பாரதியார் வாழ்ந்த இடங்கள் – புகைப் படங்கள்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

கார்த்திக் பிரபு


கடையம் ,திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது.அம்பாசமுத்திரத்துக்கும் ,தென்காசிக்கும் இடையில் இருக்கிறது,சுமார் 16 கி.மீ தொலைவு இரண்டு ஊர்களிலிருந்தும்.

பாரதி கடையம் ஊரின் மருமகன் ,ஆம் ஆனால் அவர் கடையத்தில் இருந்தது சில காலம் தான். கடையம், பழைய கிராமம் அருகே இருக்கும் வீட்டில் தான் அவர் குடியிருந்தார்.அந்த வீடு இப்போது ஒரு அரசு அலுவலகமாக மாற்றப் பட்டிருக்கிறது.

.அந்த வீட்டின் சிறப்பு என்னவென்றால் வீட்டின் பின் புறம் இருக்கும் கிணறு தான். அடுத்தடுத்து இருக்கும் இரண்டு வீடுகள் ,ஒரே அமைப்பு ,ஒரே மாதிரியான அறைகள் ,இந்த இரண்டு வீட்டுக்கும் அந்த கிணறு சரிபாதியாக பகிரப் பட்டிருக்கும்.

வீட்டினருகே ராமர் கோவில் உள்ளது .இந்த ராமர் கோவில் தற்போது புதிப்பிக்க பட்டு பழைய தூண்கள் எடுக்க பட்டு ,பழைய வாசனை ,எல்லாவற்றையும் இழந்து தற்போது காண்க்ரீட் கோவிலாகி வீட்டது

இந்த கோவிலில் உட்புறம் ஒரு பெரிய அரச மரம் இருக்கும்,அதுவும் இப்போது இல்லை. உள்ளே இருந்த புராதாண கிணறு மூடப் பட்டு அதன் மேல் உட்கார்ந்து இப்போது நெய்விளக்கும் , பூவும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இராமர் கோவிலின் அருகே இருக்கும் தபால் நிலையம் தான் பாரதி தன் பத்திரிக்கைகளுக்கு கவிதை,கட்டுரை அனுப்ப பயன் படுத்தியுள்ளார். தன் மகள் தங்கம்மா மூலம் கடிதங்களை அனுப்பி போஸ்ட் செய்வார் ..இதை தங்கம்மா எழுதிய புத்தகத்தில் படிக்கலாம்

அந்த தபால் நிலையம் தற்போது மூடப்பட்டு விட்டது.புகைப்படம் பாருங்கள்.

பாரதியால் பெருமை பெற்ற இந்த ஊர் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக எல்லா பள்ளிகளுக்கும் அவரின் பெயரே இட்டிருக்கிறது.சத்திரம் பாரதி உயர் நிலை,மேல் நிலை,தொடக்க,மகளிர் உயர் நிலை பள்ளி என பாரதி பெயரே சூட்டியிருக்கிறார்கள்.

ஜம்பு நதி ,கடைத்தில் பாய்ந்த நதி,தாமிர பரணியில் கலக்கும் இந்த நதி இப்போது காணாமல் போய் விட்டது. முன் காலங்களில் இந்த ஆற்றில் போகும் வெள்ளத்தை பார்க்க ஊரே கூடி வரும், தொடக்க பள்ளிக்கு பின் புறம் இந்த நதி ஓடுவதால் மாணவர்களின் மதிய இடைவேளை இந்த நதியோடு விளையாடுவது தான்.

பாரதி ,சுத்தானந்த பாரதியோடு இந்த நதியின் அருகே இருக்கும் தோப்பில் சந்தித்து தான் பேசிக் கொள்வார்கள், இந்த தகவலும் தங்கம்மாபின் புத்தகத்தில் படிக்கலாம்.

இப்போது தலைகீழாக நின்றாலும் தலை நனையாத அளவுக்கு தண்ணிர் ஓடும் நதி. சில கெட்ட காரியங்களுக்கும்,அவசரத்திற்க்கும் மட்டும் பயன்படுகிறது

நித்திய கல்யாணி அம்மன்

நித்திய கல்யாணி அம்மன் கோவில் ,ஊரின் எல்லையில் இருக்கும் இந்த கோவிலுக்கும் பாரதிக்கும் நிறைய சம்பந்தமுண்டு.இந்த கோவிலும் இப்போது காண்கரீட் கோவிலாகி விட்டது. ராம நதி டேம்(அணை) க்கு போகிற வழியில் இந்த கோவில் இருக்கிறது.

தாமரை குளத்தை அடுத்த பெரிய குளம்

பாரதி சுற்றி திரிந்த அந்த மலை பகுதி

இந்த கோவிலுக்கும்,பாரதியை போல் வரலாறும் ,பெருமையையும் இருக்கிறது.கோவிலை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் திரிந்து கவிதைகள் பாடினார் பாரதி. அவருக்கு இந்த மலையில் இருக்கும் ஒரு சிறு மண்டபத்தில் தான் திருமணம் நடந்ததாக சொல்கிறார்கள் ,ஆனல் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை.புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு.

கோவில் மற்றும் குளம்

‘பாரதி ‘ படத்தில் பாரதி நடந்து வரும் அந்த குளம்

கோவிலின் மேற் பகுதி

இந்த கோவிலின் அருகில் இருக்கும் தாமரை குளத்தில் தான் பாரதி நீராடுவார்,பாரதி -திரைப் படத்தில் கூட இந்த இடத்தை காட்டுவார்கள்,நிற்பதுவே ,நடப்பதுவே பாடலில்.இதற்கு அருகே இருக்கும் பாறையில் தான் சாமி படத்தில் திரிஷாவின் ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு பாடல் எடுத்திருப்பார்கள்.படம் பார்க்க

தாமரை குளம்

பாரதிக்கு திருமணம் நடந்ததாக கூறப்படும் மண்டபம்

பாரதியார் கால மனிதர் ஒருவர் எங்களூரில் இருப்பதாகவும் ,அவரி சந்தித்து பாரதி பற்றி பல த்கவல்களும் எஸ்.ராம கிருஷணனின் கதாவிலாசத்தில் எழுதியுள்ளார்.அதில் குறிப்பிடுள்ளது போல ராமர் கோலிவில் இருந்த யானையின் தும்பிக்கையை பாரதி கடிப்பாராம்.வாழைப்பழம் வாங்கி கொடுத்து பின் இந்த மாதிரி யானையின் துதிக்கையை கடிப்பது அவரது வழக்கமாம்.

இங்குள்ள பள்ளியில் இன்றும் தங்கம்மாள் சார்பாக ,தங்கம்மாள் அறக்கட்டளை நடைபெறுகிறது.என்னுடைய பள்ளி பருவத்தில் ஆடல்,பாடல்,பேச்சு போட்டி என்று அந்த விழா சிறப்பாக நடைபெறும்.ஒவ்வொரு வருடமும் பாடல் போட்டியில் பாரதியின் பாடல்களை இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.

Series Navigation