நான் நானில்லை

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

கஜன்


——————————

என்னைப் பெற்ற உயர்ந்தவர்கள்
. . . இயலாக் காலம் சந்திக்க
நன்மை நோக்கி நான்வந்தேன்
. . .நல்ல கனடா இதுவென்று
துன்பம் தரும் நினைவுகளும்
. . .தொடர்ந்து வருதே நிழலாக
என்னைக் கொல்லும் எண்ணங்களில்
. . .இன்று நானா க நானில்லை – (1

கல்வி கற்ற காலத்தில்
. . . @களவு செய்தான் உற்றநண்பன்
சொல்ல முடியா நிலையினிலே
. . . சோர்ந்து போனேன் அன்நாளில்
நல்ல நண்பன் நானென்றால்
. . . நயமாய் உரைக்க வேண்டுமன்றோ
அல்லல் தருமே ஞாபகங்கள்
. . .அதனால் நானக நானில்லை – (2

உறவுக் கார மங்கைக்கும்
. . . ஊரில் தெரிந்த பையனுக்கும்
உறவால் நடந்த &பேச்சுக்கால்
. . . ஒழிந்து போனது பெண்வீட்டால்
முறிந்து போன சம்பவத்தில்
. . . மொத்தக் குற்றம் எனதாம்மென்(று)
அறிந்த கணத்தில் அண்டத்தில்
. . . அன்று நானாக நானில்லை – (3

வந்து சேர்ந்த வேலையிலே
. . . வைத்த கடமைப் போக்கினிலே
சந்தைப் படுத்தும் மென்பொருளைச்
. . . சற்றே திரித்து விளக்குவதும்
~**அந்த காரக் கொள்வனவை
. . . அங்கே உரைக்க முடியாமல்
நொந்து வாடும் எனதுமன
. . . நிலையில் நானோ நானில்லை – (4

இல்லை என்பார் நிர்வாகி
. . .இருந்து கொண்டே சொல்லிடுவார்
தொல்லை யான தொலைபேசல்
. . . தொழிலில் அங்கே வந்துவிட்டால்
பொல்லாச் செய்கை கைக்கொண்டுப்
. . . பொய்யும் பேசச் சொல்லிடுவார்
நல்ல குணமும் மாறும் இன்
. . . நாட்டில் நானோ நானில்லை – (5

இனங்கள் பலவாம் இன்நாட்டில்
. . . இதனால் இன்னல் அடைந்தவனாய்
தினமும் என்னைத் தொலைத்தபடி
. . . தீராச் சோகம் கொண்டபடி
எனக்குள் ஒருவன் அழுகின்றான்
. . . இதயம் இழந்து தவிகின்றான்
வனமாய் மாறும் மேல்நாட்டு
. . . வாழ்வில் அவனோ அவனில்லை – (6

——————————————————

* கவிநாணல் பேராசிரியர் அ.சீ.ரா பிறந்த தினம்
@ நூலகத்தில் நூலொன்றில் தேவையான பக்கங்களைக் கிழித்த செய்கை
& சம்பந்தம் பேசுதல்
** பிழைகள் முற்றாக சோதிக்கப் படாத நிலையில் மென்பொருள் விற்கப்பட்டதால்
அந்தகாரக் கொள்வனவு என்று குறிப்பிட்டேன்
——————————-
avathanikajan@yahoo.ca

Series Navigation

கஜன்

கஜன்