நுண்கலை : கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல்

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

மலர்மன்னன்


மாமல்லபுரத்துக் கற்பாறை புடைப்புச் சிற்பத் தொகுதிகளுள் ஒன்று மகிஷாசுர மர்த்தனி மகிஷனை சம்ஹரிக்கப் போர்க் கோலம் பூண்டு நிற்கும் காட்சி. தேவி நேருக்கு நேர் மகிஷனை எதிர்கொள்கிறாள். ஆனால் அவள் பார்வை மகிஷனைத் தாண்டிச் செல்கிறது. அவள் கண் களில் வதைசெய்யும் சீற்றம் இல்லை. மகிஷனுங்கூடக் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறானே யன்றி, உடலால் பின்வாங்கி, முகத்தை முன்னால் நீட்டித் தற்காப்பு செய்து கொண்டு போருக்கு ஆயத்தமாக இருந்தபோதிலும் அவனது முகக் குறிப்பில் கொலைவெறி இல்லை. பின்னணியில் இருக்கும் போராளிகளின் தோற்றத்திலும் வன்முறைக்கான அடையாளம் இல்லை. கண்ணுக்கினிய தேர்ந்த நாட்டிய நாடகக் காட்சியாகத்தான் அது நம்முன் விரிகிறது.

சொல்லப்போனால் இது ஒரு சம்ஹாரக் காட்சி. மகிஷனுக்கு அது ஒரு வாழ்வா சாவா என்று முடிவெடுக்க வேண்டிய இறுதிப் போராட்டம். ஆனால் தேவியின் முகத்திலும் மகிஷனின் தோற்றத்திலும் அதற்கான ஆங்காõரம் தென்படாமல் போவது யதார்த்தத்திற்கு முரண் அல்லவா?

இல்லை என்கிறார், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் தேர்ந்தவரும், சென்னையில் உள்ள தமிழ் நாடு அரசினர் கவின்கலைக் கல்லூரி முதல்வருமான சந்ரு என அறியப்படும் சந்திர சேகரன்.

நமது பாரம்பரியமான கலைகள் கதி கலங்கச் செய்யும் கொடூரக் காட்சிகளை அவை உள்ளவாறே பதிவு செய்யும் முறையை இங்கிதம் அற்ற போக்காகக் கருதுகின்றன. அத்தகைய காட்சிகளை அவை பார்வையாளரின் மனதுக்கு உளைச்சல் ஏதும் தராமல் வெளிப்படுத்துகின்றன. கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல் என்று இதனை விவரிக்கிறார், சந்ரு.

நமது நிகழ்த்து கலைகளிலிருந்தும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டை அவர் குறிப்பிடுகிறார்: தெருக் கூத்தில் வீமனும் துரியோதனனும் பொருதும் காட்சி. பின்னணியில் இசைக் கருவிகள் மிகவும் துரித கதியில் உக்கிரமாக ஒலித்தபோதிலும், ஆடுகளத்தில் வீமனும் துரியனும் கொலைவெறியுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதற்கு மாறாக பாதங்களைச் சீராக எடுத்து வைத்து, தாளம் தப்பாத நடனமாக வட்டமிடுகிறார்கள். பின்னணி இசைக் கருவிகளின் ஒலியில் உக்கிரம் தொனிக்கிறது. ஆடும் கூத்தின் விரைவிலும் அது வெளிப்படுகிறது. ஆனால் மனதை உலுக்கும் கோரம் எதுவும் தென்படுவதில்லை. நமது கலைகளின் அழகியல் கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதலைத்தான் யதார்த்ததிற்கு இலக்கணமாக வகுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை இது புலப்படுத்துகிறது.

2.

காலச் சுவடு மாத இதழ் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னையில் உள்ள புக் பாயின்ட் புத்தகக் கடையின் முதல் தளத்தில் மா பா மனித வள மேம்பாட்டு நிறுவனம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆற்றைத் திங்கள் என்னும் அழகான புற நானூற்றுக் கவிதை வரித் தலைப்பில் சாதனையாளர்களைச் சந்தியுங்கள் எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத அற்றைத் திங்கள் நிகழ்ச்சியில் தம் அனுபவங்களையும் எண்ணங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ள வந்தவர், சந்ரு.

நமது கலை மரபின் கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டும் கோட்பாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு முன்பொரு முறை நரசிம்ம அவதாரச் சிற்பங்களை எடுத்துக் காட்டாகச் சந்ரு சொல்லியிருக்கிறார்: தமிழ் நாட்டில் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்களில் ஹிரண்யனை மடியில் கிடத்திக்கொண்டு அவன் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவும் நரசிம்மர் சிற்பங்களில் உக்கிரத்தைத்தான் காண முடியும். குடல் வெளியே சரிந்து, குருதி கொப்பளித்து வழியும் கோரத்தைக் காண இயலாது. வயிற்றைக் கிழிக்கும் பாவனையே அவற்றில் தென்படும்.

நாயக்க சாம்ராஜ்யம் விரிவடைந்த காலத்தில் இதற்கு மாறாக நரசிம்ம அவதாரச் சிற்பத்தில் குடலை உருவி மாலையாகத் தரித்துக் கொள்ளும் சிற்பங்கள் உருவாயின. இதற்கு ஒரு நியாயமான காரணம் உள்ளது.

எந்நேரமும் சுற்றியுள்ள பாமினி சுல்தான்களின் வரம்பு மீறிய மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் விஜயநகர ஹிந்து சாம்ராஜ்யம் இருந்தமையால் கொடூரத்தைக் கண்டு பழகிக் கொள்ளும் மனநிலையை உருவாக்குவதும் கோரத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளும் வழக்கத்தைத் தோற்றுவிப்பதும் அவசியமாயிற்று. பாமினி சுல்தான்களின் முரட்டுத் தாக்குதலுக்கு அவர்களின் முறையிலேயே பதிலடி கொடுக்கும் விஜயநகர ஆட்சியின் ஆளுமையை வெளிப்படுத்துவதாகவும், சிற்பிகளும் அதற்கேற்பத் தமது கற்பனையை விரிவுபடுத்துவதாகவும் நாயக்கர் கால நரசிம்ம அவதாரச் சிற்பங்கள் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அற்றைத் திங்கள் நிகழ்ச்சியின்போது, காஞ்சனை ஸ்ரீ னிவாசன் எடுத்த சந்ரு தொடர்பான ஆவணப் படம் திரையிடப்பட்டது. தமது கல்லூரிவளாகத்திலும், கலை வடிவங்கள் உள்ள வெளியிடங்களிலும் தம் மாணவர்களுக்கு சந்ரு அளிக்கும் விளக்கங்கள் ஆவணப் படத்தின் மையக் கருத்தாக இருந்தன. இதிலும் நமது மரபின் அழகியல் யதார்த்தத்திற்கும் வேற்று மரபுகளின் யதார்த்ததிற்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாட்டை அவர் சான்றுகளுடன் விவரிப்பது பிரதானமாக இருந்தது.

நமது கலை வடிவங்களில் சமயச் சார்பில்லாதவை இருப்பின் அவை எங்குள்ளன என்று தெரிவிக்க முடியுமா எனப் பார்வையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விடையிறுத்த சந்ரு, சமயச் சார்பு, சமயச் சார்பின்மை என்கிற பேதங்கள் கலைஞனுக்கு இருக்கச் சாத்தியமில்லை என்று சொன்னார். ஒரு கழுதையைக் களிமண்ணில் உருவாக்குகையில் உள்ள ஈடுபாடும் மகிழ்ச்சியும் வெண்கலத்தில் நடராசர் சிலையை வடிக்கும்போதும் தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். கலை வடிவங்களின் வெளிப்பாட்டில் சமயத்தின் பங்களிப்பையும் அவர் விவரித்தார்.

3

நவீனக் கலை வடிவங்கள் அவற்றை உருவாக்கிய கலைஞனின் சுய அனுபவம் சார்ந்த உள்ளுணர்வின் வெளிப்பாடாக இல்லாவிடில் அவை வணிக நோக்கில் வலிந்து உருவாக்கப்பட்ட வெறும் செயற்கைப் படைப்புகளாகத்தான் இருக்கும் என்றார், சந்ரு. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப் பெரும் போர்களின் நேரடியான தாக்கம் நமக்கு இல்லை. அவற்றின் விளைவாக மேற்கத்தியக் கலை வடிவங்களின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் இயல்பானவை என்பதை அவர் நினைவூட்டினார்.

இன்றைய உலகமயச் சூழலில் விஞ்ஞான வளர்ச்சி என்பது இனம் புரியாத குழப்பத்தையும் பீதியையும் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், படைப்பாளிகள் ஆழ்ந்த அமைதியைத் தமது தொனிப் பொருளாகக் கொண்டு அன்பே மனித நாகரிகம் என்னும் நம் முன்னோர் கோட்பாட்டைத் தம் அனுபவமாக ஏற்பதும், அதனைத் தம் கலைஇலக்கியப் படைப்புகளில் பிரதிபலிக்கச் செய்வதும் அவசியம் என்று சந்ரு கருத்துத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது தாம் உருவாக்கிய புதுமைப்பித்தனின் முகச் சிற்பத்தை சந்ரு எடுத்து வந்திருந்தார். அதனை எழுத்தாளர் அசோக மித்திரன் திறந்து வைத்தார். இந்தச் சிலை நாகர் கோவிலில் சுந்தர ராமசாமி நினைவாக அமையவிருக்கும் நூலகத்தில் வைக்கப்படும் எனக் காலச் சுவடு சார்பில் அறிவிக்கப்பட்டது. புதுமைப்பித்தனின் மகள் தினகரியும், அவருடைய கணவர் சொக்கலிங்கமும் சந்ருவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்கள்.


Series Navigation