பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

சீனி. விசுவநாதன்


(டிசம்பர் 11 அன்று வரும் மஹாகவி பாரதி பிறந்தநாளையொட்டி இக்கட்டுரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பாரதி அன்பரும், பாரதி குறித்த ஆய்வுகளில் தன் வாழ்க்கையைச் செலவழிப்பதை ஒரு பாக்கியமாகக் கருதுபவருமான சீனி. விசுவநாதன் ‘மகாகவி பாரதி வரலாறு ‘ என்ற நூலை 1996ல் வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஓர் அரிய ஆய்வுக் களஞ்சியமாகும். அம்முன்னுரையில் ‘பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை ‘ விவரமாகவும், காலவரிசையிலும் கொடுக்கிறார். பாரதியின் பதாகையை உயர்த்திப் பிடித்த பாரதி அன்பர்களைப் பற்றியும் அவர்கள் எழுத்துகள் பற்றியும் நல்ல அறிமுகம் செய்கிற விதமாக அத்தகவல்கள் அமைந்துள்ளன. இத்தகவல்களைத் திரட்டுவதே ஒரு பெரிய ஆய்வாக சீனி. விசுவநாதனுக்கு இருந்திருக்கும். இந்நூல் வெளிவந்தபோது, தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. சீனி. விசுவநாதனின் பாரதி பணிகளுக்காகத் தமிழக அரசு சமீபத்தில் அவருக்குப் பாரதியார் விருது வழங்கி கெளரவித்திருக்கிறது. இவ்விருது பாராட்டுப் பத்திரமும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் அடங்கியது என்று நினைக்கிறேன்.

அவர் நூல்களில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நான் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கிற அனுமதியைப் பெருந்தன்மையுடனும் அன்புடனும் எனக்கு வழங்கியுள்ள, என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிற சீனி. விசுவநாதனுக்கு நன்றிகள் சொல்லி அவர் நூலிலிருந்து எடுத்த ‘பாரதி வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை ‘ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை மறுபிரசுரம் செய்ய விரும்புவோர் சீனி. விசுவநாதனிடம் அனுமதி பெற்றுச் செய்யுமாறு வேண்டுகிறேன். இதிலுள்ள தட்டச்சுப் பிழைகள் என்னுடையவை. – அன்புடன், பி.கே. சிவகுமார்)

பாரதிக்குப் பற்பலரும் வரலாறுகள் எழுதியுள்ளனர்.

பாரதி வாழ்ந்த காலத்தில், அவருக்கு உற்றுழி உதவி, உறுபொருள் கொடுத்த உத்தமர்களில் பலரும் தங்கள் சொந்தப் பாங்கான அனுபவங்களைப் பின்னொரு காலப்பகுதியில் கட்டுரைகளாக வடித்தனர்; நேர் உரைகளாகப் பேட்டி கண்டவர்களிடம் சிலவற்றைப் பதிவும் செய்தனர்.

வேறு சிலர், பாரதியின் கவிதா சக்தியைப் பற்றியும், கவிதையின் அழகு, இனிமை, எளிமை ஆகியவற்றைப் பற்றி மட்டுமே வியந்து போற்றி எழுதினர்.

பாரதிக்கு மிக அணுக்கமானவர்கள் எல்லோருமே வரலாற்று நூல்கள் எழுதாமல், துண்டு துணுக்குகளாகவோ, கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ வரலாற்றுத் தொடர்பான செய்திகள் சிலவற்றை வழங்கினர்.

பாரதியை நன்கு புரிந்துகொண்டவர்களும், தெரிந்து வைத்திருந்தவர்களுங்கூட ஓரளவே வரலாற்றுக் குறிப்புக்களை வரைந்தனர்.

பாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய புலமைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உரிய – உயரிய புகழும், பாராட்டுதல்களும் கிடைக்கவே செய்திருக்கின்றன.

அவர் காலத்தில் மூன்று கட்டுரைகள் அவரைப் பற்றிப் பிரசும்மாயிருப்பதாக நான் அறிகிறேன். கர்மயோகி (1910), தேசபக்தன் வருஷ மலர் (சித்தார்த்தி – தை மாதம் 30 ஆம் தேதி – 1919) ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், New India (1919) என்னும் ஆங்கில நாளிதழிலும் பாரதி பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

பாரதியின் கர்மயோகி மாதப் பத்திரிகையில் திரு.லக்ஷ்மண சங்கரன் என்பவர் தமிழ் ஸாஹித்யத்தில் நவமார்க்கம் என்கிற கட்டுரையில் பாரதியின் பாவன்மையை வியந்து பாராட்டியும், கதை நூலைப் புகழ்ந்து பேசியும் எழுதி உள்ளார்.

தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த தேசபக்தன் வருஷ மலரில் திரு. எ.எஸ். நாகரத்தினம் என்பவர் தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் – ஓர் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் ஓர் அரிய கட்டுரையே எழுதி இருக்கின்றார்.

நியூ இண்டியா (New India) என்னும் ஆங்கில நாளிதழில் திரு. ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் Subramania Bharati and his genius என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

இப்படி இன்னும் பல கட்டுரைகள் அக்காலத்தில் வெளிவந்திருக்கலாம்.

நானறிந்தவரை, அக்கட்டுரைகள் பாரதியின் கவித்திறத்தையும், மேதைமையையும், அவர் கையாண்ட புதிய உத்திகளையும் சிறப்பித்துப் பேசும் தன்மையனவாகவே அமைந்துவிட்டன என்பேன்.

ஆம்; அவை வாழ்க்கைச் சரிதக் குறிப்புகளாகவோ வாழ்க்கைச் செய்திகளை இனங்காட்டுவனவாகவோ அமையவில்லை.

பாரதி தன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தனியே எழுதாவிட்டாலுங்கூட கனவு என்ற காதற்கவிதையிலும், பாரதி அறுபத்தாறு என்னும் முற்றுப் பெறாத பாடல் தொகுதியிலும், சின்னச் சங்கரன் கதை என்னும் முற்றுப் பெறாத கதைப்பகுதியிலும், சித்தக் கடல் என்ற வசனப் பகுதியிலும், கவிதா தேவி அருள்வேண்டல் போன்ற சில பாக்களிலும் தம் வாழ்வுத் தொடர்பான சில பயனுள்ள செய்திகளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார் என்பதும் நம் கவனத்துக்குரியது.

பாரதி 1921 செப்டம்பர் 12இல் (செப்டம்பர் 12, 1921 அதிகாலை 1 மணிக்கு பாரதி உயிர் நீத்தார். – பி.கே. சிவகுமார்) மரணம் அடைந்த பின்னரே சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புக்களும், வரலாற்று நூல்களும் வெளிவரலாயின.

பாரதி ‘விண்ணவருக்கு விருந்தானார் ‘ என்ற செய்தியை 13-9-1921ஆம் தேதிய இதழில் வெளியிட்ட சுதேச மித்திரன் பத்திரிகையானது பாரதியைப் பற்றிய விவரங்களைத் தந்ததுடன் ‘அவரது சரித்திரச் சுருக்கம் வேறிடத்தில் பிரசுரம் செய்யப்படுகிறது ‘ என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அப்படியொரு சரித்திரச் சுருக்கம் சுதேச மித்திரன் இதழில் நான் பரிசோதித்துப் பார்த்த அளவில் கண்ணில் படவில்லை.

சுதேச மித்திரனில் தனியே பாரதியின் சரித்திரச் சுருக்கம் பிரசுரமானதை அறிந்துகொள்ள முடியாத காரணத்தால், அவரது சரித்திரம் எந்தமாதிரியான செய்திகளைக் கொண்டு இருந்தது என்பதை அறிய முடியாமலே போய்விட்டது.

பாரதி அமரரானவுடனேயே முதன்முதலாகத் திரு.எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி – சில குறிப்புகள் என்ற தலைப்பில் சுதேச மித்திரன் 17-9-1921ஆம் தேதியிட்ட இதழின் வழியாக அரிய கருத்துச் செல்வங்களை வழங்கினார்.

இப்பெருமகனாரைத் தொடர்ந்து பாரதி பற்றிய வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

1922 ஜனவரியில் பாரதி ஆச்ரமத்தார் பாரதியின் கவிதைச் செல்வங்களைத் தொகுத்து, சுதேச கீதங்கள் என்னும் தலைப்பெயருடன் இரு பகுதிகளாக வெளியிட்டனர். முதல் பகுதியில், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் – சரித்திரச் சுருக்கம் என்றும், இரண்டாம் பகுதியில் திரு.சக்கரை செட்டியார் The Political Life of Sri Subramania Bharathi என்றும் தம் நினைவுக் குறிப்புக்களை ஒழுங்குபடுத்திக் கோவையாக எழுத்தில் வடித்துக் கொடுத்தனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் தம் கட்டுரையில் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களையும் நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தந்ததுடன், பாரதியின் புலமை, ஒருசில கவிகள் எழுந்த சூழல், குணநலன்கள், தமக்கிருந்த நட்புமுறை ஆகியவை பற்றியும் விரித்துரைத்தார்.

திரு. சக்கரை செட்டியாரோ மிக விரிவாகப் பாரதியின் அரசியல் பிரவேசம், அரசியல் ஈடுபாடு ஆகியன குறித்து எழுதியதோடும் நில்லாமல், தமிழ்மக்கள் அமர கவி பாரதிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆக, நமக்கு 1921 செப்டம்பரிலிருந்து 1922 ஜனவரிக்கும் உள்ளாகப் பாரதி வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், சரித்திரச் சுருக்கங்களும், அரசியல் ஈடுபாடு பற்றிய செய்திகளும் ஓரளவு கிடைக்கத் தொடங்கி விட்டன.

இந்த வகையில் திருவாளர்கள் ராமாநுஜலு நாயுடு, சோமசுந்தர பாரதியார், சக்கரை செட்டியார் ஆகியோரை முன்னோடிகள் என்றே கொள்ளல் வேண்டும்.

இச் சான்றோர்களுக்குப் பின்னர்தான் மண்டயம் சீனிவாஸாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சுந்தரேச ஐயர், சாம்பசிவ ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, நாராயண ஐயங்கார், நாகசாமி, பாவேந்தர் பாரதிதாசன், பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரும் இன்ன பிறரும் பாரதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எழுதினர்; தம் நண்பர்களிடமும் பாரதி பற்றிய பசுமை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேற்குறித்த பெருமக்களின் கருத்துரைகள் எல்லாம் பாரதி வரலாற்றுக்குப் பேருதவியாய் அமைந்தன என்று சொல்லும் போழ்தில், அவை தனி நபர்களின் இளமைக்காலப் பசுமை நினைவுகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

துரதிருஷ்டவசமாகப் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பாரதியைப் பற்றிய செய்திகளைப் பின்னிட்டுத்தான் பதிவு செய்திருக்கிறார்; அதே போல, பாரதியின் முதற் பதிப்பாளராகிய பரலி நெல்லையப்பரும் தம் நினைவுக் குறிப்புக்களைப் பிற்காலத்தில்தான் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார்.

பாரதியிடம் நெருங்கிய உறவு கொண்டு பாரதிக்குத் தாசனாக வாய்த்தவரும், பாரதியாலே மிக்க அன்புடன் ‘தம்பி ‘ என்று அழைக்கப்பட்ட பேறு பெற்றவரும் சுருங்கிய முறையில்கூட வரலாற்று நூல் வரையாமல் போனது நம்முடைய பாக்கியக் குறைவே.

1928ஆம் ஆண்டில் பாரதி பாடல்களில் ராஜத் துரோகக் கருத்துக்கள் இருப்பதாகச் சொல்லி, பிரிட்டிஷ் அரசு சுதேச கீதங்கள் என்னும் கவிதை நூல் தொகுதிகளைப் பறிமுதல் செய்தது. இதனால் நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன.

அச்சமயம் மீண்டும் திரு. எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் தாம் அப்போது ஆசிரியர் பொறுப்பு வகித்த அமிர்த குண போதினி மாத இதழில் சென்றுபோன நாட்கள் என்ற பொதுத் தலைப்பில் ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி என்று குறுந்தலைப்பு அமைத்துத் தொடர் கட்டுரைகள் எழுதி வெளியிடலானார்.

இத்தொடர் கட்டுரைகளில் முன்னர் – அதாவது, பாரதி மரணமடைந்தபோது, தாம் எழுதிய குறிப்புக்களுடன், அந்த நாள் வரை எவரும் சொல்லாத – எழுத்துருவில் வடிக்காத பற்பல புதிய செய்திகளை எழுதி, பாரதி வாழ்க்கை வரலாற்று ஆய்வுப் பரப்பை ராமானுஜலு நாயுடு விரிவாக்கினார்.

திரு.நாயுடு அவர்கள் எழுதியளித்த அரிய செய்திக் குறிப்புகளில் பலவும் 1928 தொடக்கம் 1947 வரையிலான கால எல்லையில் பிரசுரமான பாரதி வரலாற்று நூல்களில் போதிய அளவு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியின் மூத்த மகள் தங்கம்மாளும், இளைய மகள் சகுந்தலாவும் மற்றும் பலரும் அவ்வப்போது பத்திரிகைகளில் பாரதி பற்றி எழுதவே செய்தனர். என்றாலும், இவையெல்லாம் சற்று காலங்கடந்த நிலையில் வெளிப்பட்டனவாகும். தமிழ்ப் பத்திரிகைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்புடைய செய்திகளை வெளியிடவே செய்தன.

காலப்போக்கில், கட்டுரை வடிவில் வெளிவந்த செய்திகளையும், நினைவுக் குறிப்புக்களையும், சொந்தப்பாங்கான அனுபவங்களையும் கொண்டு பற்பலர் நூல்களை எழுத முனைந்தனர்.

1928இல் பாரதி பிரசுராலயத்தார் பாரதியார் சரித்திரம் என்ற பெயரால் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டனர். இது புதிய நூல் அன்று; என்றாலும் பாரதியார் சரித்திரம் என்ற தலைப்பில் வெளியான முதல் தொகுப்பு நூல் இதுவேயாகும்.

1922இல் பாரதி ஆச்ரமத்தார் பிரசுரித்திருந்த சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய பாரதியாரின் சரித்திரச் சுருக்கமும், சக்கரை செட்டியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமான ‘ராஜீய வாழ்வும் ‘, பரலி நெல்லையப்பர் எழுதிய ‘பாரதியாரின் தமிழ்ப் புலமை ‘ என்னும் கட்டுரை ஒன்று சேர்க்கப்பட்டு இந்தப் பிரசுரம் வெளியானது.

1929ஆம் ஆண்டிலே பாரதியின் இளைய சகோதரர் திரு. சி. விசுவநாதன் ஆங்கிலத்தில் Bharati and his works என்றொரு நூலைப் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களும், பாரதி நூல்களின் மதிப்பீடும் சேர்ந்திருந்த முறையில் எழுதி வெளியிட்டார். இந்த நூலானது, பெரும்பகுதி பாரதி படைப்பு இலக்கியங்களுக்கான கருவி நூலாகவே அமைந்துவிட்டது.

1936இல் ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற தேசபக்தர் கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் என்ற நூலை வெளிப்படுத்தினார்.

இதனிடையில் வ.ரா. என்று சுருக்கப் பெயரால் அழைக்கப்பெறும் வ. ராமஸ்வாமி அவர்கள் காந்தி இதழில் 1935-1936 இல் பாரதி வாழ்க்கைத் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளே 1944இல் மகாகவி பாரதியார் என்ற பெயருடன் நூலாக உருப்பெற்றன.

1937இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பாரதி விளக்கம் என்ற நூலை ஆக்கி அளித்தார்.

இந்த நூலின் முற்பகுதியில் பாரதி வாழ்வும், பிற்பகுதியில் பாரதி பாடல்களின் அருமை பெருமைகளும் விளக்கப்பட்டன.

1938இல் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்கள் பாரதி லீலை என்றவொரு நூலை எழுதி வெளியிட்டார். (இந்த நூல் 1950இல் மறு அச்சாக வெளியானபோது, பாரதியார் என்று தலைப்புப் பெயர் மாற்றங் கண்டது.) இந்த நூலில் பாரதி சரித்திரச் சுருக்கத்துடன், அவருடைய வாழ்வில் நிகழ்ந்தனவாகக் கருதப்பட்ட நிகழ்ச்சிகளும் சொல்லப்பட்டன.

1940இல் தி.ஜ.ர. அவர்களின் புதுமைக்கவி பாரதியார் என்னும் நூல் வெளிவந்தது. (இந்த நூல் 1946இல் மறுபதிப்பான நிலையில், அதில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டன.)

1941இல் பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் அவர்கள் பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்கள் கூறுகிற மாதிரியில் தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்னும் பெயரில் அமரகவியின் வரலாற்றைச் சமைத்தளித்தார். (இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1945இல் வெளிவந்த சமயத்தில் பாரதியார் சரித்திரம் என்றே நூல் தலைப்பு மாற்றங் கண்டது; சில புதிய செய்திகளும் கொண்டமைந்தது.)

1942இல் நாரண துரைக்கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுத் தேசிய கவிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் என்ற சிறுநூல் வெளிவந்தது.

1946இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய கவிக்குயில் பாரதியார் என்ற நூல் வெளிவந்தது.

இதே 1946இல் கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் வ.உ. சிதம்பரனார் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு வி.ஓ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை திரு. வ.உ.சி. சுப்பிரமணியம் பதிப்பித்து வெளியிட்டார்.

தங்கம்மாள் எழுதிய அமரன் கதை (1946), பாரதியும் கவிதையும் (1947), பிள்ளைப் பிராயத்திலே (1947) ஆகிய நூல்களும், திரு. ரா. கனகலிங்கம் அவர்கள் எழுதிய என் குருநாதர் பாரதியார் (1947) என்ற நூலும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக அமைக்கத் துணைபுரிவனவாகும். இந்த நூல்கள் யாவும் பாரதியின் குணச்சித்திரத்தையும், கவிதை பிறந்த கதையையும் தெரிவிக்கின்றன.

ஆக, உண்மையில் 1928-1947க்கும் உட்பட்ட காலப்பகுதியில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நூல்களே வெளிவந்தன.

இது பாரதிக்கு வரலாறு எழுந்த பின்னணிச் சரித்திரமாகும்.

பாரதி அமரரான 1921ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு முடிய வெளியிடப்பட்ட பாரதி வரலாற்று நூல்களிலும், வரலாற்றுத் தொடர்பான நூல்களிலும் காணப்பெறும் செய்திகள், குறிப்புக்கள் ஆகியன சற்றே குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய அளவில் சிக்கல்கள் நிறைந்தனவாக உள்ளன; முன்னுக்குப் பின் முரண்பட்டனவாகவும் உள்ளன. நூலுக்கு நூல் மாறுபாடு கொண்டனவாகவும் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், காலப்பிழைகளும், கருத்துக் குழப்பங்களும் மேற்குறித்த நூல்களிலே இடம் பெற்றுள்ளன.

பாரதிக்கு வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலோர், தெரிந்த செய்திகளுடன் சில நண்பர்கள் வழியாக அறிந்து கொண்டவற்றையும், பாரதி குடும்பத்தவர் தெரிவித்த சம்பவங்களையும், நினைவுக் குறிப்புக்களை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், சொந்தப்பாங்கான அனுபவங்களைக் கொண்டும், சிற்சில நூல்களில் இடம் பெற்றிருந்த செய்திக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் நூல்களை எழுதினர்.

வெளிவந்த நூல்களில் சந்தேக நிவர்த்தி செய்து கொள்ள நினைத்தும், சந்தேகத்துக்கான விளக்கம் கிடைக்காத நிலையில், வருடக்கணக்கைத் தெரிவிக்கும் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிட்டன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ, நிகழ்ச்சி ஆண்டுகளையோ உறுதி செய்து தெரிவிக்கக்கூடிய நிலையில் பலரும் அந்த நாளில் இல்லை என்பதும் வேதனை தரக்கூடிய செய்தியாகும்.

இத்துணைக்கும் மேலாக அந்தக் காலத்திலேயே – பாரதிக்கு மிக நெருக்கமானவர்களும், உள்ளன்புடன் பழகியவர்களும், உறவினர்களும் வாழ்ந்த காலத்திலேயே – பாரதியைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் பற்பல கற்பனைக் கதைகள், கட்டுக்கதைகள், தவறான செய்திகள், வருஷப் புள்ளிகளில் தவறுகள் ஆகியன எல்லாம் பத்திரிகைகளிலும், நூல்களிலும் இழைய முற்பட்டுவிட்டன என்கிற பேருண்மையையும் முன்கூறிய நூல்களின் முகவுரை – பதிப்புரைகளால் அறிந்து கொள்கிறோம்.

பாரதியையே அறியாதவர்கள், அவரைப் பார்ப்பதற்கே பயந்தவர்கள் உட்படப் பற்பலரும் ‘புரளிக் கதை ‘களைக் கடைவிரிக்க ஆரம்பித்துவிட்ட கொடுமையையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆக, ஆரம்ப நாளில் பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணைகொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த – தொடர்பு கொண்டிருந்த – நடத்திய பத்திரிகைகளின் துணைக்கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் தன்மையை உறுதி செய்துகொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை.

ஒவ்வொரு நூலாசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் பாரதியைக் கண்டு, தெளிந்து, தத்தம் படைப்புகளைப் படைத்தளித்தனர். இதன் காரணமாக, அந்நூல்களில் வரலாற்றுச் செய்திக் குழப்பங்களும், காலக்குறிப்புப் பிழைகளும் நேர்ந்தன.

மற்றும், காலந்தாழ்ந்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுவதில் ஏற்படும் தவறுகளும் வரலாற்று நூல்களில் இடம்பெற்று விட்டன.

பாரதிக்கு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களோ, வரலாற்றுச் சுருக்க நூல்களோ இல்லாத நிலையிலும், இன்றுள்ள நவீன வசதிகள் எவையும் வாய்க்கப் பெறாத சூழ்நிலையிலும், தத்தமக்குக் கிடைத்த செய்திகளையும், குறிப்புக்களையும் திரட்டி, நினைவுகூர்ந்து பாரதிக்கு வரலாறு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஈடுபட்ட பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்; மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டுவது நமது நன்றிக் கடன் ஆகும். ‘நன்றி மறப்பது நன்றன்று ‘.

ஆகவே, பாரதிக்கு வரலாறு கண்ட முன்னோர்களின் பணிகளுக்கு நாம் தலைவணங்குவோமாக!

முன்னாளில் உருவான நூல்களில் கண்டுள்ள மாறுபட்டனவும், முரண்பட்டனவுமான செய்திகளைக் களைந்தும், காலக்கணக்கீட்டுப் பிழைகளை நீக்கியும், ‘புரளிக்கதை ‘களைப் புகவிடாமலும், கற்பனை வளத்திற்கு இடங்கொடாமலும் இயன்றவரை ஆதாரபூர்வமான நூலைப் பாரதிக்கு ஆக்கி அளிக்க வேண்டும் என்று சி.விசுவநாத ஐயர் துடியாய்த் துடித்தார்.

அவ்வப்போது பாரதி வரலாற்று நூலுக்குத் துணைசெய்யும் வகையில் ஆதாரபூர்வமான – நம்பகமான – பல பயனுள்ள செய்திகளைத் தாங்கி ஒருசில நூல்கள் வெளிவரத்தான் செய்தன.

‘உலகம் சுற்றிய தமிழர் ‘ என்ற பெயரால் அழைக்கப்படும் திரு.ஏ.கே. செட்டியார் தமது குமரிமலர் இதழ் வழியாகச் செய்த பாரதிசேவையை யாரும் மறக்க முடியாது.

குறிப்பாகவும், சிறப்பாகவும், பாரதி வாழ்க்கை வரலாற்றுக்குத் துணைசெய்யும் நூல்கள் எழுதிய திருவாளர்கள் ரா.அ. பத்மநாபன், பெ. தூரன், தொ.மு.சி. ரகுநாதன், பெ.சு. மணி, கோ. கேசவன் ஆகியோர் பாரதீய உலகின் நன்றிக்குரியவர்கள் ஆவர்.

ஆனாலுங்கூட, திருத்தமான வரலாறு என்று கூறும்படி நூல் ஒன்று வரவில்லை என்ற குறை இருந்து வந்தது.

என் அளவில் நான் பாரதிக்கு முழுமையான ஆதாரங்களோடு கூடிய வரலாற்றை எழுதி முடிக்கும் பணியைப் புனிதமான தேசியத் திருப்பணி என்பதாக உணர்ந்தேன்.

பாரதியின் வரலாற்றை எழுதி முடிக்கும் பணியை நான் தேசியத் திருப்பணியாக எண்ணிய காலத்தில், நானே வரலாற்றை எழுதி முடிப்பேன் என்று கனவிலும் கருதவில்லை.

நன்றி: மகாகவி பாரதி வரலாறு – சீனி. விசுவநாதன் – 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை – 600 035.

பின்குறிப்பு: சீனி. விசுவநாதனை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Series Navigation

சீனி. விசுவநாதன்

சீனி. விசுவநாதன்