நீர்வலை (8)

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


சிவாஜி வாங்கிவந்ததாகப் புத்தாடைகளைக் கமலாவுக்குத் தரவேண்டும் என கிருட்டினமணி மனசுக்குள் யோசனை வைத்திருந்தான். சிவாஜியோ அதைவிட சுலபமாக குழந்தை மனசைப் படித்துவிட்டான்… கிருட் டினமணிக்கு சந்தோஷம்.
பரபஸ்பர நம்பிக்கையும் புரிந்துகொள்ளலுமான உலகம் எளிமையானது. அழகுகள் வந்தமரும் பிரதேசங்கள். சமவெளிப் புல்வெளி, குளிர் தென்றல், நிலா, சிந்திக் கிடக்கும் பூக்களின் வண்ணக் கொலு. காலில் சிறு குளிர் தடவத் தடவ நடந்து போகிறாப் போல… வாழ்க்கை சிக்கலற்று உனக்குக் கிடைக்கிறது.
பிரச்னைகள் அற்றது வாழ்க்கை என்பதல்ல. அதை வெல்ல ஒரு துணை, பிரியப்பட்ட ஒரு வட்டம்… அது ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயம் தேவையோ தேவை.
கமலாவை உட்காரவைத்து வாசல் பூவரச மரத்தடியில் ஊஞ்சல் கட்டி ஆட்டிவிட்டான் சிவாஜி. சிறு உயரம் எழும்ப அடிவயிற்றில் குளிராய் ஒரு பயம். மடல்கள் சிலிர்க்கின்றன. சட்டென்று அலை பின்வாங்கினாப் போல ஊஞ்சல் கீழிறங்குகிறது. காலால் உந்தி தானே ஆடமுடியாத உயரம்.
வேகம் இன்னும் வேகம், என்கிறது குழந்தை…
வேணாம், நீ பயந்துக்குவே….
வேணும்- என்றது குழந்தை.
”வேணாம்”
வேணும்… என்றது அழுத்தமாய்.
வேகத்தை வேறு வழியில்லாமல் அதிகரித்தான் சிவாஜி. பயந்துதான் கிடக்கிறது அதற்கு. என்றாலும் ஒத்துக்கொள்ள முடியாத வீம்பு. குறைத்து விடச் சொல்லலாமா என உள்ப்பக்கம் எச்சரிக்கை.
‘குறைச்சி ஆட்டவா?’ – என்கிற அவன் கேள்விக்கு ”இன்னும் வேகம்!” – என்கிறது வாய் தன்னை அறியாமல்!
விர்ரென்று காற்றில் சீறியது ஊஞ்சல். வெறிபிடித்த வேகம். ஐயோ, என பயத்தில் கயிற்றில் பற்றியிருந்த கையை விட்டுவிட்டது குழந்தை. அப்படியே ஊஞ்சல் அவளை சண்டிக்குதிரையாய் உதறி வீசியது.
ரேஷன் கடையில் சர்க்கரை நிறுத்துப் போட்டாப் போல!
கமலா கண்ணைத் திறந்து பார்த்தால்…
சிவாஜியின் கைத்தாங்கலில்!
பயந்திட்டியா?
நீ இருக்கியே… எனக்கென்ன பயம்? – சிரித்தபடி அவன் மார்பில் சொகுசாய்ச் சாய்ந்துகொண்டது குழந்தை.
அப்ப திருப்பியும் ஆடுவமா?
வேணாம்! – என்றது குழந்தை!
பயம் இல்லைன்னு சொன்னியே?
பயம் இல்லை!
அப்ப ஏன் வேணாம்?… அவனும் விடவில்லை.
உனக்குக் கை வலிக்குமே அண்ணே…
தனியே நினைத்து நினைத்து சிரித்தபடியே அழுகிறான் சிவாஜி!
சிவஜோதி அரிசியைக் களைந்து சமையல் பானையில் போட்டபடி எல்லாம் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு சீக்கிரம் அவனோடு ஒட்டிக் கொண்டாள் இவள், என சிவஜோதிக்கு ஆச்சர்யம்.
அண்ணன் என்கிற உறவும் அந்த வயசும்… இப்போதெல்லாம் போதும் ஒரு குழந்தை என்று நிறுத்திக் கொள்கிறார்கள். அன்புப் பரிமாற்றம் என்கிற விஷயமே இல்லாமல் வளரும் குழந்தைகள்… பொறுப்பு சுமக்காத குழந்தைகள்… தாய் தந்தையரிடமே கூட காலாவட்டத்தில் ஒட் டுதல் குறைந்து விடாதா?
கமலாவுக்கு அண்ணனை முகநினைவு இருக்குமா தெரியவில்லை. ஆனால் சட்டென்று உள்ளே பூத்து இவனை ஏற்றுக் கொண்டிருக்கிறாள். அது தெரிகிறது!
கிருட்டினமணி வெளியே போயிருந்தான். தினசரி லோடு என வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது அவனுக்கு. சில சமயம் பெரிய பயணமாய் வட இந்தியா என்று கூட அமைந்துவிடும். ரெண்டு நாள் என லாரியில் இருந்து இறங்காமல் போகிறாப்போல ஆகிப்போகும். தனிப் பயணம். கூட வேலைக்கெனச் சிறு பையனும் வைத்துக் கொள்ளவில்லை. பழைய சினிமாப் பாடல் களும், ரொம்ப ஏக்கமாய் இருந்தால் பர்சில் கிடக்கும் குடும்பப் புகைப்படமும் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டிதான்.
மனசு வேடிக்கை பண்ணிக் கொண்டே வரும். தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்வான்…
நீ இல்லாத மாளிகையைப் பார் மகளே பார்!…
ஏய்யா அவதான் இல்லியே. என்னாத்தப் பாக்குறது? யார் பாக்குறது!… தூங்கறவனைப் பார்த்து தூங்கறியான்னு கேட்ட கதையாட்டம்!
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?
பாடிட்டாரு ஐயா. செம்பு அதிகம் கலந்துட்டா, இவரு அதேவிலை குடுத்து வாங்கிட்டு வருவாராக்கும்.
பாவாடை தாவணியில் ”பார்த்த” உருவமா… இவள் பூவாடை வீசிவர பூத்த பருவமா?
பாவி மாத்தி எழுதறியே… பாவாடை தாவணி எப்படா போடும், பருவம் பூத்த பிறகு தானேடா?
மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே…
கூடவே கோட்டை அரண்மனைல்லாம் தெரியுதா பாரப்போவ்? செமினி கணேசா…
சாதாரணமாகப் பேப்பர் செய்திகள் வாசிக்கிற பழக்கமே கிடையாது. டீக்கடையில் ஒதுங்கினால் காற்றுக்கு பெஞ்சிமேல் விரிந்தும் சுருங்கியும் கிடக்கும். எடுக்கத் தோணுவதே இல்லை. யாராவது எடுத்து விரிச்சிப் படிக்க ஆரம்பித்ததும் போய் எட்டிப் பார்க்கத் தோணுகிறது. அந்த ஆர்வத்தை அடக்க முடிகிறதேயில்லை.
ஏன் அப்படி? மனிதனின் விசித்திர குணங்கள். ஓட்டல் வாசலில் வாழைப்பழம் விற்கிறவன் வண்டி கட்டிக் காத்திருப்பான். எவனும் வாங்க மாட்டான். திடுதிப்பென்று ஒருத்தன் வாங்கிறணும். தயங்கி நின்னு வேடிக்கை பார்க்கிற ஆள் தன்னைப்போல பைத்துட்டை எடுத்து நீட்டி ஒரு பழம் வாங்கி உரிச்சி வாய்ல போட்டுக்கறானப்பா. ஏல நீ சொந்தமாத்தான் சிந்திக்கப்டாதா?
ரோட்டோரத்தில் எவனாவது குத்திட்டு உக்காந்திறப்டாது. நாட்ல அவனவனுக்கு பரபரங்கும். சின்ன முள், பெரிய முள்ளாயிரும். ரெண்டு நிமிஷத்ல ஆறாப் பெருகி தெருவுக்கே ஓடி வந்துருது!
நாட்ல மழையே பெய்யல்லியே, தெருவுல ஆறாப் பெருகி ஓடி வருதப்பான்னு அவனவனுக்கு ஆச்சர்யம்!
கேரளாவில் ஒருமுறை…. கிருட்டினமணிக்கு மலையாளம் தெரியாது. சும்மா ஊர் பார்க்க என்று காலாற ஊர்க்குள்ளே நடந்து போய்க்கொண்டிருந்தான். பலூன் வியாபாரி ஒருவனிடம் நிறையக் குழந்தைகள், சுற்றிவளைத்து பலூன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒளிந்துகொண்டு பயந்து பயந்து ஒரு பிராந்தன் (கிறுக்கன்) அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வேடிக்கை என்னவென்றால் அந்தப் பிராந்தன், எல்லாக் குழந்தைகளும் வாங்கிச் செல்வதைப் பார்த்ததும் தானும் ஒண்ணு வாங்க நினைத்தான் உடனே. பைக்குள் சில்லரை கிடந்தது. எல்லாக் குழந்தைகளும் போகும்வரை கூச்சத்துடன் காத்திருந்தான். சுற்று முற்றும் யாரும் இல்லையே என்று பார்த்தபடி அவன் பலூன்காரனிடம் போய்க் காசை நீட்டினான்.
ஊதிய பெரிய பலூன்.
பைத்தியத்துக்கு ஆனந்தம். குதியோட்டம் ஓடி தனியே… என்ன நடக்கிறது என்கிற சுவாரஸ்யத்தில் கிருட்டினமணி அப்படியே நின்று விட்டான்.
அந்தப் பைத்தியம் என்ன நினைத்தது… குழந்தைகள் எல்லாரும் விரும்பி வாங்கும் சாமான்… ஆகவே இது நல்லதொரு தின்பண்டம்!
யாரும் பங்கு கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில்…
தனியே போய்…
சந்தோஷமாய் பலூனை ஒரு கடி…
படார் என்று வெடித்தது பார் வெடி!
பைத்தியம் பயந்தலறி ஓட ஆரம்பித்தது!
ஒருதரம் பின்னிரவில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தான் கிருட்டினமணி. ரெண்டாவது திருப்பத்தில் கம்பியழி போட்ட வீடு. சின்னக் குழந்தை ஒண்ணு. ஆறேழு வயசிருக்கும். மூச்சா அடிக்க என்று முழித்துக் கொண்டிருந்தது. வாசல் கம்பியழி வழியாக ரோட்டுக்கு சர்ர் அடித்துக் கொண்டிருந்தது. அவன் கடந்து போனான் அந்தக் குழந்தையை. ”டேய் மேல அடிச்சிறாதே!”
”அந்தப் பக்கம் போகாதே…” என்றது குழந்தை.
”எந்தப் பக்கம்?”
”அதோ புளிய மரம்… அந்தப் பக்கம்…”
”ஏன்?”
”அங்க பேய் இருக்கு…”
”யார் சொன்னா?”
”எனக்கே தெரியும்!”
அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
”பேயை நீ பாத்திருக்கியா?”
”இல்ல…”
”என்னைப் பாத்திருக்கியா?”
”இல்ல”
”பேயை உனக்குக் காட்டவா…”
”ம்”
”பேயைப் பார்க்க உனக்கு ஆசையா?”
”ம்”
”பார். நாந்தான் பேய்! ப்ரூ-ஊஊஊ” என்றான் கிருட்டினமணி.
அ…ம்…மா… குழந்தை உள்ளே குடுகுடுவென்று ஓடியது.
கிருட்டினமணிக்கு பதிலாக இப்போது சிவாஜி குழந்தை கமலாவைப் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று விட்டுவிட்டு கூட்டி வருகிறான். காலையில் அதன் உடைகளைத் தயாராய் எடுத்து வைக்கிறான். தண்ணீர் பாட்டிலை நிரப்பி வைக்கிறான். சில அவசரங்களில், கொஞ்சிக் கொஞ்சி ஊட்டிவிடவும் அதற்கு வேண்டியிருந்தது. என்ன அதிகாரம் செய்கிறது அவனை!…
தூக்கம் இமைகளை அழுத்த வீடுவந்து சேரும் கிருட்டினமணியை ‘அப்பா என்னைப் பள்ளிக்கூடம் கொண்டுவிடு…’ எனப் பிடிவாதம் பண்ணி மேலேறிக் கொள்வாள் கமலா. மறுக்க முடியாது. வாடி, அம்மா கொண்டு விடறேன்… வர மாட்டாள். பரவால்ல குழந்தை ஆசைப்படுது, என கிருட்டினமணி குழந்தையைத் தூக்கிக்கொள்வான்.
என்னமாச்சும் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டுக்கொண்டே வருவாள் கமலா. பதில் சொல்லி மாளாது.
அப்பா, கடல் தண்ணி எப்பிடி உப்பாச்சுது?
தெர்ல.
அதுல யார் உப்பைக் கொண்டு போட்டா? அதும் அவ்ள உப்பை?
எதும் உப்பு லாரிக்காரன் குடி வெறில கடல்க்குள்ள விட்டுட்டாப்லியா… என்று தனக்கே தோன்றும்… சிரித்தபடி, இதெல்லாம் உங்க வாத்தியார்ட்டக் கேளு புள்ள. பள்ளிக்கூடத்துக்கு துட்டு கட்டறோம்ல? அவர் சொல்லட்டும் பதில் … என்பான்.
சிவஜோதி சிரிப்பாணி காட்டும் பாணி வேறுமாதிரி. பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து பெருமையாய்ப் பேசுவான் அவளிடம்.
நம்ம புள்ளைக்கு ரொம்ப அறிவுடி…
ஆமா, நாந்தான் கடனாக் குடுத்தேன், என்பாள்.
அப்டிக் குடுத்திட்டுத்தான் நீ இப்பிடித் திண்டாடுறியாக்கும்?
என்ன பண்றது உங்ககிட்ட வாங்கிக்கலாம்னா, உமக்கே பத்தல…
நான் ஒரு தப்புதான் பண்ணினேன்… உன்னைக் கல்யாணம் முடிச்சது – என்பான். மத்தபடி நான் அறிவாளிதான்!
அப்ப அவ கேள்விக்கு பதில் சொல்லுங்க பின்ன… என்பாள் விடாமல்.
தெக்கத்திக்காராளுக்கு வாய்ச் சவடாலுக்கு வஞ்சனை கிடையாது! இத்தனைக்கும் பள்ளிக்கூடம்போய் பாடம்படித்து வந்த அறிவு அல்ல அது. மண்ணின் சாராம்சம். தாம்பிரவருணி கிளர்த்திய உற்சாக ஊற்று. சதா சிரித்துக் கிடக்கும் உள்மனப் பிரகாசம்.
ஒரு விசயம்டா மாப்ளே. நீ கேள்விப்பட்டியா?
இல்லிங்க நான் கோவில்பட்டி… என்பார்கள் இடக்காக.
தம்பிக்கு சொந்த ஊர் இதா?
நான் அவ்ள பெரியாள் இல்லிங்க, நமக்கு சொந்தமா வீடுதான்!
ஆஸ்பத்திரிக்கு எப்பிடிங்க போவணும்?
வியாதியோடதான்… என்பார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை உவமை யெடுப்பும் பழமொழிகளும் கிண்டல் கேலிகளும் என வீடு சிரிப்பால் நிறைந்து கிடந்தது.
ஜவுளிக்கடை நஷ்டப்பட்டால் தினசரி முதலாளி பட்டுவேட்டி மாட்டித் திரிவான்!… என பழமொழி.
சிவாஜிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. பெரும் எதிர்பார்ப்போ அதிர்ச்சியோ காணாத வாழ்க்கை… அப்படிக்கூட சொல்ல முடியாது. அன்பைப் பிரதானப்படுத்தி, சகஜீவிகளை நேசிக்கிற எளிய வாழ்க்கை.
அண்ணா… என நம்ப கமலா கையைப் பிடித்துக் கொள்கிறது எவ்வளவு மனசொட்டுதலாய் இருக்கிறது. வீட்டுவாசல் பூவரச மரத்தில் ஒரு இலையைக் கிள்ளிச் சுருட்டி ஊதல் செய்துகொடுத்தான். ப்பீப்பீ…. என விடாத சத்தம். என்ன சத்தம் இது – அடிபட்ட பன்னி மாதிரி. வெகு சுவாரஸ்யமாய் ஊதினாள் கமலா. மூச்சை அனுசரித்து, அதில் கீழ்ஸ்தாயி, மேல்ஸ்தாயி எல்லாம் எட்டிப்பிடித்து சினிமாப் பாட்டின் சாயல் காட்டிக் கொடுத்தான்.
ஆச்சர்யம். காலில் செருப்பில்லாமல் ஒருநாள் பள்ளிக்கூடம் போனாள் குழந்தை. இருந்த செருப்பு பிய்ந்து விட்டது. டிரைவர் அண்ணன் ஊரில் இல்லை. அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம்வரை போனான்…. அதுவரை மேல்ச்சட்டை கூட இல்லாமல் திரிந்தவன். தன் காலில் செருப்புக்குக் கவலைப்படாதவன். அதெல்லாம் எட்டாக் கனி என சட்டென மறந்தவன்… குழந்தை வெறுங்காலுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு, பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டுவிட்டு, வரும் வழியில்… அழுதான்!
அழத்தெரியாது எனக்கு – எனக்கு அழுகை வராது, என அதுவரை தனக்குள் நினைத்திருந்தவன்.
அண்ணன் இந்நாட்களில் அவனை மணி மெக்கானிக்கிடம் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தான்.
(தொடர்கிறது)


storysankar@gmail.com

Series Navigation