புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

இளைய அப்துல்லாஹ்


அன்பு, அபிமானம் என்பது பொதுவானது. திரையில் வரும் நடிகர்கள் மீதான அபரிதமான அன்பை பலரிடம் பார்த்திருக்கிறோம். கண்ணுக்குள் வைத்து கொண்டாடுவார்கள். குறிப்பிட்ட வயது பெண் பிள்ளைகளுக்கு ‘விஜய்’ என்றால் அவ்வளவு ஆசை. ஏன் என்று கேட்டால், அவர்களுக்கும் தெரியாது. இதற்கு என்ன பெயர் என்று டாக்டர்களிடம் கேட்க வேண்டும். லண்டனில் “பேக்கர் ஸ்ரீட்” எனும் இடத்தில் உள்ள “மடம் ருஸாட்” என்ற மெழுகு சிலைகளின் இடம் வலு ரம்யமானது. சிலை யார்! நிற்கும் மனிதர்கள் யார்? என்று முதலாவதாக போகும் போது தலை சுற்றிப் போகும். நடமாடுவது பார்வையாளர்கள் என்றும் அசையாமல் இருப்து சிலை என்றும் பார்த்துணர முடியும். சிலர் அசையாமல் இருப்பது சிலை என்றும் பார்த்துணர முடியும். சிலர் அசையாமல் இருப்பார்கள் ஜோக்குக்காக. எல்லாமே சிலை என்று நினைத்துக் காண்டு வர சில நேரம் அது மனிதராகி விடும்.
ஒரு முறை வாசலடியில் போடப்பட்டிருந்த கதிரையில் ஒருவர் இருந்து விட்டு நான் கிட்டப் போனபோது திடீரென எழும்பினார். சிலைக்கு “மைன்ட் செட்’ பண்ணப்பட்டு மூளை இருந்த நேரம் பயந்து விட்டேன் சிலை தான் எழுந்ததா?
இங்கு உலகப்புகழ் பெற்ற தலைவர்கள், அறிவிப்பாளர்கள், பிரபலங்கள் எல்லாம் மெழுகின் உதவியால் உயிரோடு இருப்பதாகவே புலங்கொள்ள வைக்கிறது.
விடயம் இதுதான். வலு அழகாக டயானா சிலையாக தனித்து தேவதையாக நிற்கிறார். திடீரென ஒரு வெள்ளைக்காரர் வந்து டயானாவின் கையில் முத்தமிட்டார். பார்த்திருந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் அவர் சொன்னார் ‘அன்பினால்’

————————–

கலாசாரம் பற்றி லண்டனில் அதிகமாகப் பேசுவார்கள், புத்தக வெளியீட்டு விழா, சாமத்திய வீடு, கலியாண வீடு, பிள்ளைப்பெறு வீடு, பல்லுக்கொளுக்கட்டை அவித்தல், அட்டமி நவமி என்று கூடுதல், கலாசாரத்தை பேணுவது என்று சொல்வார்கள் தமிழர்கள்.
சாறி உடுத்தல், கூந்தலை நீளமாய் விட்டு பூவைத்தல், வேட்டியும் சால்வையும் அணிதல், கலாசாரம் பேணுவது என்றும் சொல்வார்கள். பாரம்பரியம் தொடர்பான பேணுதலும், அக்கறையும் குறிப்பிட்ட இடங்களோடு மட்டுப்படுத்தப்பட்டு விடும். பின்னர் வழமையான ரவுஸருக்குள் நாம் புகுந்து விடுவோம்.
ஆனால், ஒரு சமூகத்தின் கலாசார, மரபுடை பேணுதலைப் பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறேன்.
‘சவுத் ஹோல்’ பகுதியில் சீக்கியர்கள் தமது உறுதியைப் பேணுவதில் வலு மும்முரம். உலகெங்கும் அவர்கள் அப்படித்தான். நீளமான முடி, கைவளையம், தலைப்பாகை, வாள், தாடி இதனை அவர்கள் எங்குசென்றாலும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். வீட்டில் பஞ்சாபி மொழியும் அப்படித்தான் பைஜாமாவும் ஜிப்பாவும்…. குருநானக் குருவின் மீது அதீத பற்று. பிரிட்டனில் வாள் வைத்திருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றம். அவர்களுக்கு அனுமதி. அவர்களுக்கான உலக சட்டம் எங்கு போனாலும் ஹெல்மெட் அணியத் தேவையில்லை.

—————————

லண்டனில் பிரபலமான இடம் ஹைபார்க் அங்கு ‘ஸ்பீக்கர் கோணர்’ என்ற பகுதி இருக்கிறது யார் வேண்டுமானாலும் இங்கு எதுவும் பேச முடியும் ஆனால், அரச குடும்பத்தைப் பற்றி பேசுவது தடை இயேசு பற்றி ஒருவர் பேசினார். கொஞ்சப்பேர் அதில் கூடியிருந்தார்கள். இஸ்லாம் பற்றி ஒருவர் பேசினார் அவருக்கு முன்னும் கொஞ்சப் பேர் அங்கு கூடியிருந்தார்கள். அரசியல், கொமினிஸம், வாழ்வு, மார்க்கம் என்று பேசுபவர்களுக்கு முன்னால் கொஞ்சப்பேர் கூடியிருந்தார்கள்.
ஒரு இடத்தில் மட்டும் கூட்டம் அலை மோதியது ஸ்பீக்கர் கோணருக்கு அடிக்கடி போவதுண்டு நான். ஆனால், அன்று ஒரு இடத்தில் மட்டும் என்ன விஷேசம் என்று எட்டி காது கொடுத்தேன். ‘செக்ஸ்’ பற்றி விலாவாரியாய் ஒருவர் சுவை பட பேசிக் கொண்டிருந்தார். உலகம் முழுக்க நீக்கமற அதற்கு இருக்கும் மவுசு குறையப் போவதில்லை. ஒரு நாள் அனுபவம் இது.

—————————

பார்ப்பதற்கு கொள்ளை அழகு ‘லண்டன் பிறிஜ்’ தேம்ஸ் நதியின் மீது போடப்பட்டிருக்கும் பாலம் அது. ஆனால், ஏனோ தெரியாது அதன்மீது நடக்கும் போதும் அதனை பார்க்கும் போதும் அவ்வளவு மகிழ்ச்சி. “லண்டன் பிறிஜ்” ஜின் மீது உச்சி வரை ஏறுவது, ஏறி நின்று லண்டனின் ஒரு பகுதியைப் பார்ப்பது என்பது எனக்கு விருப்பமானது.
தேம்ஸ் நதியில் பெரிய கப்பல்கள் போகும் போது இரண்டு பக்கமும் உயர்ந்து திறக்கும். கப்பல் போய் முடியும் வரைக்கும் இரண்டு புறமும் வாகனங்கள் தரித்து நிற்கும்.
பாலம் திறக்குமா என்று பலர் எதிர்பார்த்திருப்பார்கள்-திறக்காது. சில நேரங்களில் எதிர்பாராமல் போனால் கப்பல் போகும்-பாலம் திறக்கும்
முதல் காலத்தில் லண்டன் பிறிட்ஜின் மேலால் போவதற்கு ரிக்கட் எடுக்க வேண்டும். ‘Free Man’ அரச பட்டம் வழங்கியவர்கள் மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள் பட்டத்தோடு பல தமிழர்களும் இருக்கிறார்கள்.

-இளைய அப்துல்லாஹ்-
anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்