நீர்வலை (11)

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


சிவாஜி எதிர்பாராத திருப்பம் நடந்தது. நல்ல பேச்சுஅடாவடி இருந்தது அவனிடம். அவனைத் தற்செயலாக முதலாளியின் இரண்டாவது மகன் ரத்னசபாபதி பார்த்தான். படபடவென பைக்கில் வந்து பட்டறை ஆட்களில் ஒருத்தனை உதவிக்கு எனக் கேட்டான். பிரஸ் உதவிக்கு என இருந்தவன் கல்யாணம் என்று ஒரு வாரம் மட்டம். விஷயம் அவசரம். சுத்து வட்ட வேலைகளுக்கு ஆள் கிடையாது.
ஊரில் கல்யாணம் என்றால் அச்சகத்தில் வேலை நெரிசல். இப்ப நம்ம அச்சாபிஸ் ஆளுக்கே கல்யாணம்! மட்டம் போட்டு விட்டான்!
பிரஸ் நபர்கள் ஏனோ இடம் இடமாய் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருநாள் ரெண்டுநாள் என்று மட்டம் போட்டால், அச்சகத்தில் தாக்கு பிடிக்க முடியாத நிலையில், வேறு ஆளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அடுத்த அச்சகத்தில் இருந்து ஆட்களை சுவீகரித்துக் கொள்வது வாடிக்கையாகி விடுகிறது.
அச்சக ஆர்டர்கள் எப்பவுமே பரபரப்பானவை. ஒண்ணுக்கு போல. அவற்றைத் தள்ளிப்போட முடியாது!
கிராமங்களில், பிள்ளையார் கோவிலுக்குப் பிரதிர்ஷ்டை செய்ய, என்று பிள்ளையார் விக்கிரகங்களைத் திருடி, இடம்பெயர்த்து விடுவார்கள். அது என்னவோ அப்பிடி ஒரு சம்பிரதாயம் அந்தக்காலத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதைப்போல, அச்சகக் கதையும்!
வைகறையார் சிவாஜியை அனுப்பிவைத்தார்.
வைகறை அச்சகம் நல்ல பிரதானப் பிரதேசத்தில் இருந்தது.
வைகறைவாசல் அப்படி ஒன்றும் சிறிய ஊர் அல்ல. தமிழ்நாட்டின் தென்கோடி. கடல் பிரதேசம். காலை சூர்யன் உதித்தது அங்கே. சூர்ய உதயம் பார்க்க, என்று வெளிநாட்டுக்காரர்கள் கூட, வந்து குழுமினார்கள்.
ஏன் அவங்க ஊர்ல சூர்யன் கிடையாதாமா…
வீட்ல சீக்கிரம் எழுந்து கொள்ளாமல், பத்தரை பதினொன்று என்று படுக்கையில் பொரண்ட ஆட்களுக்கெல்லாம் இந்த சூர்ய உதயம் சுவாரஸ்யமாய் இருந்தது. வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம நாட்ல எல்லாமே வேடிக்கை. அங்கேர்ந்து வந்து… இருக்கறதை எல்லாம் விட்டுட்டு, குழந்தை சர்ர்ரடிக்கிறதைப் படம் எடுக்கிறாங்கள். ஏன் அவங்க ஊர்ப் பிள்ளைங்க சர்ர் அடிக்காதாமா?…
இல்லாட்டி, பிச்சைக்காரன் வரிசையா கோவிலாண்டை உக்காந்திருப்பான்… அதைப் படம் எடுக்கிறார்கள். வீடியோப்படம். அதற்கு நம்மாட்கள் திருநீறு ஸ்பெசலாப் பூசி பவுடர் அடிச்சி போஸ். சில ஆளுகள் காரியத்தில் கண் – வந்த வெளிநாட்டுக்காரனை, சுரண்டல் லாட்டரி டிக்கெட், என நினைச்சி, சுரண்டிச் சுரண்டி பிச்சை கேட்கிறார்கள்…
ஒரு நம்பர் சுரண்டல் டிக்கெட் போல, பிச்சை கிடைக்கிறதும் அதிர்ஷ்டம் சம்பந்தப்பட் டதுதானே!
வாட்டிஸ் திஸ்…
இதா மாமா, இது திருவோடு…
திசிஸ் நைஸ்… என அதை ஒரு ஃபோட்டோ! இது எங்க கிடைக்கிறது, எல்லாரும் வெச்சிருக்கானுங்களே , என அவனுக்கு ஆச்சர்யம்! உனக்கெதுக்கு இது? நீ வாங்கிட்டுப் போயி, ஊர்ல பிச்சை எடுக்கப் போறியா…
லாரி வேலையைவிட இந்த மிஷின்வேலை, பேப்பரை அழகாக வசம் பார்த்து மடித்து நறுக்கி பைன்டிங் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது. வண்ண வண்ண காகிதங்கள். வண்ண வண்ண அச்சுகள்.
யந்திர யானைக்குட்டியாட்டம் அச்சடிக்கிற மிஷின். மாவுத்தன் சிங்காரம்தான்… ஃபோர்மேன் அண்ணன் தண்டபாணி…
வாடிக்கையாட்கள் நிறைய வந்துகொண்டே இருந்தார்கள். வர்ற ஆள் போற ஆள் எல்லாருக்கும் – தரம் பார்த்து, டீயோ குளிர் பானமோ, வெறும் டம்ளர் தண்ணியோ தந்தான் ரத்னசபாபதி. இவன் எதும் தாராவிட்டால் தரும்வரை பேச்சை நீட்டி, விடாக்கண்டனாக வாங்கி, வாயில் ஊற்றிக்கொண்டு செல்லும் பார்ட்டியின் வருகையும் உண்டு.
ரத்னசபாபதி ஆள் காசில் கெட்டி. அவனிடம் லேசில் காசுதேத்த முடியாது. கணக்கு கணக்கு என்று உயிரை வாங்கி விடுவான். பிளஸ் டூ-வரை பள்ளிக்கூடம் போயிருக்கிறான். அப்புறம் போகவில்லை. கணக்கில் ஐயா அவ்ட். இங்கே கணக்கு பார்த்து பிரயோஜனம் என்ன?
ஆனால் மனுஷன் புகழ்ச்சிக்கு அடிமை.
உங்க தலை அலங்காரம் மகேஷ்கௌதம் மாதிரியே இருக்கு சார்… என்றான் விளையாட்டாக. அவன் எந்த நடிகனைக் கண்டான். அச்சக எதிரில் சுவரில் நோட்டிஸ் ஒட்டாதே எழுத்தின் பக்கத்தில், எதோ பட போஸ்டர். அந்தக் கதாநாயகன் மகேஷ்கௌதம் என்று ஃபோர்மனைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்…
எப்பிடி கரெக்டாக் கண்டு பிடிச்சே?… என்றான் ரத்னம் மகிழ்ச்சியுடன். ranjjini| எனைக் கொஞ்சு நீ – படத்தில் இதே கெடப்லதான் வருவான்! நீ அந்தப்படம் பார்த்திருக்கியா?
சினிமா தியேட்டரே உள்ளேபோய்ப் பார்த்ததில்லை அவன்.
பார்த்தேன். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் படம் பேர் ஞாபகம் வருது, உங்களுக்கு நல்ல ஞாபக சக்திண்ணே, (டீ மாட்டுமா?) என்றான் சிவாஜி. அதே படம்தான்.
எலேய், மொதலாளியவே கவுத்திட்டியேடா – என்கிறார் ஃபோர்மேன் தண்டபாணி.
அடுத்த படத்துல மகேஷ்கௌதம் முழு மொட்டையா வர்றாப்டி… இவரையும் கெட் அப்பை மாத்திக்கச் சொல்லு.
உமக்கு வேலை கொடுத்திட்டாரில்ல… மாத்திற வேண்டிதான்! – என்றான் சிவாஜி.
இவனது கலகலப்பும் சுறுசுறுப்பும் ரத்னசபாபதிக்குப் பிடித்து விட்டது. உதவி ஒத்தாசைக்கு என, இவனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்வதாக அப்பாவிடம் சொல்லிவிட்டான்.
ரத்னசபாபதியும் இவனுமாய் ஒரு படம் போனார்களே. மகேஷ்கௌதம் படம் என்று தனியே வியாக்கியானம் வேண்டியதில்லை. ஒழுங்கா நடந்து வர்றாளுகள் பாட்டு வரும்போது தண்டு ஒடிஞ்சாப்போல என்னமோ ஆகிப் போகிறார்கள். காலைக் காலைத் தூக்கி வீசுகிறார்கள். எலேய் ஷூ பர்றந்திறப் போவுதுடா… பூ எங்காவது பூத்திறப்டாது. பக்கத்தில் நின்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு காலை சகதியை உதறுகிறாப் போல தட்டித் தட்டி – ஓ அது டான்ஸ் ஸ்டெப். பொம்பளையாள் இப்படி தண்ணிக் குடம் எடுத்து வரும். பலூன்காரனிடம் வேலை மெனக்கிட்டு ஏகப் பட்ட பலூன் வாங்கி – ஆச்சர்யம் பறக்க விட்டு விடுகிறார்கள். அதற்கு வாங்குவானேன்?
ஒரு சின்னப் பையன் தெருவில் நடந்து போகிறான். திடீர்னு அவன்மேல சக்கரம் உருளுது. சர்த்தான், விபத்தாகி செத்தே போனானே பாவி, என்று பார்த்தால் பெரியாள் ஒருத் தனைக் காட்டுகிறார்கள்…
அவனேதான் இவன். பெரியாளாயிட்டான். சிம்பாலிக் ஷாட், என்று சிரிக்கிறான் ரத்னசபாபதி.
என்னத்தை சிம்பாலிக்… அப்ப ஒராள் செத்துப்போனா, தென்னை ஓலை விழறாப்ல கூட காட்டுவாங்களா? ஒரு பீடிக் கம்பெனி படத்துல பார்த்தேன்.
ஆமாம்!
ஐய, அந்தாள் தென்னை மரத்துல ஓலையை வெட்ட ஏறினப்ப கீழே விழுந்து செத்தான்னு நான் நினைச்சேன்… என்றான் சிவாஜி.
ஒரு பக்கம் காசு காசு எனக் கணக்கு பார்க்கிற ஆள். இந்த மாதிரி சினிமா பந்தாக்களுக்குச் செலவழிப்பான் போல.
நீலா என் நிலா – படத்தை மாத்திரம் பத்து தரம் பார்த்தானாம். சும்மா கிண்டலுக்கு, ஏண்ணே அதில் மகேஷ்கௌதம் பிரஸ்காரனா வர்றானான்னு கேட்டா…
அட – ஆமாம்னு தலையாட்டுறான்!
அண்ணே சட்டையை இன் பண்ணிக்கங்க. உங்களுக்கு அம்சமாய் இருக்கும்.
மறுநாள் வந்து ”நல்லா இருக்கா?” என்று நிற்கிறான் ரத்னசபாபதி. அவன் முதுகுப் பக்கம் இருந்து ஃபோர்மேன் சிரிக்கிறார்.
ஏலேய் கூடிய சீக்கிரம் அவனைப் பைத்தியமாக்கிருவ போலுக்கே… என்கிறார்.
கூடிய சீக்கிரம் என்ன… இப்பவே! – என்கிறான் சிவாஜி.
முன்னைப்போல் இந்த வேலை கடுமையானதாய் இல்லை. சைக்கிள் இப்போது வெகு உபயோகம். நாலுஇடம் வெளியிடம் போய்வர வேண்டியிருந்தது. இந்தப் பணத்தை பாங்கில் போடு… என சலான் எழுதி பணமும் தருவான். பேப்பர்கடைக்குப் போய் பேப்பர் வாங்கிவரச் சொல்வான். கல்யாண முகூர்த்தப் பத்திரிகைக் காகிதம்… ஒருபக்கம் மஞ்சள் ஒருபக்கம் குங்கும வண்ணம், என ஐதிக வண்ணங்கள். மஞ்சள்த் தாளில் கருப்பு எழுத்துகள் அடிக்க, பச்சை வண்ணம் வந்தது. ஆச்சர்யம்!
வெத்திலை பச்சை. சுண்ணாம்பு வெள்ளை… இரண்டையும் மடக்கி வாய்ல போட்டா, வர்ற வர்ணம்?
சிவப்பு!… அதைப் போலத்தான் இது!
அச்சிட்டவற்றை டெலிவரி கொடுக்கவும் அவன் போகவேண்டும். விதவிதமான அனுபவங்கள். அச்சடிக்க வந்த வேலைகளும் எத்தனையோ ரகம். இயேசுவை நம்பு… ஆட்டோ காணவில்லை. நாய் படம் போட்டு, நாய் காணவில்லை, என்றுகூட வந்தது. காணவில்லை என்று சொல்லி படம் போடுகிறார்கள். காணவில்லை என்றால், படம் எப்படி எடுத்தார்கள் தெரியவில்லை!…
சில நல்ல வாசகங்களே அச்சுப் பிழையில் நாராசமாகி விடுகின்றன. பம்பு பாம்பாகி விடுகிறது…
கண்ணீர் அஞ்சலி. நீத்தார் காரிய அறிவிப்பு. பிறந்தநாள்… கல்யாணம்… என வைபவ சிறப்பு அழைப்புகள். ஒரு கல்யாணம் பத்திரிகை அடிக்க வந்திருந்தது. அந்தப் பெண் அவளது காதலனைப் புறக்கணித்து வேறு மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டுகிறாள்… அவன் தற்கொலை செய்து கொண்டான். காதலி கல்யாணப் பத்திரிகை மை காயவும், கண்ணீர் அஞ்சலி பத்திரிகையும் அங்கே அச்சானது…
வெளிநாடு போகிறதுக்கு… டாட்டா டாட்டா! நன்றி நன்றி – என நாய் வாலாட்டும் படம் போட்ட சுவரொட்டிகள். புதியகடை திறப்பு விழா… அமைச்சர் – பிரமுகர் என யாரும் வந்தால் வருக வருக – அது வேறு.
இப்போது எல்லாத்துக்கும் போஸ்டர் அடிக்கிறார்கள். இனி வந்துவிட்டுப் போகும்போது போங்க, போங்க – போஸ்டர்கள் வரலாம்!
ஃபோர்மேன் அண்ணே, நம்ம முதலாளி பிறந்தநாளுக்கு, நாம ஒரு போஸ்டர் அடிச்சிருவம்!
வெளிநாடு சென்றுதிரும்பும் பிரமுகர்கள், என்று வரவேற்பு போஸ்டர்கள். விமானம் ஓட்டற ஆள் எத்தனை தரம் போயிட்டு வரான்… அவனை வரவேற்க ஆள் கிடையாது!
சங்கங்கள் மாபெரும் கண்டனப் பேரணி. தார்ணா… என அச்சிட அடிக்கடி வருவார்கள். சிலாளுகள் சும்மா உட்கார்ந்திருந்தாக் கூட காலை ஆட்டிட்டே கிடப்பான். அதைப்போல இவர்கள், சும்மாவாச்சும் எதாவது நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டு பக்கம் விநியோகிக்கப்படும் நோட்டிஸ்களில் அவனவன் பஜ்ஜி எண்ணெயைத் துடைக்கிறான்… அவர்களுக்கு சிவப்புமையில் அத்தனை இஷ்டம். ஏன் சிவப்பு மை தெரியவில்லை. ஒருவேளை, வாத்தியார் பேப்பர் திருத்தும் மை சிவப்பு மை. இவர்கள் சமுதாயத்தைத் திருத்துகிறார்கள் அல்லவா?
முதலாளிகள்தான் சிவப்புத் தோல்காரர்கள். தொழிலாளிகள் வண்ணம் கறுப்பே!…
போஸ்டர் அடிக்க காசு குறைவாய் இருக்கிறது, என்று சின்னதாய் அடிக்கச் சொல்வார்கள். அதில் /மாபெரும் தார்ணா!/
ஒருநாள் ஒரு தொழிற்சங்க நோட்டிஸ் தந்துவிட்டு, எங்க முதலாளி சரியா சம்பளம் தர மாட்டேங்கறாருங்க, என்றான்.
நோட்டிஸ் பெற்றுக் கொண்டவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்…
எனக்குச் சம்பளம் தரணும். நீங்க பாக்கி வைக்காம பில்லைக் குடுங்க… என்றான் சிவாஜி.
வைகறைவாசல் வித்தியாசமான ஊர். ஊரில் என்னமாவது பரபரப்பாக நடந்து கொண்டேயிருந்தது. பஜார்ப்பக்க நாய்களே பரபரப்பாகத் திரிந்தன. லாரிப் பட்டறை ஒதுக்குப் புறம். ஆனால் அச்சகம் நல்ல சென்டர். அதே தெருவில் மூலையில் நடுவீதியை மறைத்து அரசியல் கட்சிகள் பந்தல் போட்டு பொதுக்கூட்டம் நடத்தின. தெரு விளக்குக் கம்பத்தில் இருந்து திருட்டு மின்சாரம் எடுத்து கூட்டம். விழாவில் கலந்துகொண்டவர் யார் தெரியுமா? அப்பத்திய மின்வாரியத் துறை அமைச்சர்!
மனுஷர் கண்டுக்கவே யில்லை!
மைக் இருந்தும், இந்த அரசியல் பேச்சாளர்கள் கத்து கத்தென்று கத்துகிறார்கள். அவர் கள் பேச்சில் பாலும் தேனும் ஓடியது… தெருவில்? மூச்சாதான் ஓரங்களில் இருந்து ஒடுகிறது.
ஒருமுறை வைகறையார் கூட அந்தத் திடலில் பேசினார். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக ஆவேசப் பட்டார். அவர் வண்டி எதும் செக் போஸ்டில் மாட்டியிருக்கலாம்.
அத்தான் தேர்தலில் போட்டியிடும், போட்டியிட்டுத் தோற்றுப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை – என்று தோன்றியது!
(தொ ட ர் கி ற து)

Series Navigation