புரூட்டஸ்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

பத்ரிநாத்


தென்றல் தீண்டியதால் மழைநீரை பதுக்கிவைத்த மரங்கள் சிலுசிலுவென சிலிர்த்துக் கொண்டன..மழையைப் பார்த்தால் அவர் ஞாபகம்தான் வருகிறது.. மழையை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் அப்படியொரு பைத்தியமாகக் கிடப்பார்..அவர் போய் ஆறு ஆண்டுகள்.. அப்பா.. நம்பவே முடியவில்லை..

அலுவலகத்தில் உள்ள அந்த க்ரீம் கலர் போன் அடித்தாலே சற்று நடுக்கமாக இருக்கும்.. அவர் போன செய்தி அதில்தான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. அய்யோ.. ஆண்டவா.. என்ன சோதனை இது. என்ன செய்யப் போகிறேன் என்று ஆடிப்போனது நினைவில் வருகிறது.. அவர் முதன் முதலாக என்னிடம் பேசியதும் அதே போனில்தான் என்பதை நினைக்கும் போது.. விரக்தியாகச் சிரிப்பு வருகிறது.. அப்படி என்ன அந்தப் போனுக்கும் எனக்கும் உள்ள பூர்வ ஜென்ம உறவோ.. ?

‘ ‘நான் சேகர் பேசறேன்..அதாவது ஒங்க வருங்கால புருஷன்.. ‘ ‘, என்று அறிமுகப் படுத்திக் கொண்டு பேசினார்.. நான்கே வருட தாம்பத்யம்.. வயிற்று வலி என்றார். பத்து நாட்கள் மருத்துவமனை வாசம்.. பதினோராம் நாள் அவர் இல்லை.. நினைக்க நினைக்க.. நானும் அவ்வளவுதான் என்றுதான் நினைத்தேன்.. தற்கொலைப் பண்ணிக் கொள்ளலாமான்னு தோண்றது என்றபோது தாய் தந்தை உட்பட அதிர்ந்து போய்ச் சொன்னார்கள்.. ‘ ‘ உம் பொண்ண ஞாபகத்தில் வச்சுண்டு பேசுடி வனஜா.. ‘ ‘, என்றார்கள் கண்ணீருடன்..

ஆனால் அன்று மலையாய் அழுத்திய அந்தச் சோகம்.. இந்த ஆறு ஆண்டுகளில் கரைந்து கரைந்து மெல்லியக் காற்றாய் ஆகிப் போனது..ஏன்… நான் என்ன அவரிடம் வைத்திருந்த பாசம் அவ்வளவுதானா…. காலம்.. காலச் சக்கரம்.. இல்லை.. இல்லை.. கால வெள்ளம் என்றுதான் சொல்லவேண்டும்.. அத்தனையும்.. சோகம், சிரிப்பு, நினைவுகள்,வயது, சேகர் என்று அனைத்தையும் அடித்துப் போகின்ற பெரு வெள்ளம்.. வெற்று ஞாபகத்தை மட்டுமே

பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் வண்டலாக போனால் போகிறது என்று வைத்துவிட்டுச் செல்கிற வெள்ளம் அது.. இன்னமும் சற்று வருடங்கள் ஆனால் அதுவும் நீர்த்துப் போகுமோ… ?

அப்படியில்லை.. அவர் நினைவுகள் என்றும் இருக்கும்தான்.. அதற்காக காலம் முழுவதும் அழுது கொண்டிருப்பது பேதமையாகத்தான் தோன்றுகிறது.. நான் படித்தவள் என்பதாலா.. சேச்சே.. அப்போது படிக்காதவள் என்ன வெற்று ஜடமா.. ? இல்லை.. இது நிகழ்கால உலகம்.. அதன் வழக்கு.. காலதேச வர்த்தமானங்களாக மாறி வரும் வழக்கு.. உலகம் மாறித்தான் வந்து கொண்டிருக்கிறது.. அடிப்படை உணர்வுகள் கூட மாறிப் போய் விட்டதே…. அவ்வளவு ஏன்…. நம் ஊர் தமிழ்ப் படங்கள் மாறிப் போகவில்லையா.. ? அதைப் போலத்தான் அனைத்தும்.. என் முன்னோர்கள் வாழ்ந்த காலகட்டம் தற்போது இல்லையே..

அட.. ஏன் என் நினைவுகள் மாறி மாறி இப்படி என்னை அரற்ற வைக்கிறது.. ? நான் எதற்கோ மனதளவில் என்னை தேற்றிக் கொண்டு வருகிறேன்..எதையோ நியாயப்படுத்த முயல்கிறேன்.. என் நெருங்கிய தோழிகளிடம் கூட இதைப் பற்றிச் சொல்ல சற்று வெட்கமாகயிருக்கிறது..

கீர்த்தி வாசன்..

ஆறு மாதங்களாய் அவரைத் தெரியும்.. .எங்கள் அலுவலத்திற்கு புதிதாய் வந்தவர்.. நல்ல உயரம்.. முழுக்கைச் சட்டையை இன் செய்து கொண்டு என்னைப் பார்த்து புன்னகையுடன் வணக்கம் சொல்லுவார்.. அலுவலகத்தில் நான் சற்று அதிகம் பேசும் ஒரே ஆண் அவராகத்தான் இருப்பார்.. அதற்குக் காரணம் அவர் ஒரு ஜெண்டில் மேன் என்பதால்தான்.. அந்த வார்த்தையைத் தவிர வேறு எதுவும் அவரைப் பற்றிக் கூற முடியவில்லை.. என்ன ஒரு பாந்தமான பழகும் முறை .. துளியும் விகல்பமில்லாத சிரிப்பு, பார்வை.. எத்தனையோ ஆண்களுடன் பழகியிருக்கிறேன்.. இத்தனையாண்டுகளில் அதுவும் இந்த ஆறு ஆண்டுகளில்..எத்தனை பார்வைக் கணைகள்.. கண்களால் அழைப்புகள்..எத்தனை நையாண்டித்தனமான பேச்சுக்கள்.. சிரிப்புகள்.. ரத்தம் சுவைக்க விரும்பும் நரித்தனங்கள்.. சே.. இந்த ஆண் ஜென்மங்கள் என்ன பிறவிகளோ..என்னால் அடித்துக் கூற இயலும்.. இந்தக் கூட்டத்தில் இவர் நல்லவர் என்று.. சாக்கடைக்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாதா.. ?

சமீபகாலமாக நாங்கள் அடிக்கடி சந்திக்கிறோம் அலுவலக நேரம் தவிரவும்.. அவர் விவாகரத்தானவர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.. ஒருவேளை இதனால்தானோ என்னவோ இந்த ஒட்டுதல் என்று அவரே சொன்னார்.. ஒட்டுதல் என்றால்.. ஒரு வேளை அதுவே தவறான சொல்லாட்சியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.. ஏனென்றால் அந்த வார்த்தையே தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய சூழல்தான் தற்போது நிலவிவருகிறது.. வேறு வார்த்தைகளில் சொன்னால்.. சிநேகம்.. ஒருவருக்கொருவர் பரிவு.. என் சோக சுமைகளை இறக்கி வைக்க எனக்கான துறைமுகம்.. அந்த முகம்..

‘ ‘அப்படி என்ன ஒங்களுக்கும் ஒங்க மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்துச்சி.. புரியவேயில்ல.. நம்பவும் முடியல.. ஒங்களோட யாருக்காவது கருத்து வேறுபாடு வருமா.. ?

எத்தனை அட்ஜஸ்டபுள் டைப் நீங்க.. ஒரு வேள அவங்க ரொம்ப ‘அடமண்டா ‘ இருப்பாங்களா…. சாரி.. தப்பா எடுத்துக்காதிங்க.. ‘ ‘,

‘ ‘சேச்சே.. என்ன வனஜா.. நீங்க கேக்கக் கூடாதா.. யதார்த்தமாத்தானே கேட்டிங்க.. அவ என்ன மாதிரி டைப்புன்னு தெரியல.. ஆனா.. அவளுக்கு என்னைய புடிக்கல.. அதே மாதிரி எனக்கும் மனசுக்குப் புடிக்கல.. விலகிட்டோம்.. ‘ ‘,

மனித மனங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவா முடிகிறது.. நானே அதற்கு ஓர் உதாரணம் இல்லையா.. கீர்த்தியிடம் இத்தனை அன்னியோன்யமாகப் பழகிவருகிறேனே.. எனக்கே சில சமயங்கள் உறுத்தலாகயிருக்கும்.. என் கணவனுக்குத் துரோகம் செய்கிறேனோ என்று.. சேச்சே.. இது எப்படித் துரோகம் ஆகும்.. ? அவர் போய் இரண்டு வருடங்களில் எனக்கு வேறு மணம் முடிக்க தாய் தந்தையர் விரும்பவில்லையா.. ‘ ‘முப்பது வயசுப் பொண்ணு.. காலம் முழுசும் இப்படியே இருக்க முடியுமா.. ‘ ‘, என்று அரற்றினார்கள்…நான்தான் சத்தம் போட்டுத் தடுத்துவிட்டேன்.. பெரியவர்களே அங்கீகரிக்கக் கூடிய விசயம்தானே இது..

அப்படியென்றால் நான் கீர்த்தியை விரும்புகிறேன் என்றுதான் தோன்றுகிறது.. உடல் சற்று படபடத்தது.. சேச்சே.. மனமே.. ஏன்..அச்சம்.. இருபத்தியொராம் நூற்றாண்டில் இதைப் போன்ற அச்சம் தேவையற்றது.. எதற்கும் வெட்கப் பட வேண்டியதில்லை.. இருவருமே வளர்ந்தவர்கள்.. வாழ்க்கையைப் பார்த்தவர்கள் சில கோணத்தில் பார்த்தால் இதுதான் உண்மையில் முற்போக்கான வாழ்க்கை ஒப்பந்தம்.. மெச்சூர்ட் மேரேஜ்..

ஆச்சரியம்.. அவரே அன்று கடற்கரையில் என்னிடம் இந்த யோசனையைத் தெரிவிக்க, மெளனமாக சம்மதித்தேன்.. உடனே என் கைகளைப் பற்றி தன் கன்னங்களில் வைத்துக் கொண்டார்.. அந்தத் தீண்டலில் உடலே சிலிர்த்துக் கொண்டது.. அந்த மரத்தினைப் போல..

இனி அலுவலகத்தில் எவரும் அரசல் புரசலாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை.. ஊர் வாய்க்குக் கிடைத்த அவல் இனிமேல் கிடைக்காது.. சிரிப்பாக இருந்ததது.. இந்த உறவு சட்டபூர்வமாகப் போகிறது.. அதுவும் விரைவில்..

அவருக்குக் கேரளத்திற்கு மாற்றலாகிவிட்டது.. கடிதம் மூலமாகவே எங்கள் நட்பு தொடர்ந்தது.. அவர் தாய் தந்தையர்களிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்க மும்பை செல்லப் போகிறாராம்.. அதைப் போல என்னையும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி வைக்கச் சொல்லி எழுதினார்..

ஆயிற்று மூன்று மாதங்கள்.. அவர் இன்னமும் மும்பை சென்ற பாடாய்க் காணோம்.. நான்தான் விரைவில் செல்ல எழுதிக் கொண்டிருந்தேன்.. ஏன்தான் இந்தக் காலதாமதமோ என்று சில கடிதங்களில் கடிந்து கொண்டும் எழுதினேன்..

இன்று ஒரு கூரியர் வந்திருந்தது.. பிரித்தேன்.. மதுரைக்குப் போக வர ரிடர்ன் டிக்கெட்.. அதுவும் முதல் வகுப்பு குளிர் பதனப் பெட்டியில்.. அவர்தான் அனுப்பியிருந்தார்.. வேலை நிமித்தம் மும்பை செல்ல முடியவில்லையாம்.. விரைவில் செல்கிறாராம்.. எனக்காகத்தான் அந்தப் பயணச்சீட்டாம்.. கொடைக்கானலில் கெஸ்ட் ரூம் கிடைத்ததாம்.. கொடைக்கானலில் இது செகண்ட் சம்மராக இருப்பதால் நல்ல சீசனாம்.. நான்கைந்து நாட்கள் தங்க ஏற்பாடாம்.. மகளை பெற்றோர் பொறுப்பில் விட்டுவிட்டு என்னை மட்டும் வரச் சொல்லி எழுதியிருந்தார்.. நேரில் பேசி எத்தனை நாட்களாகிறது என்று அங்கலாய்த்திருந்தார்..

திருமணத்திற்கு முன்பு மகளை விட்டுவிட்டு கொடைக்கானல் வரவேண்டுமா.. என்ன இது.. சுருதி மாறுவதைப் போல இருக்கிறதே.. ? சற்று நேரம் அந்தப் பயணச் சீட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. சேச்சே.. என்ன ஒரு இச்சை இது.. திருமணத்திற்கு முன்பே எதை அறிய அவசரம் இது.. அதுவும் கீர்த்தியா.. நம்பமுடியவில்லை.. அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே.. நான் மட்டும் தனியாளாக வரவேண்டுமாம்…. பேசிப் பல நாட்கள் ஆகிவிட்டதாம்.. சீ.. என்னவொரு சமத்காரமான வார்த்தைகள்.. உள்ளே இத்தனை அழுக்குகளா… ? சே.. நாம் என்ன அறிஞனா.. முகத்தைப் பார்த்தவுடன் ஒருவரைப் பற்றி முழுவதுமாக எடைப் போட்டுவிட..

சர்வமும் அறிந்த தத்துவ ஞானியாலேயே முடியாதே.. நான் ஒரு பலவீனமான பெண்.. என் பலவீனத்தைச் சொன்னேன்.. அவர் தன்னைப் பற்றிச் சொன்னார்.. அவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாது, என் கண்களை மறைத்த அந்தப் பொருள் எது.. ?..

என்னிடம் இருக்கும் இந்த இளமையா.. ?

அப்படியென்றால் நானும் குற்றவாளிதான்.. அவரை மட்டும் சொல்லிப் பயன் இல்லை..

அவரின் இந்தச் செயல் அடாத செயல்.. பாம்பு தன் சட்டையை உரித்துவிட்டது.. தன் வண்ணத்தைக் காட்டிவிட்டது.. இனி நான்தான் புரிந்து கொள்ள வேண்டும்..

அந்தப் பயணச் சீட்டை அவர் நினைவுடன் சேர்த்துக் கிழித்துப் போட்டேன்..

****

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்