பட்ட கடன்

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

உஷாதீபன்


ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கும் மேல் நான் மறந்திருந்த ஒன்றை அன்றிரவு இரண்டு மணியளவில் தெருவாசலில் அப+ர்வமாய் உதித்த சாமக் கோடாங்கி கிளறிவிட்டுப் போனான். அந்த நிமிடத்திpலிருந்து என் மன நிம்மதி குலைந்து போனது.
உடுக்கைச் சத்தம் செவி வழியே புகுந்து என் மண்டையைக் குடைய ஆரம்பித்தது. அத்தோடு தூக்கம் விட்டு;ப் போனது எனக்கு.
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் தியாகராஜனைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் இருவருக்குமிடையிலான நட்பு அப்படிப்பட்டது. வேலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலம அது. ஒரு சர்வீஸ் கமிஷன் தேர்வில் எனக்கு வேலை கிடைத்துப் போனது. ரிசல்டில் தன் நம்பர் வராத போதிலும் அதைச் சகித்துக்கொண்டு என் சந்தோஷத்திற்காக எனது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி என்னோடு பழனிக்குப் புறப்பட்டு வந்தான் அவன். அடுத்தாற்போல் அரசுப்பணிக்கு எழுதிப்போட வயது முடிந்துவிட்டது அவனுக்கு. அந்தத் தோல்வி நிலையிலும் என்னோடு வந்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது நினைவு கூறத்தக்கது.
அதன் பிறகு வேலைக்கு ஆர்டர் வந்து சென்னைக்குச் சென்று விட்டேன் நான். தியாகராஜன் மனம் தளராது ஒரு தட்டச்சுப் பள்ளி வைத்து நடத்தி வர ஆரம்பித்தான். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தனர். விடுப்பில் ஊர் வருகையில் பெரும்பாலான நேரங்களை அங்கே கழிப்பது என் வழக்கமாயிற்ற. அது எனக்கு திருப்தியையும் தந்தது. ஏதோவொரு விதத்தில் அவனும் காலூன்றி வருவது எனக்கு மன நிறைவை அளித்தது. ஓரளவுக்கான தொகை, மாத வருமானமாக வருகின்ற வேளையில், தியாகராஜன் திருமணம் செய்து கொள்ளப் போவதாய்ச் சொன்னான். பள்ளி இன்னும் கொஞ்சம் பெருகட்டுமே என்று சொல்லிப் பார்த்தேன். கேட்பதாய்இல்லை.
அந்த முறை நான் ஊருக்கு வந்தபோது நிலைமை மாறி இருந்தது. பள்ளியில் வேறு ஒரு பையன் அமர்ந்திருந்தான். வேலைக்கிருப்பதாய்ச் சொன்னான். அவன்தான் முழுமையாய்க் கவனித்துக்கொள்கிறான் என்றும் “சார் சாயங்காலம்தான் வருவார்” என்றும் தியாகராஜனைச் சுட்டினான். அதே பத்து மிஷின்கள்தான் இருந்தன. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாய்த் தோன்றியது.
“நீ இருந்து ஸ்டூடன்ஸைக் கவனிக்கிறேங்கிறது தெரிஞ்சாத்தான் பேரன்ட்ஸ் நம்பிக்கையா கொண்டு வந்து சேர்ப்பாங்க. இந்த ஏரியாவிலே உனக்கு ஒரு நல்ல பெயர் இருக்கு. அதைக் கெடுத்துக்காதே…” என்றேன் சுருக்கமாக.
“இன்னொரு இடத்துலே அக்கௌன்டன்ஸி எடுக்கிறேன்…அதிலே ஒரு ஆயிரம் கிடைக்குது..அதான்…” என்றான் தியாகராஜன்.
வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற அவனது நோக்கம் புரிந்தது. ஆனால் திட்டமிடுதலில் ஏதோ கோளாறு தெரிந்தது.
“அங்கே ஆயிரம் வாங்கி இங்கே இந்தப் பையனுக்கு எண்ணூறு கொடுக்கிறதுல என்ன பெரிய லாபம் இருக்கு? என்றேன். நீயே இருந்து கவனித்தால் இதோட வளம் பெருகுமே?” என்றேன். கேட்பதாயில்லை.
“இருக்கட்டும்…பார்த்துக்கலாம்…” என்றான் அலட்சியமாக. ஒருவனைச் சம்பளத்திற்கு வைத்து வேலை வாங்குவதில் ஒரு முதலாளி மனப்பான்மை படிந்து போயிருந்தது அவனிடம். அடுத்த சில நாட்களில் அது உறுதிப்பட்டது எனக்கு.
“ஆமா, வேலைக்கு வச்சிருக்கிற பையனும் சைக்கிள்லதான் வரான். சம்பளம் கொடுக்கிற பிரின்ஸிபாலான நானும் அதிலேயே வந்து இறங்கினா என் ஸ்டேட்டஸ் என்னாறது? அதான்…” என்றவாறே அவன் முன்னால் நிறுத்தியிருந்த டூ வீலரைக் காண்பித்தான். என்னால் சுத்தமாக அந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டிற்குக் கலர் டி.வி. வாங்கியிருக்கிறேன் என்றான்.
“இது தேவையா? ஒரு டைப் மிஷின் வாங்கலாமே?” என்றேன். ……..2……. -2-
கடனுக்குத் தவணை கட்ட உதவுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். அவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. ஏது பணம்? என்ற கேள்வி பிறந்தது என்னுள்.
“உன் போக்கு கொஞ்சம் அதிகமாத் தெரியுது எனக்கு, ஜாக்கிரதை…” என்றேன். அவனை எச்சரிப்பது என் கடமை என்று நினைத்து அதைச் சொன்னேன். அந்த முறைதான் அவனிடமிருந்து சற்று அதிகமாகப் பிணங்கியதாக எனக்கு ஞாபகம்.
அதன் பின் ஒரு ஆறு மாதம்போல் ஊர்ப் பக்கம் வரவேயில்லை நான். எனது துறையில் பதவி உயர்வுக்கான தேர்வுகளில் கவனம் செலுத்தியதில் அந்த நிலை ஏற்பட்டது. அடுத்தாற்போல் தொடர்ந்து வரும் பண்டிகை நாள் விடுமுறைகளில் ஊர் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.
அன்று பொழுது விடிந்த வேளையில் தியாகராஜன் என் அறை வாசலில் வந்து நின்றது ஆச்சரியத்தைத் தந்தது எனக்கு. கூடவே, “இந்தா, உனக்காகத்தான் கொண்டாந்திருக்கேன்…பஸ் டாப்புல போட்டு எடுத்திட்டு வந்தேன்…” என்றவாறே அந்தப் பச்சை நிற ராலே சைக்கிளைக் காண்பித்தான். அறை வாசலுக்கே ஏதோ அழகு வந்தது போலிருந்தது. “ஒரு சைக்கிள் இருந்தாத் தேவலை” என்று என்றோ நான் சொல்லியிருந்ததை அப்படியே நினைவில் வைத்திருந்து வாங்கி வந்திருந்தது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த முறை தியாகராஜனின் வரவு ரொம்பவும் சந்தோஷமளிப்பதாக இருந்தது எனக்கு. ஊர் திரும்பும் போது கேட்டேன் அவனிடம். என் மனம் எப்போதும் அவன் நலமே நாடியது என்பதற்கு அதுதான் உதாரணம்.
“ஆமா, நீ இங்க சுத்திட்டிருக்கியே? ஸ்கூலை யார் பார்த்துப்பா?” என்றேன்.
“அதான் பையன் இருக்கானே?” என்றான் சர்வ சாதாரணமாய்.
“முழுக்க முழுக்க அவன்ட்டயே விட்டுட்டியா?” என்று மேல் கேள்வி போட்டேன்.
“அதெல்லாம் நல்லாப் பார்த்துப்பான்…தகுதியான ஆள்தான்…”என்றான். நினைக்கும் காரியத்தை எல்லாம் பட்டுப் பட்டென்று எப்படி இவனால் செய்து கொண்டு போக முடிகிறது? எனக்கு ஆச்சரியமாய்த்தான் இருந்தது. நாம்தான் ஒவ்வொன்றுக்கும் அசடு மாதிரி யோசித்துக்கொண்டிருக்கிறோமோ என்று எண்ண ஆரம்பித்தேன்.
அந்தத் தகுதி எந்த அளவுக்கு திசை மாறி வீசியிருக்கிறது என்பது அந்த முறை நான் ஊருக்குப் போனபோது வெட்ட வெளிச்சமானது.
ஒரு பெண்ணோடு சேர்த்து அந்தப் பையனை நகருக்குள் பார்த்தேன் நான். உடனே வந்து எச்சரித்தேன். தியாகராஜன் அதிர்ச்சியுறவேயில்லை.
“அது அவனோட பர்ஸனல். நாம எப்படித் தலையிட முடியும்…” என்றான்.
அவனை ஓங்கி அறையலாம் போலிருந்தது எனக்கு. “அது உன் ஸ்கூல்ல படிக்கிற பொண்ணுடா…?” என்றேன். அதற்கும் அவன் அசையவில்லை.
“அது படிக்க வர்ற நேரத்துல எப்படியிருக்குது? அதுதான் எனக்கு முக்கியம். மத்த நேரம் என்ன செய்யுதுங்கிறதைப் பார்க்கிறது என் வேலையில்லே…”
“அடப்பாவி…மடத்தனமாப் பேசுறியே? பள்ளி பேர் கெட்டிடாதா? பொழப்பு நாறிடும்டா…” என்றேன். பிறகுதான் விழித்துக்கொண்டான். மறுநாளிலிருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று அந்தப் பையனிடம் சொல்லி விட்டான்.
“நல்லதாப் போச்சு…இனிமே நீயே இருந்து கவனி…” என்றேன். பதில் இல்லை. வேறு ஆள் தேடுவான் என்று தோன்றியது.
“நீ உருப்படவே மாட்டடா…” என்றேன். வாய் தவறி வந்துவிட்டது அப்படி. பிறகு ஏனோ மனது சங்கடப்பட்டது. அதுதான் கடைசி முறை நான் அவனைப் பார்த்தது. பிறகுதான் ஊருக்கு நான் வரவேயில்லையே?
அடுத்த ஆறாவது மாதம் எனக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைத்தது. ஊர் வந்து சேர்ந்தேன் நான். அதன் பிறகு அனுதினமும் தியாகராஜனைச் சந்திப்பதும், அவனோடு பல இடங்களுக்குப் போவதும் வழக்கமாயிற்று.
ஒரு நாள் அதை என்னிடம் சொன்னான் அவன். ………..3………… -3-
“ஒரு வருஷமா கடன்ல வாங்கின மெஷினுக்கு ட்ய+வே கட்டல…கம்பெனிலர்ந்து நோட்டீஸ் வந்திருக்கு..”
-நான் அவன் முகத்தையே பார்த்தேன்.
“ரெண்டு மிஷினுக்கு ஒரு இடத்துல கடன் வாங்கிக் கொடுத்தேன். அதையும் கட்ட முடியலே…ரொம்ப நெருக்கறாங்க…எல்லாமா சேர்ந்து ஒரு முப்பதினாயிரம் வரும்…ஆளுக்கொரு பக்கம் சேர்ந்து நெருக்கினா நான் என்னதான் பண்றது? தவணை கேட்டா ஒத்துக்க மாட்டேங்கிறாங்க…தற்கொலை பண்ணிக்கலாமான்னு இருக்கு….” – இந்த வார்த்தையை அவன் சொன்னபோது பதறிப்போய் அவன் வாயைப் பொத்தினேன் நான். அன்று அவன் வாய்விட்டு, மனது விட்டு, சொன்னதும், அழுததும் என் மனதை மிகவும் சங்கடப்படுத்தத்தான் செய்தது.
“ஒரு பைனான்சுல பணம் தர்றேங்குறான்…வாங்கி இந்தக் கடனையெல்லாம் அடைச்சிட்டேன்னா கொஞ்சம் மூச்சு விட்டுக்குவேன்…கவர்ன்மென்ட் வேலையுள்ள ஆசாமியா வேணும்ங்கிறான். கொஞ்சம் nஉறல்ப் பண்றியா?” தயங்கித் தயங்கி அவன் சொன்னதும், அவன் குடும்ப சூழ்நிலையும் வெகுவாக பாதித்தது என்னை.
“அந்தப் பணத்தை நீ எப்படித் திருப்பிக் கட்டுவே? “ என்றேன். மாதம் ஒரு தொகை வீதம் செலுத்துவதற்குரிய திட்டத்தைச் சொன்னான். அது எனக்கு திருப்தியாகவே இருந்தது.
“நீயே இருந்து கவனி…ஒரு குறையும் வராது…” என்றேன். ஏனென்றால் அப்பொழுது ஒரு பெண்ணை அவன் வேலைக்கு வைத்திருந்தான் என்பதை நான் இங்கே மறக்காமல் சொல்லியே ஆக வேண்டும்.
முழு நம்பிக்கையோடும், திருப்தியோடும்தான் கையொப்பமிட்டுக் கொடுத்தேன். பிடி இல்லாமல் தவிக்கிறான். அவன் மூழ்கிவிடலாகாது. இதுவே அப்போது என் நோக்கமாக இருந்தது.
அதன்பிறகு ஒரு கால கட்டத்தில் எனக்குத் திருமணமானது. இயல்பாக நான் ஒதுங்க ஆரம்பித்தேன். விமலாவிடம் அதைப்பற்றிச் சொல்லவேயில்லை. தியாகராஜனின் மிது அத்தனை நம்பிக்கை எனக்கு. காசு ஒரு காரணி. அதுவேவா வாழ்க்கை? இதுதான் என் சித்தாந்தம்.
ஆனால் ஒரு நாள் ஆபிஸ் வாசலில் அமீனா வந்து நின்றபோது சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது எனக்கு. அவனை அப்படியே வெளியே தள்ளிக்கொண்டு வந்து விசாரித்தேன்.
“முப்பதினாயிரத்தில் ஒரு தவணை கூடக் கட்டப்படவில்லை என்பது அப்பொழுதுதான் தெரிந்தது எனக்கு. அதுவும் வட்டியோடு சேர்த்து நாற்பதை எட்டியிருந்தது. இரண்டு நாள் அவகாசம்…இல்லையெனில் தியாகராஜன் கொடுத்த செக்குகள் திரும்பியதை வைத்து அவனை உள்ளே தள்ளத் திட்டம்..” என்றான் அமீனா.
தொடர்ந்து ஒரு வாரம் தூக்கமில்லை எனக்கு. நாள் வேண்டியிருந்தேன் நான். தியாகராஜன் கல்லுளி மங்கனாய் நின்றான்.
“நான் என்ன செய்யுறது? எனக்கு வழியெல்லாம் அடைச்சுப் போச்சு. உள்ளே போகவும் தயாராய்த்தான் இருக்கேன்…” என்றான். அவன் மனைவி வந்து கதறியது உலுக்கியது என்னை. என்னதான் பிழைப்பு நடத்தியிருக்கிறான் என்று மலைத்தேன் நான்.
“நமக்கு நிம்மதிதான் முக்கியம்;. நல்லவேளை, இப்பவாவது சொன்னீங்களே…” என்றவாறே தன் நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள் விமலா.
இதோ , இதே ஊரில்தான் இருக்கிறான் தியாகராஜன். வாரத்தில் ஒருமுறையாவது அவனைப் பார்க்கத்தான் செய்கிறேன். நான் கேட்பதில்லை. ஆனால் அவனும் சொல்வதில்லை. தரும்போது தரட்டும் என்றிருந்தேன். ஆனாலும் மனசாட்சியை விற்றுவிட்டானோ என்று இப்போது ஏன் தோன்றுகிறது.?
எத்தனையோ காலகட்டங்களில் அவனைக் கை தூக்கி விட்டிருக்கிறேன் நான். என்னளவுக்கு அவனுக்கு யாரும் நிச்சயம் உதவியிருக்கப் போவதில்லை. ஆனால் மனைவியின் நகையை விற்று எவனும் செய்திருப்பானா என்பது நிச்சயம் சந்தேகம்தான். ஒரு வாய் வார்த்தைகூட இல்லை அவனிடம். அதுதான் எனக்கு வயிற்றெரிச்சல்.
இப்பொழுது நானும் ஒரு குடும்பஸ்தன். ரெண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். ………….4…………….. -4-
மாதச் சம்பளத்தில் காலம் தள்ளும் ஆசாமி. அறிவான் அவன். ஆனால் என்னைக் கிறுக்கனாய் எண்ணி விட்டானோ? அடிக்கடி தோன்றுகிறது இப்படி. மனம் குமுறுகிறது. என் மனைவி முன்னால் தலை குனிய வைத்த அந்த நிகழ்வு என்னை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
பொழுது விடிந்துவிட்டது. தியாகராஜனைப் பார்த்துக் கேட்டுவிடுவது என்று கிளம்புகிறேன். ;இரண்டு பஸ் மாறி அந்த ஸ்டாப்பில் இறங்கி நடக்கிறேன். தெருக் கோடியிலுள்ள தியாகராஜனின் வீட்டை நோக்கி என் கால்கள் வேகமெடுக்கின்றன. தூரத்தே அவன் வீடு. அங்கே வாசலில் ஒரே கூட்டம். கசமுசவென்ற பெரும் சத்தம். என்னவாயிற்று? திரும்பவும் கடன்காரர்கள் வந்து நின்று விட்டார்களோ? இன்னும் கட்டாக் கடன், என்னிடம் சொல்லாக் கடன் நிறைய வைத்திருக்கிறானோ?
“என்னங்க விஷயம்?” – வழியில் கடந்தவரிடம் கேட்கிறேன்.
“என்னவோ பிரச்னை…” சொல்லிக் கொண்டே போகிறார் அவர்.
என் மனது ஏனோ கலக்கமுறுகிறது. உடம்பு வியர்க்கிறது. கால்கள் நடுக்கமுறுகின்றன. இந்த நேரத்தில் அங்கு போக வேண்டுமா? அல்லது இப்படியே திரும்பி விடலாமா? என்று கூடத் தோன்றுகிறது.
இரவு சாமக் கோடாங்கி அடித்த உடுக்கை ஒலி ஏனோ மிகப் பெரிதாகி நாராசமாய் என் காது மடல்களைக் கிழிக்கின்றது.
“இந்த வீட்டு மொதலாளி எதிலயும், யாருக்கும் ஒதவுறேன்னு கைநாட்டு வச்சிராதீக….அது அவுக ராசிக்கு ஆகவே ஆகாது…சக்கம்மா சொல்லுறா…தாயி சக்கம்மா எச்சரிக்கிறா….? ஆகாது….ஆகாது…ஆகவே ஆகாது….. குடுகுடு…..குடுகுடு…..குடுகுடு……குடுகுடு…..குடுக்….குடுக்…குடுக்…”
நிழலோடு நிழலாகப் போய்க் கொண்டிருந்த அந்தக் கோடாங்கியின் கனத்த உருவம் என் கண்முன்னே ஏனோ தேவையில்லாமல் தோன்றி உண்மையிலேயே பயமுறுத்தியது என்னை.
“சே…!” என்று எனக்கு நானே மறுத்துச் சொல்லிக் கொண்டு முன்னேறுகிறேன்.
இரண்டு தப்படி வைத்த வேளையில் மீண்டும் கடந்து சென்ற ஒருவரிடம் தவிர்க்க முடியாமல் கேட்டு வைக்கிறேன்;.
“சார், அந்தக் கடைசி வீட்டுல என்ன பிரச்னை?”
சென்றவர் நின்று நிதானமாக என்னை ஏற இறங்கப் பார்க்கிறார். பிறகு சொல்கிறார்:
“அந்த வீட்டுக்கார ஆளு தூக்கு மாட்டிக்கிட்டாருங்க….!!!!”


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்