பிரிவின் பிந்தைய கணங்கள்
குட்டி செல்வன்

கதவிடுக்கின்வழிக் கசியும்
இந்நாளின் புது வெளிச்சங்கள்
சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும்
நிராகரித்து விட்டன
பெருகுமெனது மௌனங்கள்
என்னைவிடவும் அமைதியாக
இருக்கி்றது இந்த அறை
கதவுகள் திறந்தபடியிருந்தும்
யாதொரு புதுமையும்
நிகழ்ந்துவிடவில்லை
நிர்பந்தங்களேதுமின்றி
தொடரும் தனிமையில்
வலிமிகுந்து சரிகின்றன
அநாவசியமாகிவிட்ட எனது உணர்வுகள்
தயார்படுத்திக் கொள்ள விழைகிறேன்
உனது பிரிவை ஈடுசெய்யும்
ஆதூரமிக்கதொரு தருணத்தை
முடிவில்
ஆறுதலற்று விம்மி அழுத
நேற்றைய இரவை சற்றும்
மொழிபெயர்க்க முடியாமல்
தோல்வியைத் தழுவுகின்றன
இப்பகல் பொழுதுகள்
kutty.selvan@live.com