுக்கோ போய் வாங்க. சேர்ந்தாற்போல் லீவ் வந்தால் நான் வந்துவிடுகிறேன். எப்படியாவது மாததிற்கு ஒரு முறை நாம் சந்தித்துக்கொள்வோம்.” காலை முதல் யோசித்து வைத்திருந்த திட்டத்தை விளக்கினாள்.
“இதெல்லாம் என்னால் முடியாது. காலையில் ராஜாவை எழுப்பி ஸ்கூலுக்கு தயார் செய்து சமையலையும் கவனித்துக்கொண்டு …. யாரால் செய்ய முடியும்? அவனையும் கூட அழைத்து போய் எந்த ஸ்கூலில் இடம் கிடைக்கிறதோ அங்கே சேர்த்துவிடு” எரிச்சலுடன் சொன்னான்.
“இதோ பாருங்க. ராஜா எனக்கு மட்டுமே மகன் இல்லை. உங்களுக்கும் மகன்தான். அதை மறந்துவிடாதீங்க.” கோபமாக சொன்னாள்.
“குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பேண்களுக்கு மட்டும்தான் என்பதை நீதான் மறந்துவிட்டாய்.”
“பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்காத காலத்தில் சொல்லப்பட்ட வார்த்தை அது. குழந்தைகளின் வளர்ப்பு. சமையல் இவை எல்லாம் பெண்களின் பொறுப்பு என்று நினைத்து சொல்லப்பட்ட கருத்து அது. அந்த நாட்களில் சம்பாதிப்பது ஆண்களுடைய பொறுப்பாக இருந்தது. இந்தக் காலத்து பெண்கள் வேலைக்குப் போய் ஆண்களின் பொறுப்பில் பாதியை பகிர்ந்து கொள்ளும்போது பெண்களின் பொறுப்பில் பாதியை ஆண்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்.” தீவிரமான குரலில் சொன்னாள்.
சிவராமனின் முகம் கோபத்தில் சிவந்தது. பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான்.
“இதோ பாருங்க. ராஜாவுக்கு நல்ல ஸ்கூலில் இடம் சும்மா சும்மா நாம் நினைக்கும் போதெல்லாம் கிடைத்துவிடாது. அவனுடைய எதிர்காலத்தைப் பற்றியும் நாம் யோசித்துப் பார்க்கணும். அதோடு தனியாக இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்வது எனக்கும் சிரமம்தான். அவனை விட்டுவிட்டுப் போவது எனக்கு மட்டும் விருப்பமா என்ன? ஆனால் அவனுடைய எதிர்காலத்திற்காக தியாகம் செய்துதான் ஆகணும். எனக்கு மறுபடியும் சென்னைக்கு மாற்றல் கிடைக்க இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம். முடியாது என்று நீங்கள் சொன்னால் வேலையை விட்டுவிட்டு நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்து கொள்கிறேன். வீட்டின் நிர்வாகப் பொறுப்பு உங்களுடையதுதான்.” கச்சிதமான குரலில் சொன்னாள்.
“வேலையை விட்டு விடுவேன் என்று சும்மா மிரட்டத் தேவையில்லை. உன் சௌகரியத்திற்காக, உன்னுடைய செலவுகளுக்காக வேலைக்குப் போகிறாயே தவிர எனக்காக இல்லை. பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்றுதானே பெண்கள் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.” கிண்டல் செய்வது போல் சொன்னான் சிவராமன்.
“மிரட்டுவதாக நினைப்பானேன்? நீங்க ஊம் என்று சொன்னால் இந்த நிமிடமே வேலையை விட்டு விடுகிறேன். மனைவி வேலைக்குப் போகணும். ஆனால் வெளி ஊர்களுக்கு மாற்றல் இருக்கக் கூடாது. பிரமோஷன் கிடைத்தாலும் உள்ளுரில் போஸ்டிங் என்றால்தான் ஏற்றுக்கொள்ளணும். இத்தனை நிபந்தனைகளுடன் வேலைக்குப் போவது சாத்தியம் இல்லை. உங்களுடைய வசதிகளுக்காக, வீட்டில் இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக எங்களுடைய பிரமோஷன் வாய்ப்புகளை விட்டுக் கொடுத்து, எங்க ஜுனியர்ஸ் எங்கள் கண் முன்னாலேயே ஆபீஸர் சீட்டில் உட்கார்ந்துகொண்டால் அவர்கள் முன்னால் தலை குனிந்து நிற்கணும். உங்களுக்கு பிரமோஷன் கிடைத்து திருச்சிக்கு மாற்றியபோது எனக்குக் கஷ்டமாக இருக்குமே என்று போகாமல் இருந்தீங்களா என்ன? குழந்தையை வைத்துக்கொண்டு மூன்று வருடங்கள் நான் தனியாக இருக்கவில்லையா? உங்களுக்கெல்லாம் மனைவி என்பவள் வேலைக்கு போய் சம்பாதிக்கணும். அவள் உங்களுக்கு சமமாக சம்பாதித்தாலும் அது உங்களுக்கு லட்சியமில்லை. ஆண்கள் செய்வதுதான் வேலை. பெண்கள் வேலைக்குப் போவது வெறுமே பொழுது போக்குவதற்கு. வெட்டி வம்பு அளப்பதற்கு. உங்களைவிட பெரிய வேலைகளில் நாங்க இருக்கக்கூடாது. வெளியூர்களுகுப் போகக்கூடாது. உங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக எங்களுடைய பிரமோஷன் வாய்ப்புகளை விட்டுக்கொடுத்து, வீட்டு வேலைகளை செய்துகொண்டு, குழந்தைகளை பராமரித்துக்கொண்டு காலம் தள்ளணும். ஏதாவது சொன்னால் வீட்டுப் பொறுப்பு பெண்களுடையதுதானே என்பீங்க. குழந்தைகளுக்கு உடம்பு சரியாக இல்லாமல் போனாலோ, உறவினர்கள் வந்துவிட்டாலோ எது எப்படி போனாலும் நாங்கள்தான் லீவ் போடணும். ஆபீசர் ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்ளணும். நாங்களும் உங்களைப் போல் பொறுப்பான வேலைகளில்தான் இருக்கிறோம். நாங்க சம்பாதிக்கும் பணத்திற்கும் மதிப்பு இருக்கு. வேலைக்கு போவதில் இருக்கும் பெருமையை, அதில் முன்னேற்றம் கிடைக்கும்போது ஏற்படும் திருப்தியை எங்களையும் உணரவிடுங்கள்.” ஆவேசமாக சொல்லிக்கொண்டே போனாள்.
சிவராமன் வாயடைத்துப் போனவனாய் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் போய் ட்யூட்டீயில் ஜாயின் செய்யப் போகிறேன். ராஜாவை எப்படி மேனேஜ் செய்வீங்களோ, எப்படி பார்த்துக்கொள்வீர்களோ அது உங்களுடைய பிரச்னை.” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் சொல்லிவிட்டு ரேவதி உள்ளே போய்விட்டாள்.

இந்த தண்டனைபோதும் சிறுகதைத் தொகுப்பு [மணிமேகலைப் பிரசுரம்]
தெலுங்கு மூலம் D.காமேஸ்வரி

மின் அஞ்சல் tkgowri@gmail.com

Series Navigation