நான்காம் நாயகம்!

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

எம்.கே.குமார்


சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது! சென்னை, ஏப்ரல் 26. சென்னையை அடுத்த திருவள்ளூர் திருநகரில் வசிப்பவர் நடராஜன்(38). இவர் பால்வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு பவளகாந்தம்(35) என்ற மனைவியும் கிருஷ்ணவேணி(13), ராசாத்தி(9) என்ற இரு மகள்களும் உள்ளனர். அவ்வூரில் சின்னச்சங்கரன் தெருவில் வசிப்பவர் குருசாமி(65). இவரது மகன் ராஜா(30). சம்பவ தினத்தன்று அருகில் உள்ள கிணற்றுக்கு நீர் எடுக்கச்சென்றுள்ளார் கிருஷ்ணவேணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியே சென்ற அச்சிறுமியைக் கண்ட ராஜா, கிணற்றருகே சென்று அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். ஆடைகள் கிழிந்து மிரண்டு ஓடிவந்த கிருஷ்ணவேணி நடந்ததை அவரது தந்தையிடம் கூற, அவர் திருவள்ளூர் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிறுமியைப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ராஜாவை நேற்று கைது செய்தனர்.

சிறுமியைப் பலாத்காரம் செய்தவன் மனநோயாளியா?
சென்னை, மே 1. சென்னையை அடுத்த திருவள்ளூர் திருநகரில் வசிப்பவர் நடராஜன். இவரது மூத்தமகள் கிருஷ்ணவேணி. சம்பவ தினத்தன்று கிணற்றுக்கு நீர் எடுக்கச்சென்ற இவரை, அதே ஊரைச்சேர்ந்த குருசாமி மகன் ராஜா ‘ஆடைகளைக் கிழித்து அரைநிர்வாணமாக்கி’ பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி யின் தந்தை போலீசில் புகார் செய்ததையடுத்து ராஜாவைக் கைதுசெய்து மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தியிருந்தனர் போலீசார். பதினைந்து நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் தொடர்ந்து அவனிடம் நடத்திவந்த விசாரணையில் ராஜா மனநிலை தவறியவன் போல நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னுக்குப்பின் முரணாகவும் சிலவிஷயங்களில் சிறுகுழந்தையைப் போலவும் அவன் நடந்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மனநோயாளியாய் அவன் இருக்கக்கூடும் எனவும் அவனை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதிப்பது எனவும் முடிவுசெய்துள்ளதாகப் போலீசார் கூறினர்.

அதிர்ச்சி!! பலபெண்களுடன் ராஜாவுக்கு தொடர்பு! மனநோயாளி வேடம் தோல்வி!!
சென்னை, மே 15. சென்னையை அடுத்த திருவள்ளூரைச் சேர்ந்த நடராஜனின் மகள் கிருஷ்ணவேணி. இவர் திருவள்ளூர் தா.மோ.உ.பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை ராசாத்தியும் இதே பள்ளியில் படித்துவந்தார். பள்ளிக்கு தினமும் சைக்கிளில் சென்றுவருவாராம் கிருஷ்ணவேணி. அதே ஊரைச்சேர்ந்த குருசாமி மகன் ராஜா அடிக்கடி இவரிடம் குறும்பு செய்துவந்தாராம். சைக்கிளில் அவர் செல்லும்போது வேகமாய்ச்சென்று அவரது சைக்கிளைத் தடுப்பதும் நடந்துவரும்போது பின்பக்கத்தில் தட்டுவதும் என நடந்துகொள்வாராம்.
சம்பவ தினத்தன்று கிணற்றுக்குச்சென்ற கிருஷ்ணவேணியை கற்பழிக்கமுயன்று சேலையைப்பிடித்து இழுத்தாராம் ராஜா. திடுமென ஆவேசம் வந்தவராய் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு தப்பித்துவந்து போலீசில் புகார் கொடுத்தார் கிருஷ்ணவேணி. அவனைக்கைது செய்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜா மனநலம் குன்றியவன் போல நடந்துகொண்டது தெரிந்தது. இந்நிலையில் அவனைப்பரிசோதித்த மருத்துவர் அவர் மனநிலை சரியில்லாதவர் அல்ல எனவும் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து கடந்த இருநாட்களாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.
அதன்படி ராஜாவுக்கு ஏற்கனவே இரு பெண்களுடன் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது. மதுராந்தகத்தை அடுத்த வடபாகத்தில் வசித்துவருபவர் மீனா. இவர் திருமணமாகி கணவனைப் பிரிந்துவாழ்பவர். இவருக்கும் ராஜாவுக்கும் நீண்ட நாட்களாகத் தொடர்பிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்போல பொன்னேரியை அடுத்த வீராச்சாமிபுரத்தில் வசித்துவரும் மல்லிகா என்பவருக்கும் இவனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது. திருமணமானவரான மல்லிகா, கணவர் வேலைக்குச்சென்றபின் இவனுடம் சல்லாபம் செய்வாராம். இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இன்னும் பல பெண்களுடன் அவனுக்குத் தொடர்பிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

குரூப்செக்ஸ்!கும்மாளம் கோலாகலம்!! செக்ஸ் கிங் ராஜா!
சென்னை, ஜூன் 2. சென்னையை அடுத்த திருவள்ளூரைச்சேர்ந்தவன் ராஜா. இவனுக்கு மிக்கிராஜா என வேறொரு பெயரும் உண்டு. மிக்கிராஜா டெய்லர் கடை வைத்திருக்கும் தனது நண்பன் சரவணன் என்பவனது கடைக்கு அடிக்கடி வருவானாம். டெய்லர் கடைக்கு வரும் பெண்களுடன் சகஜமாகப் பேசுவானாம். நைசாகப் பேசி அவர்களது கவனத்தைக் கவரும் இவன், அப்படியே பேச்சின்மூலம் அவர்களது மனத்தையும் மயக்குவான். அவர்களது வீட்டுமுகவரி மற்றும் வீட்டிலிருக்கும் நபர்கள் பற்றிப் பேசும் இவன் பிறகு தன் வேலையை ஆரம்பிப்பான். ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு செல்லும் இவனிடம் தன் ஜாக்கெட்டைக் கழட்டாத பெண்களே இல்லை என்றும் இவனிடம் மயங்கிய பெண்களின் பட்டியல் மிகப்பெரியது எனவும் போலீஸ்அதிகாரி ஒருவர் கூறினார்.
மதுராந்தகத்தை அடுத்த வடபாகத்தில் வசித்துவரும் மீனா என்ற பெண்ணிடம் முதலில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ராஜா அவளிடம் காமக்களியாட்டங்கள் நடத்தியிருக்கிறான். கணவனைப் பிரிந்துவாழும் அப்பெண்ணோடு சிலகாலம் தங்கிய இவன், தனது நண்பர்கள் பலரையும் அப்பெண்ணிடம் அழைத்துவந்திருக்கிறான். மதுராந்தகத்தின் ஒதுக்குப்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாரக்கடைசியில் கூடும் இவர்கள் விடியவிடிய குடி, நிர்வாணம், நடனம் என கும்மாளம் செய்வார்களாம். துணைநடிகைகள் இருவரையும் கேரளாவிலிருந்து வந்த ஷாமா என்ற பெண்ணையும் இக்கூட்டணியில் இணைத்திருக்கிறாள் மீனா. இவர்களைப்போல் பொன்னேரி வீராச்சாமிபுரத்தில் வசித்து வந்த மல்லிகாவும் இவர்களுடன் இணைந்துள்ளார். இவர் திருமணமாகி கணவனுடன் வசித்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னோடு காமக்களியாட்டங்கள் நடத்திய அத்தனை பெண்களிலும் மல்லிகாவுக்கும் மீனாவுக்கும் மட்டுமே மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான் ராஜா. இவர்களைத்தவிர தனது சொந்த ஊரில் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை தனது ஆசைநாயகியாக வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.

திகில்!!! செக்ஸ்-கொள்ளை-கொலை!! மிக்கிராஜா என்றொரு மிருகம்.!! மிக்கிராஜாவைப்பற்றி தினம் ஒரு புதிர் வரும் நிலையில் அது தொடர்பான மேற்படி தகவல்களைக் கண்டறிய ‘நம்பர்ஒன்’ துப்பறியும் பத்திரிகையான ‘நமது நகுலன்’ பத்திரிக்கையும் களத்தில் இறங்கியது, இனி அது தரும் செய்திகள்.
மிக்கிராஜா என்ற ராஜா பலபெண்களுடன் காமக்களியாட்டங்கள் நடத்தியது மட்டுமே இதுவரை அறிந்த செய்தியாக இருந்துவந்தது. ஆனால் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளும்படியாகவும் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளும் நமது புலன்விசாரணையில் கிடைத்துள்ளன. அதனபடி ராஜா பலபெண்களைக் கற்பழித்துக் கொலை செய்தது இப்போது தெரியவந்துள்ளது. மிக்கிராஜா எனப்படும் ராஜா பல காலத்திற்கு முன்பே தனது பக்கத்துவீட்டில் வசித்த அறுபது வயது பாட்டியிடம் முறைகேடாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறான். முயற்சி பலிக்காததால் அப்பாட்டியைக் கொலைசெய்திருக்கிறான். அப்போது பெரியவர்களால் ஊரைவிட்டு துரத்தப்பட்டு பாண்டிச்சேரியில் சிலகாலம் வாழ்ந்திருக்கிறான். பாண்டிச்சேரியில் வசித்தபோது பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்த இவன், காயத்ரி என்ற பெண்ணைக் கற்பழிக்க முனைந்ததாக பாண்டிச்சேரி காவல்நிலையத்தில் புகார் இன்றும் இருக்கிறது. சிலகாலம் அங்கு தங்கியிருந்த இவன் பிறகு வேலை நிமித்தமாக சேலம் வந்திருக்கிறான். சேலத்தில் தான் தங்கியிருந்த வீட்டு ஓனரின் மகளிடம் தவறாக நடந்துகொள்ளமுயன்று அப்பெண் இவனை செருப்பால் அடித்துவிட்டாராம். இதனால் வெறுப்புற்ற இவன், அப்பெண்ணின் பெயரை ஒரு நாயின் கழுத்தில் கட்டி அலையவிட்டானாம். இதிலிருந்து இவன் எவ்வளவு கீழ்த்தர வக்கிர உணர்வுகள் கொண்டவன் என்பது தெரியவருகிறது.
இவனது தாயார் சிறுவயதிலேயே இவனையும் இவனது தந்தையையும் விட்டுவிட்டு வேறொருவருடன் ஓடிவிட்டாராம். அதிலிருந்து பெண்களின் மேல் வெறுப்புற்ற இவன் இத்தொடர் கொலைகளை நிகழ்த்தியிருக்கலாம். இவனது தந்தையும் தனது வீட்டிற்கருகில் இருக்கும் ஒரு விதவைப்பெண்ணோடு கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார். அறுபதைந்து வயதான அப்பெண் அண்மையில் இறந்துபோனார். அவருடைய சாவில் ஏதும் மர்மமிருக்கிறதா எனவும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
நீலப்படத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவனாம் ராஜா. இதற்கான சாட்சியங்களாய் அவனது ஊரில் உள்ள வீட்டில் நிறைய ஆபாசப்படங்கள் அடங்கிய சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவனிடமிருந்து கைப்பற்ற சிடிக்களில், நான்கெழுத்து நடிகை ஒருவர் மற்றும் அண்மையின் வெளிவந்த ‘பெரிய நடிகரின்’ திரைப்படத்தில் ‘கொழுக் மொழுக்’ தங்கையாக வந்த ‘பால்’ நடிகை ஆகியோரது உடலுறவு ஆபாச காட்சிகளும் நிர்வாணப் படங்களும் அடங்கியிருந்தனவாம். அக்காட்சிகளில் ‘வாத்ஸயனாரையே’ மிஞ்சும் அளவில் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாம்.
போலீசார் தொடர்ந்து நடத்திய தேடுதலில் இதுவரை வராத ‘புதிய’ தகவல்கள் பல வெளிவந்துள்ளன. இவனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராக்கப்பன் என்பவர் சில மாதங்களுக்கு முன் பெரம்பலூர் தனித்தமிழ் தீவிரவாதக்கும்பலுடன் சேர்ந்துவிட்டதால் இவனுக்கும் தனித்தமிழ்நாடு குழுவினருக்கும் தொடர்பிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. இதற்கிடையே கைதுசெய்யப்பட்டபோது இவனது பாக்கெட்டில் இருந்த ஒரு டைரியை போலீசார் கைப்பற்றியதாகவும் அதில் ஏராளமான அதிர்ச்சித்தகவல்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது. கொள்ளையடித்த விவரங்கள், கற்பழித்த பெண்களின் புகைப்படங்கள், சில அரசியல்வாதிகளின் தொலைபேசி எண்களும் இருந்தனவாம். மேலும் முக்கிய நடிகைகளின் புகைப்படமும் சில துணைநடிகைகளின் அரைகுறைப்படங்களும் இருந்தனவாம். இதனைத்தொடர்ந்து குருப்செக்ஸில், விபசாரத்தில் ஈடுபட்ட சினிமா துணைநடிகைகள் மற்று முன்னணி நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளிவரலாம் எனக்கூறப்படுகிறது.
இதற்கிடையே இவனது கடைசிக் காதலியாய் இருந்த கிருஷ்ணவேணி என்றபெண் கடந்தவாரம் தற்கொலை செய்துகொண்டார்.

மிக்கிராஜா குண்டர் சட்டத்தில் அடைப்பு!!
ரத்தம் உறையவைக்கும் விதத்தில் திகிலூட்டும் வகையில் தொடர் கொலைகளையும் கொள்ளைகளையும் நிகழ்த்திய கூலிப்படைத்தலைவன் ‘மிக்கி’ராஜா இன்று குண்டர்கள் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுகிறான். தமிழ்நாட்டையே கலக்கும் வகையில் ஒன்றுமறியா சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகளிலிருந்து மூதாட்டி வரையிலான பெண்களைக் கடத்திக் கற்பழித்துக் கொலை புரிந்த அவனுக்கு மூன்று மாதங்களில் ஐந்துமுறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நேற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ப.கண்ணாயிரம் அவர்களின் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டான். ‘போலீசார் மிகுந்த தொல்லை தருவதாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவ வசதிகள் அளிக்கவேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவன் சொன்னான். ‘அவையெல்லாம் வெறும் ‘பாவ்லா’ மட்டுமே, துளியும் உண்மையில்லை’ என்றும் ‘இக்கொலை வழக்குகளிலிருந்து தப்பிக்க பொய்சாட்சிகளை ஏற்பாடு செய்யவே அவன் இத்தகைய வேஷம் போடுவதாகவும்’ கொலை மற்றும் கொள்ளை பற்றி விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செக்ஸ் வேட்கையும் ரத்த வேட்டையும் கொண்ட இவனுக்கு ‘செபத்தியன்’ மற்றும் ‘நூர்முகமது’ போன்ற பலபெயர்களும் உண்டாம். இதற்கிடையே, சேலம் அருகில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மிக்கிராஜாவின் தாயார் செய்தியையறிந்து நேற்று தற்கொலை செய்துகொண்டாராம். தாயாரின் தற்கொலைக்குக் காரணமான இவரது மேல் இன்னும் ஒரு வழக்குத் தொடரலாமா என்பது குறித்து போலிசார் ஆராய்ந்து வருவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசத்துரோகியா?!
ஜூலை 4. பெண்பித்தனும் கொடூர கொலைகாரனும் கொள்ளைக்காரனுமாகிய பிரபல தாதா மிக்கிராஜாவுக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஒருவரை போலீசார் நேற்று கோயம்புத்தூரில் கைது செய்தனர். இவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் ஏகப்பட்ட ஆபாச சிடிக்களும் கைப்பற்றப்பட்டன. அவரிடமிருந்து மேலும் ஒரு கைத்துப்பாக்கியும் நான்கு நாட்டு வெடிகுண்டுகளும் ‘அல்ஜா’ என்று பெயரிடப்பட்ட சாவிக்கொத்து மற்றும் கத்தை கத்தையான இந்திய கள்ளரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. அல் உம்மா, அல்கொய்தா போன்று இப்பெயரும் விளங்குவதால் இந்த ‘அல்ஜா’விற்கு, பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுடன் ஏதும் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே பெங்களூருவில் விபசாரவழக்கில் நேற்று கைதுசெய்யப்பட்ட பிரபல சினிமா நடிகை ‘ராய்நிகிதாவுக்கும்’ இவனுக்கும் ஏதும் தொடர்பு இருந்ததா என விசாரணை நடைபெற்றுவருகிறது. அவர் பலமுறை சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபுநாடுகளுக்குப் பயணப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ராய்நிகிதாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. ராய்நிகிதாவுடன் பலதொழிலதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புயிருந்திருப்பதை அறிந்த போலீசார் மேலும் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மிக்கிராஜாவுக்கு தூக்கு!! தர்மம் வென்றது!!!
மிக்கிராஜா! இப்பெயரை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். குலை நடுங்கும் பெயருக்குச் சொந்தக்காரன். தமிழக மக்களை மட்டுமல்லாது பல முன்னணி நடிகைகளையும் பெரிய அரசியல்வாதிகளையும் கதிகலங்க வைத்தவன். பலபெண்களைக் கடத்தியும் கற்பழித்தும் கொலைபுரிந்தவன். பலயிடங்களில் கொள்ளையடித்தவன். பலபெண்களை குறிப்பாக முன்னணி நடிகைகளை வைத்து தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் வெளிநாட்டிலும் விபசாரம் நடத்தியவன். ரவுடி அரசியல்வாதிகளின் மூளையும் செயலுமாய் இருந்தவன். தீவிரவாதிகளோடும் வன்முறைக் கும்பலோடும் தொடர்புள்ளவன். எந்தவித பயமும் ஒழுக்கநெறிகளும் இல்லாமல் சமுதாயத்தில் உலவிய பிராணி. ஏழுவருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட அவனுக்கு இப்போது தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியுள்ளது உயர்நீதிமன்றம். இறுதியில் தர்மம் வென்றிருக்கிறது.
சென்னை புறநகர்ப்பகுதியைச் சேர்ந்தவன் ராஜா. இளம்வயதில் தாயைப்பிரிந்த இவன் தனது தந்தையுடன் வாழ்ந்துவந்தான். இளமையில் வறுமையில் வாடியதால் இவனது தந்தையார் அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் எடுபிடியாக வேலை பார்த்துள்ளான். பிறகு அருகில் உள்ள டெய்லர் கடை ஒன்றில் வேலைக்குச்சேர்ந்தான் ராஜா. அங்கு வரும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முனைந்திருக்கிறான். கடைக்காரருக்கும் இவனுக்கும் ஏதோ தகறாறு ஏற்பட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். இதற்கிடையே தனது தந்தைக்கும் அருகில் வசித்த இன்னொரு பெண்ணுக்கும் தவறான உறவிருந்ததால் அப்பெண்ணைக் கொலைசெய்துவிட்டு தப்பியவன் போலீசாரிடம் பிடிபட்டான்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மிகவும் அதிர்ச்சியான தகவல்கள் பல வெளியாயின. அதன்படி பல கற்பழிப்புகள் மட்டுமின்றி கொலைகொள்ளையிலும் இவன் ஈடுபட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. பல பெண்களை வைத்து விபசாரம் செய்த தகவல்களும் வெளிமாநில தீவிரவாதக்கும்பலுடன் தொடர்புள்ளதும் விசாரணையில் வந்ததையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டான். ஏழுவருடங்கள் தொடர்ந்து நடந்த வழக்குவிசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. மிக்கிராஜா வழக்கில் தீர்ப்பு வெளிவருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் போலீசார். தீர்ப்பு வழங்கப்போவதை தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில் மூவர் அடங்கிய பெஞ்ச் காலை பத்து மணிக்கு இவ்வழக்கு மீதான தீர்ப்பை வாசித்தது.
அதன்படி ஒரு கொலை, நான்கு கொள்ளை, ஐந்து கற்பழிப்புகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது, கஞ்சா வைத்திருந்தது, தீவிரவாதிகளுடன் தொடர்பு என அனைத்திற்கும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. கொலையும் சில கற்பழிப்புகளும் சிறுமிகளின் மீதான வக்கிரம் என்பதால் அவற்றைப் பலமாகக் கண்டித்த நீதிபதிகள் அவற்றுக்கு தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
இத்தீர்ப்பை வாசிக்கும்பொழுது அவனது முகம் வாடியிருந்தது. ஆரவாரமிட்ட மகளிர் சங்கத்தினரை அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். இவனைப் பார்க்கவோ இவ்வழக்கு மீதான தீர்ப்பைக் கேட்கவோ இவனது உறவினர்கள் யாரும் வராத நிலையில் மிகவும் சோர்வாக இருந்தான். இவனது தூக்குத்தண்டனை தீர்ப்பு குறித்து அறிய இவனது கிராமத்திற்கு நமது நிருபர் சென்றபொழுது கிராமத்தில் யாரும் பேச முன்வரவில்லை. இவனுடைய தந்தையார் கவனிப்பாரின்றி இருவருடங்களுக்கு முன் இறந்துபோய்விட்டாராம்.

அதிர்ச்சி!
பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபட்டிருந்ததாய் பத்து வருங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர் திரு.ராஜா. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் மூன்று வருடங்களுக்கு முன் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு ராஜா எனப்படும் மிக்கிராஜாவுக்கு துக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் நல வாழ்வு மையம் சார்பில் இலவச சட்டஉதவி பெற்ற இவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற இவ்வழக்கில் திரு.ராஜா விடுதலை செய்யப்பட்டார். இவர் பலாத்கார வழக்கில் மட்டுமே குற்றவாளி என்றும் அதற்கும் இதுவரை அனுபவித்த பத்துவருட சிறைத்தண்டனை அதிகம் என்றும் கூறிய நீதிபதிகள், உடனடியாக இவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். யாரோ ஒரு பெரும் அரசியல் ஆளுமைக்காக இவர் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக அதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த நீதிபதிகள் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினர்.


kmahalingam@eastman.com

Series Navigation