பசுமைப் புரட்சி….

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


எந்த மரத்தில் எந்தக் கிளையில்
எந்த தழையிலை கொத்தில்
எங்கிருந்து பாடுகிறாய்… ?

இருளாயிருந்த பொழுது
பகலாய் கண் விழிக்க
பள்ளி எழுச்சி பாடுகிறாயா ?

ஒளியா நீ
ஒளியின் குரலா உன்பாடல் ?

திரிஒளிய திரியும் சுடராய்
நீ ஒளிய நிறையும் பாடல்.

வைகறைக் காற்றா நீ
வந்து
மணம் வீசும் மனம் பூசும்
வசந்தமுன் பாட்டு ?

நீ
பூவாயிருந்து காற்றாய் மறைந்து
பாடுவாயானால்
நீ எந்த நிறத்தில்
எந்த இலை மறை….
இல்லை
பூமறை பூ….
இல்லை
மொட்டா நீ ?

இதழ்விரித்து சிறகடித்து
கிளைவிட்டு மலைவிட்டு
சிகரந்தொட்டு பறப்பாயா ?

நீ
எங்கிருந்தாலும்
என் காதில் விழ பாடுவதெப்படி ?

மண்மலரப் பாடுமுன்னை
மணம் காண துடிக்க
என்
தேடலை தெரிந்த தோழன்

“ அந்த
எட்டாவது மாடி தொட்டுத் தொங்கும்
அதோ அந்த
கூண்டில்…. ” என்கிறான்.

“ இயற்கையோடியைந்திருக்க….
வீடும் மரமும்
ஒன்றென்று சொல்ல….
அது
வீட்டில் தொங்கவிட்ட
கூண்டு
வெறுங்கூடு ” என்கிறேன்.

அப்புறம் சொல்கிறான்

“ இந்தப்பாடல்
மண்ணின் அமைதியில்” என்கிறான்

நான்

“ புரட்சியிலும் ” என்கிறேன்.

/ சிங்கப்பூர், பாசிர்ரீஸ், கட்டிடம் 707 வீட்டிலிருந்த போது ஒவ்வொரு நாளும்கேட்ட ஒரு பறவையின் பாடல் /
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி