நேர்முகமும் எதிர்முகமும்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

ஐகாரஸ் பிரகாஷ்


நேர்முகம்

புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் சென்னை வெய்யிலைப் போன்றது . போன வருடத்தை விட இந்த வருடம் ஜாஸ்தி என்று எல்லா வருடமும் சொல்கிறார்கள். நுழைந்ததும் வரவேற்கும் டெல்லி அப்பளம் பேல்பூரி சமோசா இத்தியாதிகளிடம் இருந்து தப்பித்து உள்ளே நுழைந்தால், உடனே வெளியே ஓடிப்போய்விடலாமா என்றுதான் முதலில் தோன்கிறது. அத்தனை நெரிசல். வேறு எங்காவது, நல்ல இடவசதி உள்ள இடமாக மாற்றக்கூடாதா என்று பதிப்பக நண்பர்களிடம் புலம்பினால், அந்த அதிகாரம், பதிப்பாளர் சங்கமான பிபாஷாபாசுவிடம் ( அல்லது அதைப் போலவே ஒலிக்கும் ஒன்றிடம்) இருக்கிறதாம். சங்கத்தின் தலைவர் பெயர் முத்துக்குமாரசாமி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் துணை இதழ் சொன்னது. அவரது மின்னஞ்சல் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். அடுத்த வருடமாவது, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டருக்கு மாற்றக்கோரி, கையெழுத்து வேட்டை நடத்தி, அவருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்.

நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் ஸ்டால்களுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் அதிகம். அங்கே நுழைந்து நாலைந்து புத்தகங்கள் பொறுக்கிக் கொண்ட பின்புதான், நாம் வாங்க வேண்டிய புத்தகங்கள், மறுகோடியில் இருப்பது தெரியவரும். ஆகையால், முதலில் ஒரு விண்டோ ஷாப்பிங் உலா வந்துவிட்டு, அடுத்த உலாவில், புத்தகங்களை வாங்குவது பர்ஸுக்கு நலம் பயக்கும். சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுதிகளைப் புரட்டிய போது, அதில் உள்ள முக்கால்வாசி சிறுகதைகள், ஏற்கனவே இருக்கும் வெவ்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றிருப்பது, தெரியவந்தது.விலை அதிகமாகத் தோன்றியது என்றாலும் நல்ல நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு இருந்தது. புத்தக விலை பற்றி பேசினாலே, புத்தகப் பதிப்பாளர்களின் இரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. ‘ போய், இங்கிலீஸ் புத்தக விலையெல்லாம் பாத்துட்டு வந்து சொல்லுங்க ‘ என்று நிர்த்தாட்சண்யமாகப் பேசுகிறார்கள். ‘ரெண்டாயிரம், மூவாயிரம் காப்பி போட்டு, வித்து, லைப்ரரி ஆர்டர் எடுக்க அலைஞ்சு, ராயல்ட்டி குடுத்து…. எங்களுக்கும் கட்டுப்படியாக வேண்டாமா ?… ‘ என்று கேட்கிறார்கள். லட்சக் கணக்கில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிற இடத்திலே, ஆயிரம் , ரெண்டாயிரம் காப்பிகள் மட்டுமே விற்க முடிகிறது என்றால், உங்களுக்கு விற்கத் தெரியவில்லை அல்லது சந்தையைப் பெரிதாக்கத் தெரியவில்லை என்று யார் அவர்களிடம் சொல்வது ?

வழியேற பிரபலங்கள் தென்படுகிறார்கள். பார்த்த முகமாக இருக்கிறதே யாராக இருக்கும் என்று யோசிப்பதற்குள் அவ்விடத்தை விட்டு அகன்றுவிடுகிறார்கள். எழுத்தாளப் பிரபலங்களை அடிக்கடி சந்திக்க, அதாவது, பார்க்க முடிந்தது. குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் அனைத்திலும், விருந்தினர்களாக, எழுத்தாளர்கள் வந்திருந்து, வாசகர்களுடன் கலந்து உரையாடி சிறப்பித்தார்கள். சுந்தர.ராமசாமியின் புதிய நூலை ( வானகமே இளவெயிலே மரச்செறிவே ) வாங்க காலச்சுவடு அரங்குக்கு சென்ற போது, எழுத்தாளர் சல்மா, அங்கே ஒரு வாசகருடன் ( என்று நினைக்கிறேன்) உரையாடிக் கொண்டிருந்தார். பில் போடும் இடத்தில், அரசு உயர் அதிகாரி தோற்றத்தில் இருந்த ஒருவர், கையில், சு.கி.ஜெயகரன் எழுதிய நூல் ஒன்றை வைத்துக் கொண்டு, பணம் கட்டக் காத்திருந்தார். ‘ ஆத்தர் டிஸ்கவுண்ட் எவ்வளவுப்பா ? ‘ என்று அவர் அந்த ஊழியரிடம் கேட்கவும், சட்டென்று அவரைப் பார்த்தேன். அந்த ஊழியருக்கு அவர் கேட்டது புரியவில்லை போலிருக்கிறது. ‘ இல்லே நான் தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர். எனக்கு டிஸ்கவுண்ட் எவ்வளவு ? ‘ என்று கேட்கவும், ‘ ஓஹோ, அப்படிங்களா ? ‘ என்று சொல்லிவிட்டு, யாரையோ விசாரிக்க முனைந்ததும், இவர் அதை தடுத்து, ‘ அதல்லாம் வேண்டாம், டைமாச்சு… ‘ என்று சொல்லிவிட்டு பணம் கொடுத்துவிட்டு, நகர்ந்தார். புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் இருக்கும் ஊழியர்களுக்கு, உலக இலக்கியவாதிகள் பெயர் தெரியாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால், தங்கள் பதிப்பகம் வெளியிட்ட

நூல்களின் ஆசிரியர் பெயர்/முகம் பரிச்சயம் அவசியம் வேண்டும்.

தமிழினி பதிப்பகத்தில் இருப்பேன் என்று ஜெயமோகன் திண்ணையில் எழுதி இருப்பது நினைவுக்கு வந்தென்றாலும் , எந்த எந்த நாட்களில் என்பது நினைவுக்கு வரவில்லை. முதல் முறை போன போது, அடுத்த நாள் வருவார் என்று சொன்னார்கள். அடுத்த முறை போன போது, வந்து போய்விட்டார் என்று சொன்னார்கள். ஜெயமோகனுக்கு அதிர்ஷடமில்லை என்றாலும் அன்றைய தினத்தில் அசோகமித்திரனுக்கு அதிர்ஷட்ம் இருந்தது. கிழக்குப் பதிப்பகம் அரங்கில் அமர்ந்திருந்தார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அசோகமித்திரன் கட்டுரைகள் என்ற மெகா தொகுதியை கையில் வைத்துக் கொண்டு, அதிலே செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பதிப்பாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அசோகமித்திரன் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆதவனுடைய காகிதமலர் பற்றிய அவரது விமர்சனமும், ஆத்மாநாம் பற்றிய நினைவஞ்சலிக் கட்டுரையும், முன் எப்போதோ தற்செயலாகப் படித்தும், இன்னும் நினைவில் இருக்கிறது. சென்னை நகர மக்களின் வாழ்க்கையை சித்திரித்து வந்த படைப்புக்களில் தென்படும் wry humor ரொம்பப் பிடிக்கும். அசோகமித்திரனுக்கு விழா எடுக்கப் படப் போவதாக வந்த செய்தி மகிழ்ச்சி அளித்தது.

எதிர்முகம்

அரசியல், சினிமா, நாவல் கட்டுரைத் தொகுதி என்று வகை வகையாக வாங்கித் தள்ளினாலும், குறிப்பிடவேண்டிய புத்தகம், ஜெயமோகன் எழுதிய ‘ எதிர்முகம் – இணைய விவாதங்கள் ‘.

என் நண்பர்கள் நடத்தி வரும் மரத்தடி குழுமத்தில் நடந்த உரையாடல்களுக்கு, இலக்கிய அந்தஸ்து கிடைத்திருப்பது தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்ற விஷயம். ஆயினும், நூலின் முன்னுரையாக , அவர் எழுதியிருக்கும், ‘ இணையத்தில் இலக்கியம் ‘ என்ற கட்டுரை, மீது சில கேள்விகள் இருக்கின்றன.

ஜெயமோகனின் புனைவல்லாத விஷயங்கள் தவிர்த்து , படைப்பிலக்கியங்களை, அதிகமாக வாசித்ததில்லை என்கிற உண்மை, அவர் தமிழிணையத்தார் மீது வைக்கும் விமர்சனங்களின் முகாந்திரத்தை ஆராய முற்பட்டால், குறுக்கே வராது என்று ஒரு குருட்டு நம்பிக்கை ஏற்படுகின்றது. முன்னுரையின் ஐந்தாவது பத்தியை வாசிக்கும் போது , தமிழ் இலக்கிய மரபின் தோற்ற வளர்ச்சி குறித்து அதிகமாக அறியாதவன் (நான்) என்கிற வகையில், இந்தக் குருட்டு நம்பிக்கை இன்னும் அதிகரிக்கிறது.

இணையத்தில் வலம் வருபவர்களுக்கு ஜெயமோகன் மீது ஏதேனும் அபிப்ராயம் இருப்பது போலவே, ஜெயமோகனுக்கும், இணையத்தில் வலம் வருகின்றவர்கள் மீது சில அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால், இவ்விரு தரப்பினரின் அபிப்ராயங்களும், பெரும்பான்மையான சமயங்களில், மிகவும் தட்டையாகவும், மேலெழுந்தவாரியாகவும், அமைகின்றன என்பதை சிலர் வேண்டுமானால் ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம். அபிப்ராயங்களுக்கும் , அசலான உண்மைகளுக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டியதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

அக்கட்டுரையில், ஜெயமோகன் எழுதுகிறார்…

‘….இணையம் வந்த போது உற்சாகத்துடன் அதில் பங்கு கொள்ள ஆரம்பித்தேன். பிற்பாடு அந்த வேகம் குறைந்தது. முக்கியமான காரணம், இணையத்தில் விவாதிக்க வருபவர்களில் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்ட வாசகர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதுதான். விகடன் போன்ற பெரிய இதழ்கள் வழியாக அறிமுகமாகும் வாசகர்களை விடவும் , அவர்களின் பொதுவான தரம் குறைவுதான் என்றே நான் உணர்கிறேன். இதற்கு பல சமூக உளவியல் காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக எனக்குப் படும் காரணங்கள் இரண்டு. ஒன்று : இணையம் மூலம் வாசிக்க வரும் உயர் மட்ட, அல்லது நடுத்தர மட்ட வாழ்வைச் சார்ந்தவர்கள் ஆகவே வாழ்வு குறித்த மிதப்பான போக்கே இவர்களிடம் உள்ளது. தமிழ்ச் சிற்றிதழ்களின் வாசகர்களாக வரும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் கோபமும் தீவிரமும் இவர்களிடம் இல்லை. இக்காரணத்தால் மேலோட்டமான , விளையாட்டான விஷயங்களையே இவர்கள் உண்மையில் நாடுகிறார்கள். தங்களால் மகிழ்ந்து உலவ முடியக்கூடிய இடங்களையே தெரிவு செய்கிறார்கள். இரண்டு : இணைய வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதேனும் துறையில் பயிற்சி பெற்றவர்கள். சில சமயம் நிபுணர்கள். அவர்கள் உண்மையான சவாலை எதிர்கொள்வதும் உழைப்பதும் அத்துறையில் தான். இலக்கியம் அவர்களுக்கு இளைப்பாறுதலுக்காக மட்டுமே. அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க அவர்கள் தயாராக இல்லை. ‘

என் கேள்வி, இணையவாசகர் , அச்சு ஊடக வாசகர் என்ற பிரிவு நிஜமாகவே இருக்கிறதா ?

நான் அறிந்து இணைய எழுத்தாளருக்கும்/வாசகருக்கும் அச்சு ஊடக எழுத்தாளர்/வாசகருக்கும் இடையிலே இருக்கும் ஒரே வேறுபாடு, முன்னவருக்கு , எழுத்து ஒளிப்புள்ளிகளாக செல்கிறது, பின்னவருக்கு அதுவே அச்சு மை. வாசகர்கள் உட்பட்டு இருக்கும் புவியியல் எல்லைக் கோட்டிற்கும், அவர்களின் வாசிப்புத் திறனுக்கும் தொடர்பு இருக்கிறதா ? கிராமத்து கீழ் மட்ட இளைஞர்கள் என்ற பொதுப்படையான சித்திரிப்பை – இணைய வாசகர்களில் ஒரு பகுதியினர், வளைகுடா, தென்கிழக்காசிய நாடுகளில் பணியாற்றும் இங்கிருக்கும் கிராமங்களில் இருந்து சென்ற கீழ் மட்ட இளைஞர்கள்தான் என்று அறியாமல் – எப்போது நிறுத்தப் போகிறார்கள் ?

விடலைத் தனம் வளர்க்கும் வெகுசனப் பத்திரிக்கை மூலம் வரும் வாசகர்களின் தரம் கூட இவர்களிடம் இல்லை ஆதங்கமாகச் சொல்வது, எனக்கு நல்ல சேதியாகக் காதில் விழுகின்றது. தமிழ் இணையச் சமூகத்துக்கு, இவ்வகை ‘இடக்கை புறந்தள்ளல் ‘ புதிதல்ல.

—-

icarus1972us@yahoo.com

Series Navigation