பங்க்ச்சுவாலிட்டி

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

அப்துல் கையூம்உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டென்றால் அது PUNCTUALITY என்பதுதான்.

“எப்பவுமே இவன் குண்டக்கா மண்டக்கான்னு பேசுறானே“ என்று என் நண்பர்களே எனக்கு பின்னால் பேசுவதுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்ற கலையில் இன்னும் சரியாக தேர்ச்சி பெறாததே இதற்கு காரணம். சரியென்று மனதில் பட்டதை உளறிக் கொட்டி நண்பர்களiடத்தில் கெட்டப் பெயர் வாங்கிக் கொண்ட அனுபவம் நிறையவே உண்டு,

பள்ளிப் பருவத்தில் காலந்தவறாமையின் அவசியத்தை எனக்கு எடுத்துரைக்காத ஆசிரியர்களே இல்லை எனலாம். காலந்தவறாமையை ஒருவன் தவறாது கடைப்பிடித்தால் அவன் வாழ்க்கையில் வெற்றிப் படிகளை எட்டி விட முடியம். இது அவர்கள் ஆற்றிய அறிவுரைகள்.

பின்னர்தான் எனக்குப் புரிந்தது காலந்தவறாமையை கடைப்பிடித்தால் மட்டும்போதாது, அறிவு இருந்தால் மட்டும் போதாது, எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் அவசியம் வேண்டும் என்று.

“டோஸ்ட் மாஸ்டர்ஸ்” என்ற இயக்கத்தில் என்னைச் சேர சொன்னார்கள். ஆரம்பத்தில் இது ஏதோ நட்சத்திர ஓட்டல் சமையற்காரர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் சங்கம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அப்புறமாகத்தான் தெரிந்தது அது பேச்சுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு இயக்கம் என்று.

PUNCTUALITY இது அவர்களுடைய தாரக மந்திரம். அதற்குத் தலைவராக இருக்கும் என் நண்பர் “டோஸ்ட் மாஸ்டர்ஸ்” கூட்டத்திற்கு சரியான நேரத்தில் சென்று சரியான நேரத்தில் கூட்டத்தை தொடங்கி விடுவார்.

காலந்தவறாமையின் அவசியத்தை ஒவ்வொரு கூட்டத்திலும் உணர்ச்சி ததும்ப எடுத்தியம்புவார். அதை விடுத்து மற்ற நேரங்களில் இத்தனை மணிக்கு வருகிறேன் என்று வாக்களித்து விட்டு மனுஷன் சரியான நேரத்துக்கு வந்ததாக சரித்திரமே இல்லை.

இவர்கள் ஒரு பேச்சுக்காகவும் பகட்டுக்காகவும் வெளீயுலகத்திற்கு காட்டுவதற்காக மட்டுமே சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றும்.

அவசியம் நேர்ந்தாலொழிய மற்ற நேரங்களில் காலந்தவறாமையை கடைப்படிப்பதற்காக அவ்வளவுதூரம் மண்டையை போட்டு நாம் அதிகம் உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று நான் முடிவெடுத்து ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டன.

“ஏன்யா.. ஒருத்தன் வேலை தேடி ஒரு அலுவலகத்துக்கு இன்டர்வியூக்கு போறான்னு வச்சுக்க, அவன் கரெக்டான நேரத்துக்கு போவலேன்னா செலக்ட்டே ஆக முடியாது. இப்படியெல்லாம் இருக்கும் போது நீ வாசகர்களுக்கு அட்வைஸ் பண்ற லட்சணமாய்யா இது?” என்று நீங்கள் முனகுவது என் காதில் விழத்தான் செய்கிறது.

“இதோ.. பாருங்க மிஸ்டர்.. நீங்க எல்லோரும் இனிமே ஆபிஸுக்கு லேட்டாத்தான் போவணும். போயி நல்லா வாங்கிக் கட்டிக்கணும்” அப்படின்னு நான் சொல்ல வரலே. என்னோட அனுபவத்திலே நானும் எவ்வளவோ காலந்தவறாமையை கடைப்பிடிச்சு பார்த்துட்டேன். ஊஹும்.. பிரயோஜனமே இல்லை. உங்களுக்கு அது வொர்க் அவுட் ஆனுச்சுன்னா தாரளாமா கடைப்பிடியுங்க. நானா வேணாமுன்னு சொல்றேன்.

ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திலே நாம் ஆஜராகுறது என்பது பிரச்சினையே இல்லை. சில சமயம் அதை பாராட்டுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்பதுதான் வயிற்றெரிச்சல்.

நான் வசிக்கிற பஹ்ரைன் நாட்டிலே இந்தியச் சங்கங்கள் கலாச்சார விழாக்கள் நடத்தும். நேரத்தோடு சென்று பார்வையாளர்களுக்காக நாற்காலிகளை எடுத்து வரிசையாக போட்டதுதான் மிச்சம்.

நிகழ்ச்சி தொடங்கும் நேரம் மாலை 7 மணி என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் பேனர் மாட்டிக் கொண்டிருப்பார்கள். மைக்செட்காரர் பொறுமையாக ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருப்பார்.

பங்க்ச்சுவாலிட்டி என்பது வேறொன்றும் இல்லை. முன்கூட்டியே ஒரு இடத்திற்குச் சென்று யார் யார் எவ்வளவு லேட்டாக வருகிறார்கள் என்று வேவு பார்க்க உதவும் ஒரு யுக்தி என்பது எனது கொலம்பஸ் கண்டுபிடிப்பு.

ஒரு கூட்டத்திற்கு ஒருத்தர் லேட்டாக வந்தால் அவர் வி.ஐ.பி. என்று அர்த்தம். ஆளுக்காளு எழுந்து நின்று கும்பிடு போடுவார்கள். இன்னும் படுலேட்டாக வந்தால் அவர் வி.வி.ஐ.பி. என்று அடையாளம் கண்டுக் கொள்ளலாம். அவருக்கு வரவேற்பு இன்னும் படுஉற்சாகமாக இருக்கும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
“The Early bird gets the worm, but the Early worm gets eaten”

முன்கூட்டியே செல்லும் நற்பண்பு கொண்ட அந்த புழுவுக்கு கிடைத்த சன்மானம் அது அந்த பறவைக்கு இரையாகப் போனதுதான். பார்த்தீர்களா? நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்களே?

நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு படத்திலே “நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்” என்று சொல்லும் போது தியேட்டரே துர்ள் கிளப்பும். அதற்கு என்ன அர்த்தம்? அவர் லேட்டாக வருவதை ரசிகர்கள் அங்கீகரிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்?

நான் பள்ளியில் படிக்கும் போது அபுபக்கர் எப்போதும் வகுப்புக்கு லேட்டாக வருவான். வாத்தியார் அவனை சரியான “லேட் லத்தீப்”பாக இருக்கிறாயே என்று சொல்வார். இதற்கு முன் எந்த லத்தீப் இப்படி லேட்டாக வந்து உவமை காட்டக்கூடிய அளவுக்கு உயர்fந்த மனிதர் ஆனார் என்று தெரியவில்லை. அந்த லேட் லத்தீபை கண்டு மனதார பாராட்ட வேண்டும். “இன்று எல்லோரும் உதாரணம் காட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறீரே.. நீர் பலே கில்லாடி ஐயா” என்று.

என் பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நாகையில் சர் அஹ்மது மரைக்காயர் என்ற பிரமுகர். “சர்” என்ற கௌரவ பட்டம் ஆங்கிலேயன் தந்து விட்டுப் போனதாம். இந்த பிரமுகர் ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் அவருக்கு வேண்டி ரயிலும் காத்திருக்குமாம். அவர் பொழுதோடு சென்று ரயிலேறி இருந்தால் இதனை ஒரு பெரிய விஷயமாக கருதி என் பாட்டி சொல்லியிருக்க மாட்டார்.

எந்த அரசியல்வாதியாவது சரியான நேரத்துக்கு பொதுக் கூட்டத்திற்கு வந்ததாக நீங்கள் சுட்டிக் காட்ட முடியுமா? எவ்வளவுக்கெவ்வளவு ஜனங்களுடைய பொறுமையை சோதித்து தாமதமாக வருகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் பெரிய பிரமுகர் என்று அர்த்தம்.

எத்தனையோ அரசியல்வாதிகள் சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதித்து வந்ததால்தான் அவர்கள் வெடிகுண்டிலிருந்தும், கண்ணி வெடியிலிருந்தும் தப்பித்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

நான் நெருங்கிய உறவினர்களுடைய வீட்டுக்கு விருந்துண்ண போனால் வழக்கப்படி தாமதமாக “லேட் லத்தீபாகவே” செல்வது வழக்கம். “என்ன இவ்வளவு லேட்டாக வந்திருக்கிறீர்களே?” என்று கேட்டால் கைவசம் ரெடியாக வைத்திருக்கும் இலத்தின் பழமொழியை எடுத்து விடுவேன். அது “Better Late than Never” என்பது.

லேட்டாக போவது பெரிய விஷயமே அல்ல. அதை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் நம் திறமையே அடங்கி இருக்கிறது. சமாளிஃபிகேஷன் என்பது ஒரு தனிக்கலை. (ஆயகலைகள் 64-ல் இதனை நம் முன்னோர்கள் சேர்த்தார்களா என்பது சரியாகத் தெரியவில்லை)

லேட்டாக அடிக்கடி போயி பழகிக் கொண்டால்தான் அந்த கலையை நாம் திறம்பட வளர்த்துக் கொள்ள முடியும். சமயோசித புத்தி என்பது இதில் வரப்பிரசாதம்.
பங்க்சுவாலிட்டியை கீப்-அப் செய்கிறேன் என்று கூறும் பேர்வழிகளுக்கு இந்த கலைத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அமையாது.

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுகிறான் பார்” என்று யாராவது நம்மை புகழ்ந்தால் ‘ஓரளவு இந்த கலையில் தேர்ச்சி பெற்று வருகின்றோம்’ என்று பொருள்.

மலேசியாவில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. கவிஞர் கண்ணதாசன் மிகவும் தாமதமாக செல்கிறார், பார்வையாளர்களிடமிருந்து விசில் சத்தம் பறக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுடைய ரத்த அழுத்தம் எகிறிவிட்டிருந்தது. மின்னல் வேகத்தில் மேடையில் வந்த கண்ணதாசன் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்.

“சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். ஆனால் எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்றார். அவ்வளவுதான் சோர்ந்து போயிருந்த கூட்டத்தினர் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து விட்டனர்.

இதோ போன்று இன்னொரு முறை அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் மாலை 6 மணிக்கு பேசுவதாக இருந்தது. சித்திரை மாதம் வேறு. புழுக்கம் தாங்க முடியவில்லை. இரவு பத்து மணியாகியும் அண்ணா வரவில்லை. கூட்டம் பொறுமையை இழந்து கூச்சலும் குழப்பமும் அதிகமாகி விட்டது. “பெரியோர்களே… தாய்மார்களே தயவுசெய்து அமைதி காக்கவும். இன்னும் சற்று நேரத்தில் தலைவர் அவர்கள் வந்து விடுவார்” என்று ஒரு கரைவேட்டிக்காரர் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பத்தரை மணிக்கு அண்ணா

மேடை ஏறினார்.
மாதமோ சித்திரை
நேரமோ பத்தரை
உங்களுக்கோ நித்திரை

என்று சமயோசிதமாய் அடுக்குமொழியில் பேச ஆரம்பித்து விட்டார். கூட்டத்தினருக்கு அசதியும் சோர்வும் பறந்து போயே விட்டது. தாமதமாக வரும் அளவுக்கு ஒருவர் உயர்ந்து விட்டால் அவர் எப்படிப்பட்ட நிலைமையையும் திறமையாக சமாளித்து விடுவார் என்று அர்த்தம்.

சரியான நேரத்தில் வந்து சரியான நேரத்தில் சில அரசு பேருந்துகள் கிளம்பி விடும். காலநேரத்தை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அவர்களுக்கு warning கிடைத்து விடும். பாதி இருக்கைகளுக்கு மேல் காலியாகவே இருக்கும். அந்த போக்குவரத்து நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கும்.

அதே பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் போக்குவரத்து லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கும். சரியான நேரத்துக்கு வந்து விடும். ஆனால் சரியான நேரத்துக்கு கிளம்பாது. டுர்.. டுர்.. என்று உறுமிக் கொண்டு கிளம்புவதைப்போல் பாவ்லா காட்டும். ஆனால் கிளம்பாது. ஒரு வழியாக பயணிகளுடைய வசைமொழிகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு எல்லா காலி இருக்கைகளையும் நிரப்பியே பிறகே நடத்துனர் விசிலை ஊதுவார். அதே பஸ்ஸில் கடுப்பாகி உட்கார்ந்திருக்கும் நான் வண்டி புறப்பட்டவுடன் ‘ஹு…ம் பிழைக்கத் தெரிந்தவர்கள்’ என்று மனதார அவர்களை பாராட்டிக் கொள்வேன்.

என் மனைவியின் தாய் வழி தாத்தா மிகவும் கண்டிப்பான பேர்வழி. சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்துக்கு துர்ங்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். நேரம் தவறவே மாட்டார். கல்யாணமான புதிரில் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். பகல் 12.00 மணிக்கு மதிய உணவை பரிமாறிவிட்டு “மாப்பிள்ளே .. நல்லா சாப்பிடுங்க” என்றார், காலைச் சாப்பாடே நமக்கு 11.00 மணிக்குத்தான். உள்ளே தள்ளிய இட்லியும் தோசையும் இன்னும் செரிமானமே ஆகவில்லை. இந்த லட்சணத்தில் தட்டை நிறைய சோற்றை குவித்து வைத்து “ஒரு வெட்டு வெட்டுங்க மாப்பிள்ளே..” என்று சொன்னால் எதை வெட்டுவது?

அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரவு 8.00 மணிக்கெல்லாம் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு “படுத்து நல்லா துர்ங்குங்க மாப்பிள்ளே..” என்று வேறு 144 சட்டம் போடுவார்’ “கிழிஞ்சது கிருஷ்ணகிரி போ..” என்று மனதுக்குள் முனகிக் கொள்வேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து இரவு 1.00 மணிக்கு முன்னர் துர்ங்கியதாக ஞாபகமே இல்லை.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாத்தாவைக் கண்டால் எல்லோருக்கும் குலை நடுக்கம். மறுத்துப் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. வீட்டில் நண்டு சுண்டு என்று ஏகப்பட்ட உருப்படி. “ஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் உங்க தாத்தா ஒரு கிராமத்தையே உருவாக்கி விட்டார்” என்று என் மனைவியை அவளது பள்ளiக்கூடத் தோழிகள் கிண்டல் செய்வார்களாம்.

தாத்தாவிடம் யாராவது உங்களை நான் 4 மணிக்கு பார்க்க வருகிறேன் என்று சொல்லி விடுவார்கள். மனுஷர் வச்ச பார்வை வாங்காது கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு ஐந்து நிமிடம் தாண்டினாலும் போச்சு, அவ்வளவுதான்.. பார்க்க வருபவரை வாங்கு வாங்குன்னு வாங்கி விடுவார். “சொன்னா சொன்ன நேரத்துக்கு வர்றதில்லையா? என்னை என்ன வேலை மெனக்கெட்டவன்னா நெனச்சீங்க? ச்சே.. அனாவசியமா எந்நேரத்தை வீணாக்கிட்டிங்களே?” என்று விளாசித் தள்ளி விடுவார். (இதில் வேடிக்கை என்னவென்றால் தாத்தாவும் வீட்டில் பொழுது போகாமல் சும்மா உட்கார்ந்து கிடக்கின்ற கேஸ்தான்) தாத்தா விட்டில் எப்பவுமே ‘பின்-ட்ராப் சைலன்ஸ்’தான். யாரும் உரக்க பேச மாட்டார்கள்.

அவருடைய மறைவுக்கு பல வருடங்களுக்குப்பின் அந்த வீட்டுக்கு மீண்டும் சென்றிருந்தேன். மனம் போன போக்கில் கூத்தும் கும்மாளமுமாக ஜாலியாக இருந்தார்கள். இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்குத்தான் சாப்பிட வேண்டும் என்ற கண்டிஷனெல்லாம் இல்லை.

காதலி ஒருத்தி காதலனுக்காக காத்திருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். காதலன் தாமதமாக அந்த இடத்துக்குச் செல்கின்றான். வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் அவளுடைய முகம் கோபத்தால் சிவந்து விடுகிறது. சிணுங்கியும், கடிந்தும், பிகு செய்தும் அவள் ஊடல் புரிகின்றாள். காதலனும் அவன் பங்குக்கு இறங்கி வந்து குழைவாய்ப் பேசி சமாதானம் செய்கிறான். அந்த ஊடலின் இன்பம் இருக்கிறதே. அடடடடா..

வள்ளுவர் பிரான் இதற்காக ஒரு அதிகாரத்தையே தாரை வார்த்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த இன்பம் யாவும் லேட்டாக போவதினால்தான் கிடைக்கிறது. புரிகிறதா?

ஒருமுறை என் மைத்துனர் ஒரு விருந்துக்கு நேரத்தோடு சென்றிருக்கிறார். அங்கிருந்த கிண்டல் ஆசாமி ஒருவர் ‘சாப்பாடு என்றால் அடித்து மோதிக் கொண்டு முதலில் வந்து விடுகிறீரே” என்று நக்கல் செய்ய, பாவம் மனிதர் அன்றிலிருந்து நம்முடைய பாணியில் லேட்டாக செல்வதையே பழக்கமாக்கிக் கொண்டார்.

இதையெல்லாம் படித்த பிறகு நீங்களும் லேட்டாக போக ஆரம்பித்தால், என்னை விட சந்தோஷம் அடைகின்ற ஆசாமி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.

ஆங்கிலத்தில் B.P. என்று ஏதோ சொல்கிறார்களே. அது பெரும்பாலும் இந்த PUNCTUALITY பார்ப்பவர்களுக்குத்தான் வருகிறது. ‘கரெக்ட் டைமுக்கு கிளம்ப வேண்டும்’. ‘கரெக்ட் டைமுக்கு போய்ச் சேர வேண்டும்’ என்று பதஷ்டப்பட்டு பைக்கில் சென்று கையை காலை உடைத்துக் கொண்ட என் உறவுக்காரர்கள் சிலரை உதாரணம் காட்டலாம். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும். உயிர் முக்கியமல்லவா?

அதற்கு பதில் “லேட் லத்தீப்” என்ற பெயரே தேவலாம்.


Abdul Qaiyum
vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்