பூச்சிகளைத் தின்னும் செடிகள்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான்


பூச்சிகள் மற்ற பூச்சிகளைத் தின்னும். பூச்சிகள் செடிகளையும் தின்னும். நன்கு பரிணாம வளர்ச்சி அடைந்த மற்ற விலங்குகளும், மற்ற விலங்குகளையோ, ஊர்வன, நீந்துவன, பறப்பனவற்றையோ தின்னும். ஒரு சில விலங்குகள் சுத்த சைவமாக, செடிகளைத் தின்னும். ஆனால் எந்தவொரு நிலையிலும், எந்தவொரு செடியும், எந்தவொரு விலங்கையும் தின்றதாகக் கதையில்லை. ஆனால் அத்தைக்கு மீசை முளைத்தால்…. ? ஆம், ஒரு சில செடிகளுக்குச் சொந்த சமையல் போரடிக்க, வேட்டையாடத் தொடங்கிவிிட்டது.

பொதுவாக செடிகளைப் பொறுத்தவரை, CO2 வாயுவை எடுத்துக்கொண்டு, ஒளி ஆற்றலைச் சேர்த்து, ஒளிச்சேர்க்கை மூலம் உணவு உற்பத்தி செய்யும். இதற்கு நன்கு வளர்ந்த வேர், இலை ஆகியன தேவை. ஏனெனில், ஒளிச்சேர்க்கைக்கு ஆதாரமான பச்சையம் இலைகளில்தான் இருக்கின்றது. மேலும், மற்றொரு மூலாதாரமான நீரை, நன்கு வளர்ந்த வேர்கள்தான் உறிஞ்சிக் கொடுக்கின்றன. மேலும், இந்த வேர்கள் பல்வேறு தாதுப்பொருள்களையும் பூமியிலிருந்து உறிஞ்சிக் கொடுக்கும். ஆனால் இந்த பூச்சிகளைத் தின்னும் செடிகளின் மிகப்பொிய பலவீனமே மிக, மிகச் சிறிய வேர்கள்தான். எனவே, சொந்தக் காலில் நிற்கத் திராணியற்று, பூச்சிகளைப் பிடித்துத் தின்று, அவற்றின் உடலிலிருந்து தாதுப்பொருள்களை உறிஞ்சிக்கொள்ளும். பெரும்பாலும், இந்த பூச்சிகளைத் தின்னும் செடிகள், நீர்நிலைகளிலோ, தரமற்ற நிலங்களிலோதான் இருக்கும்.

இந்த பூச்சிகளைத் தின்னும் செடிகள், பல்வேறு விதமான உருவ அமைப்புகளைக் கொண்டுி பூச்சிகளை சமர்த்தாக வேட்டையாடுகின்றன. ஒரு சில செடிகள், வீழ்குழி பொறிகளை (Pitfall traps) கொண்டிருக்கும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள். ஏதோ நாகப்பாம்பு படம் எடுத்துக்கொண்டு நிற்பதைப் போல இருக்கின்றதா ?

ஆம், இந்த செடியின் பெயரே Cobra Plant தான்!!!

இன்னும் Pitcher Plants என்றொரு வகை உள்ளது. இந்த Cobra Plant களிலும், Pitcher Plants களிலும் வீழ்குழி பொறிகள் இருக்கின்றன. பொதுவாக இந்த செடிகளின் இலைகள், மலர்களைப் போன்ற உருவ அமைப்பிலும், கவர்ச்சியான நிறங்களிலும் இருக்கும். அது மட்டுமல்ல…. மலர்களைப் போன்றே இந்த இலைகளும், பூச்சிகளைக் கவரும் வண்ணம் நிறைய பூந்தேனைச் சுரக்கும். மேலும், நறுமணத்தையும் வீசும். இதனால் கவரப்பட்டு, தேனீ, குளவி, எறும்பு, ஈக்கள் போன்ற பூச்சிகள் இந்த செடிகளின் இலைகளில் உட்காரும்போது, அதிலுள்ள வீழ்குழி பொறிகளில் விழுந்து விடும். அவ்வாறு விழும் பூச்சிகள், அதிலிருந்து தப்பிக்க மீண்டும் மீண்டும் முயற்சிக்கும். உருண்டு, புரண்டு, குட்டிக்கரணம் கூட அடித்துப் பார்க்கும். ஆனால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்!!! உயிர் பிழைக்கும் முயற்சியிலேயே தன்னுடைய ஆற்றலை எல்லாம் இழந்து, மயக்கமடைந்துவிடும். இதற்குப் பிறகு, இந்த செடிகள் செரிமான நொதிகளைச் சுரந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்த பூச்சிகளின் உடலை செரித்துவிடும். பெரும்பாலும், இந்த பூச்சிகளின் உடலிலிருந்து, இந்த செடிகளுக்கு நைட்ரேட், பாஸ்பேட் போன்ற தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன.

இன்னும் ஒரு சில செடி (Sundews, Butterworts) களின் இலைகளில், முடி நீட்சிகள் இருக்கும். இந்த முடி நீட்சிகளின் நுனியில் இருசெல் சுரப்பிகள் இருக்கும். இவை மட்டுமன்றி, இலைகளின் மேற்பரப்பில் இரு செல் சுரப்பிகள் நேரடியாகவும் இருக்கும்.

Sundews

Butterworts

இலைகளின் விளிம்பில் இருக்கும் முடி நீட்சிகள் நன்கு உயர்ந்து காணப்படும். இவை எவ்வித நேரடி தூண்டலுக்கும் உடனடியாக துலங்கலை வெளிப்படுத்தும். இலைகளின் மையத்தில் இருக்கும் முடி நீட்சிகள், உயரம் குறைந்து காணப்படும். இதிலுள்ள இருசெல் சுரப்பிகள் ஒருவித நீர்மச் சுரப்பினைச் சுரக்கும். இந்த சுரப்புகளில், பூச்சிகள் சிறைப்பிடிக்கப்படும். இந்த பூச்சிகள் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது, இலைகளின் விளிம்பில் இருக்கும் முடி நீட்சிகள் தூண்டப்படுகின்றன. எனவே, இந்த முடி நீட்சிகளின் அடிமட்டத்தில், ஒருபுறத்தில் மட்டும் செல் அழுத்தம் (Cell Pressure) வேறுபடும். இதனால் இலைகளின் விளிம்பில் இருக்கும் முடி நீட்சிகள் உள்நோக்கி வளைந்து, பூச்சிகளை மேலும் அழுத்திக்கொண்டு, செரிமான நொதிகளைச் சுரந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்த பூச்சிகளின் உடலை செரித்துவிடும். பிறகு, இந்த முடி நீட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கே வந்துவிடும்.

பூச்சிகளைத் தின்னும் செடிகளிலேயே, மிகவும் குறிப்பிடத்தக்கது Venus Flytrap என்ற செடிதான்.

இதன் இலைகள், இரண்டு அரைவட்ட வடிவத்தில் காணப்படும். அவை ஒரு மைய நரம்பினால் இணைக்கப்பட்டிருக்கும். அரைவட்ட இலைப்பரப்புகளின் விளிம்புகளில் முடி நீட்சிகள் இருக்கும். மேலும் இலைப்பரப்புகளில், நிறைய பூந்தேன் சுரப்பிகளும் இருக்கும். இதனால் கவரப்பட்ட பூச்சிகள் இலைப்பரப்புகளில் வந்து உட்காரும். உடனே, ஒரு அரைவட்ட இலைப்பரப்பு தூண்டப்பட்டு, அப்படியே மேலெழுந்து, மைய நரம்பில் மடிந்து, மூடியைப்போல இன்னொரு அரைவட்ட இலைப்பரப்பை மூடிக்கொள்ளும். அப்போது இலைப்பரப்புகளின் விளிம்புகளில் உள்ள முடி நீட்சிகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளும். அடிப்பகுதியாக செயல்படும் அரைவட்ட இலைப்பரப்பில் உள்ள சுரப்பிகள் செரிமான நொதிகளைச் சுரந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்த பூச்சிகளின் உடலை செரித்துவிடும்.

அது சரி…. இந்த பூச்சியைக் கொல்லாமல்( ?!), நம்மில் நிறைய பேருக்குத் திருமணமே நடந்திருக்காது.

அது அடுத்த வாரம்!!

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்