நீர்வலை (16)

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
மனிதர்கள்
கடலில் வலைவீசி
மீன் பிடிக்கப் போனால்,
கடல்
அலைவீசி
மனிதனைப் பிடிக்க
ஊருக்குள் வந்திருந்தது.
இது அலை வலை. நீர் வலை.
மதங்கொண்ட யானைபோல, அலை முட்டிஇழுத்த ஜோரில், பிய்ந்தும் நைந்தும் பயன்படாதுபோன பொருட்களை உதறி, தூ என அலட்சியத் துப்பல் துப்பி விட்டு, கடல் மீண்டும் திரும்பிப் போனாப் போல.
கடலின் ஆக்ரோஷத்துக்கு எதுதான் தப்பித்தது…
மரங்களே பெயர்த்தெடுக்கப் பட்டு மிதக்கின்றன. எத்தனை மனித உடல்கள், கட்டில்கள், பீரோக்கள், வீட்டு சாமான்கள், பெட்டிகள்… என்று திறந்தும் திறக்காமலும் கரைகளில் கிடக்கின்றன. கடலில் அடித்துப் போயிருக்கின்றன.
வரதட்சிணைக் கொடுமைக்கார மாப்பிள்ளை போல.
ஊர் மறுபடி அவலஊளையுடன் விழித்துத் தன்னிலை திரும்புகிறது. எங்கெங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தம். மரண ஓலம். வலியின் அழுகை. இழப்பின் புலம்பல். துயரத்தின் பைத்தியக்கார கையறு நிலை.
கடல்கரை ஓரம் குழந்தைகளை, தத்தம் பிரிய உறவினர்களை, அவர்கள் தேடித் திரிகிறார்கள். கிளிஞ்சல்கள் தேடி அலையும் விளையாட்டு கண்ட கரைகள், இப்போது அந்த அழுகை ஊர்வலத்தில் விக்கித்துத் திகைக்கின்றன.
ஆசிர்வதிக்க உயரும் கை பார்த்திருக்கிறோம். இது தேங்காய்விடல் போட உயர்ந்த அலையின் கை. அதன் கைச்சுருளில், தேங்காயாக, ஆ, மனிதர்கள்…
சர்ச் வளாகத்து தேவ ஊழியர்களில், காயம்பட்டு சிகிச்சை வேண்டியிருந்தவர்கள் தவிர, மற்றவர்கள் மீட்புநடவடிக்கைகளில் சுறுசுறுப்பாகி விட்டார்கள். ஊரின் தன்னார்வ அமைப்புகளும் பதறிக் கண்விழித்து செயலில் இறங்குகின்றன.
கடலை மாவில் வாழைக்காயைச் சீவி முக்கிமுக்கி பஜ்ஜிபோடும் வீராச்சாமி, அவனே சகதியில் முங்கிக் கிடக்கிறான். நீரும் அழுக்கும் சொட்டச்சொட்ட அவனை வெளியே எடுக்கிறார்கள். வெளியே எடுத்து, சற்று அழுக்குகளை அகற்றிப் பார்க்கும்வரை, இறந்த சடலம் யார் என்ன, விவரம் யாருக்குமே தெரியாது.
பிணங்கள் வரிசைவரிசையாய்ப் பார்வைக்கு அடுக்கப் படுகின்றன. இன்னார் என அடையாளப்பட்ட சாவுகள் பெயர் குறித்துக்கொள்ளப் பட்டு அந்தப் பிணங்கள் தனியே வைக்கப் படுகின்றன. எல்லாவற்றையும் மிக சீக்கிரம் அப்புறப்படுத்தியாக வேண்டும். வியாதி வெக்கைகள் இனி கிளம்பும். கடுமையான நாற்றம் கிளம்ப ஆரம்பிக்கும். அப்புறம் – பொதுமக்கள்…. மீதி இருக்கும் ஜனங் கள்… அவர்கள் மனப்பதிவில் இருந்து, இந்த சூழ்நிலைப் பிறழ்வில் இருந்து, மீள வேண்டும்… அது எல்லாவற்றிலும் முக்கியம்.
உதவிக்கு ஓடி வந்தவர்களில், இந்துக்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள், என்ற பேதம் இல் லை. ஜாதிபேதம் இல்லை. வர்க்கபேதம் இல்லை.
கடலுக்கு, இயற்கையின் சீற்றத்தில் நல்லம்சங்களும் நிகழ்கின்றன. எந்தப் பேரழிவும் பாடங்களைப் புகட்டவல்லதாகவே இருக்கிறது. மனிதனை மனிதனாக்கவும் சில இக்கட்டுகள் வேண்டித்தான் இருக்கிறது. சில இக்கட்டுகளில் அவன் திரிந்து போவதாக அல்லவா பொதுவான கணிப்பு இருக்கிறது…
ஊரை சுத்தப்படுத்த வந்ததா கடல்?
மனிதன் தன் உண்மையான சொரூபத்தை, சக்தியை அறிய, உணர வைக்க இயற்கை இப்படியும் வழிகாட்ட முனைகிறதா என்ன?

நாலுபக்கமும் கடல் பெருவெளி. தண்ணீர் வளாகம். நீலப் பெருவெளி. நீள மாலையை அரைவட் ட அரைவட்டமாய்க் கட்டி, விழா மேடையில் அலங்கரித்தாற் போல, உட்சிறு குழிகளுடன் தளும்பும் நீர். யாரோ செய்யும் கச்சேரிக்குத் தலையாட்டினாற் போல. திடீர்ப்பைத்தியம் சமாதானமாகிப் போனாற் போல…
அம்மைத் தழும்பெனத் தளும்பும் மேல்மட்டம்.
துவையல் அரைக்கிற, கொத்திவிட்ட அம்மி!
கடல் பசியடங்கிக் கிடந்தது.
இழவு ஊர்வலம் தாண்டிப்போகையில் பூ உதிர்த்துக்கொண்டே போனமாதிரி, கடல் திரும்பிய வழியெங்கும் என்னமோ என்னென்னமோ பொருட்கள். உடல்கள்… கரையில் மாத்திரங்கூட அல்ல. கடல் தழுவிய சிறு உட் தூரம் வரை கூட அல்ல… கடலுக்குள் வெகுதூரம் வரை சாமான்கள் மிதந்தன. முங்கிக் கிடந்தன.
மிதக்காமல் உள்முங்கிப் போன சாமான்களுக்குக் கணக்கு இல்லை.
அடித்த பின் கோபமடங்கி சமாதானம் ஆகிவிட்ட அம்மா போல… கடல்.
மேல் நீளவானம். கீழ்ப் பெருங்கடல். நடுவே காற்று. ரோந்து சுற்றும் காற்று. தெருநாய் போல கொள்கையில்லாமல் ரோந்து சுற்றும் காற்று.
பல்லக்குபோல மிதந்து போய்க்கொண்டிருக்கிறது மரம் ஒன்று. பெரிய மரம்தான். மேலே கிளை விரிப்பு எடுத்த மரம். தண்ணீரில் மூழ்கியவன் கைதூக்கி உதவி கோரினாற் போல, கையறு நிலையில் கை விரி கோலம்… மரம் கிளைஉயர்த்தியபடி மிதந்து கொண்டிருந்தது. கூடவே மரங்கள் சிலவும், வீட்டின் கூரைகள் எனவும், பலகைகள் எனவும்…
கூடவே அ வ னு ம் …
சிவாஜிக்கு மயக்கம் தெளிகிறது. மெல்ல மெல்ல, அலை அவனை இரக்கத்துடன் உசுப்பினாற் போல. கடல் உட்சுருட்டிய ஆவேச இழுப்பில் அவன், சர்ரென்ற வேகத்துடன், தன்னிலை இல்லாமல் – சுதாரிக்கவும் கூடாமல், கடலுக்குள் அடித்துச்செல்லப் பட்டான். கடலலை நாக்குபோல அவனை உட்சுருட்டி உருட்டியது. யானையின் – நீர்வாளியில் இருந்து போன்ற, தும்பிக்கை உறிஞ்சல்… கடலின் ஜீரண இந்திரியத்தில் அவன் உட்சிக்கிக் கொண்டான். ரவுடி ஒருவன் சீழ்க்கை அடிக்க நாக்குசுழித்தாற் போல அலை உட்குழிவு கொண்டது… என்றாலும், ஆகா – எதோ மரத்தின் கிளையில் அவன்சட்டை மாட்டிக் கொண்டிருக்கிறது. உள்ளே வாரி இழுக்கப்பட்ட மரம், மளுக்கென மேலேறி, மேல்தளத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டது.
மளுக்கென அவனையும் உயரே – அம்மாவின் ஒக்கலில் பிள்ளை போல – கூடவே அவனும்.
கண் விழித்துப் பார்த்…. ஆ, மிதந்து கொண்டிருந்தான். நினைவு சுதாரித்தபோது உடலசைவில் உடம்பே ஒருதரம் கடலில் மளுக்கென முங்கி எழும்பியது. சில்லென்றிருந்தது தண்ணீர். உப்புத் தண்ணீர். என்ன சில்லிப்பு. என்ன குளிர்.
பதறி விழித்து சுற்றுமுற்றும் பார்த்தான். மேலே, கீழே, என தூர தூரத்துக்கும் நீலம். நீளம். நீலம். திகட்டும் நீலம். வேறு காட்சியே இல்லை. வேறு நிறமே இல்லை. பரவாயில்லை. நீலம். அமைதியின் நிறம்…
முதுகில் சட்டை மாட்டிக் கொண்டிருந்த கிளையைப் பார்த்தான். மெல்லிய மாட்டல்தான். சற்று அது பிடிவிலகி, நழுவி, உருவியிருந்தால் கூட அவனுயிர் போயிருக்கும்…
ஆகா நான் பிழைத்துக் கொண்டேன். ஆகா. ஆகாகாகாகா…. என உயிரெழுச்சி கொண்ட கணங்கள். பைத்திய வெறி. சிரிக்க ஆவேசப்பட்டான். ஆனால் நிலவரம் அத்தனை சிலாக்கியமாய் இல்லை. அவன் கடலில் மிதந்து கொண்டிருந்தான். கடல் என்றால், ஆழ ஆழமான கடல். எத்தனை ஃபர்லாங், எத்தனை மைல் ஆழத் தண்ணீரோ… இதில் மனிதனின் அடையாளம் சிறுபுல் அளவு கூட, மிதக்கும் பாசி அளவு கூட இல்லை. கடல்பாசிகள் ஐம்பது, நூறு மீட்டர், என நீண்டு கிடக்கின்றன கடலில்.
அவன் கடலின் சிறு துளி.
அத்தனை மகிழ்ச்சிகொள்ளும் படியாயெல்லாம் இல்லை நிலைமை. தனக்குள் சொல்லிக்கொண்டான்… மரணம் எப்போதும் காத்திருக்கிறது அவனுக்கு. எதுவும் நிகழலாம்.
உடம்பில் தெம்பே இல்லை. இரத்தமே காணாத உடல்போல, அலுத்துக் கிடந்தது உடம்பு. மரத்துக் கிடந்தது. எத்தனைநாளாக நான் மிதந்து கொண்டிருக்கிறேன்? பசிக்கும் வயிறை என்ன செய்யப் போகிறேன்… எப்படி சமாளிக்கப் போகிறேன்? மரச் சிறு துண்டு – அது தந்த சிறு புகலிடம்… தற்செயலாய்க் கிட்டிய ஆதரவுக்கரம்… சிறு இலைபோல அவன் மரத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிறான்… அந்தப் பிடி விட்டுவிட்டால் அவன் கதி அதோ கதிதான்.
கரை சமீபத்தில் இல்லை. அது புரிகிறது. கண் பார்வை தேடிய தூரம் வரை… தூ-ஊஊஊ-ரம் வரை கரை… ம்ஹும், இல்லை. அவன்… அவன் இப்போது என்ன – ?????? – செய்ய வேண்டும்? அவனால் ஆகக்கூடுவது என்ன?
? ? ? ? ?
உண்மையில் தண்ணீர் அபார சில்லிப்பாய்க் கிடந்தது. கைகால்களை அசைக்கவே பெரும் பிரயத்தனம் வேண்டியிருந்தது. உடல் மரத்து, விரைத்து, அவயவங்கள் சொல் கேளாத அளவு, கனம் கட்டியிருந்தன.
மேல் வெயிலில், சிறிது அலைக்கூரையின் மேல்தளம் சமாளிக்கக் கூடிய அளவில் அவனைக் காப்பாற்றி யிருக்கலாம். இன்னும் அவன் முங்கிவிட்டால் கடும்குளிரை அவன் சந்திக்க, எதிர்கொள்ள வேண்டிவரும்… நினைக்கவே அபார பயம் வந்தது. என்ன ஆழம்டா இது… நினைத்தாலே மயக்கம் வரும் ஆழம். சின்ன வார்த்தைதான்… என்றாலும் அதற்குள் எத்தனை மிரட்டல்… நீச்சல் தெரியும் எனக்கு, என கடலைப் பார்த்து உளறுவதில் அர்த்தம் இல்லை. பயமே ஆளைக் கொன்றுவிடும் ஆழம் அது.
சட்டை பட்டன்களைக் கழற்றி, மெல்ல மெல்ல, தன்னை விடுவித்துக் கொண்டான். இரு பதறாதே. தயவுசெய்து பதறாதே… இருந்த ஆதரவை நழுவவிட்டு விடுவோமோ என்கிற பதற்றம் அது. ஆகா இப்பெரும் உலக பிரம்மாண்டத்தில் நான்… நான் மாத்திரமே. யாருமே இல்லை. பறவைகள்கூட வானத்தில் காணவில்லை… கரை எதுவும் பக்கத்தில் இல்லை என அதுவே சொல்லாமல் சொல்லி, கொல்லாமல் கொல்கிறது. நான் பயணித்துக் கொண்டிருக்கவில்லை. மிதந்து கொண் டிருக்கிறேன். கடலலை என்று இருந்தால் நம்மை இழுத்துப் போகும். எங்காவது ஒதுங்கவும் இடம் கிடைக்கக் கூடும். நான் அப்படியே நிலைத்து வெறுமே அசைவுகண்டு கொண்டிருக்கிறேன். கோவில் யானை.
கடலோடு கடலாக நான் தளும்பிக் கொண்டிருக்கிறேன்.
தூங்கும் மனிதனின்… மூச்சுக் காற்றில் அசைவுறும் மூக்கு துவார மயிர்.
கடல். திக்கு திசை அறியவொண்ணாக் கடல். எந்தப்பக்கம் போனால் கரைவரும்… எந்த திசையில் கரை சீக்கிரம் வரும்… எவ்வளவு சீக்கிரம் வரும்… எந்த முடிவும் இல்லை அவனிடம். யூகிக்கவும் முடியாத நிலைமை. வெறுமை… திகைப்பையே அச்சத்தையே அந் நினைவுகள் தரக்கூடும். அட அதிர்ஷ்டம் இருந்தால் பிழைத்துக் கொள்வோம் என, நம்பி வாழ வேண்டிய முயற்சி என… எதாவது செய்ய வேண்டிய நிலை. பிழைக்க மன்றாடுவேன். போராடுவேன்… சாவை, மிக அருகில், அல்லது வாழ்வை, மிக அருகில் அவன் சந்திக்கக் கூடும்.
காத்திருப்பது வாழ்வா? சாவா?
என் அப்பா ராணுவவீரர். கடுமையான பொழுதுகளுக்கு சகஜமானவர் அவர். நான் அவர் மகன். போராட வேண்டும். நான் வெற்றிபெற்றாக வேண்டும். நான் உயிரோடு இருக்கிறேன். நான் பிழைத்து விடுவேன். கரையை எட்டி விடுவேன்… ஆமாம் அதை நான் நம்ப வேண்டும்… தேவையற்று பயப்படுவதால் என்ன நிகழ்ந்து விடும்… அதனால் ஒரு பயனும் இல்லை.
ஆ அது… என்னால்… என்னால் முடியுமா?
முடியும்! முடியும்! முடியும்!
முடிய வேண்டும். முடிந்தாக வேண்டும். கட்டாயம். கட்ட்ட்டாயம்…
தலையை அங்கீகாரத்துடன் மேலிருந்து கீழ் ஆட்டிக் கொண்டான்…
ஆனால் சூழல் மிகக் கலவரப்படுத்துவதாய் இருந்தது. சுற்றிலும் பார்த்தான் அவதானிப் புடன்.
குப்பைகள். அது ஒரு விஷயமில்லைதான். ஆ பிணங்கள் சிலவும். ம்… சரி… சற்றுதள்ளி ஒரு பருத்த மரம் மிதந்தது. ஆகா வாழ்வின் ஒளிக்கீற்று, என அதைக்கண்ட பரவசம்… பயமும், இல்லை பரவசமும் மாறி மாறி, நிழல் – ஒளி, என மாறி மாறி, தடுமாறி… தன்னுள்ளே புரண்ட கணங்கள்.
இவனது மரத்தைவிட அது பருமனானது. இவன்மரம், இவன் மேலே ஏறி அமரமுற்படும் போதெல்லாம், பொதுக், என முங்கியது. கடைசிவரை இவன் அதைப் பற்றியபடியேதான், பிடி விடாமல், வேறு வழி வகைகளைப் பார்க்கவேண்டும், என ஆயாசமாய் இருந்தது. அது உள்ளமுங்குந்தோறும் பகீரென்றது அடிவயிறு. காலி வயிறு. பசித்த வயிறு.
ரொம்பக் குளிர்கிறது தண்ணீர். இப்படியே நனைந்தபடியே போய்க்கொண்டிருக்க முடியாது. அந்த மட்டுக்கு தலை, வெளியே, நீர் மட்டத்துக்கு மேலே, இருந்ததில், உலர்வு கண்டு… காய்ந்துவிட்டது. வெயிலின் சூட்டுக்கு அவனுக்கு முழிப்பு வந்திருக்கிறது.
உடலை சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். உடல் முழுவதையும்…
மீண்டும் உடல் முழுவதையும், அவன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். உயிர் பிழைத்தலுக்கு அது மிக முக்கியம்.
உலகம் சட்டென்று எத்தனை பயங்கரமாய், பூத உருக் கொடுத்து விட்டது.
கூட யாருமே இல்லை.
ரோந்து சுற்றும் காற்று. எனினும் சத்தமே கிடையாது. கனமான ஷு அணிந்தும், ராணுவவீரன் சத்தமே இல்லாமல் வருகிற மாதிரி…
கூட யாருமே…
இருக்கிறார்கள். பிணங்கள்! சுற்றிலும் மிதக்கும் பிணங்கள். அவர்கள் இறந்து போயிருக்கலாம். இவனைப்போல மூச்சுமாத்திரம் மீதம் இருக்கிறவர்கள், இன்னும் கண்விழிக்காதவர்கள் கூட இருக்கலாம்…
தனக்கு விழிப்பு வந்தாப்போல அவர்களுக்கும் விழிப்பு வரலாம். ஒருவேளை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணை, என அமையலாம்…
கீழே யாரோ பெரும் பாத்திரத்தைப் பற்றவைத்தாப் போல… எத்தனை பயங்கரம். கடல் பொங்கி, அடுப்பில் வைத்த பால்போல உயர்ந்து சீறி… நினைவில் அதன் விபரீதம் தட்டுமுன்… என்னென்னவோ நிகழ்ந்து விட்டன.
கடல் கரைப்பக்கம் எத்தனையோ பேர் இறந்து கிடப்பார்கள்.
திடீரென உடம்புக்குள் ஒரு உலுக்கல். சோகம் எக்களித்து வாந்திபோல மேலெழுந்தது. உரக்க அழ விரும்பினான். தொண்டை கட்டியிருந்தது. உடம்பில் தெம்பே இல்லை.
இல்லை. நான் அழக்கூடாது. அழக்கூடாது – என சத்தமாய் உயிரைத்திரட்டி அந்த வெளியில் கத்தினான். இது பைத்தியக்காரத்தனம். தெரியும். கத்தினான். முடிந்த அளவு உரக்க்க்க்க்கக் கத்த்த்தினான்!
தன் குரல் தனக்கே தெம்பாய் உணர வேண்டியிருந்தது. கட்டிய தொண்டையைச் செருமி, சரி செய்து கொள்ள வேண்டி யிருக்கிறது… கடல்வெளியெங்கிலும் சத்தமேயில்லை. மௌனம். பெரும் மௌனம். சிறு காற்றுக்கு, கடல் மேல்த்தண்ணீர் மாத்திரம், யாரோ சலிக்கிறாப்போல ஆடுகிறது. ரயில் ஆட்டம்.
உடல் தெம்பை விட்டுவிடாதே, என எச்சரித்தது மனம்.
அழாதே. சிரிக்காதே. கத்தாதே. தெம்பைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் நீ கட்டாயம். எத்தனை நாள் மிதந்தாயோ? இன்னும் எத்தனைநாள் இப்படியே போக வேண்டுமோ? கடலைப்பற்றி எதுவும் தெரியாது. திசை தெரியாது. நீச்சல்? நம்ம நீச்சல் எல்லாம் ஒரு கணக்கில் சேர்த்தியா என்ன?
அதிர்ஷ்டம் சார்ந்த கணங்கள். நல்லா நீஞ்சி என்ன? கரைக்கு நேர்-எதிர் திசைல, ப்பா ப்பா என மூச்சிரைக்க நீஞ்சிறப்டாது.
அதை நினைச்சி கலவரப்படவும், அவநம்பிக்கைப்படவும் தேவை இல்லைதான்… என்ன செய்ய வேண்டும் இப்போது நீ?
யோசி யோசி யோசி…
பிணங்களைப் பார்த்து மிரளாதே.
எத்தனை நாட்கள் இப்படி மிதந்து கொண்டிருந்தேன். இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே மிதக்க வேண்டும்… என்றெல்லாம்… அதைரியமான சிந்தனைகளை அகற்றி எறி. அந்தக் குப்பையோடு அவநம்பிக்கையை வீசி எறிந்து விடு…
நான் பிழைத்துக் கொள்வேன்.
உன்னை நம்பு.
அப்பாவை தைரியமாய்த் தோளில் தூக்கிப்போய்ப் புதைத்தவன் நான். அப்பா…
அ-ப்-பா! எனத் தானறியாமல் அந்த வெளியில் கத்தினான்.
எனக்குத் தெம்பு தாருங்கள். நீங்களும் இப்படியேதான். காயம்பட்ட காலுடன், எடுக்கப்பட வேண்டிய கடும் காயத்துடன் பனிவெளியில் கிடந்தீர்கள். ஆ பிழைத்து எழுந்து வந்தீர்கள்… நொண்டி நொண்டி…
தெம்பு தாருங்கள் அப்பா…
எனக்குப் பைத்தியமா. தெரியவில்லை.
எதாவது செய்யடா நாயே. சும்மா மிதந்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. பெரும் பெரும் மீன்கள் உன்னை… வந்து உன் தொடையைப் பதம் பார்ப்பதற்குள்… எதும் அடுத்த விபரீதம் வருவதற்குள் முடிந்த அளவு உன்னை, உன் மனத்தை சூடேற்றிக்கொள்.
பசிக்க ஆரம்பித்தது.
சாப்பிட்டு எத்தனைநாள் ஆயிற்று தெரியாது. பசி ஒரு பொருட்டல்ல. சின்ன வயசில் இருந்தே பசி தாங்கியவன். அப்பாவை, சாவின் உச்சியில் இருந்து அவர் தன்னைத்தானே மீட்டுக்கொண்டதை அறிந்தவன்…
இத்தனைநாள்ப் பசிக்கு திடுதிப்பென கடின உணவுகள் சரி வராது. குமட்டும்… குடிக்கிறாப் போலப் பழகி, முழு நீர்ப்பாகம், பிறகு கஞ்சிப் பாகம்… கூழ்… பின் மெதுவே சோறு என வர வேண்டும்.
பசி ஒரு வெறிபோல பிடுங்கி எடுக்கிற காலகட்டத்தைத் தாண்டியிருந்தான். நல்ல விஷயம். வயிறு எதாவது தரக் கெஞ்சுகிறது. முதலில் இந்த பிரம்மாண்டமான தனிமை… மிரட்டும் எதிர்காலம் பற்றிய பயம்… மரண பயம்… ஆ – அதெல்லாம் இல்லை. நான் நான்… பிழைத்துக் கொள்வேன்!
தெரு வித்தைக்காரனின் குழந்தை, வெற்றுக் கம்பத்தில் உச்சிவரை ஏறி, பல்டி அடித்து, பின் பத்திரமாய்க் கீழிறங்கி வரவில்லையா?
ஆ நான் பிழைத்துக் கொள்வேன்!
அவன் திரும்பவும் கத்தினான் – ஏ பிணங்களே நான் பிழைத்துக் கொள்வேன்…
எல்லாருமே சடலங்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்… பார்த்தால்…. ஒரு பத்து பன்னிரண்டு வரை கண்ணுக்குத் தெரிகிறது. அப்பாலும் சில மிதக்கலாம்.
மரத்தின் பிடியில் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான். ஆகவே தலை வெளியேஇருக்கையில், சூர்யன் பட்டு, கதகதப்பு பட்டு, நான் உயிர் மீண்டேன். அவர்கள்… அதோ அந்தப்பெண்… அவள் இறந்திருக்கிறாள். உடம்பில் துணி கிழிந்து, விலகி, கண்கள் பொங்கி, தவளையை விடப் பெரிய கண்கள், எனப் பிதுங்கி வெளித்தெரிந்த கோரம்…
அழகியாக அவளுள் பிரமைகள் இருந்திருக்கலாம்.
பயப்படாதே.
ஆமாமாம். த ள் ளி த் த ள் ளி, பிடியின்றி, கடல் மேல்பரப்பில் மிதப்பவை பிணங்களே. அவை உள்ளமுங்கி, தண்ணீர் குடித்து, உடல் உப்பி, மிதந்து வருகின்றன. உடல் குப்பிகள். பல நாட்கள் மூழ்கியபின் அபரிமிதமான தண்ணீர் உட்புகுந்து உடலே பூதாகரமாகி அவை மிதக்கின்றன… எத்தனை நாட்களாக மிதக்கின்றன. எப்போது இறந்தன…
அவை நாறக் கூடும். ச், அந்த நாற்றத்துக்கு மீன்கள் படையெடுக்கக் கூடும். நான் சுதாரித்தாக வேண்டும்.
மீன்கள் என்றால், ஒரு படகுஅளவு கூட, கடலில் பெரிய பெரிய மீன்கள் உள்ளன, என்கிறார்கள். சுறாக்கள் வரலாம்… எதுவும் நிகழலாம். எப்போதும்…
எதற்கும் தயாராக இருக்க வேண்டும் நான். பயந்து ஆவதென்ன?
உடல் அழுகும் கெட்ட வாசனைக்கு, ஒரு கடலளவு மீன்கள், படையெடுத்து வந்தால் என்னால் சமாளிக்க முடியுமா? தாக்குபிடிக்க முடியுமா?
எதாவது செய். செய்தாக வேண்டும் நான்…
(முடிவுப் பகுதி அடுத்த வாரம்)


storysankar@gmail.com

Series Navigation