நட்பை நாகரீகமாக்குவோம்…

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

நா.பாஸ்கர்


நன்றி சொல்வேன் தோழி
நம் கல்லூரிக்கு – அதுதான்
வாழ்க்கைக்கான கல்வியையும்
வாழ்க்கையைக் கற்றுத்தர
உன்னையும் கொடுத்தது

பக்கத்து பக்கத்து தெருவில்
பதினேழு வருடங்கள் இருந்தும்
பட்டணத்து பண்பாடு நம்மை
பரிச்சயப்படுத்தி வைக்கவில்லை
முதல் நாளே நம் முகங்களை
அறிமுகம் செய்தது அதுதானே
அந்த அஃறிணை எனக்கு
உயர்தினையானது

நீ மட்டும் இல்லாமல்
போயிருந்தால் நட்பென்னும்
வேதத்தை படிக்காமலே
போயிருப்பேன்

கல்லூரி நாட்கள்
வெறுத்துப்போன பொழுதெல்லாம்
காலை முதல் மாலைவர
கன்னிமரா நூலகத்தில்
புத்தக வேட்டையில்
புத்தி செலுத்தியிருந்தோம்

நாம் பேசாத வி ?யங்கள் உண்டா ?
செல்லாத புத்தகக்கடையும் நூலகமும்
சென்னையில் உண்டா ?

கல்லூரியில் பேராசிரியர்கள் கூட
நம் நட்பை வேறுவிதமாகத் தான்
கிசுகிசுத்தார்கள் மாணவர்களைச்
சொல்லத்தான் வேண்டுமா ?

தோளோடு தோளுரசி நாம்
நடந்ததை பார்த்த எத்தனை
கண்கள் நம்மை நச்சு
கலக்காதப் பார்வை பார்த்திருக்கும் ?

என் தொலைபேசி அலறிய
ஒரு இரவு வேளையில் அம்மாவுக்கு
கூட எரிச்சல் வந்தது
‘எந்த நேரமும் அந்தப் பொண்னோட
என்ன பேச்சு வேண்டியிருக்கு ‘
பாவம் அவள் பாசத்தால் நம்
நட்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை

ஒரு ஞாயிறு மாலை
என் அக்காவோடு நம்
அரட்டையடிக்கையில் தவறாக
ஏதோ உளறிவிட தோளில் நீ
அடித்த பொழுது அக்காவால்
தாங்கிகொள்ளவியலாது தவித்தாளே
அவளுக்கே நம் நட்பை புரிந்துகொள்ளும்
பக்குவம் இல்லை

காற்றாட கதைப் பேச
கடற்கரைக்கு சென்றிருந்தோம்
சித்திரை மாத மாலையிலே
அத்திப் பூத்தாற்போல்
மழை அமிழ்து தூவிய பொழுது
வெயிலுக்கு நீ கொணர்ந்த
ஒற்றைக்குடையில் ஒதுங்கினோம்
ஓடிச் செல்லும் மனிதர்களின்
ஒவ்வாத பார்வைகளால்
நட்புக் கறைப் படுமென
நனைந்து கொண்டே நடந்து வந்தேன்
நட்பின் புனிதம் தெரியாத மழையில்

கவிஞர்களைக் கூடக் கண்டிக்கிறேன்
காலகாலமாய் காதலை முதன்மை
படுத்தினார்களே ஒழிய
நட்பை பாராட்டும்
இலக்கியங்களுக்கு
முக்கியத்துவம் இல்லை

இவர்களைப் பழிப்பதும் வீண் தான்
நட்பை உணர்ந்துகொள்ள
உன் போல் தோழி எல்லோர்க்கும்
கிடைப்பதில்லையே

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>