க.ராஜம்ரஞ்சனி
திண்ணையில் சகோதரர் எம்.ரிஷான் ஷெரிப்பின் ‘பட்சி’ கதையைப் படித்தேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=11002065&format=html). காதல் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திப் பெண்ணின் மனதைக் கீறி அதன் இரணத்தை நம்மை அறிய வைக்கும் உணர்வாய் கதைப்பின்னல் அமைந்திருந்தது. எளிய கருவைக் கொண்டிருந்தாலும் இக்கதையின் கதாபாத்திரங்களே என்னை வெகுவாக ஆழ்ந்து சிந்திக்க வைத்தன. கதை படித்த பின்னர் நீடித்த சிந்தனையே முடிவுதான் இது.
‘நீ எழுதுறது எனக்குப் பிடிக்கல..இதையெல்லாம் நீ விட்டுறணும்..ஏன் எப்பப் பார்த்தாலும் உனக்கு மட்டும் இவ்ளோ மெயில் வருது நல்லா எழுதுறேன்னு பாராட்டி..? நானும்தான் எழுதுறேன்..ஒருத்தன் சீண்ட மாட்டேங்குறான்..பர்ஸனலா உன்னோட போட்டோஸ் அனுப்பிவச்சியா? பார்த்து வழிஞ்சுட்டு ஒவ்வொருத்தனும் பாராட்டுறானா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதையெல்லாம் நிறுத்திடு. எனக்கு நீ எழுதுறது பிடிக்கல.. ‘
இக்கதை வரிகள் ஆழமானவை. எழுத்தை மதிப்பவன் இவ்வாறான வார்த்தைகளை எளிதில் வீச மாட்டான். பெண்ணின் படைப்பாக்கத்தில் நம்பிக்கையற்றவனின் எழுத்தை எவ்வாறு மதிப்பிடுவது போன்ற சந்தேகங்களைக் கிளறிவிட்டன இவ்வரிகள்.
காதல் செய்யும் முயற்சியின்போது அவளின் எழுத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பும் அவளது அழகையும் பிரமித்தவன், திருமணத்திற்கு முன்பே அதற்கு முரணாகின்றான். மனித இயல்பு வாழ்க்கையில் இவ்விஷயங்கள் சாதாரணங்களாகி போனாலும் எழுத்துத்துறை சார்ந்தவர்களிடையிலும் இவை சாதாரணங்களாகி போகும் தருணங்களைத் தொடக்கத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாக இருந்தது. ஆனாலும் ஆழ்ந்து நோக்குகையில் மனித இனத்தின் இயல்புகள் துறை சார்ந்து மாறுவதில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.
முதலில் அவன் காதலை ஏற்க மறுப்பவள் பின் ஏற்கிறாள். அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கை அவனது எழுத்தினால்தான் உருவானது என்பது என் கருத்து. அவன் மீதான நம்பிக்கை உடைபடும் கணம் அவன் எழுத்தின் மீதான மதிப்பும் சேர்ந்தே அழியுறுகின்றது. கதையின் முடிவு காதலில் ஏற்படும் நம்பிக்கை துரோகத்தின் எதிர்க்குரலாய் வெளிப்பட்டாலும் என்னைப் பொறுத்தவரை அவனுக்கு அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்புக்கும் உணர்வுக்கும் காதல் என வகைப்படுத்த இயலவில்லை. காரணம் காதல் என்பது அன்பை மட்டும் கொண்டு மனதில் உருவாகி உயிரில் கலக்கும் ஓர் அற்புத உணர்வு. காதலியின் நியாயமான விருப்பத்தைத் தடை செய்யும் எண்ணம் உண்மைக்காதலில் கண்டிப்பாக உருவாகாது. சிறப்பான கதை.
இக்கதையைப் படித்து முடிக்கையில் கு.பா.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ எனும் கதையை நினைவில் தட்டி விட்டுச் சென்றது. முற்போக்கு சிந்தனையாளனான ராமு தான் கரம்பிடித்த மனைவி முற்போக்காக நடக்க எத்தனிக்கும்போது தடுமாற்றம் அடைகின்றான். அவனின் சக நண்பன் மணியும் முற்போக்கு சிந்தனையைக் கொண்டிருந்தாலும் அதனை எதிர்கொள்ளும்போது சற்று தடுமாறவே செய்கின்றான். ராமுவும் மணியும் கல்லூரியில் முற்போக்கு கொள்கைகளைப் பேச்சுவழி வெளிப்படுத்தியிருப்பினும் நடைமுறை வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுவது விந்தையானது. படிக்காத பெண் முற்போக்காக நடக்க ஒரு அடி எடுத்து வைக்க முயலும்போதே குற்றப்பார்வைகள் பல அடிகளாய் அவள் மீது விழ எடுத்த அடியைப் பின்வாங்கிக் கொள்வதாய் கதை அமைகின்றது. கனகாம்பரத்தைக் குறியீடாக பயன்படுத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தும் ராமு, கணவனின் மகிழ்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பெண்ணாக சாரதா என கதையில் வரும் பகுதிகள் முற்போக்கு சிந்தனைகள் செயல் வடிவம் பெற இயலாது தோல்வியைத் தழுவும் நிலைகள்.
முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட பல ஆண்கள், பெண்கள் குறிப்பாக மனைவி என்பவள் முற்போக்காக நடப்பதை ஏன் விரும்புவதில்லை என்ற புதிருக்கு எனக்கு உறுதியான பதில் தெரியவில்லை. தாழ்வு மனப்பான்மையாக இருக்கக்கூடும் என நினைத்ததுண்டு. ஆனால் பெண்களுக்கு ஆண்களிடம் ஏற்படாத தாழ்வு மனப்பானமை ஏன் ஆண்களிடம் மட்டும் ஒட்டி கொண்டது என அதன் தொடர் கேள்வியாய் என்னுள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. இங்கே முற்போக்கு சிந்தனைகள் என நான் குறிப்பிடுவது சமுதாயத்திற்கு எவ்விதத்திலும் புறம்பான விளைவைக் கொடுக்காத சிந்தனைகள். முற்போக்கு சிந்தனைகள் எப்போதும் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், நாடு என்ற அடிப்படையில் நோக்குகையில் எவ்வித சாராருக்கும் களங்கத்தை ஏற்படுத்தாவண்ணம் இருக்க வேண்டும் என நம்புகிறேன்.
சிந்தனைகள் யாவும் செயல் வடிவம் பெறும் பொழுதுதான் அதற்குரிய வெற்றி எல்லையைத் தொடுகின்றன. சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள பாதையை இணைத்துக் கடக்கும்போது அதனை எதிர்கொள்ளும் ஆற்றலும் வேண்டும் என்பதைப் பட்சியும் கனகாம்பரமும் மனதினுள் பதிக்கின்றன. எல்லா விஷயங்களிலும் சிந்தனையும் செயலும் ஒரே கோட்டில் இருக்குமானால் பிரச்சனைகள் சுலபமாக களையப்பட்டு முன்னேற்றத்தைத் தரும் என்பது என் சிந்தனையில் உருவான கருத்து.
க.ராஜம்ரஞ்சனி
மலேசியா
rajamranjini@gmail.com
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- வேத வனம் விருட்சம் 85
- சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”
- பட்சியும் கனகாம்பரமும்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010
- என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு
- பெத்தமனம் பித்து
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14
- பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்
- கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)
- பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3
- அஜ்னபி
- உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து
- அம்மா
- உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்
- காதலி எனும் கிறுக்கல்கள்!
- இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை
- திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா?
- காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்
- முள்பாதை 29
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று
- ஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17