பெங்களூரில் வள்ளுவர் சிலை

This entry is part [part not set] of 7 in the series 20000130_Issue

கோபால் ராஜாராம்


பெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப் பட வேண்டும் என்று அங்குள்ள தமிழ்ச் சங்கம் முயற்சி செய்து கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு கர்நாடக இயக்கங்கள் சில தெரிவித்துள்ளன. அவர்கள், இதனைத் தமிழர்கள் தம் மேலாண்மையை நிரூபிக்கிறவகையில் எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று தான் அவர்கள் கருதுகிறார்கள். வள்ளுவரை நேசிக்கிறவன் என்ற முறையிலும், பெங்களூரை நேசிக்கிறவன் என்கிற முறையிலும், கர்நாடக மக்களையும் கலாசாரத்தையும் நேசிக்கிறவன் என்கிற முறையிலும், இந்த விவகாரமே எனக்கு அருவருப்பை அளிக்கிறது. பெங்களூர் அழகிய ஊர். தமிழ் நாடு போல மூலைக்கு மூலை அங்கு சிலைகள் கிடையாது.

சிலைகள் எடுப்பதின் நோக்கங்களையே சிதைப்பது போல தமிழ் நாட்டில் நடந்த விவகாரங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தவன். எம்.ஜி.ஆர் இறந்த அன்று கருணாநிதியின் சிலை உடைக்கப் பட்டது. அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப் பட்டது. சேலத்தில் காந்தி சிலை நக்ஸல்பாரி இயக்க காலத்தில் உடைக்கப் பட்டது. தம் எதிர்ப்பைக் காட்ட இந்த வழிகளைப் பின்பற்றுவது நம் நவீன தமிழ்ப் பண்பாட்டின் மரபாகி விட்டது. இந்தத் தமிழ் ‘மரபை ‘ நாம் கர்நாடகத்திலும் ஸ்தாபிக்க வேண்டும் என்று தமிழினத் தலைவர்கள் விரும்புகிறார்கள் போலிருக்கிறது.

கர்நாடக இயக்கங்களின் இந்த எதிர்ப்பு, , வள்ளுவர் பற்றியதோ, அவரின் குறள் பற்றியதோ அல்ல. பெரும்பாலான தமிழ் மக்களைக் காட்டிலும், கர்நாடக மக்கள் பரந்த நோக்கு உடையவர்கள். ஆமாம், காவேரிப் பிரசினை தீர்க்கப் படாமல் உள்ளது என்பது உண்மை தான். ஆனால் இந்தப் பிரசினையைத் தவிர வேறு பிரசினைகள் இல்லை. பெங்களூர் பள்ளிகளில் தமிழும் சொல்லித் தரப்படுகிறது.

வள்ளுவருக்குச் சிலை வைப்பதால் சில தமிழ்த் தலைவர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் என்பதைத் தவிர வேறு என்ன பயன் இருக்கப் போகிறது ? வள்ளுவர் சிறந்த இலக்கிய கர்த்தா தான். வாழும் வழியைப் பின்பற்றக் கூடிய வகையில் கற்பித்தவர் தான். ஆனால், மொழிபெயர்ப்பில் திருக்குறளின் முழுமையான வீரியம் வெளிப்படும் என்று சொல்வதிற்கில்லை. அவர் கருத்துகள் பலவும் கூட , மற்ற சிறப்பான மனிதர்களின் கருத்துகளுடன் இயைந்தவை தான். மற்ற செவ்வியல் இலக்கியங்களுடன் சேர்ந்து கற்பிப்பதற்குத் தகுதியான நூல் தான் என்றாலும், சிலை வைப்பதின் மூலம் நாம் எதை நிரூபிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

இந்தச் சிலை மோகம் தமிழர்களின், தமிழர் தலைவர்களின் உள்ளார்ந்த மனவியல் சார்புகளைக் குறியீட்டளவிலும் விளக்குவதாய்த் தோன்றுகிறது. ஒன்று : 75 வருட சுயமரியாதை இயக்கத்திற்குப் பிறகும் கூட நம் வழிபாட்டு மனப்பான்மை நம்மை விட்டு அகன்று விடவில்லை. இரண்டு : நாம் பழமையைப் பூசிக்கிறவர்கள். மூன்று: நாம் சாரத்தை விட்டுச் சக்கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள். வள்ளுவரின் வாழ்க்கை நெறி நம் அன்றாட வாழ்வின் அங்கமாக ஆவது விட்டு, அவரைச் சிலை வடிவில் வைக்கத் தான் பிரியப் படுகிறோம். நான்கு : நம் பழம்பெருமையும் கூட எங்கள் தாத்தாவுக்கு யானை இருந்தது என்கிற போக்கில் துருத்திக் கொண்டு நிற்கிற ஒரு நவீன வாழ்க்கையுடன் கலாசாரத்துடன் பொருந்தாத விஷயம்.

இந்த எதிர்ப்பு சில வருடங்களுக்கு முன்பு பாண்டிச் சேரியில் நடந்த ஒரு எதிர்ப்பை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது. அங்கு திறக்கப் படவிருந்த பல்கலைக் கழகத்திற்கு அரவிந்தர் பெயர் இட வேண்டுமென்று கோரிக்கை எழுந்த போது அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இப்படிப்பட்ட போராட்டங்களில் வழக்கமாகிவிட்ட பஸ் எரிப்பு, கடை உடைப்பு எல்லாம் நடந்ததாக ஞாபகம். அரவிந்தர் மீது பாண்டிச்சேரி மக்களுக்கு என்ன கோபம் இருக்க முடியும் ? ஆரோவில் பற்றிய பாண்டிச் சேரி மக்களின் பார்வையும், அரவிந்தர் ஆசிரமம் மக்களுடன் தொடர்பில்லாத, மேட்டுக்குடி மக்களினது என்கிற பார்வையும் இணைந்து இந்த எதிர்ப்பாக உருவாயிற்று. இத்தனைக்கும் பலகலைக் கழகத்திற்கும், அரவிந்தர் அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இருந்தும் இந்த எதிர்ப்புக் காட்டப் பட்டதென்றால், அது அரவிந்தரைக் குறியீடாய்க் கொண்டு இயங்கி வரும் அமைப்புகளின் மீதான எஎதிர்ப்புணர்வு தான். உடனே வங்காள மக்களின் தலைவர்கள் என்று பிரகடனம் செய்து கொண்டு யாரும் வங்காளத்திலிருந்து வந்து மறியல் ஏதும் செய்யவில்லை. ஆனால், நம் தமிழ்த் தலைவர்கள் மறியல் செய்ய பெங்களூருக்குக் கிளம்பி விட்டார்கள்.

திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டாலும், திராவிட இயக்கம், மற்ற திராவிட மக்களுடன் எந்த உணர்வு பூர்வமான தொடர்பையும் ஸ்தாபிக்கவே இல்லை. எம் ஜி ஆரை மலையாளி என்றும், ஜெயலலிதாவைக் கன்னடத்துக்காரி என்றும் மேடையில் விளாசிய திராவிட இயக்கத்தின் பேச்சாள மணிகளை நாம் அறிவோம். தெலுங்கர்களை விரட்ட வேண்டும் என்று கூட சில தனித் தமிழ்நாட்டுக் கோமாளிகள் குரல் கொடுக்கிறார்கள்.

உண்மையில் திராவிட இயக்க உணர்வோ அல்லது, பரந்துபட்ட கலாசார உணர்வோ நமக்கு இருந்திருந்தால் நாம், வள்ளுவர் சிலையை பெங்களூரில் நிறுவதற்கு முன்னர், நாம் சென்னையில் பசவண்ணர் சிலையை நிறுவியிருக்க மாட்டோமா ?

‘திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்ய வேண்டும் ‘ என்பதின் பொருள் ‘இது தான் எங்களின் திறமான புலமை ‘ என்று மற்றவர்கள் மீது திணிப்பதல்ல.

Thinnai 2000 January 30

திண்ணை

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்