நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ரவி சுப்ரமணியன்


விளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் ராபர்ட் ஆராக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது வழங்கும் விழா 9.1.2010 சனிக்கிழமை மாலை சென்னை பிலிம் சேம்பரில் சுவாமிமலை மணிமாறனின் நாதஸ்வர இசைக் கச்சேரியோடு துவங்கியது.
தன் இலக்கியப் பங்களிப்பிற்காக 2009-க்கான சாரல் இலக்கிய விருதினைக் கவிஞர்.ஞானக்கூத்தன் பெற்றார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவ்விருதினை அவருக்கு வழங்கினார்.
இந்த விருது 50,000/= (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணமும் கலைநயம் மிக்க சிற்பமும் சான்றிதழும் அடங்கியது. இவ் விழாவில் ஜேடி-ஜெர்ரியினுடைய நாதஸ்வர ஆவணப்பட திரைக்கதை நூலும் ஜேடி எழுதிய கனவுகளைப் பேச வந்தவன் கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது.

விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து
ந.முத்துசாமி

இன்று வரை நவீனமாக எழுதிக்கொண்டு வரும் கவிஞர் ஞானக்கூத்தன், பாரதிக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த அரிய கவிஞர்களுள் ஒருவர். என் கையால் இப் பரிசு வழங்கப்பட்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
இந்தவிழா நடக்கும் முறையிலிருந்து இப் பரிசின் உயர்வை உணர்கிறேன். சரியான தேர்வுக்காகவும் உங்களைப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு கவிஞன் இத்தனை ஆண்டுக் காலம் சலிக்காமல் இயங்கி சரியான தரம் குன்றாத படைப்புகளைத் தந்திருப்பது ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. இந்தச் சாரல் விருதினை எல்லாத் தமிழர்களும் பாரட்ட வேண்டும்.
இயக்குனர் பாலு மகேந்திரா
என்னுடைய பதின்வயதுகளில் முயற்சித்து தேடத்துவங்கிய இலக்கிய ரசனை இன்னும் என்னிடம் இருக்கிறது.
நான் ஒரு இலக்கிய உபாசகன். எனக்கு இலக்கியத்தில் ஏற்பட்ட தீவிரமான பிடிப்பே என் படைப்புகளில் மேன்மையைச் சேர்க்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே, நான் நடத்தும் திரைப்படப் பள்ளியில் தமிழ் இலக்கியங்களைப் பாடமாகப் படிக்க வைக்கிறேன். எழுத்து ஓவியம் சிற்பம் என எல்லாப் படைப்புகளுக்கும் இன்னொரு கலையின் அனுசரனை தேவைப்படுகிறது. அதுவே ஒரு படைப்பின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் செழுமையுறப்பண்ணுகிறது. நான் ஞானக்கூத்தனின் நீண்ட நாள் வாசகன். நவீன கவிதை என்பது அவரிடம் இருந்துதான் தொடங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன். மிகச்சிறந்த படைப்பாளியான அவருக்குச் சாரல் விருது வழங்கப் பட்டிருப்பதில் ஒரு வாசகனாக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
எஸ்.ராமகிருஷ்ணன்
புதுக்கவிதைக்கு முறையான அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுக் காலத்துக்கும் மேலாகப் புதுக்கவிதை பற்றிப் பேசியும் எழுதியும் வருகிற ஞானக்கூத்தன் மரபும் கைவரப் பெற்றவர்.
இவரைப்போன்றவர்கள்தாம் புதுக் கவிதைக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். முன்னோடிக்கவிஆளுமை டி.எஸ்.எலியட்டைப் போல கவிதை சார்ந்த எழுத்துக்களால் ஒரு கவிதை இயலையே உருவாக்கியிருக்கிறார் ஞானக்கூத்தன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதற்கான ஒரு ஆவணமாகவும் இவர் கவிதைகள் இருக்கின்றன. கற்பனை வறண்டு காய்ந்து போய் இருக்கிற நம் தினசரி வாழ்வின் நெருக்கடியில் கலைஞனுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. ஞானக்கூத்தனைக் கெளரவித்திருப்பது ஒரு நல்ல விஷயம். நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமுதாயம் ஓர் உயர்ந்த நிலையை அடைந்துவிட முடியாது.

ஞானக்கூத்தன் ஏற்புரையிலிருந்து…

இந்த விருதினை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன். ஒரு வேளை இந்த விருதை எனக்கு அடுத்த வருடம் கொடுப்பதாகச் சொல்லியிருந்தால், கூரியரில் அனுப்பி விடுங்கள் என்று சொல்லியிருப்பேன். காரணம் வேறொன்றும் இல்லை. வயது ஆக ஆக மேடையில் ஏறி ஏதாவது தாறுமாறாகப் பேசிவிடக்கூடாது என்று கவலைப் படுகிறேன். வித்தியாஷங்கர் ஸ்தபதி வடிவமைத்த இந்த விருதுக்கான சிற்பத்தைப் பெறும்போது கடவுளையே தொடுவதாக உணர்ந்தேன். நான் எழுதியவை களையா பயிரா என்று தெரியவில்லை. சிலர் பயிர் என்கிறார்கள். சிலர் களை என்கிறார்கள். ஒரு சிலர் அதைச் சாப்பிடவும் செய்தார்கள். இது பயிர் தான் சுவையாகவும் இருக்கிறது என்றும் சொன்னார்கள். அதில் இருந்தது தமிழ்ச்சுவை. ஆடு மாடுகள் மட்டுமல்ல சகல ஜீவராசிகளுக்கும் பிடித்தமாய் இருந்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியே.

இலக்கிய நயம் மிக்க தேர்ந்த ஓர் இலக்கிய உரையைத் தமிழச்சி தங்கபாண்டியனும் சிற்பம் ஓவியம் இசை கவிதை, எனப் பலதளங்களைத்தொட்டு தேனுகாவும் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கான எந்தத் தான்மையும் அற்று, அடக்கமான தொனியில் சுருக்கமாக ரகுபதி ஐ.ஏ.எஸ் அவர்களும் விழாவில் பேசினார்கள்.

கவிஞர்.ரவிசுப்ரமணியன் ஞானக்கூத்தனின் பவழமல்லி கவிதையை யமன்கல்யாணி ராகத்தில் மெட்டு அமைத்து அற்புதமாகப் பாடினார். இயக்குனர் ஜெர்ரியின் நன்றி உரைக்குப் பின் விழாவின் இறுதியில் நாதஸ்வர ஆவணப்படம் திரையிடப்பட்டது.

புகைப்படம் 1 விபரம் :
இடமிருந்து வலம் – ரகுபதி ஐ.ஏ.எஸ், முத்துசாமி ஜே.டி யின் ‘கனவுகளைப் பேச வந்தவன்’ கவிதைத் தொகுப்பை வெளியிடும் பாலுமகேந்திரா அதைப் பெற்றுக்கொள்ளும் தமிழச்சி, எஸ்.ராமகிருஷ்ணன், ஜேடி, ஜெர்ரி.

புகைப்படம் 2 விபரம் :
இடமிருந்து வலம் – ரகுபதி ஐ.ஏ.எஸ், முத்துசாமி ஜேடி-ஜெர்ரியின் நாதஸ்வரம் புத்தகத்தை வெளியிடும் வெளியிடும் தேனுகா. அதைப் பெற்றுக்கொள்ளும் எஸ்.ராமகிருஷ்ணன், பாலுமகேந்திரா, ஜேடி, ஜெர்ரி.

புகைப்படம் 3 விபரம் :
தேனுகா, ஜெர்ரி, முத்துசாமி, பாராட்டிதழை வழங்கும் ரகுபதி ஐ.ஏ.எஸ், பாலுமகேந்திரா, எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி, ஜேடி.

புகைப்படம் 4 விபரம் :
ரகுபதி, தேனுகா, ஜெர்ரி, சாரல் விருதினை ஞானக்கூத்தனுக்கு வழங்கும் ந.முத்துசாமி, பாலுமகேந்திரா, ஜேடி, எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி.

ஞானக்கூத்தன் ஓவியம் :
ஆர்ட் டைரக்டர் ஜேகே என்கிற ஜெயகுமார் வரைந்தது.

Series Navigation

author

ரவி சுப்ரமணியன்

ரவி சுப்ரமணியன்

Similar Posts