பூமகன்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

பிச்சினிக்காடு இளங்கோ (singapore)


குருதியின்
அலை அதிர்வில்
அண்டந்தழுவும்
அரவணைப்பின் எதிரொலி

எடைக்கு எடையானபோது
எழுந்துநிற்கும்
தராசு முள்ளாகத்
தானே நிமிர்ந்து…

விதையாக
ஏதோர் எல்லையில்
விழுந்து
விருட்சமாய்ப் பூப்பூத்து
நிழல்பரப்பி…

எல்லைகளில்லாமல்
எல்லாத்திசையிலும்
மனத்தை
மணமாய்
அலை எழுப்பி…

உணர்வின் மொழியை
இன்னொருமொழியில்
இறக்குமதி செய்து…

கொள்கலன் நிறம்பூசிய
தண்இராகி

கண்இரைக்
கைகளிலே சேமித்து

பூமி
கறைபடும்போதெல்லாம்
கரைந்து கரைந்து
ஆகக்குறைந்த வங்கிக்கணக்காகி

கணமும் இதயம்
ரணத்தால் கனத்து ஆவியாகும்
கவிஞனை
ஆளுக்குஆள்
நிறம்பூசி
முத்திரை குத்தாதீர்கள்

கடவுச்சீட்டைக் காட்டச்சொல்லிக்
கறைபடுத்தாதீர்கள்

குடிநுழைவு எனும்பெயரில்
அவன் முகத்தில்
கோடுகிழிக்காதீர்கள்

அவன்
எல்லைகளற்ற
இயற்கையின் புதல்வன்

பூமிக்காகக்கண்விழித்த
பூமகன்.
—-
ilango@stamford.com.sg

Series Navigation