நினைவுகளின் தடத்தில் – (31)

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

வெங்கட் சாமிநாதன்


அந்த டவுன் ஹைஸ்கூலில் தான் தி.ஜானகிராமன் ஆசிரியராக வேலை பார்த்தார். அப்போது அவர் அங்கு வேலை பார்த்தாரா என்பது எனக்குத் தெரியாது. அவரையே நான் பின்னால் தான் தெரிந்து கொள்ள இருந்தேன். டவுன் ஹைஸ்கூலில் அவரிடம் படித்த மாணவராக தன்னை தி.ஜானகிராமனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார் இந்திரா பார்த்த சாரதி. இது தி.ஜானகிராமன் தில்லி வானொலி நிலையத்திற்கு சென்னையிலிருந்து இட மாற்றலாகி வந்த புதிதில். 1947-48 ல் அவர் அங்கு ஆசிரியராக இருந்திருக்கக் கூடும்.

கும்பகோணம் மண்ணில் அடியெடுத்து வைத்தாலே, இப்போதெல்லாம் ஜானகிராமன் நினைவு வராமல் போகாது. அவரது மிகச் சிறந்த சிருஷ்டி, magnum opus, மோகமுள் கும்பகோணத்தைத் தான் மையமாகக் கொண்டிருக்கிறது. நான் தாற்காலிகமாக படிப்பதற்காக குடி வந்த இடம் மகாமகம் மேற்குத் தெரு. தினம் அந்தக் குளத்தைத் தான் தரிசனம் செய்துகொண்டிருந்தேன். அந்த குளத்தின் மகாத்மியத்தோடு தான் மோகமுள்ளே தொடங்குகிறது.

“அன்யே தேசே க்ருதம் பாபம் வாரணாச்யாம் விநச்யதி
வாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி”

உலகத்திலே எந்த மூலையிலே செய்யற பாபம் எல்லாம் காசிக்குப் போய் முழுகினால் தீர்ந்துடும். காசிலே செய்த பாபம் போக கும்பகோணம் போய் முழுக்குப் போடணும். ஆனால் கும்பகோணத்திலே பண்ற பாபங்களுக்கு வேறு எங்கும் போய் அலைய வேண்டாம். கும்பகோணத்திலேயே அதுக்கு விமோசனம் என்று இதற்கு வெத்திலை போட வந்தவர் பாஷ்யம் சொல்ல, வெத்திலைக் கடைக்காரர், “இந்த மகா மகக் கும்பிலேயா?” என்று கேட்கிறான்.

மகா மகக் குளம் கும்பியாகத் தான் நிரம்பி யிருந்தது. பச்சைப் பசேலென்று. பாசி பிடித்து. அதில் யாரும் குளித்துப் பார்த்ததில்லை. 12 வருஷத்திற்கொரு தடவை அந்த பாசியை இறைத்துக் கொட்டி, புதிதாக லாரிகளில் நீர் நிரப்பித் தான் குளியல் நடக்கும் என்பார்கள். நான் ஒரு தடவை கூட அந்தக் காட்சியைக் கண்டதில்லை. 1948-லேயே அது பாசி பிடித்த குளமாக இருந்தது என்றால் அது ஆச்சரியம் தான். உடையாளூரில் சிவன் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள் அடுத்தடுத்து. ஒன்று மாடு கன்று குளிப்பாட்ட. மற்றது மனிதர்கள் குளிக்க. அந்த நாளில் அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். உடையாளுரிலிருந்து ஒரு ·பர்லாங் தூரத்தில் ஓடும் ஆற்றில் நான் குளித்திருக்கிறேன். படி இறங்கினால் மீன்கள் கடிக்கத் தொடங்கிவிடும். அதற்குப் பழக்கப் படுத்திக்கொள்ளவேண்டும். ஆற்று நீர் சுத்தமாகத் தான் இருந்தது. ஊரில் எல்லோரும் காவேரி என்று தான் சொல்வார்கள். ஆற்றில் தண்ணீர் வரும் நாட்களில் விடி காலையில் எழுந்து காவேரிக்குப் போய் குளித்துவிட்டு தண்ணீர் நிரப்பிய குடத்தில் இடுப்பில் வைத்துக்கொண்டு ஈரப் புடவையோடு வருவார்கள். ஆண்களும் ஈர வேட்டியோடு ஜபத்தை முணுமுணுத்துக்கொண்டே வருவதைப் பார்க்கலாம். அது ஒரு ரம்மியமான காட்சி. கடந்த ஒரு கால கட்டத்தை அடியாளப்படுத்தும் காட்சியது.

அந்தக் காலத்திலேயே மகா மகக் குளம் அப்படித் தான் இருந்தது என்றாலும், கும்பகோணத்தை அப்போதைய கால கட்டத்தில் நினைத்துப் பார்க்கும் போது, அதுவும் ஒரு விதத்தில் ரம்மியமாகத் தான் இருக்கிறது. “கும்மாணம் கைச்சீவல், ரவா தோசை, தேங்காய் சட்னி, பட்டுப் புடவை, பேச்சிலே கெட்டிக்காரத்தனம், ராமசாமி கோயில் தூண் சிற்பங்கள்” என்று வெத்திலைக் கடையில் கும்பகோணம் மகாத்மியம் பற்றி வாதாடுகிறவர் சொல்லிக்கொண்டே போகிறார். நம்மை முகம் சுளிக்க வைக்கும் விஷயங்களும் உண்டு. வியந்து மயங்க வைக்கும் விஷயங்களும் உண்டு தான். அந்தந்த சமயத்து அனுபவத்தைப் பொருத்தது. தினம் காலையில் பள்ளிக்கூடத்துக்கு உடையாளூரிலிருந்து வயல் வரப்புகளின் மீது நடந்து வரும்போது தூரத்திலிருந்தே கும்பகோணத்தின் கோயில் கோபுரங்கள் நம்மை அழைக்கும் தோற்றம் ஒரு வசீகரம். இப்போது ஒரு அரை நூற்றாண்டு காலம் கழிந்த பிறகும் அதை நினைத்துப் பார்க்கும் போது ஐந்தரை மைல் நடந்தது ஒரு சிரமாக நொந்து கொண்டதில்லை நான். அதுவும் சுகமான காரியமாகத் தான் எனக்கு இருந்தது. வானைத் தொட முயலும் அல்லது நம் கண்களுக்கு வானைச் சுட்டி உயரும் கோபுரங்கள் எனக்கு என்றும் ஒரு வசீகரமான காட்சி தான். இன்றும். ஒரு இடத்தில் கழித்த அனுபவங்களின் குணத்தை அந்த இடமும் பெற்று விடுகிறதோ என்னவோ. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்” படித்த என் நண்பர்கள் பலர், “கும்பகோணம் போய் பார்க்கணும்டாலே, ஏண்டா எல்லாரும் ஜமுனாக்களா இருப்பாங்களோ அந்த ஊர்லே” என்று கண்கள் மலர் வியப்போடு கேட்பார்கள். அது ஜானகி ராமன் கண்ட கும்பகோணம். ஜமுனா இருந்த துக்காம்பாளயத் தெரு ஒரு இடுங்கின இரு புறமும் நீண்ட பலகட்டுகள் கொண்ட வீடுகள் நிறைந்த தெரு. தெருவா, சந்தா என்பது நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டியது. ஒன்றிரண்டு வீடுகளுக்குள் போய்ப் பார்த்திருக்கிறேன். ஜானகிராமன் ஜமுனாவின் வீட்டை வர்ணித்தது போலத் தான் இருக்கும். அவை ஒரு நாகரீகத்தின் பாரம்பரியத்தின், சொத்து, அடையாளங்கள் என பராமரிக்கப்பட வேண்டும். நம் பழங்கால கட்டிடத் தொழில் நுட்பத்தின் சாட்சியங்கள். சுற்றுப்புறத்திற்கேற்ப வாழ, கட்டிடம் கட்டிக்கொள்ள நாம் கற்று அழகாக வாழ்ந்ததன் அடையாளங்கள். கோடையில் எத்தனை சுட்டிரிக்கும் பகலிலும் உள்ளே வெப்பமோ புழுக்கமோ இராது. நான் இருந்த காலத்தில் உடையாளூரில் மின் இணைப்பு இருந்ததில்லை. எந்தக் கோடையிலும் வீட்டினுள் மின் விசிறியின் தேவையை நாங்கள் உணர்ந்தது கிடையாது. ஜமுனா இருந்தது போன்ற வீடுகள் அழகானவை. வாழ சுகம் தருபவை. ஆனால் கும்பகோணத்தில் ஒரு ஜமுனாவைத் தேடினால் ஏமாறத் தான் வேண்டியிருக்கும். அது ஜானகிராமனின் எழுத்து தந்த கொடை. எது எப்படியாக இருந்தாலும், ஜானகிராமனின் பாத்திரங்கள் நடமாடிய தெருக்களைப் பார்க்கலாம். பார்க்கப் போனால், கடைசியில் மோகமுள்ளே ஜானகிராமனது சுய சரிதையின் சில கூறுகளிலிருந்து எழுந்தது தானே. அங்கு நாமும் நடந்து மோகமுள்ளின் காட்சிகள் தரும் சுகத்தில் ஆழலாம். இப்போதும் துக்காம் பாளையத் தெருவும் சரி, பக்த புரி அக்ரஹாரமும் சரி, வெளித்தோற்றத்திலும், உள்கட்டமைப்பிலும் இந்த ஐம்பது வருஷங்களில் அதிகம் ஒன்றும் மாறியிராது. அதிகம் மின் இணைப்பும் அது கொண்டுவரும் சில சிறிய மாற்றங்களைத் தவிர. அவை அமைப்பின், வெளித் தோற்றத்தின் மாற்றங்கள் அல்ல.

ஜானகி ராமன் என்ன? உ.வே. சா வாழ்ந்து மறைந்து போன தமிழ்க் காப்பியங்களுக்கு புனர்வாழ்வு தந்த பக்தபுரி அக்ரஹாரம் கற்பனை வாழ்வை அல்ல நடந்து முடிந்த ஒரு காலத்தை நமக்கு நினைவின் முன் நிறுத்தும். அவர் தமிழாசிரியராக இருந்த கல்லூரியே ஒரு அழகு. காவேரியின் மற்ற கரையில். இடையில் ஒரு பாலம். மாணவர்கள் படகு ஓட்டிக்கொண்டிருந்ததையும் அந்நாட்களில் நான் பார்த்திருக்கிறேன். இக்கரையில் பக்த புரி அக்கிரஹாரம் நீளும். முதலில் ஒரு சின்ன வீ ட்டில், 15′ அடி அகலம் 40’ அடி நீளம் கொண்ட ஒரு சின்ன வீடு. மூன்றரை ரூபாய் வாடகை. பின்னர் அவர் ஆராய்ச்சிகள் பெருக, ஒரு பெரிய வீடு தேவைப்படுகிறது. அதே தெருவில் இன்னொரு வீடு. அந்த வீடுகளை இப்போது அடையாளம் காண முடியுமா தெரியாது. அப்போது நான் உ.வே.சா. பற்றி அறிந்தவனில்லை. நான் படித்த பாணாதுரை ஹைஸ்கூலின் ஹெட் மாஸ்டருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த ஏ. ராஜகோபலய்யங்கார் அங்கு தான் குடியிருந்தார். அந்த தெருவில் ஊரின் பெரிய மனிதர்கள் குடியிருந்தார்கள். என் கண்ணில் வக்கீல்கள் தான் அதிகம் தென்பட்டனர். காரணம், பக்த புரி அக்கிரஹாரத்தின் ஒரு முனை காலேஜுக்கு இட்டுச் செல்லும். மறு முனை கும்பகோணம் கோர்ட்டுகள் இருந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். உ.வே. சா.வின் தகப்பனார், காலேஜுக்குப் போவதற்கு சௌகரியமாக இருக்கட்டும் என்று தான் பக்த புரி அக்கிரஹாரம் பக்கத்தில் என்று அங்கு வீடு வாடகைக்கு எடுத்தார். இது 1890-ம் வருட ஆரம்பம். சென்னைப் பல்கலைக் கழகம் அழைக்கும் வரை அவரது வாசம் அங்குதான் தொடர்ந்தது. கும்பகோணம் கோர்ட்டில் திருவாடுதுறை ஆதீனம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று ஆதீனத்துக்கு சாதகமாக தீர்ப்பு ஆனதைச் சொல்ல ஆதீனத்தின் ஆள் ஒருவன் கோர்ட்டிலிருந்து ஓடோடி வந்து காவிரியை நீந்திக் கடந்து செல்வதை, தான் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாகப் பார்த்ததை ஆதீனத்திடம் உ.வே.சா. சொல்லி, அவனுக்கு ஆதீனத்திடமிருந்து முன்னர் கிடைக்காத சன்மானத்தை வாங்கித் தந்தது பற்றி உ.வே. சா தன் என் வரலாற்றில் சொல்கிறார்.

உ.வே.சா. என் வரலாறு என்றெல்லாம் கும்பகோணத்தின் சந்தர்ப்பத்தில் பேசும்போது, இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. நினைவுக்குவரும் காரணத்தால் சொல்கிறேன். சொல்வது சரிதானா என்று சரி பார்ப்பதற்கு இப்போது நம் காலத்தில் இன்னொரு உவே.சா. இல்லை. கும்பகோணம் காந்தி பார்க் எதிரில் ஒரு பழைய கட்டிடம் உண்டு. அதை டவுன் ஹால் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். டவுன் ஹால் என்றால் அப்படி ஒரு தோற்றம் கொண்ட கட்டிடம் தான். நான் உள்ளே சென்று பார்த்ததில்லை. பல பெரியவர்கள் சாயந்திர வேலைகளில் அங்கு போவதையும் சிலர் மேஜையைச் சுற்றி பேசிக்கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறேன். இதெல்லாம் போக, மிக் முக்கியமான விஷயம், கோபால் ராவ் லைப்ரரி என்றும் ஒரு போர்டு அங்கு பார்த்த நினைவு. “இவர்கள் எல்லாம் யாரு? இங்கே என்ன நடக்குது?” என்று பேச்சு வாக்கில் என் பள்ளி நண்பர்களைக் கேட்டதுண்டு. “அவங்கள்ளாம் பெரிய மனுஷங்கடா. ஈவெனிங் வந்து இங்கே சீட்டாடுவாங்க” என்று ஒரு நண்பன் சோல்லக் கேட்டிருக்கிறேன். சரி, ஆனால் உ.வே.சா இங்கு எதற்காக வருகிறார்? உ.வே.சா தன் ‘என் வரலாறு” புத்தகத்தில் 1882 லோ என்னவோ அவர் தமிழாசிரியாக இருந்த கும்பகோணம் கல்லூரி முதல்வர் (Principal) கோபால் ராவுக்கு மாற்றலாகி சென்னை ப்ரெசிடென்ஸி காலேஜில் சேர இருக்கிறார் என்று அவரைப் பிரியும் துக்கத்தோடு சொல்லிச் செல்கிறார். அதற்கு முன் கும்பகோணம் என்னும் நகரத்திற்கு, நகரத்தின் பெரிய மனிதர்கள் மாலை நேரங்களில் கூடிப் பேசத் தக்க ஒரு நகர மண்டபம் இல்லையே என எண்ணி அதற்கான நிலம் வாங்கி கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அன்றைய முதல்வரான கோபால் ராவ், முன்னாள் முதல்வரான போர்ட்டர் துரையின் பெயரில் அந்த நகர மண்டபம் இருக்கவேண்டும் என்று சொல்கிறார். கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருமே கோபால் ராவை மிகப் பெரிய ஸ்தானத்தில் வைத்து மரியாதை செய்தனர். பள்ளி ஆசிரியர்களிலே தலைமை ஆசிரியர் என்ற ரகம் இல்லை அந்த ஸ்தானம். கோபால் ராவ் நிறைந்த படிப்பாளி. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். ஆக ஒருவேளை அன்று அவர்கள் கலந்து பேசி உருவாக்க முயன்ற டவுன் ஹால் அது தானோ, ஒரு வேளை அதில் அமைந்த லைப்ரரிக்கு கோபால் ராவின் பெயரைச் சூட்டியுள்ளார்களோ என்று ஒரு எண்ணம். எப்படி ஒரு கல்லூரி ப்ரின்ஸிபல் என்று இன்று நாம் எண்னக்கூடும் ஒரு மனிதரின் பெயரும் பெருமையும் அவர் நினைக்காமலேயே அன்றும் இன்றும் தம் நிலை பெற்றுவிடுகிறது என்று நான் ஆச்சரியப்பட்டுப் போகிறேன்.

வெங்கட் சாமிநாதன்

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்