பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

சுமதி ரூபன்


(இது ஓரு பென்குன் வெளியீடு)

தோழி கேள்

அவனுடைய மணலடர்ந்த கரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூச்சலிட்ட அழிவு செய்யும் பறவைகள் கூட்டம். அவனை நான் இனி நினைக்க மாட்டேன். எனது கண்களுக்கு சிறிது துாக்கமாவது கிடைக்கும்.

The Tigerclaw Tree

What she said

Friend, listen.

I’ll not think anymore

of that man on whose sandy shore

birds occupy the tigerclaw tree

and play havoc with the low flowering branches,

and my eyes will get some sleep

தமிழ் நாட்டில் வசித்த “தென்கலை ஐயங்கார் குடும்பம் ?”; ஒன்றில் மூன்று தலை முறைக்கான கதை இங்கே முன்னும் பின்னுமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆரம்பம் 1970

பிரிவு

மது ஆண்டுகள்

வருகை

எனப்பிரித்துக் கதையை நகர்த்தியிருக்கின்றார் கதை சொல்லி.

பொன்னம்மாள் எனும் பொன்னா பாட்டியில் தொடங்கி அவளது கொள்ளுப் பேத்தி இந்து வின் பிறப்பு வரையிலான கதை எனும் போது பாத்திரங்களும்> சம்பவங்களும் விரிந்து கிடக்கின்றன. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிகநுணுக்கமாக தமது அடையாளத்திலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கைக்குள் முதிர்ந்து செல்கின்றார்கள். ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சனைகளையும் சார்பற்ற நிலையில் கதை சொல்லி நகர்த்திச் சென்றிருக்கின்றார். அரசியல் கலாச்சாரம் மதம் காதல் என்று ஒட்டு மொத்தத்தையுமே கேள்விக்குறியாக்கி மனித மனப்பிறழ்வுகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கதையில் ஹீரோஇஸத்தோடு வந்து போகும் நம்பியை நாவல் வாசித்த எல்லோருக்கும் பிடித்துப் போயிருக்கும். வாழ்வை விளங்கி இறுக்கம் நிறைந்த கூ+ழலிலும் திடமாக முடிவெடுக்கும் ஒரு படித்த பண்பான கொம்யூனிஸ்ட். இருப்பினும் என்னைக் கவர்ந்தவன் கண்ணன்தான். தனது கொள்கையிலேயே அவனுக்குக் குழப்பம். எப்போதும் நம்பியின் கருத்திற்காகக் காத்திருப்பவன். நம்பியென்றால் இப்படிச் சொல்லிச் செய்திருக்கக் கூடும் என்று சிந்திப்பவன். காதலி கொள்கை வேலை என்று எங்கு போயினும் குழம்பிப்போகும் பாத்திரம். அரசியல் கொள்கைக்காக காதலையும் கல்வியையும் விட்டுக்கொடுப்பது போல் கதையில் நகர்வு இருப்பினும் காதலி உமாவிற்கு கண்ணனின் தங்கை ராதா கூறுவது:

“கம்யூனிஸ்ட் கட்சியோட சாவாசமா ? இந்தப் பைத்தியம் மெட்றாஸ் போனாப்பிறகு புதுசா பிடிச்சிண்டிருக்கு. அதுக்கு முன்னால திமுக பைத்தியம். அதுக்கும் முன்னால எம்ஜியார் பைத்தியம். போன வாரம் கூட எஸ்க்பிரஸ்சில வந்த ஒரு ஆர்டிகல படிண்ணு குடுத்தான் “பியோண்ட் த பாம்பு கேட்ண்ணு” நினைக்றன். நான் இங்க இருக்கிற துணிக் கேட்டிணுக்குப் பின்னால என்ன இருக்கெண்டு பாக்க முடியல அங்க மூங்கில் கேட்ணுக்குப் பின்னால என்ன இருக்குண்ணு ஏன் பாக்கப் போற எண்டு கேட்டன் அவனுக்கு ரொம்ப கோபம்”

“அப்ப நக்ஸ்லைட்டோட”

“சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை எல்லா நதிகளிலையும் குளிச்சுப் பாக்கணும் எண்ணு அவனுக்கு ஆசை ஆழம் அதிம்ணா அவனா திரும்பி வந்திடுவான். உயிர் நம்ம மாதிரியே அவனுக்கும் வெல்லம். நம்பியைச் சொல்லு அவன் உண்மையான கொம்யூனிஸ்ட் ஆனால் இவன் மாவோ சீனாவென்று சொல்லிக்கிட்டு அலையிவன்களோட சேந்து சுத்துறான். சரியான நேரத்தில வெளியில வந்திடுவான்”

19ம் நுாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கொம்யூனிஸ்டின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து மாக்ஸ்சை. மனப்பாடம் செய்து “தோழர்” என்று சிவப்புக் கனவோடு திரிந்த பாட்டாளிகள் வர்க்கம் அதிகம். என் நண்பனோடான ஒரு வாதத்தின் போது அவன் சொன்னான். எந்த ஒரு கொள்கையும் உழைக்கும் வர்க்கத்தைப் போய்ச் சேர வேண்டுமெனின் நாஸ்திகம் கதைத்தால் நடக்கப் போவதில்லை. மதத்தின் மூலம் எடுத்துச் செல்வது மிக இலகு. மக்களின் நலனுக்காக உண்மையாக உழைக்க நினைத்த எவரும் இதனைச் செய்யவில்லை. அதுதான் எல்லாமே தோல்வியில் போய் முடிகிறது என்று. (மெக்ஸ் வெபரின் “த புரொ” னைத் தட்டிப்பார்க்கையில் அவரின் கல்வானிஷம் (பிரெஞ்சுப் புரட்டஸ்தாந்துப் போதகர் பின் பற்றிய போதனைகள்) கொள்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனின் போராளிகளும் பொதுமக்களும் அழிவது தவிர்க்க முடியாதது என்பது போராட்டக்காறர்களின் வாதம். அதே போல் ஒரு கொள்கை வெற்றி பெற (கொம்யூனிஸ்ட்) உழைக்கும் வர்க்கத்தில் பல தெருவிற்கு வரவேண்டும்.

இது கொள்கையாளர்களின் வாதமாக இருக்கலாம்.

கண்ணன் அரசியல் கூட்டம் ஒன்றிற்காக மதுரை ரயில் நிலையத்தில் நின்றபோது சந்தித்த வடை வியாபாரியுனான உரையாடலில் –

“நீங்க எந்தக் கட்சி ?”

(கண்ணனுக்கு உழைக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களோடு ஒன்றாக உணர வேண்டும் என்ற ஆசை. இவர் உழைக்கும் வர்க்கத்தில் வருவாரா ? அல்லது லும்பன் ரகமா ? மார்க்ஸ் ரயி;ல் நிலையத்தில் வடை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை).

வடை விற்பவனுக்கு “வாயைப் பொத்திக்கிட்டு போடா பாப்பாரப்பயலே” என்று சொல்ல ஆசை>

“அந்த வல்லார ஓளிகளைப் பற்றி ஏன் கேக்கிறீங்க ? எல்லாரும் திருடனுக மேக வேட்டைச் சாமானுங்க. இரண்டனா தேவடியா கூடப் பக்கத்தில வர யோசிப்பா”

“எல்லாரையுமா மோசமென்றீங்கள ? சில நல்ல ஏழைகளைப் பத்தி யோசிக்கிற கட்சிகளுமிருக்கு. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்குங்க”

“கம்யூனிஸ்ட்டா ? உள்ளதுக்குள்ளேயே நாறி வீச்சமடிக்கிற பயலுக அவனுக. மில்லில என்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்த என்னை இந்தக் கண்டாரப் பயலுக சத்தம் போட்டு முதலாளிப்பயலுகளின்ர மயித்தப் பிடுங்கறன் எண்டாங்க நாங்களும் மில்லே எங்கட கைக்கு வரபோறதா நினைச்சுக் கனவு கண்டம். ஆனால் கடைசியா இவங்கள நம்பினதுக்கு வடை வித்துக்கிட்டுத் திரியன் என்னைப் பாத்தா பரம்பரையா வடை விற்கிறவன் மாதிரியா தொியுது” (சுருக்கப்பட்டுள்ளது)

கொள்கையாளர்களும்> அமைப்பாளர்களும் தடம் புரளும் போது பொதுமக்களிடையே நம்பிக்கையின்மை குடி புகுந்து விடுகின்றது. இதைத் தான் எனது நண்பன் பாதிக்கப்பட்ட எவருக்கும் ஒரு கொள்கையை ஒரு மாற்றுக் கருத்தை எடுத்துச் செல்லும் போது மதரீதியா எடுத்துச் செல்ல வேண்டும் என்றானோ தெரியவில்லை. மதம் தலைப் போடும் போது பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகம் இருக்காது என்பது அவன் வாதம்.

வாழ்வு –

பொன்னா பாட்டியின் நினைவலைகளின் போராட்டத்தில் தன் குடும்பம் ஏதோ சாபத்திற்குள்ளானதால் தொடர்ந்து துர்மரணங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதை உறுதிப்படுத்துவது போல் தொடர்ந்து வந்த மரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

பொன்னாவின் திருமணம். அவள் கணவன் மேல் கொண்ட வேட்கை. அவன் இறப்பிற்குப் பிறகான பொன்னாவின் வாழ்க்கை முறை. எம் மக்கள் எதனைக் கலாச்சாரம் என்று கட்டிப்பிடித்தபடி இருக்கின்றார்கள். கலாச்சாரம் என்றால் என்ன ? இல்லாத ஒன்றை இருப்பதாய் எத்தனை வருடங்களுக்குப் பாசாங்கு பண்ண முடியும். ஆனால் இந்தப் பாசாங்கு மாற்றமின்றித் தொடரப்போகின்றது. (கதை சொல்லியை ஒருவேளை கடியக் கூடும் கலாச்சாரம் பேணும் மக்கள்)

பொன்னாவின் மகள் ஆண்டாள் பால்யதிருமணத்தின் பின்னர் சில நாட்களில் கணவனை இழந்தவள். மறுமணம் என்பது பெற்றோரால் விரும்பப்படினும்> ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது அந்த ஒருவரோ இல்லைப் பெற்றோரோ என்று இல்லாமல் யாரோ ஒருத்தரின் மறுப்பினால் ஆண்டாள் மறுமணம் நிராகரிக்கப்படுகின்றது. இருந்தும் கணவனை இழந்த பெண்கள் தமது பாலியல் தேவைகளுக்கு வேறு ஒருத்தனைத் துணிவுடன் தேடுவது (கள்ளமாகவேனும்) கதை சொல்லியின் துணிவினைக் காட்டுகின்றது. ஆண்டாளைக் கண்காணிக்கும் பொன்னாவிற்குத் தன் பால்யல் தேவை முக்கியமாகப்படுகின்றது. மகள் ருசி அறியாதவள் என்ற அவளின் தன்நலம் பொன்னா மேல் எமக்கிருக்கும் (சொந்தங்களுக்கு) “அந்த” மரியாதையை உடைத்து விடுகின்றது. பின்னர் தனக்கும் மகளுக்குமாக மருத்துவச்சியிடம் மருந்து வாங்கி உண்ணும் போது> இன்றும் இந்த நுாற்றாண்டிலும் எத்தனை பெண்கள் இப்படியாக வாழ்கின்றார்கள் என்ற ஆதங்கமே மேலோங்குகின்றது.

முடிவாக நம்பி இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதிய கடிதம்> அவனுக்கு வாழ்வு பற்றிச் சிந்திக்கக் கிடைத்த அந்தக் கணங்கள். (உயிர் எல்லோருக்கும் வெல்லம்)

“இதுவரை நான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன். நீயோ மற்றவர்களோ நான் நல்ல பலனுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றேன் என்று நினைக்கலாம். நம்மை நிறைபோடுவது எப்போதும் மற்றவர்கள்தானே. ஆனால் நான் வாழ்ந்த வாழ்வு எனக்கோ ரோசாவுக்கோ தனிப்பட்ட முறையில் ஒரு பயனையும் இதுவரை தரவில்லை என்று இப்போது தோன்றுகின்றது. தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்த வாழக்கையால் என்ன பயன் ? ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்காக உழைப்பாதால் என்ன பயன் ? நிறைவேறாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப்போகின்றது. தாத்தா சொன்னார் கொழுப்பது வெற்றிகளால்தான் என்று. தோல்விகள் அதைச் சதையே இல்லாத எலும்புக்கூடு ஆக்கிவிடும். மிகச் சிலர்தான் வெற்றிகள் பின்னால் வரலாம் என்று நம்பி தோல்விகளோடு வாழும் வரத்தைப் பெற்றிருக்கின்றார்கள். நானும் அந்தச் சிலரின் ஒருத்தன் என்ற மாயை இப்போது மறைந்து விட்டது.”

சமூகத்திற்கு நல்லவனாக வாழ்ந்து பாமரமக்களுக்காக மனைவி ரோசாவுடன் சேர்ந்து இலவச வைத்தியசேவை செய்து கண்ணனுக்கும் வாசகர்களுக்கும் உதாரண புருஷனா வந்து போன நம்பி “கொம்யூனிஸக்காறன்” என்று கொல்லப்படுகின்றான். மீண்டும் பொன்னாவின் ஒரு வாரிசுக்கு துர்மரணம் ஏற்படுகின்றது.

எல்லாவற்றையும் துறந்து விட்டுப் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு பஞ்ச சமஸ்காரத்தில் (பூசையில்) கலந்து கொண்டான். (கொம்யூனிஸ்டுகள் எப்படி ? எல்லோரையும் போலவே கண்ணனுக்கும் உயிர் என்றால் வெல்லம்)

நாவல் பல காத்திரமாக ஆண்களையும் பெண்களையும் கொண்டு செல்கின்றது. இருந்தும் மனதில் நிற்பவர் சிலரே.

“தலித்” களைப் பற்றிய படைப்பல்ல என்ற “ஒரு” காரணத்தால் எமது “முற்போக்குவாதி”களால் இப்படைப்பு நிராகரிக்கவும் படலாம்.

சுமதி ரூபன் (கனடா)

sbalaram@ieccan.com

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்