புரிந்துகொள்ளல்

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

அசை சிவதாசன்


Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில் எனது peers and teachers என்னை Andy என்றே அழைப்பர்.
இவ்வளவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுதியதை வாசிப்பதற்கே உங்களுக்குச் சிரமமாயிருந்திருக்கும் இல்லையா? அப்படியானால் தினமும் பாலசாலையிலும் வீட்டிலும் என்று எத்தனை தடவைகள் நான் கனடியனாகவும் தமிழனாகவும் வாழக் கஷ்டப்பட்டிருப்பேன்?
போகட்டும். அவள் எனது தாய். அவளுக்காக நான் கஷ்டப்படுவதில் பாவமேதுமில்லை. இதுவெல்லாம் என் துன்பங்களில் ஒரு அற்ப பங்கேதான்.
எனக்கு 16 வயது. கனடாவில்தான் பிறந்தேன். எனக்கு ஒரு தாயும் (சிரிக்காதீர்கள்) ஒரு அக்காவும் இரண்டு மாமன்காரரும் இருக்கிறார்கள். எனக்கு மூன்று வயதாகவிருக்கும்போதே என் தந்தை அம்மாவை விட்டு விட்டு வேலையில் சந்தித்த யாரோ பெண்ணுடன் ஓடிவிட்டானாம் என்று அம்மா சொன்னாள். அப்பா ஏன் ஓடினார் என்று காரணம் தெரியும்வரை ‘ஓடினான்’ என்று அழைப்பதாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.
அம்மா சுமாரான அழகுடையவள். ஆனால் அவளுக்குக் காது கேட்பது கொஞ்சம் குறைவுதான். அப்பா ஓடிய பிறகு வீட்டில் சண்டை பிடிப்பதற்கு எவருமில்லை. பக்கத்து அப்பாட்மெண்டிலிருந்து சுவரில் தட்டுவது இப்போது இல்லை. உரத்த குரலில் பேசிய அப்பன் போனதிலிருந்து வீடு வெறிச்சோடிப் போனதை அம்மாவே ஒத்துக் கொண்டாள்.
அக்காவுக்கு 20 வயது. ஒரு காலத்தில் நன்றாகப் படித்தவள். University of Toronto வில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்பா ஓடினான். அதன் பிறகு அவள் படிப்பில் கவனம் செலுத்தாது விட்டுவிட்டாள். இப்பொழுது College க்குப் போகிறாள். முன்பு போலெல்லாம் அவளுக்குச் சிநேகிதிகள் இல்லை. மேக்கப் போடுவதில்லை. தலை சீராக வாருவதில்லை. படிப்பு எப்படிப் போகிறது என்று எப்போதாவது நான் கேட்டால்தானுண்டு. அப்போதும் ஒரு shrug ஓடு அப்பாற் போய்விடுவாள். அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்றறிவதற்கு அம்மாவிற்கு நேரமுமில்லை அறிவும் போதாது.
அம்மா இரண்டு வேலை செய்கிறாள். காலையில் ஒரு Book Binding கம்பனியில். பின்னேரம் ஒரு தமிழ்ச் சாப்பாடுக் கடை Kitchen இல். அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டு பேசாமல் தானுண்டு தன் சோலியுண்டு என்று அவள் வாழ்ந்திருக்கலாம். பெரீய ego வைத் தலையில் வைத்துக்கொண்டு திரிகிறாள். தான் வேலை செய்து பிள்ளைகளைப் படிப்பித்தேன் என்று ஊருலகம் சொல்ல வேண்டும் என்பது அவளது ஆசை போலும்.
இரவு பதினொரு மணிக்குப்பின் அவள் கொண்டுவரும் சாப்பாடுதான் எங்களதும். ஆனால் நாங்கள் எத்தனை மணிக்குச் சாப்பிடுவதென்பது அவளது முதலாளியின் கைகளிலேதானிருக்கிறது. அவர் தனது வாகனத்தில் கொண்டுவந்து விட்டால்தான் அம்மா வீட்டுக்கு வரலாம். அம்மாவின் காது கேட்காத பிரச்சினையால் அவளால் வாகனம் ஓட்ட முடியாது.
அப்பன் ஓடியதிலிருந்து எனக்கும் வாழ்க்கையில் சலிப்புத்தட்டி விட்டது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னதான் brave face என்று மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளே வெறுமை சதா அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. அப்பனைப் பற்றி அம்மா எதுவும் பேசுவதில்லையாதலாலும் அவளோடு என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது சரியில்லை என்பதாலும் நான் அப்பனைப் பற்றிப் பேசுவதை வெகுவாகக் குறைத்து விட்டேன். ஆனாலும் அவனைப் பற்றியும் அவன் ஏன் எங்களை அநாதரவாக விட்டு ஓடினான் என்பது பற்றியும் எப்போவாவது ஒரு நாள் அறிந்தேயாக வேண்டும்.
அப்பன் குரைப்பான், சத்தமிடுவான் ஆனால் ஒருபோதும் அம்மாவை அடித்ததில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் கொண்டுவந்து போடுவான். He was a good provider, I must admit.
அம்மாவும் அவனை நேசித்துத்தானிருக்க வேண்டும். இப்போதும் இடைக்கிடையே வீட்டில் இருக்கக் கிடைக்கும் போதெல்லாம் அவள் சட்டைத் தலைப்பைக் கண்ணுக்குள் விட்டுக்கொண்டிருக்கிறாளென்றால் அது கண்ணீரைத் துடைக்கவல்லாது வேறெதற்கு? எனக்கும் அக்காவுக்கும் முன்னால் அப்பனைத் திட்டித் தீர்ப்பாள். அதில் மட்டும் அவள் நன்றாக நடிப்பாள்.
அப்பனுக்கும் அம்மாவுக்குமிடையில் சண்டை முற்றியிருந்தபோது இரண்டு தடவைகள் மாமன்மார் என் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு கடுமையான குளிர் இரவில் அப்பனை அடித்துத் துரத்தி வெளியேவிட்டுக் கதவைப் பூட்டினார்கள். இன்னுமொரு நாளில் அப்பன் தனது உடுப்புகளையும் பெறுமதிகளையும் எடுத்துக்கொண்டு இறுதியாக விடைபெறும்போது அம்மா அவன் பின்னால் ஓடிவிடாது ‘காப்பற்றுவதற்காக’ அவளைப் படுக்கையறையுள்ளே வைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை.
அப்பன் இறுதியாக விடைபெற்ற இரவில் அம்மாவின் கூப்பிய கரங்களும் கெஞ்சிய கண்களும் என்னால் இன்னும் மறக்க முடியாதவை. காரணம் அவள் அப்படிக் கெஞ்சியது தனது சகோதரர்களிடம்தான். அன்று அவர்கள் கொஞ்சமேனும் இரக்கம் காட்டியிருந்தால் இன்று எனது அப்பன் எங்களோடு இருந்ததிருக்கலாம் என்று பலதடவைகள் நான் நினைத்ததுண்டு. அதையேதான் அம்மா தினம் தினம் நினைத்துக் கொள்கிறாளோ என்னவோ.
எங்களை விட்டுப்போய் சில நாட்களில் அப்பனை மால்களில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். எனது பாடசாலைக்கு அருகில் இருக்கும் அந்த மாலுக்கு அவன் வருவதே என்னைப் பார்க்கத்தான் என்று அவன் ஒரு தடவை சொன்னான். அப்போதெல்லாம் அவன் அன்போடு என்னைக் கட்டிப் பிடித்து சாப்பிட வரும்படி அழைப்பான். ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று அடம்பிடிப்பான். இன்றுவரை அவனிடம் எதுவுமே வாங்கியதில்லை. இப்போ சில வருடங்களாக அவனை நான் கண்டதில்லை. எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அவனை அழைக்கவேண்டுமென்று அம்மாவைக் கேட்டபோது ‘உன் மாமன்மார் கொலை செய்துவிடுவார்கள்’ என்று அவள் சொன்னதோடு அப்பனோடு உறவு கொண்டாடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.
எங்களை விட்டுப் பிரிந்து சில வருடங்களுக்கு அப்பன் வேறு திருமணம் புரிந்து கொள்ளவேயில்லை என்று அம்மா சொன்னாள். பின்னர் அவன் மிசிசாகாவுக்குப் போய்விட்டான். சுமார் 50 கி.மீ. தொலைவுதான். இருப்பினும் இங்கிருக்கும்போதெ அவன் எங்களை மறப்பதற்குத் தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. தூரமும் நேரமும் பாசத்தைப் பிரிக்குமென்பார்கள். I had no choice.
எனக்கும் இப்போது படிப்பில் அவ்வளவு அக்கறையில்லை. அக்காவின் மனதை இப்போது மிகவும் அதிகமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. வகுப்பில் ஆசிரியர் பல தடவைகள் முயன்றும் நான் எனது குடும்பப் பிரச்சினைகளப் பற்றி அவரிடம் எதையுமே கூறியதில்லை. அப்படிச் சொல்லியிருப்பின் இப்போது எங்கோ ஒரு Foster parent வீட்டில் ஒரு வெள்ளைக்கார அப்பா அம்மாவுக்கு பதிநான்காவது பிள்ளையாக Anti-depressant குளிசைகளோடு மால்களில் திரிந்திருப்பேன். அல்லது ஒரு medium security prison இல் ஏனைய கைதிகளோடு கஞ்சா குடித்துக் காலம் கழித்திருப்பேன். நான் ஆனந்தனாக வளர்க்கப்பட்டதன் விளைவே இன்னும் நான் நானாக இருப்பது என்று நினைத்து மகிழ்வதுண்டு.
ஒருநாள் நானும் அக்காவும் சில நிமிடங்கள் பேசக் கிடைத்தபோது இருவரும் ஏகோபித்து எடுத்த முடிவு நாங்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்வதில்லை என்று. அவள் ஆசையாக நேசித்திருந்த பிருந்தனிடம் தன் முடிவைச் சொன்ன அன்று அவள் sleeping tablets எடுக்கவிருந்தாள். எப்படியோ இன்று அவள் உயிர் தப்பியிருந்தாலும் ஒரு நடைப்பிணமாகவே இருக்கின்றாள்.
எங்கள் குடும்பம் சிதைந்து போனதற்கு யாரைக் குற்றம் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட எல்லோருமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் முடிவுகளைத் தீர்மானித்தார்களென்றே எனக்குப் படுகிறது. என்னுடைய அல்லது எனது அக்காவுடைய நலன்கள் எதையும் எவரும் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் தத்தமது ego வைத் திருப்திப் படுத்தும் வகையிற்றான் நடந்துகொண்டுள்ளார்கள்.
நாங்கள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று அம்மா இரண்டு வேலை செய்தாள். இருந்தும் என்ன பிரயோசனம்? அம்மாவே வீட்டிலிருந்து நாங்கள் என்ன படிக்கிறோம் என்றுகூடக் கேடடதில்லை. அம்மாவுக்குச் சரியானதென்பதை எப்படி மாமன்மார் தீர்மானிக்கலாம்?.
எல்லோருமே தாங்கள் ம்ற்றவர்களுக்கு நன்மை செய்வதாகவே நினைத்துக் காரியங்களைச் செய்கின்றார்கள். ஆனால் அந்த ‘மற்றவர்களிடம்’ என்ன பெறுபேறுகள் விளைந்தன என்பது பற்றி எதுவித அக்கறையிமில்லாது தங்கள் ego திருப்தியடைந்தால் மட்டும் போதுமானது என்றளவில் நின்றுவிடுகிறார்கள். இது தான் எமது பிரச்சினை.
என் மனதில் நெருடல்கள் ஆயிரம் இருக்கின்றன. யாருடனாவது பேசினால் கொஞ்சம் ஆறுதலாகவிருக்கும். I am sure என்னைப்போல் தான் என் அக்காவும் துடித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன். என் நண்பர்களும் என்னைப் போலவே ஆயிரம் பிரச்சினைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்கள். Everyone needs a shoulder to cry, I guess.
சென்ற வாரம் எனது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் என்னை மிரட்டினார்கள். Lunch money யைத் தரும்படி மிரட்டினார்கள். என்னிடம் lunch money இல்லை, வேண்டுமானால் lunch ஐத் தருகிறேன் என்றேன். இரண்டு பேரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். சக மாணவர்கள் பார்த்துச் சிரித்தார்கள். ஏனென்றால் அடித்தவர்கள் ஏதோ ஒரு gang ஐச் சேர்ந்தவர்கள். நான் இச் சம்பவத்தை பிறின்சிபாலிடம் முறையிடவில்லை ஏனென்றால் அடித்தவர்களும் தமிழர்கள்தான்.
இப்போது நான் இன்னுமொரு gang member. இனி என்னை ஒருவரும் தொட முடியாது. எனக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு குழு இருக்கிறது. ஆனால் நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
Ryan என்ற றட்னாகரன் எனது gang இல் இருக்கிறான். மிகவும் நல்ல பையன். ஆனால் போதை வஸ்து எடுப்பான். ‘நீ எப்போது இதைப் பழகினாய்’ என்று கேட்டதற்கு அவன் சொன்னான் ‘எல்லாம் ஒரு பெண்ணுக்காக’ என்று. அவனது காதலி ஒருநாள் அவனிடம் சொன்னாளாம் ‘Thats it. We have to part our ways. You are not tough enough for me. Look at the guy who is leaning on the red Honda Civic. He is my my new guy. Bye…’
இதுதான் இன்றய உலகம். This is real. I don’t want to bury may head in the sand!. Ryan இப்போது ஒரு tough guy. He goes to prison every weekend foe three months. Assault with weapon, possession of narcotics with the intent of trafficking and obstruction of justice. எல்லாமே பொய் வழக்கு. போலீஸ் சோடித்த வழக்கு. றயான் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுவிட்டான். காரணம் அவனைப் பிணை எடுக்கக்கூட ஒருவரும் முன்வரவில்லை. He also comes from a single parent family. I won’t blame him.
எனது நிலைமை எப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. நான் வீடு போகும்போது வீட்டில் விளக்கு எரியாது. வெறுமையாக இருக்கும். சாப்பிட எதுவும் இருக்காது. கையில் காசும் இருக்காது. வீட்டுக்கு வருவதற்கே மனமிருக்காது. மற்ற நண்பர்களைப் போல சட்டத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்கல்லாம். மனம் ஒத்துழைக்குதில்லை. So far I have resisted successfully. The only other option is to take my life. Is this life worth living?
I hope you understand me. Please don’t feel sorry for me. There are so many kids out there crying out for help. There could be a kid out there pricking needle in a back alley. There could be one waiting to jump off a highrise building. Please save them. For god sake they have many more years to live, just the way you did. They are your children.
மன்னிக்க வேண்டும். I got carried away.
நான் இதுவரை சொன்னது ஆனந்தனைப் பற்றி மட்டுமே. அறிகுறிகளைச் சொன்னேன். ஆதங்கங்களைச் சொன்னேன். நாங்கள் நல்லவர்களாக உருவாகுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
I woudn’t be in this state had my father not abdicated his responsibility.
இற்தியாக, அப்பாவுக்கு! ‘அப்பா எனக்கும் உங்களைப்போல கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று முழுமையாக வாழ்வதற்கு ஆசைதான். அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள்.
Forgive me உங்களை அப்பன் என்று சொன்னதற்கு. அதுவே இல்லாது எத்தனை குழந்தைகள் இருக்கும்போது. Please lookafter my sister, at least.’


tam@veedu.com

Series Navigation

அசை சிவதாசன்

அசை சிவதாசன்