பரிசு

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

ஆ. மணவழகன்


புதிதாய்,
புதுமையாய்,
அவள்
புன்னகைக்கு ஒன்று…

கருத்தாய்,
காதலாய்,
அவள்
கவிதைக்கு ஒன்று…

கன்னத்து மென்மையில்
பொசுப் பொசுப்பாய் – அவள்
பூனை முடிக்கு ஒன்று…

கால் தடுக்கி விழுத்தேனோ ? – அவள்
கண்ணின்
கருவிழிக்கு ஒன்று…

காத்திருந்து,
கரைந்தேனோ! – அவள்
கன்னக் கதுப்பிற்கு ஒன்று…

உள்ளுக்குள்,
வியர்த்தேனோ! – அவள்
விவேகத்திற்கு ஒன்று..

உறங்காமல்
தவித்தேனோ – அவள்
பெண்மைக்கு ஒன்று..

உரசிப் பார்க்க
நினைத்தேனோ! -அவள்
உதட்டுச் சுளிப்பிற்கு ஒன்று…

எனக்கு மட்டும்
இருக்கும் இடம் சொன்ன
அவள் மச்சத்திற்கு ஒன்று…

முகம் இருந்தும்
முகவரியை இழந்தேனோ ?
அவள் முழுமைக்கும்
ஒன்று…

எல்லாவற்றிற்கும் சேர்த்து
எங்கெங்கோ தேடினேன்…
எப்பொருளும் ஈடு இல்லை என்பதால்,
முடிவில்,
என்னையே….!!!

*******

a_manavazhahan@hotmail.com

Series Navigation

பரிசு

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

ஆர். உஷாராணி (U.A.E.)


ஒரு நிமிடம் மூச்சுவிட மறந்தேன்.காதில் விழுந்தது சரியா என்று சந்தேகம் எழுந்தது.

‘யூ மீன் டூ அண்ட் ஆப் கிலோ ‘

‘நோ!மேம், டூ அண்ட் ஆப் கிலோ கிராம் ‘,என்று பிலிப்பினோஆங்கிலத்தில் சொல்லிவிட்டு,நாளை காலை பத்து மணிக்கு வர வேண்டும், உங்களுக்கு மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த நம்பருக்கு தொடர்புக்கொள்ள சொல்லி,போனை வைத்து விட்டாள்.

அட அறிவே! கிலோ என்றாலும்,கிலோகிராம் என்றாலும் ஒன்றுதானே! ஆஹா! இரண்டரைகிலோனா,மனம் கணக்கு போட்டது.

முன்னுத்தி பன்னிரண்டு அரை பவுன்,உடனே அவருக்கு போன் செய்தேன்.

நா சொல்றத கவனமா கேளுங்க,பக்கத்துல யாராவது இருக்காங்களா என்று ஆரம்பித்தேன்.

மீட்டிங் நடக்குது,என்ன விஷயம் ‘ குரலில் எரிச்சல்.

போன்ல சொல்ல முடியாது,ரொம்ப முக்கியமான விஷயம்,உடனே கிளம்பிவாங்க ‘

ஒருநிமிட மெளனத்திற்கு பிறகு, ஊர்ல இருந்து, போன் வந்துதா ? யாருக்கு,என்ன ?பயம்,அழுகை,சோகம் கலந்த குரலில் கேட்டார்.

‘யாருக்கும் எதுவும் இல்லை,எல்லாரும் நல்லா இருக்காங்க! நல்ல விஷயம்தான் ,கிளம்பி வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

பத்து நிமிடத்தில் பறந்து வந்தவரிடம்,குட்வில் ஹைப்பர் மார்கெட்டில்,ராபில்டிராவில் நமக்கு ரெண்டரைகிலொ தங்கம் விழுந்திருக்கு! என்றேன்.

ஆ என்று வாயை பிளந்தவர்,சாமி படத்தை பார்த்து கும்பிட்டுவிட்டு,சரியா கேட்டியா ? என்றார்.

ஒண்ணுக்கு,ரெண்டுவாட்டி கேட்டேன்,எதாவது ,டவுட் இருந்தா இந்த நம்பர்ல கேக்க சொன்னாங்க.

லைன் கிடைக்கவில்லை,அப்புறம் அவ்வளவு நகையை என்ன பண்ணுவது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.நூறு பவுன் வைத்துக்கொண்டு,மிச்சத்தை விற்றுவிடலாம் என்று முடிவு செய்தோம்.பிரைஸ் அடித்த விஷயத்தை யாரிடமும் மூச்சு விடக்கூடாது என்று முடிவு எடுத்தோம்.

தங்கம் இருபத்திரண்டு கேரட்டா,இருபத்திநாலு கேரட்டா என்று சந்தேகம் வந்தது அவருக்கு.

அமீர் ஓய்புக்கு,ஷாப்பிங் பெஸ்டிவல்ல ஒரு கிலோ கோல்ட் அடிச்சுதே, அது கூட இருவத்திநாலு

கேரட்தான் ‘என்றேன்.

மொதல்ல தங்கம் கைக்கு வந்ததும்,பதினோரு பவுன தனியா எடுத்து வெச்சி திருப்பதி உண்டில போட்டுடனும் ‘ என்று உறுதியாக சொன்னேன்.

பதினோரு கிராம் போதாது! என்று தயக்கமாய் கேட்டார்.என் முறைப்பை பார்த்ததும்,சரி சரி இன்னும் புதுசா எதுவும் வேண்டிக்காதே! ‘என்றார்.

கூப்பன் பில்லப் பண்ணும் போது எத்தன நாள்,என்ன கிண்டல் பண்ணி இருப்பிங்க,திட்டிக்கூட இருக்கிங்க!

எம் பொண்டாட்டி சாமர்தியம் யாருக்கு வரும் ‘என்று சொல்லிக்கொண்டே என் கன்னத்தை கிள்ளினவர், ‘அந்த கூப்பனை கொண்டுவா பார்க்கலாம் ‘ என்றார்.துபாயில் எந்த கடையில் சாமான் வாங்கினாலும் ஒரு பரிசு கூப்பனை கொடுத்துவிடுவார்கள். எல்லா இடத்தில் தேடியும் தேடியது கிடைக்கவில்லை.திரும்ப போன் பண்ணினோம்.

சி.வி.நாயர் ஸ்பீக்கிங் ‘ என்று குரல் கேட்டது.என் கணவர், ‘ சார்,ஒரு சிறிய கொழப்பம்,ராபீல்டிராவ்ல பிரஸ் கிட்டி,ஆனா கூப்பன் இல்ல ‘என்று மலையாளம்+தமிழில்அடித்து விட்டார்.துபாய்க்கு வந்து ஓரளவு மலையாளம் பேச வந்து விட்டது.

‘ஸார்,மலையாளியாணு, நாட்டுல எவ்விட ? உற்சாகமாய் கேட்டார்.

தமிழ்,சாருக்கு மாயவரம் அறியுமோ, டாஞ்சூர்டிஸ்ரிட் ‘தன்மலையாளமொழி திறமையைக் காட்டிக் கொண்டார்.

அந்த ஆளோ சுறத்து இறங்கிப்போய், ‘தழிழா ‘ ‘ என்று இழுத்துவிட்டு ‘பாஸ்போர்ட் கோப்பி,பி.ஓ.பாக்ஸ் நிங்கள்துனு காட்ட டெலிபோன் பில் மதி, என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

யாரிடமாவது சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போல இருந்துச்சு,என் அம்மாவிடம் மாத்திரம் சொல்கிறேன் என்று கெஞ்சினேன்.தயக்கத்துடன் ஒத்துக்கிட்டவர் ‘ஸ்பீக்கரை ஆன் பண்ண சொல்லு, ஒவ்வொருத்தருக்கிட்டையா சொன்னா போன் பில் எகிறிடும் ‘ ‘னார்.

பீக் அவர் இல்லையா, உடனே லைன் கிடைத்தது.அப்பாதான் எடுத்தார், ‘ஒரு குட் நியூஸ், ஸ்பீக்கர் ஆன் பண்ணுங்க,எல்லாரும் கேக்கட்டும் ‘ என்று கத்தினேன்.விஷயத்தை சொன்னேன்.

கங்கிராஜிலேஷ்ன்ஸ் ‘ ‘ என்று என் நாத்தனார் குரல் கேட்டது.இவ எங்க இங்க வந்தா ? என்று குழம்பிப்போய் இருவரும் திருதிரு வென முழித்தோம்.

ரொம்ப சந்தோஷம்,கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிடவந்த எடத்துல நல்லசேதி சொன்னீங்களே! நல்லா இருங்க ‘ இது என் மாமியாரின் குரல்.

என் கணவர் சுதாரித்துக்கொண்டு ‘என்னமா செளக்கியமா ? ‘ என்று கேட்டார்.

‘ஏதோ இருக்கேன், உங்கக்கா வீடு கட்ட தாலி கொடிதவிர எல்லாநகையையும் வித்துட்டா! ஒரு அம்பது பவுனு அவளுக்கு கொடுத்துடு ‘ ‘என்று கட் அண்ட் ரைட்டாக சொன்னார்.

என்னை பார்த்துக்கொண்டே ‘அதுக்கு என்னமா !குடுத்தா போச்சு!சரி வெச்சிடரேன் ‘

அப்புறம் என்னை,ஏன் போன் செஞ்சனு அவர் திட்ட,நீங்க ஏன் ஸ்பீக்கர் ஆன் பண்ண சொன்னீங்கன்னு நா திரும்ப கத்த,அவளுக்கு பத்து பவுனும் ,கல்யாணத்துக்கு இருக்கும் என் தங்கைக்கு பத்து பவுனும் கொடுப்பதுன்னு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது

ராத்திரி படுத்தால் தூக்கமே வரலை. கண்ணை மூடினால் கட்டி கட்டியாய் தங்கமும்,நகைகளுமாய் உலா வந்தது.எப்போது விடியும் என்று காத்துகிடந்தோம்.

பொழுதும் விடிந்தது,நேரத்துல கிளம்பியும் போய்சேர மணியாய் விட்டது.

ஒரே கூட்டம்.எங்களை அறிமுகபடுத்திக்கொண்டதும், கையை குலுக்கிவிட்டு, ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை தந்தார்கள். திறந்துப்பார்த்தால் இரண்டரை கிராம் தங்கம் எங்களை பார்த்து சிரித்தது.

இவர் என்னை பார்த்து முறைக்க, அவமான பட்ட கண்ணகியாய் கோபமாய் சி.வி.நாயரை தேடினேன். எங்களை பார்த்தவுடன் ஹா! ஹா! என்று சிரித்தவர் , ‘வல்லிய தமாஷ் ஆயி போயி சாரே! ஆ குட்டி கிராம ,கிலோகிராம்ன்னு மாத்தி பறஞ்சு, அம்பது கிராம் பஸ்டு பிரைஸ், ஆயாளு அம்பது கிலோ கோல்டுனு நாலு எஸ்கார்ட்டோட வந்நூ,ஓரே கொழப்பம் ஆயி,ஸாரி,ஸாரி ‘ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

நாங்களும் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் பேசாமல் வெளியே வந்தோம்.

***

ramachandranusha@rediffmail.com

Series Navigation