பூவேந்திரன் ஹாங்காங்கில் நிகழ்த்திய 28 மணி நேர யோக சாதனை

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

சித்ரா சிவகுமார்



2009, ஜூன் 14 ஆம் தேதி, ஹாங்காங்கில் வாழ்ந்த பல தமிழர்களுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்றைய தினம் யோகராஜ் என்று யோக பயிற்சி செய்பவர்களால் அன்பாக அழைக்கப்படும் திரு. சி. பூவேந்திரன் அவர்கள் உலக சாதனை செய்ததை கண்டு மகிழ்ச்சியால் திக்கு முக்காடிப் போனவர்கள் பலர். அவர் ஆயிரத்து நூறுக்கும் மேலான ஆசனங்களை தொடர்ந்து இருபத்தி எட்டு மணி நேரங்கள் செய்து உலகச் சாதனையை நிகழ்த்தினார்.
கின்னஸ் உலக பதிவு நிறுவனத்தைச் சேர்ந்த ஜென்னி கரம்பொய்கி சாதனையைக் கண்கூடாகக் கண்டு, உடனே அதற்கான சான்றிதழையும் அவரிடம் கொடுத்தார். அவர் எண்ணிலடங்கா ஆசனங்கங்களைச் கண்டு மலைத்துப் போனார். இந்த நிகழ்ச்சி ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகத்தாரால் நடத்தப்பட்டது. அதன் துணைத் தலைவர் திரு. எஸ். வெங்கடராமன் மற்றும் கழக உறுப்பினர்கள் பலரும் அந்த நிகழ்ச்சி முழு நேரமும் உடன் இருந்து பூவேந்திரனுக்கு ஆதரவும் உற்சாகமும் கொடுத்தனர். நிகழ்வின் போது, பெய்ஜிங் இந்திய சுற்றுலா வாரியத்தின் இயக்குநர் திரு. சோயிப் சமது வந்திருந்து சாதனையைப் பாராட்டினார். சாதனை செய்ததைக் கண்ட பூவேந்திரனின் மனைவி அகிகோ ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார். அவரது யோகத் திறனைக் கண்டு பிரமித்து, அவரது சாதனைகளுக்கு துணை கொடுக்க வேண்டுமென்றே இந்தச் ஜப்பானியப் பெண் அவரைக் கைப்பிடித்ததாகச் சொன்னார்.
இவர் முகமது செய்க் ஹபீஸ் சென்னையில் 2008 மார்ச் மாதம் செய்த இருபத்தி நான்கு மணி நேர தொடர் யோக சாதனையை முறியடித்து புதிய சாதனையைச் செய்தார்.
இருபத்தி எட்டு மணி நேரமும் விடியோ பதிவு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்காண ஆசனங்கள் புகைப்படங்களில் பதிவு செய்யப்பட்டன. இதற்கு உதவிய திரு. சுவாமிநாதனின் திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஹாங்காங்கில் யோகா மிகவும் பிரபலமான பயிற்சிகளில் ஒன்றாகிவிட்டது. இதைப் பயிற்றுவிக்கும் ஆசான்கள் இந்த நிகழ்ச்சிக்கு கண் சாட்சியாளராக இருந்தனர். மருத்துவர்கள் ஜவஹர் அலி, அன்கூர், சுதாமன், விஜயலட்சுமி மருத்துவ உதவியாளர்களாக இருந்து தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்தனர். திரு. வேல்கண்ணன் அவர்கள் அனைத்து நிகழ்வுகளையும் கின்னஸ் வரையறுத்த முறைப்படி பதிவு செய்து கொடுத்தார். பூவேந்திரனின் சீன யோகப் பயிற்சி மாணவர்கள் பலரும் உடன் இருந்து பல உதவிகளைச் செய்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றனர்.
ஜூன் 13 ஆம் தேதி 10:00 மணியளவில் யோகசனங்களைச் செய்ய ஆரம்பித்த யோகராஜ், ஜூன் 14 ஆம் தேதி 2:00 மணி வரை பலவிதமான ஆசனங்களைச் செய்து ஆச்சரியத்தில் திளைக்க வைத்தார். ஏழு விதமான ஒரு கை சமநிலைகள், பன்னிரண்டு விதமான இரு கை சமநிலைகள், சிரசாசனம் செய்து கொண்டே நீர் மற்றும் பழரசம் அருந்துவது, தலைகீழாக நின்ற கொண்டே கைச் சட்டையை அணிவது போன்ற சாகசங்களை நிகழ்த்திக் காட்டினார். கானா கசானா என்ற இந்திய உணவகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்து சாதனையைக் கண்டு மகிழ்ந்தனர். நினைத்தும் பார்க்க முடியாத ஆசனங்களை அவர் செய்த போது, குழந்தைகள் அதைக் கண்டு குதூகலித்தனர். சீனா, தைவான், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாட்டவர்கள் பலரும் வந்திருந்து சாதனையை வாழ்த்தினர்.
நெய்வேலியில் சிதம்பரம் சரஸ்வதி தம்பதியினருக்குப் பிறந்த பூவேந்திரன் தன்னுடைய ஐந்தாம் வயது முதல் யோகா பயில ஆரம்பித்தார். சென்னையில் யோகா கற்றுத் தரும் ஆசானாகப் பணியாற்றிய பின் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஹாங்காங்கில் பயிற்றுவிக்கத் துவங்கினார். அவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கண்கானவர்களுக்கு யோகப் பயிற்சி செய்ய கற்றுத் தந்துள்ளார். 2004, செப்டம்பர் மாதம், தமிழ் பண்பாட்டுக் கழக நிகழ்ச்சியின் போது இரண்டு மணி நேரம் தொடர்நதுத சிரசாசனம் செய்து சாதனை செய்தார். அவர் சென்னையில் தெய்வீக யோக சங்கத்தை (டிவெயின் யோகா சொசயிட்டி) நடத்தி வருகிறார். அவர் அஷ்டாங்க யோகா பற்றி ஒரு குறுந்தகட்டையும் வெளியிட்டுள்ளார். அவர் தற்போது லிவிங் யோகா நிறுவனத்தில் ஆசானாகப் பணியாற்றுகிறார்.
தமிழர் ஒருவர் நம் பழமையான இந்தியக் பயிற்சியான யோக முறையை கற்றுத் தேர்ந்து சாதனை செய்தது நம் அனைவரையும் பெருமை படுத்தக் கூடியதாக உள்ளது. ஹாங்காங்கில் வாழும் தமிழர்கள் அனைவரும் அவரை வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம்.


Series Navigation