நாட்குறிப்பு

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

வந்தியத்தேவன்


பின்னிரவில் மாற்ற மறந்த டயப்பர்
சிறுநீர் வாசத்தை பெரிதாய் பிரகடனப்படுத்த
அலுவலின் அயர்ச்சி சற்றே சங்கடப்படுத்தும்
இயலாமையின் இகழ்ச்சியில் முன்னெற்றியின் முத்தம்
கக்கத்தின் வெதுவெதுப்பு குறைய
அரையிருட்டில் நெளியும் குழந்தையுடன் நாள் தொடங்கும்

பதனப் பெட்டியில் திகதிவாரியாய்ப் உணவுப் பொட்டலங்கள்
இறக்கும் நேரம் தெரிந்தும் மயான அமைதியுடன்
செத்த உணவு விடுப்பது கரடி மட்டுமல்ல நானும்
கலோரிக் கணக்குப் பார்த்து இன்றைய பொட்டலம்
சூடான் மக்கள் தேவையின்றி மனதில் தகிக்க
அந்நியமாகிப் போனது வெறும் நாடு மட்டுமா ?

கற்றது ஒன்று பெற்றது வேறு
நீரின் போக்கிலேயே நீச்சலடிக்கும் இலட்சியம்
மனம் கூலிக்கு மாரடிக்கும் ஆங்கிலத்தில்
நாணய மாற்றுக் குறைந்தால்
நாட்டுப் பற்றுக்கும் மங்களம் பாடும்

வழமை போல் கூடு வரவு முன்னிரவில்
பேருக்கு கொறித்தபின் கோழியாய்ப் புணர்ச்சி
அதிகாலை சவரத்தின் ஐந்துமணி முகவாய் நிழலில்
சொறிந்து சுகம் கண்ட குஞ்சுக்கைகள்
சொல்லும் தினமிழக்கும் சம்பவ இன்பங்களை

‘இய்யா யிய்யா யோய் ‘ தெரிந்த தாலாட்டும்
தூங்கிப் போகும் நாவினைத் தாண்டாமல்
எதிர்பார்ப்பு ஏமாற்றம் தருமாதலால்
இப்போது கனவுகள் வருவதில்லை எனக்கு
இருப்பினும் எப்போதும் கவலையுடன் நான்
====
t_sambandam@yahoo.com

Series Navigation