பா.விசாலத்தின் படைப்புப்பயணம்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

க்ருஷாங்கினிபா.விசாலத்தின் படைப்புப்பயணம், 1954ல் சிறுகதை வடிவில் துவங்கியது. தனது பள்ளித் தோழரான சுந்தர ராமசாமியிடம் படைப்பைக் காண்பிக்க அவர் அதைப் பாராட்டி சரஸ்வதி பத்திரிகைக்கு அனுப்ப அது பிரசுரம் ஆயிற்று. பின் 40 ஆண்டுகள் கழித்து, தனது 60வது வயதில் தனது முதல் நாவலை எழுதி உள்ளார் பா.விசாலம். அதுதான் ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்’ என்ற நாவல். இந்நாவல் எழுதப்பட்ட பிறகும், அச்சேறாமல் கிடந்துள்ளது. ஒரிரு ஆண்டுகள் ஒரு பதிப்பகத்திலும், இந்திரா பார்த்தசாரதியின் சிபாரிசால் வாங்கிக் கொள்ளப்பட்டுப் பின், பெயர் தெரியாத பெண்ணின் நாவலை வெளியிட்டால் நஷ்டப்படுவோம் என்ற எண்ணத்தில் அப்படியே இருந்துள்ளது. இ.பாவுடன் இன்னும் சிலரும் நாவலைக் கையெழுத்து வடிவில் படித்துப் பாராட்டியபின், தாங்களாகவே சொந்தமாக 1994ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர். அது ஓராண்டுக்குள் நல்ல பெயரையும் புகழையும் பெற்று 1300 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தும் விட்டன. பரவலாக நல்ல விமர்சனங்களும் அந்த நாவலுக்குக் கிடைத் துள்ளது. இவைகள் எல்லாம் நடந்து 13 ஆண்டுகள் கடந்து விட்ட பின், தற் போது அதே நாவல் இரண்டாம் பதிப்பாக எனி இந்தியன் பதிப்பகத்தின் மூலம் மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியீட்டு விழாவும் இன்றைய நாளில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் நான் அதை ஆய்வுரை செய்து பேச அழைக்கப்பட்டு உள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்’ நாவல் ஒரு பெண் பார்வையை கொண்டதாக அமைந்துள்ளது. பெண்ணின் பார்வை என்பது வித்தியாசமான பார்வை கொண்ட ஒரு சிறுமியினுடையதாய் ஆரம்பிக்கிறது. எப்போதும் இயற்கையையும், மனிதர்களியும் மற்றும் அனைத்தையும் நேசிக்கும் சிறுமி அவள். காலுக்கு அடியில் புல்லின் இடையில் பூத்திருக்கும் சிறு பூக்களில் அழகைக் காணாமல், செல்லும் மனிதர்களைக் கண்டு ஆச்சர்யப்படும் சிறுமி, அப் பூக்களை மாலையாக்கி மகிழ்கிறாள். தங்கள் கண்களுக்கு எதிரில் இருக்கும் மலர் களை மட்டுமே மதிக்கும் பெரியவர்கள், அவர்கள் காலடியில்; ஏன் கண்களைத் தாழ்த்திக் காணமாட்டேன் என்கிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறாள். எல்லா நிகழ்வுகளையும், எல்லா மனிதர்களையும் கேள்விக்குள்ளாக்கி அதற்கான விடை தேடுவதையே தன் செயலாக்க முயலும் சிறுமி, முரண் எங்கு எதிர் பட்டாலும் அங்கு கேள்வி எழுப்புகிறாள். இதுதான் அவளின் அரசியல் பாதையையும் தீர்மானிக்கிறது.

பள்ளி ஆசிரியர் சொன்ன பரசுராமன் கதை சிறுமியின் மன ஆழத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்பா சொன்னதற்காக, மகன் அம்மாவைக் கொல்லலாமா? கொல்ல முடியுமா? முனிவர் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? முனிவர் மனைவியை வெட்டச் சொல்ல முடியுமா? என்பன பொன்ற பெரும் பெரும் கேள்விகளை எழுப்புகிறது மனக் கடல். தான் சார்ந் திருக்கும் அமைதியான குடும்பத்தையும், பரசுராமரையும் ஒப்பிட்டுப் பர்க்கிறது. தனது அப்பாவின் பிம்பம் கொண்டு மற்றொரு அப்பாவை எடைப் போட்டுப் பார்க்கிறது மனம்.

சொல்வதொன்றும், செய்வதொன்றுமாய் இருக்கும் எல்லாமே கேள்வியாய் எழுகிறது. பெரியக்காவின் தாவணி சற்றே விலகினாலே ஆத்தா, ‘பொம்பளே புள்ளக்கி சேல விலகலாமா?’ எனக் கண்டிக்கிறாள். வீட்டு வேலைக்காரப் பெண்கள் ஜம்பருடன் மட்டுமே உலவி வருவது ஏன்? அக்கா மட்டும்தான் பொம்பளயா? அல்லது சேலை விலகுவது அக்காவிற்கு மட்டுமே மாபெரும் குற்றமா?

இதே எதிர்க் கேள்வி கேட்கும் மனம்தான், பின்னாளில் கதை நாயகியை கம்யூனிஸ இயக்கத்தில் இணைய வைக்கிறது என்றால், கேள்விக்குள்ளாக்கும் நேர்மையற்ற செயல்கள்தான், அதே எதிர் கேள்வி மனம் தன் இயக்கத்திலுள்ள சுயநலப் போக்கை கண்டு பொங்கவும் செய்கிறது. சுயநலமிகள் மத்தியில் தன்னால் தொடர்ந்து இயங்க முடியாது என்பதையும் கண்டு கொண்டு விலகிப் போகவும் செய்கிறது. ‘மெல்லக் கனவால் பழங்கதையாய்’ நாவலின் தொடக்கமே அதன் கடைசிப் பகுதிதான். அதிலிருந்துதான் நாவல் பின்னோக்குப் பாதையில் பயணித்து சிறுமிப் பருவத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது ஆசிரியரை. சோஷலிஸ இயக்கம் உருப்பெற்று விட்டது. அது உலகம் முழுமைக்கும் தனது நாட்டிற்கும் கூட பெரும் சமத்துவத்தையும், வளத்தையும் செழிப்பையும் கொண்டு வந்து ஏற்றதாழ்வற்ற ஒரு பொன்னுலகையும், மனித வழ்க்கையைத் தரும் மிகப் பெரிய நிதர்சனம் என்று நம்புகிறார் நாயகி. ஆனால் நம்பிய உள்ளத்தில் ஏற்பட்ட ஏமாற்றம், மனதில் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு உள்ளிருக்கும் அனைத்தையும் எழுதச் சொல்லி தூண்ட, நாவல் பின்னோக்கி ஓடி தன்னை வடிவமைத்துக் கொண்டு இருக்கிறது. நாவலின் நாயகி, சிறுமியாய் இருக்கும் பொழுதே நாட்டு நடப்புக்களைத் தொடர்ந்து கவனித்து வருபவளாய் சித்திரிக்கப் படுகிறாள். வீட்டுப் பெரியோரின் வார்த்தைகளாலும், முன் தெரியும் சில தோற்றக் காட்சிகளாலும், சுதந்திரம் என்பது நாட்டிற்குக் கிடைத்து விட்டால், எல்லா மக்களும் களிப்புற்று வாழ இயலும் என்ற அப்பாவின் எதிர் பார்ப்பு சிறுமியையும் தொற்றிக் கொள்கிறது. பாரதியின் சுதந்திரப் பாடல் களைத் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கும் சிறுமி, எல்லாப் பாடல் களினுடைய அடிப் பொருளையும் தெரிந்து கொள்ள முயல்கிறாள். பர்மா பிரிந்தது, அகதிகளாக இந்தியா வருவோரின் துன்பங்கள், காந்தி சுடப்பட்டது என, நாவலின் சிறுமியின் வாழ்க்கைக்குள் அரசியல் நிகழ்வுகள்களையும், குடும்ப மாறுதல்களையும் இணைத்தே சொல்லப்படுகிறது. பொதுவுடமை எனப் பேசப் படும் இயக்கத்தை இழித்துப் பேசும் ஆண்களால், அந்த இயக்கத்தின் பெண்கள் அனைவருக்கும் பொது என்று கொச்சைப் படுத்தி பேசப்படும் பொழுது நாயகி வெகுண்டு எழுகிறாள்.

சுதந்திர இந்தியாவில் தேர்தல், திராவிடக் கட்சிகளின் மலிவான பள பளப்பில் மக்கள் வெகு விரைவில் ஏமாந்து போகிறார்கள். இதை அறியும் நாவலின் நாயகி மக்களை எப்படி சரி செய்வது என்று பிரமித்துப் போகிறாள். மேலும், நடிகர்களின் கவர்ச்சி, பணம் கொடுத்து ஓட்டுப் போட வைத்தல் போன்ற மோசடிகளின் ஒரே தீர்வாக எல்லவற்றிக்கும் சிறந்த மாற்றாக, கம்யூனிஸ இயக்கத்தை அடையாளமாக்குகிறார் படைப்பாளி. எனாமல் தகட்டில் பெயர் பொறித்துத் தாலிக்கு பதில் அணியும் சீர்திருத்தத் திருமணம் நடை பெறும் வீட்டில் வாழாவெட்டியாய் இருக்கும் ஒரு இளம் பெண், படைப் பாளியின் நினைவுக்குள் வருகிறாள். போலியை களைய முயல்கிறாள் நாயகி. அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆனால் மக்கள் மலிவுக்கு அடிபணிகிறார்கள்.

பெண் எப்போதும் சமுதாயத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவளாகவே இருக்கிறாள் என்ற ஆதங்கம் மனதில் கொண்டுள்ள நாவல் நாயகி, எல்லா வற்றிற்கும் தீர்வாகக் கருதும் தனது இயக்கத்துத் தோழர் ஒருவரும் கூட, தனிமையில் இருக்கும் நாயகியிடம் தவறாக நடக்க முயற்சித்து, அங்கும் தான் ஒரு வெறும் பெண் உடல்மட்டுமே என்று பார்க்கப்படும் பொழுது அதிர்ச்சி அடைகிறாள்.
கம்யூனிஸ இயக்கத்திலும் பெயர் சொல்லப்பட ஒரு பெண்ணும் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் கரணமாகவே நாயகியும் இணைக்கப் படுகிறாள். அவளோ முழு மனதோடும், சுயலமற்றும், நேர்மையோடும் தன் கடைமையை ஆற்றுகிறாள். ஆனால், அப்பெண்ணின் வளர்ச்சி எல்லோராலும் கொண்டாடப் பட இயலாததாகி, தோழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்த வில்லை, எனவேதான், அவள் வசிக்கும் ஊரில் நடை பெறும் கூட்டம் கூட அப் பெண்ணுக்கு அறிவிக்கப்படாததாக்கி விடுகின்றனர் தோழர்கள். தனது வளர்ச்சி சிலருக்கு போறாமை உண்டாக்கி இருக்கிறதோ என்ற எண்ணம் அப்போதுதான் நாயகியின் மனதில் உதிக்கிறது.

குடும்பம் தான் உன்னதம், கூட்டுக் குடும்பமான தனது குடும்பம் ஒரு முன்னுதாரணம் என்றும், உடன் பிறந்தோரும் அன்னையும் அன்புக்குக் கட்டுப் பட்டு சுயநலமற்று, மனிதாபிமானத்தோடுதான் இருப்பார்கள் என்றும் நினைக்கும் சிறுமி, பெரியவளாகும் பொழுதும் அதே கற்பனையில் வாழ்கிறாள். ஆனால், வெறும் பணத்திற்காக, சொத்துக்காக அனைவரும் சண்டையிட்டுக் கொள்வதையும், இருப்பதைப் பறித்துக் கொள்ளவும் தனதாக்கிக் கொள்ளவும், போட்டியிடும் அக்காக்களின் கணவர்களையும் பார்க்கும் பொழுது, வாழ்க்கை, குடும்பம் என அனைத்தின் மீதும் எதிர்க் கேள்வி எழுகிறது அவள் மனத்துள்.

பெண்ணுக்கு சொத்தில் உரிமை, அம்மாவின் சொத்து மகள்களுக்கு என்ற சட்டமும் மாயைதான். அம்மாவின் சொத்தை அடைய அவள் உயிருடன் இருக்கும்போதே வக்கீல் நோட்டிஸ் விட்டு தாங்கள் வசமாக்கிக் கொள்ள கணவர்மார்களால் (ஆண்களால்) தூண்டப்படும் பெண்கள் தன்னிலை அறியாது ஆணுக்கு சாதகமாக, எதிர்த்துப் பேசாமல் அடி பணிகிறார்கள். குடும்பம், கம்யூனிஸ இயக்கம், ஜனநாயகம், உறவுகள், உலகம் எதுவும் தான் எண்ணியபடி நேர்மையோடும், சுயநலமற்றும், உண்மையாகவும் இல்லாமல் இருக்கிறது. பணம், பதவி, சுயநலம் இவைகள்தான் மனிதர்களின் அடிப்படையாக இருக்கிறது, வீட்டிலும், நாட்டிலும், அரசியலிலும் என எல்லாப் பக்கங்களும் ஒன்று போல என்பதால் படைப்பாளி, தனது நாவலுக்கு ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்’ என்ற எதிர்மறைத் தலைப்பையும் சூட்டி இருக்கிறார். எதிர்பார்ப்புக்கள் நொறுங்கி, இயல்பு சுபாவம் வெளிப்படையாய் வெளுத்துப் போகிறது.

நாவல் தெளிவான நடையில் சொல்லப் பட்டிருக்கிறது. வித்தைகள் அற்ற நேரடியான நடை. சொல்ல வந்த விஷயத்திற்கு எந்த விதத்திலும் புதிர் போட வில்லை. அப்படி அப்படியே நேரடி நேரடியான விவரிப்பு. சுய அபிப்பிராயங் கள்தான் நாவல் முழுவதும். என்றாலும் வலிந்து திணிக்கப்பட வில்லை. நேர்மையின் இழையும், உண்மையின் இழையும் பரவி நெய்திருக்கிறது நாவல். கம்யூனிஸ இயக்கத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் தன்னை முற்றிலுமாக இணைத்துக் கொண்ட பெண்தான் நாயகி என்ற போதிலும், இயக்கம் பற்றிய சில அறியாமைகளைபற்றின தெளிவு பெற வெட்கம் கொள்ளாத பெண். கேட்டுத் தெரிந்து கொள்ள எப்போதும் தன்னைத் திறந்த பக்கங்களாக வைத்துக் கொண்டும் உள்ளார். தான் உள்வாங்கிக் கொண்டது சரியா? தன் பேச்சு சரியா? அறிதல் சரிதானா? என எப்போதும் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

நாவலின் நாயகி, குடும்பம், திருமணம் போன்ற உறவுகளிலிருந்து விலகி முற்றிலுமாக அவற்றை எதிர்த்துப் பேசும் பெண்ணியவாதி அல்ல. மெல்லிய காதலும், குடும்ப எதிபார்ப்பும், பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் பெண்ணாகத்தான் சொல்லப் பட்டிருக்கிறாள்.
இந்த நாவலின் நாயகிக்கு பெயர் இடப்படவில்லை. தன்மையில் எனப் பேசப்படும் நாவலாததால் பெயர் அறிய வாய்ப்பில்லை. பெயர் எந்த இடத்திலும் குறிப்படப்படாதது மட்டுமில்லாமல், வேறு எந்த ஒரு இடத்திலும் வேறு யாருமோ கூட பெயர் சொல்லி அழைக்கவில்லை. எனவே, ‘நான்’ சிறுமியாய், நடு வயதினளாய், சற்றே முதிர்ந்தவளாய் என்றுதான் நாவல் முழுவதும் வருகிறாள்.

நாவலில் நாயகிக்கு நிகராக நாவல் முழுவதும் இடம் பெறும் மற்றொரு பெண், அவளின் தாய். நாயகி அரசியலில் இயக்கம் சார்ந்து இயங்குகிறாள். இலக்கியம் சார்ந்து இயங்குகிறாள். வெளியில் செல்கிறாள். தேர்தலில் நிற்கிறாள். கூட்டங்களில் பேசுகிறாள். தோழர்களை அழைத்து வீடுவருகிறாள். அவர்களுடன் வெளியில் செல்கிறாள். முடிந்த நேரத்திற்கு வீடு திரும்புகிறாள். நேரும் போதெல்லாம் வெளியூர் செல்கிறாள். தோழர்கள் நாட்கணக்கில், மாதக்கணக்கில் வீட்டில் தங்குகிறார்கள். கூட்டம் கூட்டமாக வீட்டிற்கு வருகின்றனர். உரிமை கொண்டாடுகின்றனர். எல்லாவற்றிக்கும் எந்தவிதமான முகச்சுளிப்போ, கேள்வி களோ இல்லாமல், உணவும், சிற்றுண்டியும், தேநீரும் அந்தந்த நேரத்திற்கு வழங்கப்படுகிறது அம்மாவால். எத்தனை டீ, எத்தனை தோசை? எப்போதும் அடுக்களையில் உழலும் பெண். நாயகியின் அன்னை, எந்தவிதமான எதிர் பார்ப்போ, அல்லது தான் செய்து கொடுக்கிறோம் என்ற பெருமிதமோ கூட இல்லாதவள். எப்போதும் அன்பு ஒன்றே நிறைந்திருக்கும் இப்பெண் இன்னமும் நாவலின் கனம் அதிகரிக்கச் செய்கிறாள். தன் பெண் நேர்மையானவள், சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவள் என்ற எண்ணம் எப்போதும் கொண்டிருந் தாலும் கூட பெண்ணின் எதிர்காலம் தனக்குப் பிறகு என்ன என்ற கவலை மட்டுமே அவளின் பயத்தை அதிகரிக்கச் செய்கிறது.

கம்யூனிஸ இயக்கம் இரண்டாகப் பிளவுபடுகிறது. பிளவுபட்ட இயக்கத்தில் தொடர இயலாத கதை நாயகியும், நந்தனும் அதிலிருந்து விலகுகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒத்த நோக்குடைய இருவரும் எந்த எதிர்பார்ப்பும், சிறப்பான திருமண நிகழ்வும் வேண்டாமல், -கிடைக்காமலும்கூட- இணை கிறார்கள். ஒரு பிளவும், ஒரு இணப்பும் என்பதாக நாவல் முடிவடைகிறது.

ஒரு பெண்ணால் எழுதப்பட்ட, அரசியல் தளம் – கட்சி அரசியல் சார்ந்த என்பதாலேயே இன்னமும் சிறப்புப் பெறுகிறது ‘மெல்லக் கனவாய் பழங் கதையாய்’ நாவல். அரசியல் சார்ந்த நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும் பெண்களால் படைக்கப்படுகின்றன. சுய அரசியல், பெண்ணிய அரசியல் என பல வகைகளிலும் படைப்புகள் உருவாகின்றன. எதோ ஒரு அரசியலை உள்ளடக்காத படைப்பே இருக்க முடியாது. ஆனால் இன்றும் கூட கட்சி அரசியல், இயக்க அரசியல் சார்ந்த பெண் படைப்புகள் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
பா.விசாலம், அரசியல் சார்ந்து இயங்கி, கட்சியைப் பற்றி அறிந்து, அதில் தன் அடைந்த அனுபவங்களையே அதன் நேரடித் தாக்கத்தோடு நாவலாக்கி யுள்ளார். ஒருவகையில் இது ஒரு தன் வாழ்க்கைக் குறிப்பு. ஆனால் இந்த நாவலின் முதல் பதிப்பில், தன்னுரையில் பா. விசாலம் முதல் வாக்கியமாக ‘இந்த நாவலில் வரும் சம்பவங்களும், உரையாடல்களும் மற்ற நிகழ்வுகளும் கற்பனையே’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு என்ன தேவை? இந்நாவல் கற்பனையாக சாத்யம் எங்கு இருக்கிறது? ஏன் இருக்க வேண்டும்? படைப்பாளி தான்சாராத, அல்லது பார்க்காத நிகழ்வுகளைப் படைப்பது எங்கணம்? படைப் பாளியும், படைப்பின் எதோ ஒரு பகுதியில் அல்லது பல பகுதிகளில் இருக்கத் தானே முடியும்? “நான்” ஆக அடைத்துக் கொண்டு நிரப்பட்டு இல்லாமல் நிழலாகவாவது வெளிப் பட்டுத்தானே ஆக முடியும்?

இந்நாவலில் எனக்கு உறுத்தும் விதமாக என்று தோன்றுவது, கம்யூனிஸ இயக்கம் சார்ந்த நீண்ட சொற் பொழிவுகளும், நீண்ட, நீண்ட உரையாடல் களும்தான்; அதுவும் தன் தாயிடம். அது ஏதோ தனியாக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு எழுப்பப்படும் பிரசங்கம் போல் இருக்கிறது. படைப் பாளியிடம் நிறைய எதிர் மறையான அனுபவங்கள். எனவேதான் நாவலுக்கு ‘மெல்லக் கனவாய், பழங்கதையாய்’ என்ற எதிர்மறை தலைப்பு உருவாகி இருக் கிறது. இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் பா.விசாலம் தனது முன்னுரையை இன்னமும் சற்றே விளக்கமாக அமைத்திருக்கலாம் என்பது என் எண்ணம். இடையில் கழிந்த 13 ஆண்டுகளில் இந்த நாவல் கண்ட எதிர் விளைவு, அல்லது பக்க விளைவு, மாற்றம், மற்றும் பரிமாற்றங்கள் பற்றி கூறியிருக்கலாம். அப்போது என் போன்ற வாசகர்களுக்கு இன்னமும் புரிதல் அதிகம் கிடைக்கும்.

பா.விசாலம் அவர்களின் மற்றொரு நாவலான ‘உண்மை ஒளிர்க என்று பாடுவோம்’ எனி இந்தியன் பதிப்பகத்தின் மூலமாகவே இரண்டாம் பதிப்பு வர இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ந்தேன். அம்ருதா பதிப்பகத்தினர் பா. விசாலத்தின் சிறுகதைகளை புத்தக வடிவாக்குகிறார்கள் என்றும் அறிந்தேன். அரசியலும் உண்மைகளும் இன்னமும் பல வடிவில் பா.விசாலம் அவர்கள் ஊடாக படைப்பாக வெளி வரவேண்டும் என்பது எங்கள், வாசகர்கள் விருப்பம்.

(25-8-2007அன்று எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கில் பா. விசாலம் அவர்களின் ‘மெல்லக்கனவாய் பழங் கதையாய்’ நாவல்குறித்து வாசிக்கப்பட்ட ஆய்வுரை)


‘க்ருஷாங்கினி’

nagarajan63@gmail.com

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி