படிக்காசு

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

அ.முத்துலிங்கம்


இந்த முறை புதுவருடம் பிறந்தபோது எனக்கு மூன்றே மூன்று வாழ்த்துக்கள் வந்தன. என் வாழ்நாள் முழுக்க சேர்த்த நண்பர்களின் தொகை இஇப்பொழுது மூன்றிலே வந்து நின்றது. ஒரு நண்பர் மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பியிருந்தார். அது சுற்றுநிருபம் போல மேலும் முப்பது பேருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அடுத்த நண்பர் அதுகூடச் செய்யவில்லை. ஒரு கொழுவியை (link) அனுப்பியிருந்தார். நான் அதை சொடுக்கினால் என் வாழ்த்து அட்டை ‘கிணிங்’ என்ற சத்தத்துடன் திறந்து வாழ்த்து சொல்லுமாம். நான் அதற்குள் போகாமல் வெளியே நின்று அதை நீக்கினேன். மூன்றாவது வாழ்த்து மின்னஞ்சல் வெங்கட் சாமிநாதனிடமிருந்து வந்தது. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து என்னை நினைத்து வாழ்த்து அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்துடன் ஒரு கேள்வியும் கேட்டிருந்தார். ‘நீங்கள் ஈழத்தில் புதுவருடம் கொண்டாடுவீர்களா?’

நான் சிறுவனாய் இருந்தபோது எனக்கு பிடித்த கொண்டாட்டம் பொங்கல்தான். அன்றுதான் பொங்கிப் படைத்து உண்டு மகிழ்வோம். சிறுவர்களுக்கு சீனவெடி, வாணம், பூந்திரி என்று வகைவகையாக கிடைக்கும். தீபாவளியில் நாங்கள் வெடிப்பது இல்லை, புது உடுப்போடு சரி. புது வருடம் எங்களுக்கு பிடித்ததற்கான காரணம் அதிகாலை முழுகி புத்தாடை அணிந்த பிறகு கிடைக்கும் ‘கைவியளம்.’ வருடத்தில் ஒரு முறை சிறுவர்களாகிய நாங்கள் காசு பார்ப்பதென்றால் அது அன்றுதான்.

பகல் வேளையாயிருந்தாலும் ஒரு நல்ல நேரம் பார்த்து ஐயா குத்துவிளைக்கை கொளுத்திவைத்து அமர்ந்திருப்பார். ஒரு தாம்பாளத்தில் காசு தாளாகவும், சில்லறையாகவும் அடுக்கி பக்கத்தில் ஒரு கட்டு வெற்றிலை, பூக்கள், நெல்தானியம் என்று பரப்பியிருக்கும். ஐயா வெற்றிலையில் காசு, பூ, நெல் வைத்து மடித்து கொடுப்பார். ஒவ்வொருவரும் வந்து வாங்கிச் செல்வார்கள். ஐயாவின் ‘கைவியளம்’ நல்ல அதிர்ஷ்டத்தை வருடம் முழுக்க தரும் என்று நம்பினார்கள். எல்லோருக்கும் கொடுத்து முடிந்தபிறகு எங்கள் முறை. எனக்கு 25 காசு கிடைக்கும்; என் தம்பிக்கும் 25 காசு. வருடா வருடம் எங்கள் உயரத்திலும், வயதிலும், எடையிலும் மாற்றமிருந்தாலும் காசில் மாற்றமிருக்காது.

வருடப் பிறப்பில் இன்னொரு விசேடம் போர்த் தேங்காய் அடிப்பது. மாதக் கணக்காக கிணற்று நீரில் ஊறவைத்து வலுவூட்டப்பட்ட தேங்காய்கள் எல்லாம் அன்று வெளியே வரும். எங்கள் வீட்டு வீதியில்தான் போர் நடக்கும். நாணயத் தேர்வு ஒன்றும் கிடையாது. முதலில் ஒருவர் போர்த்தேங்காயை நெட்டுக்குத்தாக வைக்க, மற்றவர் அதை அடிப்பார். அடுத்து மற்றவர் நிறுத்த முதலாமவர் அடிப்பார். யாருடைய தேங்காய் முதலில் உடைகிறதோ அவர் தோற்றுப்போனவர் ஆவார்.

எங்கள் வீதி சாதனைக்காரன் தங்கராசா. ஒரு முறை தங்கராசா எல்லா தேங்காயையும் அடித்து நொருக்கிவிட்டு இஇனி வெல்லுவதற்கு தேங்காய் இஇல்லாமல் நின்றான். அப்பொழுது பார்த்து வழியால் தேவசகாயம் போனான். அவன் கிறிஸ்தவப் பையன். எங்கள் பள்ளியில் படித்து பிறகு படிப்பை பாதியில் விட்டவன். ஓர் இஇறுக்கமான கால் சட்டையும், இஇனிமேல் கிழிவதற்கு இஇடமில்லாத ஒரு சேர்ட்டும் அணிந்திருந்தான். ‘உன்னிடம் தேங்காயிருக்கா?’ என்றான் தங்கராசா. அவன் கால்சட்டைப் பைக்குள் கையைவிட்டு ஒரு சின்னத் தேங்காயை வெளியே எடுத்துக்காட்டினான். ஆனால் விளையாடச் சம்மதிக்கவில்லை. காசுக்கு விளையாடுவதற்கு உடனேயே ஓம்பட்டான். தங்கராசாவிடம் கைவியளக் காசு ஐம்பது சதம் இருந்இதது. தேவசகாயமும் தன் காசைக் காட்டினான்.

முதலில் தேவசகாயம் தேங்காய் வைக்க தங்கராசா அடித்தான். அது சறுக்கிக்கொண்டு போனது. இப்பொழுது தேவசகாயத்தின் முறை. தேங்காயை நல்ல வளம் பார்த்து ஒரு கோணத்தில் நிறுத்தினான். இரண்டு கால்களையும் அகட்டிக்கொண்டு, தன் தேங்காயின் அடிப்பக்கம் இறங்குவதுபோல கன நேரம் கோணம் சரி பார்த்தான். கண்மூடி திறப்பதற்குள் இடிபோல ஓர் அடி. தங்கராசாவின் காய் சிதறியது. தேவசகாயம் 50 காசை வாங்கிக்கொண்டு வந்தவழியே போனான். அன்றுதான் முதல் பாடம் படித்தேன். போர் தேங்காயில் வெல்வது என்பது முற்றிலும் தேங்காயில் இஇல்லை, அடிப்பவனின் சாமர்த்தியத்தை பொறுத்தே இருக்கிறது. பிறகுதான் கேள்விப்பட்டோம் அன்று தேவசகாயம் ஒரு சின்னத் தேங்காயை வைத்துக்கொண்டு நல்ல காசு உழைத்தான் என்று.

அதற்கு முதல் வருடமோ அடுத்த வருடமோ ஞாபகமில்லை. நாங்கள் ஒழுங்கையில் போர்த்தேங்காய் அடித்து விளையாடிக்கொண்டு இருந்தபோது பத்துமா என்பவள் ஒரு தேங்காயை நெஞ்சுக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தாள். அவள் எங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் வசிப்பவள். அந்த வீட்டில் இருந்தவர்கள் அத்தனைபேரும் பெண்கள். இவள் கடைக்குட்டி. இவள் சிறுமியல்ல; முழுப்பெண்ணும் அல்ல. ஆகவே இரண்டு பருவத்துக்கான அனுகூலமும் அவளுக்கு உண்டு.

அவளுடைய உடம்பு நாடியிலே ஆரம்பித்து இடுப்பிலே முடிந்ததால் அனைத்து கண்களும் அங்கேயே சுழன்றன. அவள் கொண்டுவந்த தேங்காய் வயிறு பெருத்து உருண்டையாக காணப்பட்டது. அது போர்த்தேங்காய் வம்சமே அல்ல. சமைப்பதற்குகூட கத்தியால் உடைக்கத் தேவை இல்லை. ‘இதை உடைக்கட்டாம்’ என்று நுங்கு குடிப்பதுபோல உறிஞ்சி உறிஞ்சி சொன்னாள். இரண்டு கைகளையும் முன்னால் கோர்த்துக்கொண்டு வகுப்பிலே வாய்ப்பாடு ஒப்பிப்பதற்கு நிற்பதுபோல நின்றாள்.

ஆடியபாதம் தேங்காயை அடிப்பதற்கு செய்த ஆயத்தங்களைப் பார்த்து நாங்கள் திகைத்துவிட்டோம். முதலில் சேர்ட்டைக் கழற்றி கிளுவையில் தொங்கவிட்டான். அவன் கேசம் குளிர் காலத்தில் கட்டிப்பதமாகும் தேங்காய் எண்ணெய் பூசி வாரப்பட்டிருந்தது. சீப்பு கிழித்த கோடுகளை பத்தடி தூரத்தில் இருந்துகூட யாரும் எண்ணிவிடலாம். அவனுடைய கையும், திரண்ட புஜமும் இஇந்தப் போருக்கு அவசியமானதாகவே தெரியவில்லை. கொடுப்பு பல் தெரிய சிரித்துக்கொண்டு, கறுத்து மினுங்கும் தேங்காயின் கூர்ப்பாகத்தால் ஓங்கி அடித்ததும் பத்துமாவின் தேங்காய் காத்திருந்ததுபோல பிளந்தது. அந்தப் பெண் ஆரோ உயிரை எடுத்ததுபோல அழுதுகொண்டு உள்ளே ஓடியது. ஆடியபாதம் ஓநாயொன்றின் ஊளை போல பெரிதாகச் சத்தம்போட்டு சிரித்தான்.

சிறிது நேரம் கழித்து பத்துமா தாழ்த்திய கண்களுடன் வெளியே வந்து ‘அம்மா உடைந்த தேங்காயை கொண்டரட்டாம்’ என்றபோது நாங்கள் சிரட்டையை தவிர மற்ற எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டோம். ரோட்டுச் சண்டைக்கும், வசைக்கும் பேர்போனவர் அந்தத் தாய். அவர் வெளியே வந்து வசைபாட ஆரம்பித்தால் பள்ளிக்கூடத்தில் பத்து இஇலக்கிய வகுப்புகளில் கற்றுக்கொள்ள முடியாத கற்பனை எல்லைகளை ஒரே நிமிடத்தில் கற்றுக்கொண்டுவிடலாம். ஆடியபாதம் என்ற பெயரில் இஇருந்து ஆரம்பித்தார் அந்த அம்மா. ‘பாதம்’ என்பதை நீக்கிவிட்டு இஇன்னும் பொருத்தமான ஓர் உடலுறுப்பைச் சேர்த்துவைத்து பேசினார். பிறகு அவனுடைய தாயையும் தகப்பனையும் திட்டித் தீர்த்தார். இறுதியில் ‘உன்ரை கொப்பனிட்டை போய் சொல்லடா. உன்ரை இஇளங்கொடியை தாட்ட இஇடத்தில் கிண்டிப் பார்க்கச் சொல்லு. உன்ரை மூளையில் பாதி அதோடை போட்டுது’ என்றார்.

அழுதுகொண்டு உள்ளே ஓடிய அதே பத்துமா சரியாக ஐந்து வருடம் கழித்து ஆடியபாதத்துடன் ஓடிப்போனாள். அப்பொழுது அவளுடைய இஇரண்டு அக்காமாருக்கும் மணமாகவில்லை. பத்துமாவின் காதல் போர்த்தேங்காயில்தான் ஆரம்பித்திருக்கவேண்டும் என்று பலரும் ஊகித்தார்கள். அவனுடைய தோள் அழகைக்கண்டு மயங்கினாளா அல்லது ஓநாய்ச் சிரிப்பைக் கேட்டு மயங்கினாளா என்பதும் தெரியவில்லை. ஒரு வேளை அவளுடைய தாயாரின் அசாதாரணமான உவமை அவளை அவன்பால் ஈர்த்திருக்கலாம்.

அதற்கு அடுத்து வந்த புதுவருடமும் நல்ல ஞாபகமிருக்கிறது. அது மறக்க முடியாதது, ஏனென்றால் எப்படி யோசித்து பார்த்தாலும் அதற்கு பிறகு வந்த ஒரு புது வருடத்தையும் என்னால் நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. அதுவே என் ஞாபகத்தில் என்றும் இருக்கும் கடைசி புதுவருடம்.

எனக்கும் என் தம்பிக்கும் ஒருவருட வித்தியாசம்தான். அவன் படிப்பில் கெட்டிக்காரன். வகுப்பில் முதல் ஐந்துக்குள் வந்துகொண்டிருந்தவன் கடைசி இரண்டு தவணைகளும் கீழே இறங்கியிருந்தான். என் விசயம் என்றுமே நல்லாய் போனதில்லை. சோதனை முடிவுகள் இறங்குமுகமாக இருந்தன. ஐயா தீர்மானமாகச் சொல்லிவிட்டார். இந்த தடவை சோதனையில் நல்லாய்ச் செய்தால்தான் ‘கைவியளம்’ என்று. ஐயாவின் அகராதிப்படி முதல் ஐந்துக்குள் வந்தால் போதும். நானும் தம்பியும் விழுந்து விழுந்து படித்தோம். சில நாட்கள் காலை நாலுமணிக்கு எழும்பி கைவிளக்கை கொளுத்திவைத்து படித்தோம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து விதி எனக்கு எதிராகத்தான் வேலைசெய்திருக்கிறது. அன்றைக்குத்தான் விதி சாதகமாகவும் வேலை செய்யும் என்பது எனக்கு தெரிய வந்தது. என் தம்பி வகுப்பில் இரண்டாவதாக வந்திருந்தான். நானும் அந்த தவணையில் அதிசயமாக இஇரண்டாவதாக வந்திருந்தேன். வாமதேவனை முதல்முறையாக முறியடித்திருந்தேன்.

கைவியளம் நாள் அன்று ஐயா வெற்றிலையில் பூ, நெல்தானியம், காசு என்று சுருட்டி வைத்து வழங்கிக் கொண்டிருந்தார். எங்கள் முறை வந்தது. ஐயா வெற்றிலைச் சுருளை மடித்துக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தபோது என் கண்களை நம்பமுடியவில்லை. என் தம்பிக்கு ஒரு ரூபாய்க் குற்றி. எனக்கும் ஒரு ரூபாய்க் குற்றி. இஇவ்வளவு பெரிய செல்வத்தை வைத்து நான் என்ன செய்வது? திட்டம் போடத் தொடங்கினேன்.

என் தம்பி எனக்கு நேர் எதிராக இருப்பான். அவன் திட்டமெல்லாம் போடுவதில்லை. கையில் காசு கிடைத்தால் அதை சாப்பாடாக மாற்ற வேண்டும். அதுவே லட்சியம். அன்று அவன் நேராகக் கடைக்கு ஓடிப்போய் அவனுக்கு வேண்டிய தின்பண்டங்கள் அத்தனையையும் வாங்கினான். தும்புமிட்டாய், ஐஸ்பழம், இஇனிப்புக் கடலை. ஒரு வாரத்தில் அவ்வளவு காசையும் தின்று முடித்துவிட்டான்.

திட்டம் போட்டு முடிவதற்கே எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. எங்கள் கிராமத்தில் நவரத்தினம் கடைதான் பல்பொருள் அங்காடி. அங்கே பலசரக்கு விற்பார்கள்; பள்ளிக்கூடப் பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் கிடைக்கும். உள்ளங்கையில் வைக்கக்கூடிய ஒரு மஞ்சள் நிற கோழிப் பொம்மை அங்கே இருந்தது. அதைப் பிடித்து அமத்தினால் அது செட்டை விரித்து முட்டை இஇடும். அமத்த அமத்த அடுக்கடுக்காக ஐந்து முட்டை போடும். மறுபடியும் முட்டைகளை கோழியின் முதுகில் உள்ள ஓட்டைவழியாக தள்ளவேண்டும். ஓர் அட்சய பாத்திரம்போல முட்டைகள் வந்துகொண்டேயிருக்கும். இதன் விலை சரியாக ஒரு ரூபாய். நீல நிறத்திலும் ஒரு கோழி இருந்தது. நான் பல ஆலோசனைகளுக்கு பின்பு மஞ்சள் நிற கோழியை வாங்குவதென்று முடிவு செய்தேன்.

அடுத்த நாள் ஒரு முழு ரூபாயை எடுத்துக்கொண்டு வந்து கடைக்காரரிடம் நீட்டினேன். அவர் காசை வாங்கிச் சுண்டிப் பார்த்தார். பிறகு மேசையிலே போட்டு அதன் சத்தத்தை கவனித்துக் கேட்டார். பல்லினாலே கடித்துப் பார்த்தார். அவருடைய முகம் ஏனோ சம்மதமாகவில்லை. காசு செல்லாதென்று திருப்பி தந்துவிட்டார். நான் அதை வாங்கிக்கொண்டு ஐயாவிடம் ஓடினேன். அவரும் காசை சுண்டிப் பார்த்தார்; கடித்துப் பார்த்தார். ‘அப்படியா கடைக்காரன் சொன்னான். நான் அவனுடன் பேசுறன்’ என்று சொல்லியபடியே காசை மடியிலே செருகிக்கொண்டார்.

அன்றிலிருந்து நான் ஐயாவுக்கு கரைச்சல் கொடுக்கத் தொடங்கினேன். ‘சரி, நாளைக்கு பார்க்கலாம்’ என்பார். ஒவ்வொரு நாளாகக் கழிந்துகொண்டிருந்தது. எனக்கு மனம் பதறியது, ஐயாவோ கண்டுகொள்ளவில்லை. என்னுடைய காசு திரும்புமா என்ற சந்தேகம் வேறு பிடித்தது. செல்லாக் காசை எடுத்துக்கொண்டு நல்ல காசைத் தருவதில் என்ன பிரச்சினை. என்னுடைய தம்பி ஒரு முழு ரூபாய்க்கு தின்று தீர்த்துவிட்டானே.

ஒரு நாள் கடையில் மஞ்சள் கோழியை விற்றுவிட்டார்கள். எனக்கு நெஞ்சு படக்கென்றது. கடைக்காரரிடம் நீலக் கோழியை வேறு ஒருவருக்கும் விற்கவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். அவரும் வாக்குறுதி தந்தார். அவர்மேல் நான் வைத்த நம்பிக்கை என் சொந்த ஐயாமேல் எனக்கு உண்டாகவில்லை. அன்று ஐயாவிடம் காசு கேட்டபோது அவர் ‘என்ன காசு?’ என்றார். எனக்கு வயிறு வரைக்கும் பகீர் என்றது. நான் எனது விருத்தாந்தத்தை ஆதியோடந்தமாக ஐயாவுக்கு இன்னொருமுறை சொல்லவேண்டி நேர்ந்தது.

ஒரு வாரம் போய், இரண்டு வாரம் போய் ஒரு மாதமும் கழிந்தது. ஐயாவிடம் காசு பெயரும் வழியை காணவில்லை. ஐயாவின் பதில் ‘இப்ப இல்லை’ ‘நாளைக்கு பாப்பம்’ ‘எவ்வளவு காசு’ என்று பல தினுசில் இருந்தது. ஒரு நாளாவது அவருடைய இரண்டு தொங்கும் கைகளுக்கு நடுவில் இருக்கும் மடியை பிரித்து என்னுடைய காசை எடுத்து விட்டெறியலாம் என்பது அவருக்கு தோன்றவில்லை.

திருவீழிமிழலை ஸ்தலத்துக்கு திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சேர்ந்தே போனார்கள். சேர்ந்தே பதிகம் பாடினார்கள். மறுநாள் காலை நாவுக்கரசருக்கு ஒரு படிக்காசு கிடைத்தது. சம்பந்தருக்கும் ஒரு படிக்காசு கிடைத்தது. நாவுக்கரசருக்கு கிடைத்தது நல்ல காசு. சம்பந்தருக்கு கிடைத்தது செல்லாக் காசு. கடவுள் ஏமாற்றியதை என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிந்தது ஆனால் என்னுடைய ஐயா ஏமாற்றுவதை மட்டும் என்னால் நம்பவே முடியவில்லை.

வெங்கட் சாமிநாதனுடைய மின்னஞ்சல் கிடைத்தபோது எனக்கு அந்தப் புதுவருடமே ஞாபகத்துக்கு வந்தது. அதற்கு அடுத்து வந்தவை அழிந்துவிட்டன. அந்த வருடத்தையும் அந்த ரூபாயையும் என்னால் மறக்கமுடியவில்லை. அடுத்த புதுவருடம் வந்தது. அதற்கு அடுத்ததும். அடுத்ததும். என்னுடைய ஒரு ரூபாய் திரும்பக் கிடைக்கவில்லை. என்றென்றைக்குமாக.


amuttu@gmail.com

Series Navigation