பாரதி (பா)ரதத்தின் சாரதி

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சுஜாதா சோமசுந்தரம்


எட்டயப்புரம் ஈன்றெடுத்த
கவிப்புதல்வனே..!
கவிதை என்ற தேரின்
சாரதியே..!
கருத்து குவியல்களின்
பெட்டகமே..!
எழுதுவதையே தொழிலாக
கொண்டவனே
பதினொரு வயதில் அரசவையில்
நிகழ்ந்த போட்டியில்
உனது பிஞ்சுவிரல் கொஞ்ச
பா எழுதி பாரதி
பட்டம் பெற்றவனே..!
உனக்குள் புரட்சி எண்ணங்கள்
ஊற்றெடுத்து
வார்த்தைகளுடன் விளையாடி
வெற்றிக்கண்ட போதும்;
பத்திரிக்கை துறையுடன்
கைகோர்த்து நடந்தபோதும்;
உனது பேனா காகிதத்தில்
சத்தமில்லாமல் யுத்தம்
செய்தபோதும்;
பார்த்து பயந்தவர்கள்
அன்னியர்கள்..
சுதந்திரம் என்ற போர்வையை
போர்த்திக்கொள்வதற்கு-உந்தன்
‘பா ‘வின் பங்களிப்பு ஏராளம்.
சுதந்திர வேட்கைக்கு
நீர் முகந்து கொடுத்தது
உந்தன் ஒப்பிட முடியாத
தீப்பொறி வரிகள்.
தீண்டாமை தொழு நோய்க்கு
மருந்து தந்தது
உந்தன் பேனாவின் கீறல்கள்.
அன்னியரின் அதிரடி தாக்குதலுக்கு
பதிலடி கொடுத்தது
உனது எழுச்சிமிக்க வரிகள்.
நம்மவர்களின் சோம்பேறிதனத்தை
துரத்தியடித்து
அவர்களின் மூலையை
சலவை செய்தவன் நீயல்லவா…!
பாரதநாட்டின் பழம்பெருமையையும்
பண்புச்சிறப்பையும்,சிறுமைகளையும்
மூடநம்பிக்கைகளையும் பாக்களுக்குள்
அடக்கியன் நீயல்லவா..!
உனது பாடல்களில் அதிகம் அனுபவமும்
எதார்த்தமும்,எதிர்காலமும்
நாற்காலி போட்டு அமர்ந்துள்ளது.
ஆகாத கற்பனை செய்பவன் மட்டுமே
கவிஞன் என்கிறபோது
உந்தன் பாடலில்தான்
காரிய கற்பனை மிகுந்துள்ளது.
மானுட முன்னேற்றம்
காண துடித்தவனே..!
நீ….
கவிதைக்குள் மட்டும்
சிறைப்பட்டு போகவில்லை
சிறை கம்பிகளுக்குள்ளும்.
அடுக்களையே வாழ்வு
என்ற பெண்ணினம்
படிப்பறைக்குள் நுழைந்து
பாரினிலே புதுமைகள் பல செய்து
பட்டங்கள் பெறவும்,சட்டங்கள் இயற்றவும்
எண்ணற்ற துறைகளில்
முத்திரை நாட்டவும்
உமது ஊக்க வரிகளின்
ஒத்துழைப்பை ஒதுக்க முடியாது.
மனிதனே மனிதனை மனிதனாக
ஏற்க மறுக்கும் உலகில்
காக்கையையும்,குருவியையும்
நீலக்கடலையும், வானத்தையும்
எங்கள் சாதி,கூட்டம் என்றாயே
உந்தன் பெருந்தன்மையை நினைக்க
எந்தன் அறிவுக்கு வார்த்தை வசப்படவில்லை.
இயற்கையிடம் காதல் கொண்டபோது
கற்பனையை கடன் வாங்கினாய்;
இறைவனிடம் காதல் கொண்டபோது
பக்தியை வெளிப்படுத்தினாய்;
நாட்டின்மீது காதல் கொண்டபோது
உன்னையே தொலைத்தாய்;
குயில்பாட்டு குயிலையும்
கண்ணன்பாட்டு கண்ணனையும்
காதலிக்க வைத்திருக்கலாம்-ஆனால்
நீங்கள் காதலித்தது
‘பா ‘ரதத்தையே..!
உனது வயிறுக்கூட
காய்ந்திருக்கும்-ஆனால்
வார்த்தை காய்ந்ததில்லை.
உனது பாடலை
இசை என்ற தொட்டிலில்
போட்ட போது
முணுமுணுக்காதவர் யாருமில்லை.
ஆழ்ந்து கற்க இயலாதவர்களுக்கு
பாக்களை பிரித்து
பொருள் புரியும்படியாக அளித்த
உனது பாக்கள்
பாமர மக்களுக்கு அருமருந்து.
உனது கவிப்பயணம்
இமாலயச்சாதனை அல்ல
அதற்கும் மேலே.
கன்னி தமிழை காதலித்து
கற்பனை என்ற வீட்டில்
கவிதை குடித்தனம் நடத்திய
தீர்க்கதரிசி நீ…
உனது கம்பீரம்
காண்பவர்களை கர்வப்பட
வைத்துள்ளது.
பலமொழிப் புலமை
தேராகவும்
பலநாட்டு இலக்கிய பருகல்
சக்கரங்களாகவும்
உனது சொற்களஞ்சியம்
நகர்த்தும் ஜீவனாகவும்
நீ பா இயற்றும் சாரதியாகவும்
பாரதத்தில் உலவியது
பாரதத்திற்கு கிடைத்த சொத்து
பாரதம் உன்னை இழந்திருக்கலாம்
ஆனால்
உனது பாக்களை இழக்கவில்லை
அதனால்தான்
எண்பத்தி மூன்று
ஆண்டுகளாகியும்
பாரதத்தின் சாரதியாக
போற்றப்படுகிறாய்…
—-
s_sujathaa@yahoo.com.sg

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்