பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்வளர்மதியின் வலைப்பதிவில் எழுதப்பட்ட இரு இடுகைகளைப் படித்தேன். (1) அதிர்ச்சி அடைந்தேன். பதிப்பக தரப்பின் வாதம் என்ன என்பது எனக்குத் தெரியாது.பிரபஞ்சன்,வளர்மதி எழுதியிருப்பது உண்மை என்று எடுத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.

இடதுசாரிகளே இந்த இழிசெயலில் ஈடுப்பட்டிருப்பதை என்னவென்று சொல்ல.தொடர்புடைய எழுத்தாளர்கள் யாரிடமும் முன் அனுமதி பெறாமல் நூல் வெளியிடுவதும், அதை விற்பதும், பின் பாட நூலான பின் எழுத்தாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், அனுமதி பெறாமல் அதை இரு பதிப்புகள் கொண்டு வருவதும், விற்பதும் சுரண்டலின் பல வடிவங்கள். முதலாளி வர்க்கத்திற்கே இதில் பாடம் நடத்தும் தகுதி இடதுசாரி பதிப்பகத்திற்கும், அதற்கு அனுசரணையாக இருக்கும் தலைமைக்கும் உண்டு. முதலாளித்துவம் பேசும் பதிப்பகங்கள் கூட இப்படி கூச்சமின்றி திருடி செயல்படுமா என்று சந்தேகம் எழுகிறது.

எழுத்தாளர்கள் இந்த திருட்டைப் பற்றி முதலில் அறிந்தவுடன் நீதிமன்றத்தை கூட்டாக/தனியாக அணுகி நூல் வெளியீடு, விற்பனைக்கு தடை உத்தரவு பெற்றிருக்க வேண்டும். முறைப்படி ஒப்பந்தம் போடப்படாத நிலையில் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று விற்பனையாக பிரதிகளை பறிமுதல் செய்யக் கோரியிருக்க வேண்டும். இந்த திருட்டுப் பற்றி தெரிய வந்தவுடன் முதலில் ஒரு இடைக்காலத் தடை உத்தரவினை நீதிமன்றத்தில் கோரியிருக்க வேண்டும்.

அதையெல்லாம் செய்யாமல் காலம் கடத்தியதும்,பஞ்சாயத்துப் பேசியதும் சரியல்ல. அப்படி பஞ்சாயத்து பேசியவர்கள், பின் ராயல்டி என்று கொடுக்கப்பட்ட தொகையை வேறு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் சட்டபூர்வமான உரிமைகளை முறையாக நிலை நாட்ட தவறிவிட்டார்கள். இதனால் தங்கள் தரப்பை அவர்களே பலவீனப்படுத்திவிட்டார்கள். நாளை நீதிமன்றத்தினை நாடினால் அவர்கள் பணம் பெற்றதே அவர்கள் எங்கள் செய்கைகளை ஏற்றுக் கொண்டதாகும் என்று பதிப்பகம் வாதிடலாம். மேலும் அப்படி பணம் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் முதலில் ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் படி எதற்கு எவ்வளவு பணம் எந்த அடிப்படையில் என்பதை தெளிவாக அதில் குறிப்பிட்டு, அவற்றின் அடிப்படையில் பணம் தருவதாகவும், பெற்றுக் கொள்வதாகவும், அவ்வாறு பணம் பெற்றுக் கொண்டது தங்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் அதற்கு வகை செய்யும் ஷரத்துக்களை ஒப்பந்தத்தில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இங்கு எழுத்தாளர்கள் அதைச் செய்யவில்லை. அடிப்படை சட்ட அறிவு கூட இல்லாமல் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

முறைப்படி ஒப்பந்தம் இல்லாத போது, ஆசிரியர் அனுமதி இன்றி நூலை வெளியிட்டதை எதிர்த்து நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றிருந்தால் அவர்கள் தரப்பு வலுவானதாக இருந்திருக்கும். பதிப்பகம் செய்தது குற்றம். அதற்கு அவர்களிடமிருந்து தண்ட/அபராத நட்ட ஈடு (punitive damages) கோர எழுத்தாளர்கள் முயற்சி செய்திருக்க வேண்டும். முதலில் அவர்கள் சந்தித்திருக்க வேண்டியது வழக்கறிஞர்களை, அதன் பின் நீதிமன்றம் மூலம் நியாயம் கோரியிருந்தால் இந்த திருட்டு இன்னும் பரவலாக அறிய வந்திருக்கும். பல்கலைகழகமும் அந்தப் பதிப்பகம், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டிருக்க முடியும். நூலை பாடத்திட்டத்திலிருந்து எடுத்திருக்க முடியும். அதனால் பதிப்பகம் நட்டமடைந்தாலும் பல்கலைகழகத்திடம் நட்ட ஈடு கோர முடியாது. மேலும் இப்படி செயல்பட்ட பதிப்பகம், தொகுப்பாசிரியர்களின் நூற்களை இனி பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாது என பல்கலைகழகம் முடிவு செய்யலாம். இப்போது அவற்றிற்க்கான சாத்தியபாடுகளை இந்த பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைகள், பணம் பெற்றுக் கொண்டது குறைத்து விட்டது. நடந்தது நடந்து விட்டது, பணம் கொடுத்து சரி செய்துவிட்டோம் என்று பதிப்பாளர் தரப்பு பேச இவர்கள் வாய்ப்பு தந்துவிட்டார்கள்.

அந்த நூலில் பதிப்புரிமை குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்ததா/ என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்று பிரபஞ்சனும், வளர்மதியும் குறிப்பிடவில்லை. அது மட்டுமின்றி எந்த அடிப்படையில், எந்த நிபந்தனைகளின் பேரில் இந்தத் தொகைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் தெளிவாக இல்லை.எழுத்தாளர்கள் இப்படி நடந்து கொள்வது அவர்களை சுரண்டுவோருக்கு சாதகமாக உள்ளது. அதைக் கூட அறியாமல் எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ என்ற ஐயமே வளர்மதி எழுதியதையும், பிரபஞ்சன் கட்டுரையையும் படித்த போது எழுந்தது. பதிப்புரிமை சட்டம் குறித்து அறிய பல நூல்கள் உள்ளன. ஒரு இரண்டாயிரம் ரூபாய் செலவழித்து விரிவான விளக்கங்கள் கொண்ட சட்ட நூலை வாங்கி படித்தறியலாம். அதை இதுவரை அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை. இனி வழக்கறிஞரை சந்திக்கப்போவதாக வளர்மதி எழுதியிருப்பது நகைச்சுவை. முதலில் அதையல்லவா செய்திருக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு செல்வதென்றாலும் கூட முறையான ஒரு ஒப்பந்தத்தினை எழுத்தாளர்கள் தம் தரப்பில் முன் வைத்து அதன் பின் வழக்கறிஞர்/களுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்க வேண்டும்.

இதில் தொகுப்பாளர்களும் கூட்டுக் களவாணிகள்தான். ஐந்து நாடகங்களை தொகுக்க எதற்கு நான்கு பேர் என்று தெரியவில்லை. முறையான அனுமதி பெறாமல் எழுத்தாளர்களின் படைப்புகளை திருட்டுத்தனமாக பயன்படுத்திக் கொண்ட இவர்கள் மீதும் வழக்குத் தொடர முடியும். பதிப்பகம், தொகுப்பாளர்கள் என இருதரப்பாரையும் இந்த எழுத்தாளர்கள் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திருக்க வேண்டும். அதன் மூலம் நியாயம் கோரியிருக்க வேண்டும். இப்போது பிரச்சினையின் பிற பரிமாணங்கள் பின் தள்ளப்பட்டு பணம் கொடுத்தோம், எல்லாம் சுபம் என்று கூட்டுக் களவாணிகள் வெட்கமின்றி சொல்லித் திரிந்தால் அதில் வியப்பில்லை. இந்த களவாணிகள் தங்களில் யாருக்கும் தண்டனை இல்லாமல் எழுத்தாளர்களுடன் பஞ்சாயத்துப் பேசி பணம் கொடுத்து தீர்க்கும் கலையை வளர்த்தெடுத்து பரப்பினாலும் நான் வியப்படையமாட்டேன்.

எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் இதிலிருந்து சிலவற்றை கற்க வேண்டும். இல்லாவிட்டால் சுரண்டல்களும், ஏமாற்றுதலும் தொடரும்.எழுத்தாளர்கள்/படைப்பாளிகள் பதிப்புரிமை குறித்து அறிந்திருப்பது அவசியம். அத்துடன் தங்கள் உரிமையை எப்படி துகாப்பது/நிலைநாட்டுவது என்பதையும் அறிந்திருப்பது நல்லது. இது குறித்து என் கருத்துக்கள், ஆலோசனைகளை பின்னர் எழுதுகிறேன்.


(1) http://vinaiaanathogai.blogspot.com/2009/06/ccpi.html
http://vinaiaanathogai.blogspot.com/2009/06/piracy.html

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்