பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

சிவகாசி திலகபாமா


17.04.05 அன்று காலை 10 மணி அளவில் பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் வைகை செல்வி அவர்கள்

வந்திருக்க நிகழ்ச்சியின் ஆரம்ப உரையில் திலகபாமா

ஞான பீட பரிசு பெற்ற ஜெயகாந்தன் அவர்களுக்கு பாரதி இலக்கிய சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, பாரதி இலக்கிய சங்கம் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றதை மகிழ்வோடு நினைவு கூர்ந்து,

இன்று இலக்கியத்தை சிற்றிதழ்கள் தான் வளர்ப்பதாகவும் அந்த இதழ்கள் கொண்டாடுகின்ற

நபர்களின் கையில் இலக்கியம் தவமிருப்பதாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற சூழலில் ,

யார் பெரியவர் , யார் வளர்க்கப்படப்போகிறார்கள் , எனும் இருப்பை நிலைநிறுத்தும் போராட்டத்தில் வியாபாரத் தளங்கள் உள்நுழைய வணிகப்பத்திரிக்கைகளின் போக்குகள் இலக்கியத்திற்குள் “பசுத்தோல் போர்த்திய புலி”களாய்

உள் நுழைந்தே விட்டன . மலிவான ரசனையைக் கச்சாப்பொருளாகக் கொண்டு கலகக் காரர்கள் என்றும் கலகக் குரல்கள் என்றும் சமுதாய சிந்தனைகளை திசைதிருப்பும் போக்குகள் இலக்கியத்திற்குள் உள் நுழைந்திருக்கின்ற வேளையில் , உண்மைகளை, இன்னமும் பொய்மைகளால் பாதிக்கப்படாத எழுத்துக்களை தங்கள் வாழ்வின் அடித்தளத்திலிருந்து வேர் கொள்ளும் இயக்கங்களை அடையாளம் காணும் முக்கியப் பணி நமக்கிருப்பதாகக் கருதுகின்றேன் .

எழுதப்படுகின்ற எழுத்துக்கள் நமக்கு, சமுதாயத்திற்கு எதைச்சொல்ல வருகின்றன . எதை வருங்காலத்திற்கு பதிவாக்கி போக விருக்கின்றன .என ஆய்வு

மனப்பான்மையோடு உற்று நோக்குவதும் அப்படி நாம் சிறந்ததென்று கண்டதை

ஸ்திரமாக்கி சமுதாயத்திற்கு அளிப்பதுவுமே நமது இன்றைய முக்கிய பணி என்று நம்புகின்றேன்.

அந்த நம்பிக்கைகளின் வரிசையில் முதலில் இங்கு விமரிசனத்திற்கு எடுக்கப்படும் தொகுப்பு வைகை செல்வி அவர்களின் கருவேப்பிலைசெடியும், நெட்டிலிங்க மரங்களும்

15 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது,

இன்று பெண்களும் , பெண்களின் எழுத்துக்களும் திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற

காலத்தில் , பெண் , ஆண் இடுகின்ற வார்ப்புக்குள்ளேயே இருந்து விட வேண்டும் என்று

தீர்மானத்தில் , பெண்ணை , பெண் எழுத்தை , தனக்கான ஒன்றாக பத்திரிக்கையும்,

இலக்கியவாதிகளாய் முகமூடிகள் போட்டவர்களும் மாற்றிக்கொண்டிருக்கின்ற காலத்தில்

அந்த சூழலுக்குள் சிக்காத எழுத்தாக வெளிவந்திருப்பது ஒன்றே நாங்கள் வளர்த்தெடுக்க வேண்டிய படைப்பாக அடையாளம் காணும் முக்கிய தகுதியுடன் இங்கு விமரிசனத்திற்கு வைக்கப்படுகின்றது.

வழமைக்கு மாறாக நிகழ்கின்ற சம்பவங்களின் மறு பக்க பார்வை பதிவாகியிருப்பதை இச் சிறுகதைகளில் காண முடிகிறது . ஆணிடமிருந்து கிடைக்கக் கூடிய மெளனங்கள் கூட பெண்ணுக்கு எதிராக போகிறது என்பதை அதே மெளனங்களோடு ஆர்ப்பாட்டமில்லாது சொல்லிப் போகிறது..

இதில் ஆகச் சிறந்த கதையாக மனிதர்கள் கதையை சொல்லலாம். இன்று தலித் பிரச்சனையை தலித் தான் சொல்லலாம் எனும் வெற்றுக் கோசங்கள் நிரம்பியிருக்கின்ற இலக்கிய உலகில், சக மனிதனின் துயரங்களுக்காக வருத்தப் படும் யாரும் எழுதலாம்,

என நிரூபித்திருக்கின்ற கதை . இந்தக் கதையிலிருந்து தனது எழுத்துக்கான தொடர்ச்சியை நகர்த்தி செல்வது வைகை செல்வியிடம் நம்மை அதிகமாக எதிர்பார்க்க வைக்கும்

என்று கூறி முடிக்க ,

வைகை செல்வி தனது தொகுப்பில் உள்ள “மனிதர்கள் “ கதையை வாசித்தளித்தார்

தொடர்ந்து க்ஷீபதி தனது விமரிசன உரையில்

பெண்ணிய சிந்தனை உள்ள திருமிகு வைகைச் செல்வி அவர்கள் கவிஞரும் கூட என்பது நாமறிந்ததே . அவர் , காவ்யா வெளியீடாக வந்திருக்கும் “கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும்” என்ற தொகுப்பின் மூலம் சிறுகதை ஆசிரியராகவும் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது . இத்தொகுப்பில் நெஞ்சில் பதியும் பல சிறுகதைகள் உள்ளன .

இத்தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார் . இவைகளில் பல

பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை , பலவிதமான பெண்களை , பெண்களின் பலவிதமான

பரிமாணங்களை , குணங்களை படம்பிடித்து காட்டுவனவாக உள்ளன.

என்னை மிகவும் பாதித்த கதை :மனிதர்கள்”, மனிதநேயம் மிக்க குடும்பத் தலைவியின் , கணவன் மீதான முப்பதாண்டு கால கோபம், காமத்தால் தவறு செய்யப்

போகும் மகனை தடுக்கும் விதம் .கணவனுக்கும், மகனுக்கும் அவள் கொடுத்த தண்டனை .

என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படியொரு அசூயையை ஏற்படுத்துகிறது.

இக்கதை என்னை மேலே தொடர்ந்து படிக்க முடியாத அளவிற்கு மனதில் பாரத்தை ஏற்றி

பாதித்தது ,

நூலின் தலைப்பு கதையான கறிவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்க மரங்களும். . .

இதில் வரும் செல்வபாரதி மற்றும் வசந்த குமார் என்ற இரண்டு கதாபாத்திரங்களும் நாம்

அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் முகங்கள் ஏன் அவர்கள் இருவரில் ஒருவர் கட்டாயம்

நாமாகக்கூட இருக்கலாம் . இது மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது.

“முத்தமா எழுந்திருச்சி இந்தக் கஞ்சியக் குடிபுள்ளே. பொம்பளய பூ மாதிரி பொத்தி

வைக்கணும்பாங்க . ஆனா கல்லை ஓடைக்கிறவங்களுக்கு இந்தப் பூவ ஒடைக்கிறதா பெரிய

விசயம் ? சரி . . . சரி . . நீ என்னா நடந்ததுன்னு இப்ப அழுதுக்கிட்டிருக்கே.. . . ஒம் புருசன்

நைட்டுல வந்து என்ன ஆட்டங் காண்பிக்கப் போறானோ ? கொஞ்சமாச்சும் கஞ்சி குடி

ஒடம்பிலே உசிரு ஒட்டறதுக்காச்சும் பசை வேண்டாமா ?:”

இதுபோன்ற யதார்த்தமான உரையாடலைத் தாங்கி வந்துள்ள கதை கல்லும் , பொண்ணும் காலுக்கு மெத்தை இந்த தலைப்பே கதாநாயகியின் நிலையைச் சொல்லி விடுகிறது . இக்கதையில் முத்தம்மாளின் வாழ்க்கை நிலை கண்களில் நீரை வரவைக்கிறது .

பொருளாதாரம் பல வழிகளில் அவளது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதை நன்றாக

படம் பிடித்து காட்டியுள்ளார் வைகைச் செல்வி குடிகார கணவன் , காமாந்தக மொதலாளி

என்ற இரு மிருகங்களுக்கிடையில் அவள் வாழ்க்கை உடைபடுவது தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளது .சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று .

:”தாயின் மடியில் “ எனும் கதையில் தாயின் அன்பை மழையோடு இணைத்து கதை

சொல்வது சிறப்பு மழையும் ஒரு கதாபாத்திரமாக கவிதையாக மனதை நனைக்கிறது . ஒரு பெண் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வொரு ஏமாற்றமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது . மகளது ஆண்

நட்பு , காதல் ,ஏமாற்றம் என ஒவ்வொரு கட்டத்திலும் அந்த தாயினது வெளிப்பாட்டை

மழையோடு சிறப்பாக சித்தரித்துள்ளார் வைகைச் செல்வி .

குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை மையமாகக் கொண்டு இயங்கும் கதை “ரோஜா” இதன் மூலம் , சிலரது சுயநலத்தால்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவாக்

கப்படுகிறார்கள் என்று உள்ளங்கை நெல்லிக்கனி என நிரூபித்திருக்கிறார் .

காதலை மையமாகக் கொண்டு கவிதைபோல் தழுவிச் செல்லும் கதை “எல்லாப்

பாதைகளும் ரோம் நகரம் செல்லுமோ ? “ ஷரண்யா என்று ஒரே ஒரு இடத்தில் மட்டும்

கதாநாயகியின் பெயர் வருகிறது . அதை தவிர்க்கலாம் . இது ஒரு சொல்லாத காதல்கதை .

ஒரே நேரத்தில் இரு கதாபாத்திரங்களுக்கிடையில் நிகழும் மனவோட்டம் அற்புதமாக

சொல்லப்பட்டுள்ளது . முடிவு எதிர்பாராத விதமாக அமைத்தது சிறப்பு ஆண் கதாபாத்திரத்தின் மெளனம் { ஏமாற்றுதல் } கோபத்தை உண்டாக்குகிறது .

சிறு நகர வாழ்வை விட்டு பிழைப்பிற்காக சென்னை வந்து வேலையின் நிமித்தம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி அடிபடுபவன் பற்றிய கதை “மஞ்சள் ரேகை” சென்னை

பெண்கள் மஞ்சள்நிற பூ சூடமாட்டார்கள் என்ற வித்தியாசமான தகவல் இதிலுள்ளது.

பொருளாதார கஷ்டத்தால் கோபக்கார முதலாளியை காக்கா பிடிக்க நினைத்து போக்குவரத்து நெரிசலில் அடிபடும் கதாபாத்திரம் பாவமாக உள்ளது கண்களில் நீரை

வரவழைக்கிறது .

டெபுடி டைரக்டர் ஷாந்தினி , தனது இருப்பை ஏளனம் செய்ய எண்ணும்

பெரிய நாயகத்திடம் போர் செய்ய புறப்படும் கதை “போர்த் தொழில் பழகு” . இது

பெண்மையை அடிமையாகவே இருக்க வேண்டும் என எண்ணும் பழைய பஞ்சாங்கங்களுக்கு

சரியான சவுக்கடி .

கருத்தரங்குகளில் நடைபெறும் சில புத்திக்காரர்களின் செயல் தெளிவாக படம்

பிடித்துக் காட்டியுள்ள கதை “மிஸ் இந்தியா”. பீடி சுற்றும் சிறுமியை இந்தியா என்று

செல்லும்போது நம் நாட்டின் உண்மை நிலை வெட்கப்பட வைக்கிறது .

மாமனாரை நம்பிச் சென்றால் மனைவியிடம் மரியாதை இருக்காது எனபதையும்,

ஊரே பேசும் ஒரு மாதிரியான பெண்ணிடம் அன்பும் பாசமும் இருக்கும் என்பதையும் காட்சிகள் மூலம் அழகாக விளக்கியுள்ள கதை “ வீடு” .

மின்மினிப் பூச்சிகள் என்ற கதையில் வரும் கதாநாயகி கலாவுக்கு அறியாத பருவத்தில் ஒரு சூடு , இளமை பருவத்தில் ஒரு சூடு என்று காதல் இரட்டைச் சூடு போடுகிறது .அதன் பிறகே அவளுக்கு ஞானோதயம் . மின்மினிப் பூச்சிகளை இனம் காண

பெண்களுக்குத் தெரிய வேண்டும். பகட்டாக வெளி வேசம் போடும் ஆண்களை விலக்கப்

பழக வேண்டும் என இக்கதை வலியுறுத்துகிறது .

மொத்தத்தில் இத்தொகுப்பின் மூலம் , தெளிந்த நீரோடை போன்ற குழப்பமில்லாத

நடை , கதைக்கான களனை காட்சிப்படுத்துதல், சிறப்பான கற்பனை வளம் . தங்கு தடையின்றி கதை சொல்லும் பாங்கு, கதாபாத்திரங்களின் உளவியலை சித்தரிப்பது, வட்டார

வழக்கு உரையாடல் என பல அம்சங்கள் வைகைச் செல்வியிடம் மிளிர்வது தெரிகிறது.

தேவை அன்பு மட்டும் கதையில் பிரச்சாரம் செய்வது துருத்திக் கொண்டுள்ளது. கவிதை அரங்கேறும் நேரம் , விண்ணும் மண்ணும் கை குலுக்க . . . . ஓ மரியா , போன்ற

கதைகளில் காட்சியமைப்பு கற்பனை வளம் சிறப்பாக இருந்தாலும் காட்சிப்படுத்துதல்

மட்டுமே உள்ளது.

நிறைவாக வைகைச் செல்வி அவர்களின் கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க

மரங்களும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு பாராட்டும்படியாக உள்ளது . இன்னும் பல

கதைகளை அவரிடம் எதிர்பார்க்கச் சொல்கிறது .

தெநீர் இடைவேளைக்குப் பிறகு , பெண்கள் சந்திப்பு மலர் பற்றிய தனது விமரிசனத்தில், திலகபாமா, பல்வேறு இலக்கிய சமூக போக்குள்ள எழுத்துக்கள் கவிதைகளாக , கதைகளாக கட்டுரைகளாக ஓவியங்களாக வெளிவந்துள்ளன. வைகை செல்வி கட்டுரை, பாமதி கவிதை , கிரிஸ்கிராஸ் கட்டுரை, கமலா வாசுகி எனும் ஓவியரின் நேர்காணல் , சந்திரவதனா அவர்களின் சிறகிழந்த பறவியாய் எனும் மொழிபெயர்ப்பு சிறுகதை போன்றவை அந்த எழுத்துக்களிலிருந்து, அது தரும் சிந்தனையிலிருந்து நம்மை நிறைய யோசிக்க வைக்கின்றன.

சுமதி ரூபனின் நாகதோசம், பாமாவின் சிறுகதை மாலதி மைத்ரியின் கவிதை ஏமாற்றம் தருகின்றன, புதிய மாதவியின் கவிதை கலை வடிவாக்கத்தில் கவனமின்மை கவிதைகளில் தெரிகிறது.. கிரிஸ் கிராஸ் கட்டுரையில் வந்திருகின்ற “ ஆணாதிக்கம் பல நுண்ணிய வழிகளில் செயல்படுகின்றது எனும் வரியை தொடர்ந்து கட்டுரையில் வருகின்ற விசயங்கள் நான் பலமுறை சிந்தித்த விசயங்களை போட்டு உடைத்து போவது சந்தோசம் தருகின்றது.

ஒட்டுமொத்த வாசிப்பில் வேறு பட்ட கலாசாரம் , நாடு , மதம், வாழ்வியல், எவ்வாறாக இருப்பினும், பெண் வாழ்வு, வெற்றி என்பது ஆணைச் சார்ந்து அல்லது அதை தீர்மானிக்கக் கூடியவனாக ஆண் இருகின்றான் என்பதும் , போரும் புலம் பெயர் வாழ்வும் கூட அதை மாற்றி விட முயலாததாக இருக்கின்றது என்ற உண்மையும் மீறி வெளி வர முயலும் புதிய தளங்களை , வெளிகளை உருவாக்க முயல்வதும், ஏற்கனவே எங்ஜ்களை மடக்கிப் போடவென்று இருந்த மனோ நிலைகள் வேறு தோல் போர்த்திக் கொண்டு உலாவருவதை அடையாளம் கண்டு வென்றெடுப்பதும்,, பெண் எழுத்திற்கு முன் நிற்கின்ற பிரச்சனைகள் என்பதுவும் தெரிய வருகின்றது

தொடர்ந்து பேசப்பட்ட விசயங்கள் தொடர்பாக விவாதங்கள், கலந்துரையாடலில் இடம் பெற்றன. அதில் லஷ்மி அம்மாள் மாரீஸ்வரி, முத்து பாரதி, ஜெகனாதன், கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.

லஷ்மி அம்மாள் பேசுகையில் “ இதற்கு முன் இந்த கூட்டத்திற்கு வந்த எழுத்தாள்ர் ஒருவர், சென்னையில் நாங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் ஆறோ , ஏழு பேரோ என்றாலும் எல்லாரும் இன்டெலெக்சுவல்ஸ்தான் கலந்து கொள்வோம் என்றும், இன்னுமொரு எழுத்தாளர் புல் தடுக்கி பயில்வான்களாக நடத்துறீங்களோ ? என்று கேள்வி எழுப்புகிறார். இலக்கிய வாதிகள் ஏன் இப்படி இருக்கிறார்கள். ? இலக்கிய சந்திப்புகள் என்பது இலக்கிய படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் பாலமாகவும், எழுத்தில் ஆர்வமுடைய புதியவர்களுக்கு ஏற்கனவே இருந்த படைப்பாளியின் சமுதாய சிந்தனைகளின் வழித்தடத்தை உணர்த்தக் கூடியதாகவும் இருக்க வேண்டுமே அல்லாது, இண்டெலெக்சுவல்ஸ்மட்டுமே தான் சந்திப்புகளில் இருக்கலாம் எனபது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

வைகை செல்வியின் ஏற்புரையோடு சந்திப்பு நிறைவு பெற்றது

—-

mathibama@yahoo.com

Series Navigation