‘நினைவுக் கோலங்கள்’ புத்தக விமர்சனம்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

கே.எஸ்.சுதாகர்


நாடறிந்த எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி. தற்போது அவுஸ்திரேலியாவில் மெல்பர்ண் நகரில் வசிக்கின்றார். பதினெட்டுப் புத்தகங்களிற்குச் சொந்தக்காரர். அவர் ‘சுமையின் பங்காளிகள்’ சிறுகதைத்தொகுப்பிற்கு 1976 இலும் ‘பறவைகள்’ நாவலிற்கு 2002 இலும் ‘இலங்கை சாஹித்திய விருது’ பெற்றவர்.

நினைவுக் கோலங்கள் திரு. லெ. முருகபூபதியின் ஆறாவது சிறுகதைத்தொகுப்பு. தமது வாழ்வின் அனுபவங்களை சுவைபடக்கூறும், சுயசரிதைப் பாங்கிலான சிறுகதைத்தொகுப்பு. கதைகள் நீர்கொழும்பு எனும் நெய்தல் நிலத்தைச் சுற்றி வருகின்றன. இந்தக்கதைகளை வாசிக்கும்போது நாங்களும் எமது இளமைக்காலங்களிற்கு பயணிக்கின்றோம்.

முன்னுரையில் நீர்கொழும்பிற்கு ஏன் ‘மீகமுவ’ என்ற சிங்களப்பெயரும், ‘Negombo’ என்ற ஆங்கிலப் பெயரும் வந்ததென குறிப்பிடும் ஆசிரியர் – அதற்கு ஏன் ‘நீர்கொழும்பு’ என்ற பெயர் வந்ததற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. மொத்தம் பதின்னான்கு கதைகள். சம்பவங்கள் யாவும் சுவையாக ஒரு ஒழுங்கு முறையில் கால வரிசைப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளன.

‘பிரமை’ எனும் கதை அவரது தாத்தாவைப் பற்றியது. தாத்தா இறந்த பிற்பாடும், அதிகாலையில் அந்த ஜன்னலில் கைத்தடியால் அவர் தட்டும் ஓசை கேட்கிறது. அது எங்களையும் பிரமைக்குள்ளாக்குகின்றது.

முருகபூபதியின் முதல் சிறுகதை ‘கனவுகள் ஆயிரம்’ மல்லிகையில் பிரசுரமானது. அந்தக் கதையின் நாயகி ‘மேரி’யின் தொடர்ச்சியான கதைதான் ‘முதிர்கன்னி’. மிகவும் உருக்கமான கதை. ‘கனவுகள் ஆயிரம்’ கதையில் ஆசிரியர் மேரிக்கு என்ன முடிவைக் கொடுத்தாரோ, அதையே முப்பது வருஷங்கள் கழிந்தபின்னும் நிஜத்திலும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும் மேரிக்கு என்ன குறை? ஏன் அவளிற்கு திருமணம் நடக்கவில்லை? வறுமைதான் காரணம் என்றால் அவளின் தங்கைக்கு கலியாணம் நடந்திருக்கின்றதே! கதையில் சொல்லப்படவில்லை.

‘பயிர்’ பாட்டியின் வளர்ப்பு மகனான நீதிராஜா பற்றியது. கஞ்சா செடி வளர்க்கின்றார். கஞ்சா அடிக்கின்றார். செத்துப் பிழைத்து மீண்டும் வருகின்றார். பாட்டிக்கு தான்தான் கொள்ளி வைப்பேன் என அடம் பிடிக்கும் அவர், கடைசியில் பாட்டி செத்தபோது வராமலேயே எங்கோ போய் விடுகின்றார். அவரின் முடிவு என்னவென்று தெரியவில்லை. தொடரும் கதை இது.

பாடசாலையில் படிக்கும் காலத்தில் ‘தாத்தா செத்துப் போனார்’ என்று பொய் சொல்லுவதும், பின்பு பிடிபடுவதும் பற்றியதான கதை ‘பொய்’. செய்வினை – சூனியத்திலிருந்து விமோசனம் பெற்றுத்தருகின்றேன் எனக்கூறி உள்ளதையும் சுருட்டிக் கொண்டு செல்லும் ஆசாமி பற்றிக் கூறுகின்றது ‘இழப்பு’ என்ற கதை.

அடையாளம் தனது பால்ய சிநேகிதி பிரேமாவைப் பற்றிச் சொல்வதால் எமது இளமைக்காலத்து நினைவுகளையும் சற்றே கிளறிவிடுகின்றது. ‘பட்டாசு’ வேலை வெட்டியில்லாமல் விசமத்தனம் புரியும் ஒருவனைப் பற்றிய கதை.

எவருடன் பழக நேர்ந்தாலும் உதட்டால் உறவாடாமல் உள்ளத்தால் நேசிக்கும் இயல்பில் இன்பமும் உண்டு – துன்பமும் உண்டு. இயல்புகள் இலகுவில் மாறுவதில்லை என்கின்றது ‘இயல்பு ‘ சிறுகதை. உண்மைதான்! சிலரது இயல்புகள் என்னதான் குடி முழுகிப் போனாலும் மாறுவதில்லை.

பருவம், போனால் திரும்ப வராது. அந்தந்தப் பருவத்தில் செய்யவேண்டியதைச் செய்கின்றது பருவம். பருவம் படும் பாட்டைச் சொல்கின்றது ‘பருவம்’ சிறுகதை.

‘பரவசம்’ மேலிட வைக்கின்றது, முருகபக்தையான பாட்டி ஸ்ரீவள்ளி படம் பார்க்கப்போன சம்பவம். முதன்முதலாக சைக்கிள் ஓடப் பழகுவது பறவைக்குஞ்சொன்றின் முதற்பறப்பைப் போன்றது. இதைச் சொல்கிறது ‘வர்க்கம்’. குழந்தையைக் காப்பாற்ற எடுக்கும் மனிதாபிமானம் ‘மழை’யில் சுவையாகப் பரிமளிக்கின்றது.

‘அகலப் பாதையில்’ தொகுப்பிலுள்ள இறுதிக்கதை. மல்லிகையில் இடம்பெற்ற இந்தக் கதை தவிர்ந்த ஏனைய கதைகள் யாவும் இந்தத் தொகுப்புக்கென்றே எழுதப்பட்டவை. ‘அகலப் பாதையில்’ தொகுதியிலுள்ள ஏனைய கதைகளுடன் பார்க்கும்போது ஒத்துப் போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதைத் தவிர்த்திருக்கலாம்.

தான் சந்தித்த மனிதர்களையும் அவர்தம் நினைவுகளையும் சுவைபடப் பதிவு செய்யும் இவர், நீர்கொழும்பு என்ற இடத்தை அதன் இயற்கை அழகை இன்னும் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. சிறுகதையில் குறியீடுகள் ஏற்படுத்தும் தாக்கம் அளவிடற்கரியது. இந்தத் தொகுதியில் இடம்பெறும் “… …. …..” என்ற குறியீடுகளின் பொருள் என்ன? ‘ஏற்கனவே வெளியான கதைத்தொகுதிகளிலிருந்து இக்கதைத்தொகுதி சற்று வேறுபட்டது’ என்று முன்னுரையிலேயே ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த வேறுபட்ட தொகுதியில் இந்தக் குறியீடுகள் உணர்த்தும் செய்திதான் என்ன என்று புரியவில்லை. நினைவுக் கோலங்களில் இவற்றை நிறையவே காணலாம்.

கோட்டுக்குள் அடங்கியவை கோலங்கள். இது நினைவுக் கோலங்கள். எண்ணப்பறவை தன் கால்களை அகல விரிக்கின்றது. சுவையான பல நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கிறது. அருமையான சிறுகதைத்தொகுதி.


kssutha@optusnet.com.au

Series Navigation

கே.எஸ்.சுதாகர்

கே.எஸ்.சுதாகர்