பலி (மூலம்- MARCOSAN)

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

தமிழாக்கம்-புதுவைஞானம்


தாக்கு…
அவனது காயத்திலேயே
அவ்வப்போது.
எப்போதும்
ஆறவிடாதே
அந்தப் புண்ணை.
அவனது வேதனையிலிருந்து,

புதிய….
ரத்தம் கசிய வேண்டும்
அவனது வெஞ்சினம்
எப்போதும் வாழவேண்டும்
அவன் நெஞ்சுக்குள்.

பயந்து ஓடினால்….
குற்றவாளியென துரத்திப் பிடி
மறக்க விடாதே அவனை ‘
சேற்றை வாரியடி
அவன் முகத்தில்.

அவனது வார்த்தைகளில்…
பூக்கள் மலருமானால்
சிவந்த ஜீவ ஊற்றை
மிதித்துத் துவை
சவத்தின்
கையைப் போல் வெளிறிப் போகும் வரை
வெறுப்பாகும் வரை.

சூறையாடு…
சூறையாடு…
உள்ளிருக்கும் பாடலை
அவன்
இதயம் வெளியிடக் கூடாது ‘

ஏனெனில்…
இது உன்னுடைய சட்டம்
எனக்கு மிகவும் அன்னியமானது ‘
ஒரு ஆறு
நிலவைத் தீண்ட எழுந்தால்
மலைகளைக் கொண்டு
சுவரெழுப்பு.
ஒரு தாரகை
தனது
தூரத்தை மறந்து
ஒரு சிறுவனின்
உதட்டில் இறங்குமானால்
சொர்க்கத்திலிருந்து
அதனைப்
பிரஷ்டம் செய்–தேசங் கடத்து ‘

ஒரு தறிகெட்ட மான் ஓடி
சுதந்திரத்தை
அருந்துமானால்…
நாயை அடிப்பது போல்
விளாசு.

ஒரு,
மீன்
தண்ணீரில்லாமல் வாழ
கற்றுக் கொள்ளுமானால்
கரைகளும்
நிலமும்
அதற்கில்லையென்றாக்கு.

கைகள்
தொடைகளைத் தடவும் சுகமான
கனவில் காற்றைத் துழாவினால்
பிணைத்து வை
அவற்றை…
வெட்டுக் களத்தில்.

உதயம்
உதிக்குமானால்
இரவென்னும்
பசிய வாளை – அதன்
கண்களில் பாய்ச்சு.

காற்றால்
செய்யப்பட்ட இதயத்தோடு
மனிதன் இலேசாக இருப்பானாகில்
கற்களால் சுமையேற்றி
நெஞ்சு
கால்களில்
கவிழச் செய்.

****

Series Navigation