நம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு(chip)

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue

ரூபர்ட் குட்வின்ஸ்


1896இல் ஹென்றி அண்டோய்ன் பெக்கரெல் அவர்கள் யுரேனியத்தின் சில துகள்கள் ஒளிப்பட தகடுகளை பாதித்து அவைகளை வெளுப்படைய வைக்கின்றன என்று கண்டார். பத்து வருடங்கள் கழித்து ஐன்ஸ்டான் தனது சிறப்பு சார்பியல் கொள்கையை பிரசுரித்து பருமமும், சக்தியும் ஒன்று மற்றொன்றாக மாற வல்லவை என்று நிரூபித்தார்.(E=MCsquared). 40 வருடங்கள் கழித்து ஓப்பன்ஹைமர் மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் இணைத்தால் என்ன ஆகும் என்று காண்பித்தார். (ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டு)

ஹிடாச்சி நிறுவனம் தான் கண்டுபிடித்த ஒரு ம்யூ என்னும் ஒரு சில்லை விளம்பரம் செய்வதற்கு காண்பித்த விளம்பரப்படத்தை பார்த்தேன். இது ஒரு மிகச்சிறிய மணல் துகள். அரை மில்லிமீட்டர் இரு பக்கமும். இது காற்றில் ஒரு எண்ணை துப்புவதைத்தவிர வேறொன்றையும் செய்வதில்லை. ஆயினும் இந்த சில்லை இணையத்துடன் இணைத்தால், ஐன்ஸ்டானின் பரும-சக்தி ஒப்புமைபோல, இதற்கும் சமூகத்தையே தலைகீழாக மாற்றிவிடும் வலிமை இருக்கிறது. ஏனெனில் இந்த ம்யூ சில்லு, ஒரு பொருளையும், அந்தப் பொருளைப் பற்றிய அறிவையும் ஒன்றாக இணைத்துவிடுகிறது.

ஒரு அடி பின்னால் எடுத்து வைப்போம். இணையத்தில் அறிவிக்கப்படும் பொருள்கள் உலகத்தில் இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல. நீங்கள் உங்கள் நண்பருக்கு மின் கடிதம் அனுப்பினீர்கள் என்றால் அந்த கடிதத்தைப் படித்தது அவர்தானா என்று தெரியாது. இணையத்தில் ஒருவர் ஒரு பொம்மையை விற்கப் போட்டார் என்றால், உண்மையிலேயே அந்த பொம்மை புகைப்படத்தில் இருக்கும் பொம்மை அவரிடம் இருக்கிறதா என்று தெரியாது. ஒரு பொருளைப்பற்றிய அறிவும் விஷயமும், அந்தப் பொருளும் ஒன்றல்ல. விஷயம் இணையம் வழியாக தண்ணீர் போல ஆள் அடையாளமற்று ஓடுகிறது. இந்த சுதந்திரம்தான் இணையத்தின் சந்தோஷங்களுக்கும், அதில் நடக்கும் பாவங்களுக்கும் காரணம்.

ஆனால் பொருளையும் அதைப்பற்றிய விஷயத்தையும் இணையத்தின் மூலம் இணைத்தால், பொருள்கள் வேறுமாதிரியாகி விடுகின்றன. அதிக விலையுள்ள பொருள்களுக்கும், சிறிய பொருள்களுக்கும், காகிதப்பணத்துக்கும் அடையாளம் இதன் மூலம் கொடுக்கலாம் என்று ஹிடாச்சி நிறுவனம் சொல்கிறது. இந்த மணல் துகள் சில்லு மிகமிக சிறியது, ஒரு காகிதப் பணத்துக்குள் செருகி விடலாம். இது தொடர்ந்து தெரிவிக்கும் எண்ணை ஒரு 30 சென்டி மீட்டர் தொலைவிலிருந்து உடனே அறிந்து கொள்ளலாம்.

இது நடக்கிறது என்று கற்பனை செய்வோம். வங்கிகளிலும், கடைகளிலும் ஒரு காகிதப்பணத்தின் அடையாளத்தை அறிவதற்காக (பொய் காகிதப்பணம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக) உபயோகப்படுத்த ஆரம்பிக்கப்படும். இது கம்பியில்லா தந்தி (வயர்லெஸ்). எனவே அந்த சொந்தக்காரர் அறியாமலேயே நீங்களும் இந்த விஷயத்தை அறிந்து கொள்ளலாம். இது பரவினால், ஒவ்வொரு காரிலும்,ஒவ்வொரு பையிலும், ஓவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு கண்ணாடியிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், அந்தக் கம்ப்யூட்டரில் இருக்கும் சில்லுகளிலும், எல்லாவற்றிலும் இந்த சில்லுகள் பொறுத்தப்படலாம். அப்படி பொறுத்தப்பட்டால், உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இணையத்தின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

இந்த தொழில் நுட்பம் முழுவதுமாக வளர்ந்து பரவினால், உலகமே வெகுவாக மாறிவிடும். அப்படி மாறிய உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது கூட கடினமான விஷயம். ஒரு விஷயத்தின் சொந்தக்காரர் இணையத்தில் தனது பொருள்கள் எங்கே எங்கே இருக்கின்றன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியுமென்றால் நீங்கள் எப்படி திருடுவீர்கள் ? ஒரே அடையாளத்தை வெவ்வேறு பொருள்களுக்கு கொடுக்க முடியாதென்றால், எப்படி ஒரு பொருளுக்கு பதிலாக இன்னொரு பொருளைக் கொடுத்து ஏமாற்றுவீர்கள் ? எல்லா விஷயங்களுக்கும் மத்திய அடையாள எண்களும், அவைகள் என்ன என்ன என்பதற்கு கம்ப்யூட்டர் செய்திமையமும் இருக்கும் என்றால், பொய் எண் வந்ததும், இவை எளிதாக தெரியப்படுத்திவிடும். இந்த மத்திய கணிணி செய்தி மையங்கள் சில நேரங்களில் ஹாக்கர்களால் கெடுக்கப்படலாம். இருப்பினும் எந்தப் பொருளுக்காக செய்தி மையம் கெடுக்கப்பட்டது என்பதை அறியவும், அந்தப் பொருள்களை யார் யார் வைத்திருந்தார்கள் என்பதை அறியவும் முடியுமெனில், குற்றவாளிகள் உடனே தடுத்து நிறுத்தப்படுவார்கள் இல்லையா ?

ஆகவே நாமும் நம் பொருள்களும் ஏன் நம் உலகமே, இணையத்தில் வாழும். இந்த புரட்சிகர மாற்றம் நமது இன்றைய இணையத்தை நேற்றுப் பிறந்த பிள்ளை போல ஆக்கிவிடும். நமது தனித்துவத்தை விடுங்கள், நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் கணிணியிலும், இணையத்திலும் தெளிவாக இருக்கும் என்பது நமது தனித்துவ அக்கறைகளை தூளாக்கிவிடும்.

இது எதிர்காலத்தில் வரும் என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா ? நிறைய காரணங்கள் இருக்கின்றன. இப்போதே நாம் நமது அலுவலகத்துக்குள் வரும்போது பாதுகாப்பு கேமராக்கள் நமது முக பிம்பங்களை அலசுகின்றன. நாம் தெருக்களில் கார் ஓட்டிக்கொண்டு போகும்போது நமது கார் எங்கே போகின்றது என்று தெரிகிறது (ஏற்கெனவே gps global positioning satellite என்னும் துணைக்கோள் கொண்டு ஒரு பொருள் எங்கே இருக்கிறது என்பதை அறிய கருவிகள் விற்கப்படுகின்றன. கார் போன்ற பொருள்களும், சிறிய கணிணிகளுக்கும் இவை பொறுத்தப்பட்டு இவைகள் திருடு போகாமல் தடுக்க உதவுகின்றன) இது போன்று ஒவ்வொரு பொருள்களுக்கும் அடையாளமும் அவை இணையத்தில் பதிவு செய்யப்படுவதும் அரசாங்கத்துக்கும், நமக்கும் உபயோகமானது என்பதை பாருங்கள். உதாரணமாக ஒரு பொருள் எவ்வளவு பணத்துக்கு யாரிடமிருந்து யாருக்குப் போனது என்பதை இணையத்தில் கணக்கிட முடியுமென்றால், மிக எளிதாக அதில் எவ்வளவு பணம் அரசாங்கத்துக்கு வரியாகப் போக வேண்டும் என்பதையும் கணக்கிடலாம். அப்படி கணக்கிட்டு சரியான தொகையை உங்களது வங்கி கணக்கிலிருந்து எடுத்து விடலாம். வருடாவருடம் பெரியவேலை செய்து வருமான வரி கணக்கிட்டு அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இவைகளைச் செய்ய நமக்கு நிறைய தொழில் நுட்பங்கள் தயாராக்கப் படவேண்டும். ஆனால் எதுவும் யோசிக்க முடியாத விஷயங்கள் அல்ல. இதற்காக எல்லா இடங்களிலும் இருக்கும் ரேடியோ வலையங்கள் வேண்டும். இவைகளை ஏற்கெனவே கட்டிக்கொண்டிருக்கிறோம். மிகச்சிறிய பேட்டரிகள் தேவை. இவைகளும் வந்து கொண்டிருக்கின்றன. கோடிகோடிக்கணக்கான பொருள்களை அடையாள எண் கொடுக்கவும், அவைகளைப் பற்றிய விஷயங்களைச் சேகரிக்கவும் நமக்கு பெரிய செய்திமையங்கள் தேவை. அதையும் இன்றைய இணையம் கட்டிக்கொண்டிருக்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த ரகசியங்கள் இல்லாத புதிய உலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது எப்படி இருக்க வேண்டும், எந்த விதமான சட்ட திட்டங்கள் இங்கு இருக்க வேண்டும், அரசாங்கத்துக்கும் குடிமகனுக்கும் இடையே எந்த விதமான ஒப்பந்தம் இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை சிந்திக்க வேண்டும். முன்பு அரசாங்கத்துக்கும் குடிமகனுக்கும் இடையே இருந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டன என்பதை அறிய வெகுதூரம் செல்ல வேண்டாம். ஏற்கெனவே, ஒரு கணிணிக்கும் இன்னொரு கணிணிக்கும் இடையேயான பியர் டு பியர் வலையங்கள் மூலம் இசை கோப்புகள் பரிமாறிக்கொள்வதன்மூலம் பழைய காப்பிரைட் உரிமை சட்டங்கள் காலாவதியாகி விட்டன. எதிர்காலத்தில் வரும் பெரிய வெடிப்புக்கு முன்னர் வரும் சிறிய வெடிப்புகள் தாம் இவை. உலகம் ஒரு உலோகத்துகளின் உள்ளே தொழில் நுட்பத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 50 வருடத்துக்குள் என்னவென்ன நடக்கும் என்பதற்கு நமக்கு கருத்துக்களே கிடையாது (பெக்கரெல் ஹிரோஷிமாவை கற்பனை செய்து பார்த்திருப்பாரா ?) எதிர்காலத்துக்கு வாருங்கள்.

Series Navigation