“பாட்டிகளின் சிநேகிதன்” : நா.விஸ்வநாதனின் சிறுகதைத் தொகுப்பு

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

வெங்கட் சாமிநாதன்



பாட்டிகளின் சிநேகிதன் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு. இப்படிப்பட்ட தலைப்பில் யாராவது சிறுகதை எழுதுவார்களா? அல்லது தம் சிறுகதைத் தொகுப்புக்குத் தான் தலைப்பு வைப்பார்களா? வைக்கப்பட்டிருக்கிறது. அதை நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டும் உள்ளது. பாட்டாளி மக்களின் புரட்சிக்கு உதவும் எழுத்துக்களைப் பிரசுரம் செய்வதற்கு என்றே வந்துள்ள புத்தக வெளியீட்டு நிறுவனம். அந்த நிறுவனத்திற்கும் சரி, அது சார்ந்துள்ள இயக்கத்துக்கும் சரி “அட் சும்மானாச்சிக்கும் இப்படி சொல்லிக்கிறது தான். அதுக்காக நம்ம பிழைப்பையும் பாக்க வேண்டாமா?” என்று மிக நடைமுறை விவேகத்தோடு இருப்பதாகத் தோன்றுகிறது. அப்படியும் கூட பாட்டியின் சிநேகிதன் சிறுகதைத் தொகுப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒரு ஆச்சரியம். மகிழ்ச்சி தரும் கொள்கைச் சமரசம்.

பாட்டிகளின் சிநேகிதன் நா.விஸ்வநாதனின் சிறுகதைத் தொகுப்பு. அவ்வப்போது ஆடிக்கொண்ணு, அமாவசைக்கொண்ணு என்று உதிரியாக அவர் சிறுகதைகள் வெளியாகியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதிகமில்லை. இரண்டோ என்னவோ. அந்த உதிரிகள் எப்பவோ வருவதால் அவை ஒட்டு மொத்தமாக ஒரே சமயத்தில் தொகுக்கப்பட்டால் ஒழிய ஒரு பாதிப்பை, எழுதுபவரின் ஆளுமை பற்றிய ஒரு எண்ணத்தைத் தருவதில்லை. எனக்கு விஸ்வநாதன் புதிய பெயரோ அன்னியப்பட்டவரோ இல்லை. அவரது கவிதைகள் ஒட்டு மொத்தமாகத் தொகுக்க்ப்பட்டு பார்த்திருக்கிறேன். கவிஞர் யுக பாரதி தான் கையெழுத்துப் பிரதியாக அத் தொகுப்பை எனக்குத் தந்தார். அது நடந்து நான்கு வருஷங்களுக்கு மேல் ஆயிற்று. அந்தக் கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன. தன் அனுபவங்களைத், தான் சந்தித்த மனிதர்களை, அவர்களது ஆசா பாசங்களைப் பற்றிப் பேசின அந்தக் கவிதைகள். வெகு இயல்பாக, சாதாரண மொழியில், தோரணையில், எந்த பந்தாவும் படாடோபமும், அலங்காரமும் அற்று, மிக சரளமான தொனியில் இயல்பான வெளிப்பாடாக அவை இருந்தன. ஒரு எள்ளல் அவற்றின் அடிநாதம். அதோடு ஒரு ஏக்கம், கடந்துவிட்ட காலத்தை எண்ணிய ஒரு ஏக்கம். தற்காலத்தில் புடவை கட்டிய பெண்ணைப் போல, பட்டங்கள் தரிக்காத அரசியல் தலைவர் அல்லது கவிஞர் போல, அதைக் கவனிப்பாரும் இல்லை. தொகுப்பே வெளிவந்ததா என்பதும் தெரியவில்லை. என் பாராட்டுக்களோடு ஒரு அறிமுகக் கட்டுரையும் அந்தக் கவிதைத் தொகுப்பிற்கு நான் எழுதியிருந்தேன். அவரது கவிதைகளில் சாதாரணத்தின் அசாதரணத்தைக் காண்பதாக நான் எழுதியிருந்தேன். அதனால் தானோ என்னவோ அது வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.

அந்த மாதிரி துரதிர்ஷ்டம் எதுவும் நேராதிருக்க, இந்த சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த பிறகு நான் எழுதுகிறேன். இக்கதைகளையும் சாதாரணம் என்றும் இன்று பலர் சொல்லக்கூடும். இவற்றில், இவரது எழுத்தில் இப்போதெல்லாம் நமக்கு சகஜமாகி வரும், நவீனம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு பவனி வரும் பாவனைகள், மோஸ்தர்கள் ஏதும் இல்லை. இல்லாவிட்டாலும், என்றும் எக்காலத்திலும் நித்தியமாகவிருக்கும் மனித சுபாவங்கள் அவற்றின் உயிர்ப்புடன் சொல்லப்பட்டுள்ளதால் அசாதாரணம் என்றும் சிலருக்காவது படலாம்.

மத்திய அரசின் தபால் துறையிலிருந்து ஓய்வு பெற்ற சில வருஷங்களாகியிருக்கும் நா.விஸ்வநாதனின் வெளிவந்திருக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பில் இருப்பது மொத்தம் பதினான்கே கதைகள் தான். சிறு கதை எழுத்தாளராகவோ, கவிஞராகவோ தமிழ் கூறு நல்லுலகில் பெயர் பதித்து புகழ் பெற்று உலவும் ஆசைகளோ கனவுகளோ அற்ற ஒரு மனிதர். எழுதுகிறேன். எனக்குத் தோன்றியதை, தோன்றிய வாறு. மற்றபடி ஈஸ்வரோ ரக்ஷது, அல்லது தமிழன்னையின் விருப்பப்படி நடக்கட்டும் என்று ஒரு மனோ பாவம். அதைத் தான் வேறு வார்த்தைகளில் அவர் இந்தத் தொகுப்பிற்கு அளித்துள்ள முன்னுரையிலும் சொல்லியிருக்கிறார்.

இவரது கதைகளில் நாம் சந்திப்பவர் எல்லோரும் தஞ்சை கிராமத்து மனிதர்கள். ஒரு கால கட்டத்திய மனிதர்கள். அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்பதும், கிடைக்காது ஏங்குவதும் ஒருகால கட்டத்திய மதிப்புகள் சார்ந்தவை தான். ஒரு சில இடங்களில் பின்னர் நிகழ்ந்த மாற்றங்கள் கோடி காட்டப்படுவதிலிருந்து விதிவிலக்காக ஒரு சில சமீப காலக் கதைகள் எனத் தெரிகிறது. அவையும் விரும்பத் தக்க மாற்றங்களாக இல்லை. மதிப்புகளின் வீழ்ச்சியைத் தான் அவை சொல்லாமல் சொல்கின்றன. முன்னர் நாட்டு ஒடு வேய்ந்த வீடுகள் நிறைந்த இடத்தில் இப்போது பல மாடிக்கட்டிடங்கள் வந்து விட்டன. அந்தக் கதையின் சம்பவங்களும் மதிப்புகளின் சரிவைத் தான் சொல்கின்றன( பரசு ). நாஸ்திக வெளிப்பாடும், பிராமண துவேஷமும் கர்வத்தோடும் அகம்பாவத்தோடும் தரிக்கவேண்டிய முற்போக்கு சிந்தனைகளாக வந்துவிட்ட கால கட்டமும் சில கதைகளில் தலைகாட்டுகின்றன. அவை முற்போக்காக இல்லாது, மனிதகுணத்தின் சீரழிவாகத்தான் வெளிப்படுகின்றன. ஏனெனில் இரண்டுமே சமூகத்தின் மாற்றங்கள் பெற்ற சீரழிவைத்தான் வெளிப்படுத்துகின்றன. ( இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு )

இவரது கதைகளில் வரும் உலகம் பெண்களைச் சுற்றித் தான் அவர்களை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. அவர்களைப் பற்றி எழுதும்போது, ரொம்பவும் அனுபவித்து, சிறகடித்து வானில் பறக்கும் வண்ணத்திப் பூச்சி போல ஒரு உல்லாசம். ஆண்கள் எல்லாம் ராணி ஈயைச் சுற்றி வரும் ஆண் ஈக்கூட்டம் தான். ஆனால் ஆதிக்கமும் அதிகாரமும் ஆண்களிடம் தான். வாழ்க்கையை ரம்மியமாக்கும், அதற்கு அர்த்தமும் வாழும் வேட்கையும் தரும் பெண்கள் தான் வதைபடுவதும். தனக்குத் தகுதியில்லாத ஒன்றைப் பெற்று விட்டதன் அகங்காரம், அதை அடக்கி ஆள விரும்பும் ரத்தத்தில் ஊறிய ஆணாதிக்க மனம், இதையே பெண்ணும் ஆணும் சகஜமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வழிசெய்யும் மரபும் கலாச்சாரமும் எல்லாம் ஒரு கால கட்டத்தவை தான். அந்த கால கட்டத்தைத் தான் இக்கதைகள் வாழும் கட்டமும்.

ஆணாதிக்கமும், பெண்கள் வதை படுவதும் கொடூரமாகத்தான் வெளிப்படவேண்டும் என்பதில்லை. சகஜமான வாழ்க்கைக் கூறாக, மெல்லிய இழைகளிலும் வெளிப்படலாமே. முதல் கதையின் யோகத்தில் இது மிக அழகாக, வெகு நளினத்தோடு சொல்லப்பட்டுள்ளது. வயதான ஒருவருக்கு இளம்பெண்ணேயானாலும் இரண்டாம் தாரமாக வந்து சேர்வதன் நியாயம் தஞ்சை கிராமத்துக்கே உரிய பாஷையில் மிக அழகாக சொல்லப்படுகிறது.

“கைலாசம், பாவம் நீயும்தான் என்ன பண்ணுவே. வயசான காலத்திலே. விக்கித்தா ஒரு மாரைக்கீரை வலிச்சுதா, சட்னு ஒரு டம்ளர் ஜெலம் கொண்டுவந்து ஊத்த ஒருத்தி வேண்டாமோ. எத்தனை நாளைக்குத்தான் நைவேத்யச் சோத்தைத் தின்னு காலத்தை ஓட்டீண்டிருப்பே. பொம்மனாட்டி கையாலே வாசல் பிறையிலே ஒரு அகல் விளக்கு ஏத்தி எரியலேன்னா வீடா அது?” ஊரே கங்கணம் கட்டிக் கொண்டு நின்றது. லட்சுமி இருந்த இடத்தில் இன்னோரு லட்சுமியாய் யோகா வந்தாள்.

“பொம்மனாட்டி கையாலே வாசல் பிறையிலே ஒரு அகல் விளக்கு ஏத்தி எரியலேன்னா வீடா அது?” என்ற வாழ்க்கை நோக்கும் மதிப்பும் கவித்வமும் அழகும் கொண்டது. “லட்சுமி இருந்த இடத்தில் இன்னோரு லட்சுமி” என்பதும் தான். அது ஒரு உச்சம் அதே பேச்சில் வயாதனவனுக்கு இரண்டாம் தாரமாகப் பேசப்படுவது ஒரு “உயரத் திண்ணையிலிருந்து குழந்தையாகக் குதித்து ஓடிய ஒரு பெண். தெருவில் விளையாடியவளை உள்ளே இழுத்து வரப்பட்ட பெண்” என்பது அந்த வாழ்க்கையில் அடி மட்டம். எல்லாமே தஞ்சை தான். தமிழ் நாடே கொஞ்சம் நிற வித்தியாசத்தில் இப்படித்தான். தஞ்சையின் நிறம் அதன் தொனி இங்கு நமக்குச் சொல்லப்படுகிறது.

தன்னை நாடி வந்த அந்தச் சிறு பெண்ணுக்குத் தான் தகுதியற்றவன் என்று நினைக்கும் மனசு தான் அவளுக்கு சந்தோஷமளிக்கும் எதையும் மறுக்காத மனசு தான் பின்னர் பாட்டு சொல்லிக்கொடுக்க வந்த சந்திர சேகரனையும் யோகாவையும் சந்தேகத் தோடு பார்க்க வைக்கிறது. போராட்டங்கள் மனத்துள் தான். முரடன் இல்லை. கொடூரம் ஏதும் இல்லை. “இனிமே பாட்டு வேண்டாமே” என்று சொல்ல் வைக்கிறது. சந்தேகம் தான். அது போதும் யோகாவுக்கு. “வீட்டு வேலையே சரியா இருக்கு” என்று பாட்டு கற்றுக்கொள்வதை நிறுத்தி விடுகிறாள். சந்திர சேகரனும் நல்ல வருமானம் தேடி வெளியூர் போய் விடுகிறான். பின்னர் மனசு மாறுகிறது. “வீடு முழுக்க கால் கொலுசு சப்திக்க, ரசனையில்லாத இந்தக் கிழவனுக்கு ஓடி ஓடி செய்யவா நீ இங்கு வந்தாய்?” என்று தனக்குள் உருகத் தொடங்கியாயிற்று.”

“சந்துரு இருக்கச்சே இந்த வீடு கலகலப்பா இருந்ததிலே யோகா?” என்று கேட்கிறான்.

இப்படி மறுபடியும் கொஞ்ச நாட்களுக்கு அதிகம் சத்தமிடாமல் மௌனத்தில் புழுங்கிய பிணக்கு தீர்ந்து விடுகிறது. ஆனால், இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் பிரச்சினை, அன்றைய பழக கலாச்சாரத்தில் கரைந்து விடுகிறது.

யோகா கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள்.

“அழியற கோலம் தான் தினம் தினம் ஏன் யோகா? சிரத்தையாய், பனிக்குளிரில் நனைந்து கொண்டு தலையைச் சாய்த்து, சரியா வந்திருக்கோ, புள்ளி சரியா வச்சேனோ என்று அக்கரையாய் நேரம் செலவழித்துப் பார்த்து… ஏன் இந்த கஷ்டம்?”

அழிஞ்சா என்ன. போடறதிலே திருப்தி. இருக்கற வரையிலே திருப்தி.அழகு, வசீகரம், சந்தோஷம் – நீங்க சொல்ற மாதிரி எல்லாமே அழியப் போறது தான். ஆனாத்தான் என்ன? சும்மா இருக்க முடியுமோ? எது நிரந்தரம்? சிரிச்சா சந்தோஷம். அது நிரந்தரமோ? அது இல்லேன்னு தெரிஞ்சும், ஏன் இந்த சிரிப்பு, துக்கம்? ஏன் இந்தக் குளியல், பக்தி, பூஜை, ருசி சாப்பாடு, புதுப் புடவைய கொசுவிக் கொசுவி உடுத்தறது, பொட்டு சரியா வச்சுண்டோமான்னு ஒரு தடவைக்கு ரண்டு தடவையா சந்தேகத்தோடு கண்ணாடியப் பாத்துக்கறது, இதெல்லாம் எதுக்குன்னு யோசிச்சுப் பாருங்கோ.” என்று யோகா சொல்லிக்கொண்டே போகிறாள்.

மிக அழகாகச் சொல்லப்பட்ட ஒரு கால கட்டத்திய வாழ்க்கையோட்டத்தையும் மதிப்புகளையும் அதன் அழகையும் சொல்லும் ஒரு நாடகம் மிக அமைதியாக நடந்தேறி விடுகிறது.

புதிர் என்ற கதையில் கமலம் இப்படி நமக்கு அறிமுகமாகிறாள்:

“கமலம் பொல்லாதவளில்லை. ஒரு கல்யாண கூட்டத்திற்குள் நுழைஞ்ச மாதிரி ஒரு கூட்டுக் குடும்பத்திலே பதினாறு வயசில் அடி யெடுத்து வச்சு சமையலறைக்கும், கூடத்துக்கும் கொல்லைக்குமாய் லட்சம் தடவையாவது அலுக்காமல் சலிக்காமல் நடந்து..

சூரியன் உதிச்சுதா – மறைஞ்சுதா –
சந்திரன் பிரகாசிக்கிறானா, இல்லியா
தெரியாது இவளுக்கு

ஒவ்வொருத்தருக்கும் இவளை மய்யமாய் வைத்து தலைபோகிற வேலை. ஒரு நிமிஷம் உட்கார முடியுமோ? பெரிய மச்சினன் பையனின் சிலேட்டுக் குச்சியைக் கூட தேடி எடுத்துத் தரணும்….”

இப்படி நிறையவே வளர்ந்து கொண்டு போகும் அவள் பொறுப்புக்கள்.

லட்சு கதையின் லட்சுவும் அதே காலத்தியவள் தான். ஆனால் அவள் யோகா இல்லை. தன் ஏமாற்றங்களுக்கு தன் வழியில் சுதந்திரமாக விடிவு காணும் தைரியம் அவளுக்கு இருக்கிறது. மறுபடியும் ஏமாற்றப்படுவது தன் தீர்வு என்று நினைத்துக் கொள்கிறாள். ஊர் முழுக்க பேசுகிறது. ஏழு வருஷங்கள் கழித்து மறுபடியும் அவள் வஞ்சிக்கப்படுகிறாள்.

இதன் இன்னொரு கோடி அதிருத்ரம் கதையின் வரகூர் சாஸ்திரிகள். வேதம் கற்றவர். ஆனால் காலம் தப்பி வாழ்பவர். நூறு வருஷம் பிந்தி வாழ்பவர். காலம் தப்பிய படிப்பு, பிழைப்பு. வாழ்க்கை. எல்லாமே பிசகிப் போகிறது. வாலம் அவரோடு வாழ வந்தவளும் கால வழு தான். தான் வஞ்சிக்கப்படுவது ஊரே அறிந்தாலும், அவர் தாங்கிக் கொள்கிறார். அவரால் அதைத் தான் செய்ய முடிகிறது. கடைசியில் வாலம் சென்றடைந்த பணக்கார சேது சங்கர சர்மா இறந்து விட்டான் என்று கேட்டதும், வரகூர் சாஸ்திரிகளுக்கு, “வாலம் அழுவளோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது. அத்தகைய ஒரு அப்பாவி தான் தனக்கு இழைக்கப்படுவதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியும்.

இப்படி பதினான்கு கதைகளிலும் பெண்களின் பல சாயல்களையும் வெவ்வேறு கால கட்டத்தின் தடங்களில் வெவ்வேறு வதைபடும் நிலைகளில் பார்க்கிறோம். இது ஒன்றும் இப்படி எழுதவேண்டும் என்ற சமூக பிரக்ஞையுடன் விஸ்வநாதன் எழுதிவிடவில்லை. தான் அறிந்த மனிதர்களை வாழ்க்கையை எழுதியிருக்கிறார். அதை நாம் ஒவ்வொருவரும் நமக்கேற்ற விதத்தில் படித்துக்கொள்கிறோம். தஞ்சை கிராமத்தின் மனிதர்களும் பெண்களும் அதன் தெருக்களும். இவையெல்லாம் தாமே எழுதிக்கொள்கின்றன, நா விஸ்வநாதனின் கதைகளில்.

வெங்கட் சாமிநாதன்/14.10.08
______________________________________________________________________________________________________
பாட்டியின் சிநேகிதன்: (சிறு கதைகள்) நா.விஸ்வநாதன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98 விலை ரூ50

Series Navigation