நனையாத சில நதிகள்

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

மனஹரன் , மலேசியா


இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து மீளவில்லை, சிவசங்கரன். அம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரிந்தால் தலைமேல் எட்டி உதைப்பார்கள். ‘பெரிய மனுசனா யிட்டியா நீ ? ‘ அக்காதான் இப்படிக்கேட்பாள். அக்கா தலைமேல் ஒரு கொட்டு கொட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவளுடைய சம்பாதியத்தில் குடும்பம் நடப்பதில் அவளாக எடுத்துக்கொண்ட உரிமை. அம்மா இப்படி செய்யமாட்டாள்.

அங்கு சண்முகம்கூட இருந்தான். இந்தச் சண்முகம் இந்நேரம் இதையெல்லாம் அக்காவிடம் கூறியிருப்பான்., அவனுக்குக்கூட அம்மாவிடம் சொல்ல பயமாக இருக்கும். அம்மா இல்லாத நேரம் அக்காவிடம் சிரித்துப்பேசும் சண்முகம் அம்மாவின் அடையாளம் தெரிந்தால், குரல் இழந்துவிடுவான்.சிரிப்பு இருக்காது.அக்காவிற்கும் அவனுக்கும் இருக்கும் இடைவெளி கொஞ்சம் விரிவடையும், கொஞ்ச நேரத்தில் சண்முகம் புறப்பட தயாராகிவிடுவான். அது சண்முகம் அம்மாவின் மேல் வைத்திருக்கும் மரியாதை.

அம்மாவிற்கு எல்லாரிடமும் கொஞ்சம் மரியாதை அதிகம்தான். அம்மா அதிகம் பேசாவிட்டாலும் பயம் அதிகம். அக்காகூட அம்மா பேசியதற்கு மறுப்போ எதிர்ப்போ கூறியதாய் அாபகம் இல்லை.

அப்பா வாயிலும் மூக்கிலும் நுரை வந்து போனதிலிருந்து அம்மாவுக்கும் சிவசங்கரனுக்கும் ஓர் இடைவெளி உருவாகிவிட்டது. ஒரே நாளில் ஒரு பெரிய சுவராய் வளர்ந்து விட்டது. சிவசங்கரனுக்கு இன்னும் ஞாபகத்தில் இன்னும் பச்சைக்கட்டி உள்ளது. கூட்டாளிகளினால் வந்த வம்பு அது. கோயில் லயத்து முனுசாமியின் ஆட்டை மேயும் இடத்திலேயே கோவிந்தன் திருடிவிட்டதற்கு, கூட்டுத் திருட்டு என்ற சந்தேகப்பேரில் சிவசங்கரனையும் போலிஸ் வண்டியில் ஏற்றியது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

அப்பாவினால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளும் வலுவில்லாமல், நெஞ்சு வலி வந்ததும், மருத்துவமனைக்குப் போகும் முன்னே உயிர் பிரிந்துவிடுமென யார்தான் நம்பியது.

கோவிந்தனை மட்டும் வைத்துக்கொண்டு சிவசங்கரனையும் மற்றவர்களையும் விடுவித்ததும், சிவசங்கரன் வீடு வந்து சேரும் முன்னே, அந்தக் காலத்திலிருந்தே பாழடைந்து இருக்கும் பங்களா வழியில் வரும்போது ‘சிவசங்கரா உங்கப்பா செத்துட்டாரு ‘ என குமரய்யா சொன்னதும், சிவசங்கரனால் ஒரு நிலைபடுத்த முடியாமல், விபரம் முழுவதும் அறியாமலே கண்ணிலும் நெஞ்சிலும் ஒரு மெல்லிய சோகம் படருவதை மெல்ல அவனால் உணர முடிந்தது. சிவசங்கரன் நடக்க நடக்க எல்லாரும் ஒரு சோகப்பார்வை வீச நினைப்பது சிவசங்கரனால் காண முடிகின்றது. வீட்டின் முன் கூட்டம் கூடி இருந்தது, அம்மாவின் ஓலக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது,அக்காவின் குரலும் கேட்கின்றது,

முதல் அடியை எடுத்து வீட்டினுள் வைத்தபோது அம்மா விருட்டென்று எழுந்து, ‘ டேய்……. ‘ என்று தாருமாறாக அடித்தது எல்லாம் ஞாபகம் இருக்கிறது. அம்மா சிவசங்கரனிடம் கடைசியாய் பேசியது அந்த ‘ டேய்… ‘தான்.

அப்பாவின் உடலுக்கு தீ மூட்டிய பிறகு, தானே அப்பாவைக் கொன்று விட்டதாக ஒரு குற்ற உணர்வு மனசுள் அலை மோதியது. யாருடனும் பேசாமல், வீட்டின் வெளியே தனியாக உட்கார்ந்து கொண்டும் பல முறை பலர் உணவருந்த அழைத்தபோது, செல்லாமல் வீட்டுக்குள்ளே இன்னமும் மெலிசாய் முனகிக் கொண்டிருக்கும் அம்மாவின் குரலும் அவனது காதினில் விழுந்துகொண்டும்; மரத்தின் கீழே வெறுந்தரையில் உட்கார்ந்து கொண்டு தூரத்திலிருந்து மெதுவாய், சின்னக் கீறலாய் காதில் வந்து விழுகிற அந்த ‘தென்றலே நீ செல்வாய்… ‘ அது ஸ்ரீநிவாசோ ஏ.எம் ராஜாவோ சிவசங்கரனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்தது எல்லாம் அப்பாவின் குரல்தான். அப்பா எப்போதும் கேட்கிற, பாடுகிற பாட்டு. எங்கிருந்தோ அப்பா பாடுவது மாதிரிதான் பட்டது. ஓவென கத்தி பிரமை பிடித்தவன்போல தரையெல்லாம் புரண்டு மயக்கமுற்று எல்லாம் நடந்தபோதும் அம்மா வெளியே வராமல்தான் இருந்தாள்.அதன் பிறகு அம்மாவுக்கும் சிவசங்கரனுக்கும் பேச்சு இல்லை.

இதனையெல்லாம் எதிர்வீட்டு பாட்டிதான் பலமுறை சொல்லி அழுதிருக்கிறாள். இதெல்லாம் நடந்து பல வருடம் ஆகியும் அம்மா சிவசங்கரனிடம் பேசுவதில்லை. பலமுறை சிவசங்கரன் அம்மாவிடம் பேச முயன்றிருக்கிறான். பேசும் போதெல்லாம் அம்மா அழுவாள். இப்படி பலமுறை. சிவசங்கரனும் அம்மாவிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டான். அக்காதான் இடையில் மனிதத் தூதுவளாய் இருப்பாள். அக்காகூட பாதி அம்மாதான். பலமுறை குத்திக்காட்டுவாள்.

இம்முறை தேர்தலுக்கு ஓட்டுக்கேட்க வந்த, நாடாளுமன்ற வேட்பாளரின் கையைப்பிடித்து, ‘இந்தக் கைதான் போன தேர்தலுக்கு இந்த கோயில் பாதைக்கு தார் போட்டு தரதா சொல்லி கோயில்ல சத்தியம் பண்ணது, அப்படி தார் போடலன்னா, கையை வெட்டிடுங்கன்னு சொன்னது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும் ‘ என்று சிவசங்கரன் சொன்னதும் ‘எடுங்கடா அரிவாளை ‘ என்ற குரல் கூட்டத்தில் கேட்டது. நாடாளுமன்ற வேட்பாளருடன் வந்த கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.நாடாளுமன்ற வேட்பாளர் சிவசங்கரன் சொன்னது தெரியாமல் விழித்தார்.

நாடாளுமன்ற வேட்பாளருக்குப் பாதுகாப்பு கொடுக்க வந்த அதிகாரி சிவசங்கரனின் கையை எடுத்துவிட்டார்.உடன் வந்திருந்த சில அரசியல் தலைவர்கள் ஏதேதோ முனகிக்கொண்டிருந்தனர், ‘சரியா கேட்ட சங்கரா ‘ என்கிற வையாபுரியின் குரல் கேட்டது. ‘அதை அந்த மாரியாத்தா பாத்துக்குவா ‘என தொடர்ந்து யாரோ கூறியதும் கேட்டது.

எத்தனை வாக்குறுதிகள் அனைத்தும் பிணத்தின் வாயில் விழுகிற வாய்க்கரிசியாய் மாறின.

வீட்டிற்குப் போனால், நிச்சயம் அக்கா பிடித்துக் கொள்வாள். அம்மாவின் மெளனமும் முக மாற்றமும் ஒரு பயத்தை உண்டாக்கும். எது எப்படியானலும் சந்தித்தே தீர வேண்டும் என்கிற ஒரு மனத்திடம் மட்டும் இருந்தது.

வீட்டிற்கு அருகில் அமைந்திருக்கும் கோவிலில் இருந்து கொண்டே வீட்டின் நிலையறிய நோட்டமிட்டான். அக்கோயில் தலைவர் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். கோயில் தலைவர் பேசுவது நன்கு காதில் விழுகிறது. ‘தம்பி சங்கரன் கொஞ்சம் கோவப்பட்டிருச்சி ஆனா தம்பிக்கு வந்தது ஞாயமான கோவம்தான்.தம்பி கேட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.இங்க பாரும்மா எனக்குகூட அந்த பார்லிமென் மெம்பர்கிட்ட எப்பவாவது இப்படி கேக்கனும்னு தங்கம் இருந்துச்சி.னா தைரியம் இல்ல, ஆனா தம்பி பயப்படல அவரோட கையைப்பிடிச்சி…… ‘ அம்மாவும் அக்காவும் கோயில் தலைவர் சொல்வதைக்

கேட்டுக்கொண்டிருந்தனர்.

‘அதர்மங்கள தட்டிக்கேக்கிற குணம் தம்பிகிட்ட இருக்கு, தம்பி நல்லா முன்னுக்கு வந்துடும். பலர் பல மாறி சொல்லியிருக்கலாம், நான் சொல்றன்மா, இன்னிக்குதான் மீண்டும் உங்க புருசன் மாதிரி தம்பிக்கும் அநியாயத்தை எதிர்க்கிற மனசு இருக்கு என்கிறதை பாக்க முடிஞ்சது, ரொம்ப பேரு பத்திரிகையில எழுதறான் படத்துல காட்டறான், நேரில கேக்குற தைரியம் எவருக்கும் இல்ல, ஆனா தம்பிக்கு இருக்கு, தம்பி ஒரு நல்ல நிலைக்கு வந்துடும் ‘.

கோயிலுக்கு வந்தவர், ‘நீங்க எதுக்கும் பயப்படாதீங்க தம்பி, அம்மாகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் ‘ என்றார். சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். இனிமேல்தான் அக்காவிடமிருந்து முதல் குண்டு வெடிக்கப்போகின்றது. சைக்கிளைவிட்டு இறங்கலாமா வேண்டாமா என்கிற முடிவில் தாமதம்

ஆகிக்கொண்டிருந்தது.

‘வாங்க துரை எவ்வளவு நேரமா சைக்கிளிலே நிற்கிறதா உத்தேசம் ? ‘ அது அக்காவிடமிருந்து புறப்பட்ட குண்டுதான். ‘செய்யுர வேலையை உட்டுட்டு செனை மாட்டுக்கு ஏண்டா உனி புடுங்கிறீங்க. ‘ இதுவும் அக்காதான். சிவசங்கரன் பதில் கூறாமல் சைக்கிளிலே நின்றிருந்தான்.

அம்மா எதுவும் அக்காவிடம் கூறவில்லை. முகத்தில் லேசாய் ஒரு மாற்றம் தெரிந்தது. வாசல் முன் கார் ஒன்று வர, உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவர் வந்து இறங்கினார். சிவசங்கரனைப் பார்த்துத் தலையை ஆட்டினார். ‘இங்க பாருங்க உங்க புள்ள ரொம்ப சத்தம் போட்டுட்டாரு, நம்ப பார்லிமென் மெம்பர் சொன்னது எல்லாம் உண்மைதான், யாரு இல்லங்கில. அதுக்கு எவ்வளவோ முயச்சியெல்லா எடுத்தாராம் ஆனா முடியாம போச்சாம். அதை அடுத்த திட்டத்தில்லதான் அரசாங்கமே சேத்திருக்காம். இவரு என்னங்க செய்வாரு.அடுத்த முறை நிச்சயம் தார் ரோடுதான். அதுக்கு நான் கிராந்தி. இந்த கவர பாருங்க.இதை அவருதான் கொடுத்தாரு.நீங்க பெரியவங்க பல தேர்தல பாத்தவங்க. உங்களுக்கு தேர்தல்ன்னா என்னன்னு தெரியும் தம்பிக்கு சின்ன வயசு, போகப்போக தம்பியே தெரிஞ்சிக்கும் ‘ அரசியல் தலைவர்தான் பேசிக்கொண்டே இருந்தார்.

உடன் வந்திருந்தவர்கள் தேவையில்லாமல் தலையை ட்டிக் கொண்டிருந்தார்கள். ‘அரசியல்ல இதுவெல்லாம் சகஜங்க, சொன்னதெல்லாம் யாரு செஞ்சிடராங்க, சொல்லுங்க. நீங்க உங்க புள்ளைக்கு கொடுத்த வாக்குறுதியெல்லாம் செய்திட்டிங்களா ? என்ன! இந்த கவருல இருக்கிறதை தம்பி கையால கோயில் உண்டியில போட சொல்லுங்க ‘

அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘நீங்க அந்த சாமிக்கே லஞ்சம் கொடுக்கறிங்களா, அதுவும் அந்த பாவத்தை என் புள்ள கையால செய்ய சொல்லிறீங்களே என் புள்ள என்ன ? என் கிட்ட ஓட்டு கேட்டாலும் இதுதான் நடக்கும் ‘ அம்மா இப்படியெல்லாம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. ‘இதையெல்லாம் கேட்க உங்களுக்கு நாதியில்லாத போது என் மவன் இருக்கிறானே, அதை நெனச்சா எனக்கு சந்தோசமா இருக்கு ‘ அம்மாவின் முன் நின்றிருந்த அரசியல் தலைவர்கள் வெறும் பல்லை மட்டும் காட்டினர்.

‘ரெண்டு மைல் தள்ளி இருக்கிற கம்பத்துக்கு டவுனுல இருந்து தார் ரோடு போட்டிருக்கான், அந்த ரோட்டோடு இணைச்சி போட வெறும் ரெண்டு மைல்தான் அதை தாராக்க முடியல வெக்கங்கெட்ட தனமா பேச வந்துட்டாங்க, நான் உப்பு போட்டு சாப்பறன்; அவனும் அப்படிதான் ‘ அம்மா வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். வந்திருந்த அரசியல் தலைவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்காவிடம் திரும்பி, ‘என்னமா உங்கம்மா இப்படி பேசராங்க.. ‘ என்றபோது ‘கொடுத்தது போதாதா ? நான் வேற எதாவது கொடுக்கனுமா ? ‘ அக்காவின் குரல்தான் அது. அக்காகூட பேச ஆரம்பித்துவிட்டாள்.

அவர்கள் புறப்பட்டதும் அம்மா வெளியே வந்தாள். அம்மாவின் பார்வை வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற கோயிலை நோக்கியது. அழகான கோயில். எப்பொழுதும் காற்றைக் கொடுக்கிற லமரம். மூன்று அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி தூக்கி வைத்ததுபோல இருக்கும், லமரம்.

ஒரு முறை ஏழெட்டு பேரை போலிஸ் ஜிப்பில் ஏற்றி போய் ஒரு மூன்று நாளைக்கு லாக்காப்பில் வைத்த போது ‘கோயில்ல சாமி இருக்கா இல்லையா ‘ என கேட்டு, கல்லைத் தூக்கி கண்ணாடி போட்டு மாட்டியிருந்த படத்தின் மீது வீசி சுக்கு நூறாக்கிய தருமன் ஞாபகத்திற்கு வந்தான். அப்போது அப்பா இருந்தார்.அப்பாதான் கோயில் தலைவர். நடந்த சம்பவத்தை ஒட்டி நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் தாண்டிகுதித்த பலருக்கு, அப்பாவின் பதில் எப்படி பாலாய் ஆனது என்று தெரியவில்லை. ‘ தருமனுக்கு அளவுக்கு மீறிய கோபம், நமக்கு அதிகம் கோபம் வந்தா புள்ளிங்கல அடிக்கல அது மாதிரிதான் சில வேளை வீட்டிலிருக்கிற பொருளெல்லா பறக்கும் இல்லையாஅது மாதிரியான கோபம்தான் தருமனுக்கும்; அதுவும் ஒருவகை பக்திதான் பக்தியின் கடைசி அதுதான். சாமியே கோபிக்காதபோது நாமயாரு அவனுக்கு தண்டனை கொடுக்க ‘ கூட்டத்தில் மெளனம் நிலவியது. ‘கோபங்கிறது சிலருக்கு வராது, அப்படி வந்துட்டா இப்படிதான் அவனைக் கூப்பிட்டு தண்டிக்கிறதோ மன்னிப்பு கேக்க வைக்கிறதோ அவனோட கோபத்தை அதிகப்படுத்தும் ‘ அப்பாவின் பேச்சுக்கு மதிப்பு இருந்தது. யாரும் ஒன்றும் பேசவில்லை. ‘ரெண்டொரு நாள்ள அவனா திருந்திடுவான் ‘ அத்தோடு அந்தப் பிரச்சனைக்கு முடிவு கண்டார்.

லாக்காப்பில் இருந்தவர்கள் திரும்பி வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, கோயில் பூசாரியிடம் தருமன் பேசிக்கொண்டு இருந்ததும் அதன்பின், தருமனே பெரிய கண்ணாடி வாங்கி வந்து படம் மாட்டிவிட்டதும் சிறப்பு பூஜை செய்ததையும் பார்த்து அனைவரும் மகிழ்ந்து போயினர்.

அப்படிப்பட்ட கோயிலில்தான் சத்தியம் செய்தார், அந்த நாடாளுமன்ற வேட்பாளர். அம்மாவின் பார்வை சிவசங்கரன் மேல் விழாதா என்று சிவசங்கரன் பார்த்தான். பார்வை விழவில்லை. சிவசங்கரனைத் தேடிக்கொண்டு சிலர் வந்தனர். அரசியல் தலைவர்கள் வந்து சென்ற விபரத்தை அறிந்தனர்.

‘இந்த முறை நாம யாருமே இவருக்கு ஓட்டு போடக்கூடாது. எந்த தலைவர் வந்தாலும் நம்ம முடிவிலிருந்து மாறக்கூடாது. நாமெல்லாம் வெறும் ரொட்டி துண்டுக்கு அலையற நாயா சிலர் நினைக்கிறாங்க அப்படி பட்ட எண்ணத்தை மாத்தனும். ‘ சிவசங்கரனைக் காணவந்திருந்த நண்பனொருவன் கூறினான்.

‘அவனோடய்யே சுத்திக்கிட்டு இருக்கிற அந்த நாலு பேரு போடலாம், நாம யாரும் போடக்கூடாது ‘

‘இம்முறை பாடம் புகட்டினாதான், அடுத்த முறை திருந்துவான் ‘

இப்படி பல குரல்கள். சண்முகம் கூட அந்தக் கூட்டத்தில் இருந்தான்.

‘ நீ ஜெயிச்சிட்ட சங்கரா ‘ என்றான்.

‘நாம சும்மாவே நமக்குள்ள பாராட்டிக்க கூடாது, முதல்ல நம்ம குடுபங்கல இருக்கிற ஓட்டை அவனுக்கு போடம இருக்க வழி பன்னனும். அதுல உறுதியா இருக்கனும். அப்புறம் இவ்வட்டாரத்தில இருக்கிற நம்ப சொந்தகருங்க ஓட்டு அதையும் நாம கவரனும். நம்மால அவனை பெரிசா அசைக்க முடியாவிட்டாலும் சில மில்லிமீட்டர் அசைச்சாகூட நம்ம அளவில அது நமக்கு பெரிய வெற்றியாகும் .நமக்கும் பலம் இருக்கு, நம்மலோட பலமும் தேவையின்னு அவன் உணரனும் ‘ சிவசங்கரன்தான் பேசிக்கொண்டிருந்தான்.

வீட்டின் ஜன்னலிலிருந்து அம்மா பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் கண்ணில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அம்மாவுக்கு அப்பாவின் ஞாபகம் வந்திருக்கலாம். சிவசங்கரனுக்கும்கூட.

***

kabirani@tm.net

Series Navigation

author

மனஹரன் மலேசியா

மனஹரன் மலேசியா

Similar Posts