பிரமோத் மகாஜனின் மறைவு

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

புதிய மாதவி


மும்பையில் இன்று (4/5/06) பிரமோத்ஜியின் இறுதியாத்திரை.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் தன் உடன் பிறந்த தம்பி பிரவீன் மகாஜனால்
காலை 7.45 மணி அளவில் துப்பாக்கியில் சுடப்பட்ட பிரமோத்ஜி உடனடியாக
மும்பையின் மிகச்சிறந்த மருத்துவமனையில் ஒன்றான ஹிந்துஜா மருத்துவமனையில்
அவசரச்சிகிச்சைப் பிரிவில் உயிருக்காகப் போராடினார்.
மும்பையின் மிகச்சிறந்த மருத்துவர்கள், உலக அளவில் புகழ்ப்பெற்ற அறுவைச்சிகிச்சை
நிபுணர்கள் 12நாட்கள் எவ்வளவோ போராடியும் பிரமோத்ஜியின் உயிரைக் காப்பாற்ற
முடியவில்லை. நேற்று மாலை அவருயிர் பிரிந்தது.

கருத்தியல் ரீதீயாக அவருடம் முரண்படுபவர்களும் அவருடைய கடின உழைப்பைப் பாராட்டினார்கள்.
ஆரம்பத்திலிருந்தே RSS அமைப்பிலிருந்தவர்தான். அவரைப் பற்றி என்னைப் போன்றவர்கள்
எழுதுவது சிலரின் புருவங்களை உயர்த்தக்கூடும்! ஆனால் அரசியலில் அவருடைய
வளர்ச்சி ஒவ்வொரு இளைஞருக்கும் நம்பிக்கைத் தரும் வகையில் இருந்ததை
எண்ணிப் பார்க்கிறேன். மும்பையில் சரத்பவார் நடுவண் அரசிலும் மாநில அரசிலும்
அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் பிரமோத்ஜி அவர்கள்தான் மராத்திய மாநில
இளைஞர்களுக்கு அரசியல் உலகில் ஓரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
அவருடைய வளர்ச்சி ஒரு படிப்படியான வளர்ச்சியாக இருந்தது. வாரிசு அரசியலில்
அறிமுகமாகாத அரசியலின் புதுமுகமாக நுழைந்தவர். அரசியலில் தீவிரமாகச் செயல்படுவதற்கும்
சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த
எடுத்துக்காட்டாக இருந்தவர். ஒரு பள்ளிகூடத்தின் ஆசிரியராக ஆரம்பித்த அவர்
பயணம், பத்திரிகை ஆசிரியராக வளர்ந்தார். இந்தியாவில் எமர்ஜென்ஸியை எதிர்த்து
சிறைச் சென்றார். நாசிக் சிறையில் இருந்த அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் தலைவர்களையும்
பத்திரிகைஆசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி படிப்படியாக
அரசியலில் முன்னேறியவர். இன்றைய அரசியலில் இரண்டாவது தலைமுறைக்கு
இவருடைய படிப்படியான வளர்ச்சி எல்லா தரப்பிலும் இவருக்கு நிறைய நண்பர்களை
உருவாக்கியது. எதிர்முகாமில் இருப்பவர்களுடனும் மிகவும் நாகரிகமாக அரசியல் நடத்தும்
பண்பாட்டாளர்.

“HE HAD FRIENDS EVEN AMONG RIVALS’

INDIA’S MISFORTUNE: TURKS DYING YOUNG

BJP’s TENDULKAR’

இப்படி மும்பை பத்திரிகைகள் அவரைப் பற்றி நிறைய எழுதியுள்ளன.

அவருடைய தாயின் மனநிலையை எண்ணிப் பார்க்கிற போது நெஞ்சம் கனக்கிறது.
தன் மகன் நடுவண் அரசில் அமைச்சராக இருந்தப்போதும் மும்பையின் BEST பேருந்திலும்
மும்பை மின்சாரவண்டிகளிலும் பொதுமக்களுடன் ஒருவராகப் பயணம் செய்ததை
பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு.
ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் அவர் உணர்வை உணர்ந்து கொள்கிற போது
ஆறுதல் சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை.

மும்பையிலிருந்து,

புதியமாதவி.
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை